RSS

வரி உயர்வு – சட்டசபை உரிமையை பாதிக்கும் செயல்: கருணாநிதி

13 Jul
பட்ஜெட் தேதி அறிவித்த பின்னர் வரிகளை உயர்த்தியிருப்பது சட்டசபை உரிமையைப் பாதிக்கும் செயல் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி – பதில் அறிக்கை வருமாறு:

கேள்வி:-ரூ.3,900 கோடி வருவாய் கிடைக்கும் வகையில் ஜெயலலிதா அரசு திடீரென வரி விதிப்பில் மாற்றத்தைச் செய்துள்ளதே?

பதில்:-ஜெயலலிதா அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 4-ம் நாள் காலை 10.40 மணிக்கு பேரவையிலே வைக்கப்படுமென்று ஆளுநரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அது ஏடுகளின் வாயிலாக தெரிவிக்கப்பட்டும் விட்டது.

வழிவழியாக பின்பற்றப்பட்டு வரும் சட்டப்பேரவை மரபுகளின்படி சட்டமன்ற கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், அதற்குப்பிறகு அரசின் முக்கிய அறிவிப்புகளோ – நிதித்துறையில் வரிகள் தொடர்பான மாற்றங்களோ செய்வதில்லை. அப்படி செய்யப்படுமானால் அது அவையின் உரிமையை பாதிக்கக்கூடியதாகும். ஆனால் இன்றைய நாளேடுகளில் ரூ.3,900 கோடி வருவாய் கிடைக்கும் வகையில் வரி விதிப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு அது இன்று முதல் (12-7-2011) அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் ரூ.1200 கோடி அளவிற்கு மதுபானங்களின் மீதான வருவாய் கூடுதலாக கிடைக்குமளவிற்கு அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. புதிய மருத்துவ திட்டம் ஒன்றும் தொடங்கப்படவுள்ளதாக முதலமைச்சராலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பேரவையின் உரிமையை பாதிக்கின்ற செயல்களாகும். தி.மு.க. ஆட்சியில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக இந்த அளவிற்கு வரி உயர்வே செய்யாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குள் ரூ.3,900 கோடிக்கு வரி விதிப்பு. மக்களே தேடிக்கொண்ட கொடுமை இது.

கேள்வி:-“தவறான செய்திக்கு தா.பாண்டியன் மறுப்பு” என்ற தலைப்பில் அ.தி.மு.க. ஆட்சியைப்பற்றி அவர் செய்த விமர்சனத்தை மாற்றி சொல்லியிருக்கிறாரே?

பதில்:-தா.பாண்டியன் தனது அறிக்கையில், “ஜுலை 6ஆம்தேதியன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இரு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் கூட்டத்தில் பேசும்போது, தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு அமைச்சர்களை மாற்றுவதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டிப் பேசியதாக சில தின, வார ஏடுகளில் வந்துள்ள செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன்.

எனவே அதை மறுத்தும், விளக்கியும் எங்கள் கட்சியின் கருத்தையும், நிலையையும் தெளிவுபடுத்துகிறேன்” என்று குறிப்பிட்டதோடு, அந்த அறிக்கையில் தொடர்ந்து அ.தி.மு.க. அரசுக்கு தனது பாராட்டுதல்களையெல்லாம் தெரிவித்திருக்கிறார். நான் கூட அவரது பேச்சினை மாற்றுக்கட்சி ஏடுகள்தான் தவறாக திரித்து வெளியிட்டு விட்டனவோ என்று எண்ணி இந்தியக் கம்ïனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வமான நாளேடான “ஜனசக்தி”யை எடுத்துப் பார்த்தேன். அந்த இதழின் ஜுலை 8-ம் தேதிய நாளேட்டில் முதல் பக்கத்திலேயே அவரது பேச்சு வெளியாகியுள்ளது.

அதில் 3-ம் பத்தியில் 2-வது பாராவில், “தேர்தல் கூட்டணி வெற்றி பெற்றதற்கு பிறகு அமைய பெற்றுள்ள தமிழக ஆட்சியில் எந்த ஒரு மாற்றமும் இன்னமும் ஏற்படவில்லை. தமிழக அமைச்சரவையில் அங்கும் இங்குமாக நிகழ்த்தப்பட்டுள்ள மாற்றங்களை தவிர” என்று தா.பாண்டியன் பேசியதாக வந்துள்ளது. இது மாத்திரமல்ல, ஆங்கில நாளேடான “டெக்கான் கிரானிகல்” இதழில்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். எதை நினைத்து ஆச்சரியப்பட்டு தெரியுமா? முதல்-அமைச்சரும், கூட்டணிக்கட்சி தலைவருமான ஜெயலலிதா பாண்டியன் வீட்டு திருமணத்தை புறக்கணித்து விட்டு நடிகர் கார்த்தி திருமணத்திற்காக அவர் இல்லத்திற்கே சென்று ஜெயலலிதா வாழ்த்தியதற்கு காரணம்-பாண்டியன் ஜெயலலிதா அரசின் செயல்பாடுகளையும், அமைச்சரவை மாற்றத்தைத்தவிர உருப்படியாக எதையும் செய்யாததையும் விமர்சித்து பேசியதுதான்” என்று எழுதியதையும் நினைக்கும் பாண்டியன் அவசர அவசரமாக அறிக்கை விட நேர்ந்தது ஏன் என்பது புரிகிறது.

கேள்வி:-ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவிலை திருப்பணி செய்யப்போவதாக அறிவித்து ரூ.18.5 லட்சம் அதற்காக செலவிட ஜெயலலிதா ஆணை பிறப்பித்திருக்கிறாரே

பதில்:-ஓமந்தூரார் வளாகத்திற்குள் தி.மு.க. அரசு புதிய தலைமைச்செயலகம் கட்டியது என்பதற்காக -அந்த இடத்தை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதுபற்றி நீதியரசர் தங்கராஜை கொண்டு விசாரணை ஆணையமும் அறிவித்திருக்கிறார்.

அது மாத்திரமல்லாமல், அந்த இடத்தின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டுமென்பதற்காக, ஆலமர பிள்ளையாருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஆலமர பிள்ளையார்கள் மழையிலும் வெயிலிலும் வாடிக்கொண்டிருக்கும்போது கருணாநிதி புதிய தலைமைச்செயலகத்தைக் கட்டிய காரணத்தால், அங்கேயுள்ள ஆலமர பிள்ளையாருக்கு திருப்பணி செய்ய அம்மையார் ஆணை பிறப்பித்திருக்கிறார் போலும்.

கேள்வி:-ஜெயலலிதா அறிவித்துள்ள அ.தி.மு.க. அரசின் புதிய மருத்துவக்காப்பீடு திட்டம் பற்றி?
பதில்:-அ.தி.மு.க. அரசின் புதிய திட்டம் அல்ல அது. ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற திட்டம்தான் அது. அ.தி.மு.க. அரசு புதிதாக எதையும் செய்யாவிட்டாலும், ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு, அதிலே ஒருசில சிறிய மாற்றங்களை செய்து புதிய திட்டங்களை போல அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கழக ஆட்சியில் 642 வகையான சிகிச்சைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதிலே வேறு சில நோய்களின் பெயர்களை தற்போது சேர்த்து 950 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அது தவிர தி.மு.க. ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. தற்போதைய திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் ரூபாய் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஒரே குடும்பத்தில் நான்கு லட்சம் ரூபாயை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது. எனவே அந்த அறிவிப்பிலும் புதிதாக எதுவும் இல்லை. இவைகளைத்தவிர வேறு எதுவும் புதிதாக இல்லை.

பரிசோதனை செலவுத்தொகை என்றெல்லாம் சொல்லியிருப்பது ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்லப்பட்டுள்ள அறிவிப்பாகும். கழக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் பற்றி இதே ஜெயலலிதாதான் அந்த திட்டத்தினால் தனியார் காப்பீட்டு நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளும்தான் பயன்பெற்றன என்றும், அவை உருப்படியாக நடைபெறவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

இப்போது அவர் கொண்டு வருகின்ற திட்டத்திற்காக தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம்தான் டெண்டர் கோரியிருக்கிறார். தனியார் மருத்துவமனைகளையும் பயன்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source : http://www.inneram.com/

 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: