கடும் காற்றடிக்கும், புயல் வந்து கரையைக்கடக்கும்
வெள்ளமோ ஊரை நன்கு வெளுத்துக்கட்டும்
மழை நீர் வந்து வீட்டிற்குள் குடிபுகும்
தெருக்களெல்லாம் சேர், சகதியில் கட்டிப்புரளும்
கடும் காற்றில் மரங்கள் ஆங்காங்கே மாண்டு போகும்.
நொறுக்குத்தீணிக்கு நா அலைபாயும்.
மாட மாளிகையில் வீற்றிக்கும் நினைப்பில்
அடைமழை கண்டு உள்ளம் ஆனந்தமடையும்
குளிர் காற்று வந்து உள்ளத்தை மெல்ல கொல்லும்
நீள வானை மேகக்கூட்டம் மேய்ந்து செல்லும்
வெண் கொக்கு கூட்டம் வானில் பறந்து
யாருக்கோ ஓட்டு கேட்டு செல்லும்
மின்னல் வந்து ஊருக்கே மாத்தாப்பு கொளுத்தும்
இடிச்சத்தம் இறைவனின் சக்தியை பறைசாற்றும்
சிறுவர் உள்ளமோ காகித ஓடமிட்டு இக்கானகத்தை சுற்றிவரும்
தும்பிகள் வானில் பறந்து சிறு தம்பிகளை உற்சாகமூட்டும்.
காளான்கள் மலர்ந்து யாருக்கோ குடை பிடிக்கும்.
பச்சைபாசி ஆங்காங்கே தோன்றி ஊருக்கே போர்வை விரிக்கும்
அடுப்பெறிக்க உதவும் விறகுகள் அழும்பு பண்ணும்.
சோவென பெய்யும் மழை சோம்பலுக்கு பாய் விரிக்கும்.
சொட்டென விழும் மழை நீர் மனதிற்கு சொட்டு நீர்ப்பாய்ச்சும்
மழையில் நனைந்த காகம் வெயிலுக்கு ஏங்கும்.
கருமேகம் கிழக்கே தோன்றி வீடு கட்டுவோரை பயமுறுத்தும்
பழைய சோற்றில் செய்த முறுக்கு வானம் பார்க்க அஞ்சும்
வெண்பனி மூட்டத்தில் வீட்டு மரங்கள் தலைதுவட்டிக்கொள்ளும்
ஊரோ இருளில் மூழ்கும் உள்ளமோ உற்சாகத்தில் மிளிரும்
பள்ளி விடுமுறையை எண்ணி எங்கோ பறந்து செல்லும்
பணங்காசுகள் இல்லாமல் இப்பாருலகை சுற்றித்திரியும்
முடங்கிக்கிடக்கும் நம்மை பள்ளியின் பாங்கொலி தட்டி எழுப்பும்.
இக்காலங்கள் கசத்தாலும் அக்காலங்களை எண்ணி இனிமை/இளமை கொள்வோம் என்றும் மறவோம்.
மழை காலத்தில் நம்ம ஊர் மனதிற்குள் ஓர் கற்பனை செய்து பார்(ப்போம்.)
— மு.செ.மு. நெய்னா முஹம்மது









