சென்னையைச் சேர்ந்த கணிப் பொறியியலாளர் பிரகாஷ் என்பவர் டோக்கியோவில் வேலை பார்த்து வருகிறார். நேற்று ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்ட போது அவர் தனது அலுவலகத்தின் 27-வது மாடியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அதிர்ஷ்வசமாக பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான சுனாமியிலிருந்து தப்பி உயிர் பிழைத்த அவர், நடந்த சம்பவம் பற்றி கூறியதாவது:
“நான் எனது அறையில் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனது அறை பயங்கரமாக குலுங்கியது. பூம்… பூம்…. என வித்தியாசமான சத்தம் கேட்டது. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எல்லாம் சரிந்து கீழே விழுந்தன.
பூகம்பம் ஏற்பட்டு இருப்பதை உணர்ந்தேன். பீதியில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. டைட்டானிக் கப்பல் மூழ்குவது போல நான் இருந்த கட்டிடமும் ஆபத்தில் சிக்கி இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. முழு கட்டிடமும் இடிந்து விழ போகிறது என கருதினேன். கட்டிடத்தில் நான் 80 மீட்டர் உயரத்தில் இருந்தேன். என்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.
பின்னர் அவசர வாசல் வழியாக தரை பகுதிக்கு ஓடி வந்தோம். அதன் பிறகுதான் நிம்மதி ஏற்பட்டது. ஜப்பானில் மாதந்தோறும் பூகம்பம் ஏற்படும். ஆனால் இந்தப் பூகம்பம் பயங்கரமாக இருந்தது. எனக்கு பீதி அடங்க நீண்ட நேரம் ஆனது.”
இவ்வாறு பிரகாஷ் கூறினார்
Source : http://www.inneram.com/ஜப்பான் பூகம்பம்: உயிர்பிழைத்த சென்னை பொறியாளர் பேட்டி!








