RSS

அடிப்படை தேவைகளுக்கு ஆலாய்பறக்கும் அவலம்…

16 Feb

அதிராம்பட்டினம் பேரூராட்சி ( பேருக்கு ஊராட்சி?) அறிவிப்பு என்று ஒரு அறிவிப்பை வலைதளத்தில் படிக்கும் துர்பாக்கியம் ஏற்பட்டது. அதன்படி மின்சார வெட்டின் காரணமாக இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அதன்படி ஊரார் தங்களது தேவைகளை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ சொல்லத்துடிக்குதடா நெஞ்சம் –வெறும் சோத்துக்கும் வந்ததிந்த பஞ்சம் “ – என்று எங்கோ யாரோ பாடியதை கேட்டு இருக்கிறோம். இன்றோ “ கூறத்துடிக்குதடா நெஞ்சம் இந்த குடிநீருக்கும் வந்ததடா பஞ்சம்” என்றுதான் பாடவேண்டி இருக்கிறது.

என்ன குறை?

தண்ணீருக்கும்,மின்சாரத்துக்கும் அல்லாடவேண்டிய அவசியம் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தது.?

“காவிரி தென்பெண்ணை பாலாறு –தமிழ்
கண்டதோர் வைகை பொதிகை நதி – என
மேவிய ஆறுகள் பல ஓட –திரு
மேனி செழித்த தமிழ்நாடு “

என்று திருவாளர்கள் சிங்காரம்பிள்ளையும், தாமஸ், இராமதாஸ் ஆகிய தமிழ் ஆசிரியர்களும் பாடம் நடத்தி படித்து இருக்கிறோமே அப்படி எல்லாம் வளங்கள் இருந்தும் அவைகள் வகையாய் நிர்வகிக்கப்படாமல்தானே (RESOURCES MANAGEMENT) இப்படி அவலநிலைகள் ஏற்படுகின்றன என்று மனநிலை சரியில்லாதவர் கூட கேட்பார்.

 • ஏன் இந்த நிலை? இதுதான் கதை.

  சமீபத்தில் தமிழக அரசு புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்காக 5995 கோடி ஒதுக்கி அறிவித்தது. அதன் பிறகு இதுவரை மின் உற்பத்தியில் இருந்த நான்கு தனியார் நிறுவனங்கள் தங்களது மின் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இதனால் இழப்பு 988 மெகாவாட் மின்சாரமாகும். சொல்லப்பட்ட காரணம் தங்களுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகையை தராமல் புதிய திட்டங்களுக்கு பணம் ஒதுக்கியதை கண்டித்து என்பதாகும். தனியார் ஒன்று கூடி அரசை நிர்ப்பந்தப்படுத்த எடுத்த ஆயுதம்.

  இதன்படி ஜி. எம். ஆர் 196 மெகாவாட், பிள்ளைப்பெருமாள் நல்லூர் 330 மெகாவாட், மதுரை பவர் 106 மெகாவாட், சாமல்பட்டி 105 மெகாவாட் ஆகியவை உற்பத்தியை நிறுத்திவிட்டு பழைய மளிகை பாக்கியை தந்தால்தான் மீண்டும் உற்பத்தி தொடங்க முடியும் என்று அலியார் காக்கா கடை ஸ்டைலில் (இப்போதும் இருக்கிறதா?) அடம் பிடித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்துமே அரசியல் செல்வாக்கு உடையவர்களுடையதுதான். கடந்த ஆண்டுகளில் இதன் மூலம் 250 கோடி ரூபாய் வரை இலாபம் பார்த்தவைகள்தான். நெய்வேலியில் இருந்து மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. கூடங்குளம் குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கிறது. அரசுகளின் திட்டமிடலுக்கு ஏற்பட்ட அண்மைக்கால அவமானம் தரும் உதாரணம்.

  அதுமட்டுமல்ல,

  தமிழ்நாட்டில் உள்ள 14 அணைகளில் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சரிவர தூர்வாரப்பட்டால் அதன்பின் அதிகரிக்கும் நீர் கொள்ளளவை வைத்து 2000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இன்றோ வெறும் 800 மெகாவாட் மட்டுமே தயாரிக்க முடிகிறது. ஆகவே இருக்கிற மூலவளங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமை (LACK OF PROPER UTILIZATION OF RESOURCES) யும் அரசுத்தரப்பை நோக்கி நம் விரலை நீட்டச்செய்கின்றது.

  அத்துடன் மூலவளங்களை பயன்படுத்துவதில் முன்னுரிமை அளிப்பது. நம்மிடம் 100 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நமது கடையில் சில சாமான்கள் வாங்கிப்போட வேண்டும், பசிக்கிறது- சாப்பிடவேண்டும், தையல் கடையில் தைக்ககொடுத்த துணி தயாராக இருக்கிறது அதை வாங்க வேண்டும், ஒரு சர்கஸ் பார்க்க வேண்டும் என்று ரெம்ப நாளாக ஆசை இன்றுடன் அந்த சர்கஸ் கடைசி என்று வேறு போட்டிருக்கிறான். நாம் என்ன செய்வோம்? எந்த செலவுக்கு முக்கியத்துவம் தருவோம்? இருப்பதோ 100 ரூபாய்தான். இதைத்தான் நிர்வாகத்தில் PRIORITIZE – முன்னுரிமைப்படுத்துதல் என்று சொல்வார்கள். இருக்கிற மின்சாரத்தை தொழில்சாலைகளுக்கு, விவசாயத்துக்கு, சமுதாய வாழ்வுக்கு, பொழுதுபோக்குக்கு என்று பயன்படுத்துவதில் முன்னுரிமைப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (PRIORITIZE THE UTILIZATION OF RESOURCES).

  அப்படியானால் என்ன செய்யலாம் . பொழுதுபோக்கு தலையில் கைவைக்க வேண்டியதுதான்.

  இன்று தமிழகம் முழுதும் ஏறக்குறைய 2 கோடி தொலைக்காட்சிப்பெட்டிகள் இருப்பதாக ஒரு கணக்கு. இந்த தொலைக்காட்சிப்பெட்டிகள் ஒன்றுக்கு 100 வாட் மின்சாரம் என்று வைத்துக்கொண்டாலும் 2000 மெகாவாட் செலவாகிறது. மின்சார நிலை சீர்பெறுகிறவரை தொலைக்காட்சிப்பெட்டிகளை குறிப்பிட்ட நேரங்களுக்காவது பயன்படுத்தக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு விதிப்பதைப்பற்றி அரசு பரிசீலிக்கலாம். குடிக்கவே தண்ணீர் இல்லை படுக்க பஞ்சு மெத்தை வேண்டுமா? அரசு அப்படி கட்டுப்பாடு விதிக்குமா ? ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி, உளுத்த கட்சி, பாசகட்சி, படுத்தகட்சி, தளர்ந்த கட்சி, தள்ளாடும் கட்சி இப்படி எல்லாகட்சிகளுமே தங்களுக்கென்று தனி தொலைக்காட்சிகளை (தொல்லைக்காட்சிகளை?) வைத்து விளம்பரத்தில் இலாபம் சம்பாதிக்கும் நிலையில் இது நடக்குமா? இதை அமுல்படுத்த யாருக்கும் தைரியம் உண்டா?

  “அடிக்கிற தண்ணிக்கு அங்கங்கே கடை இருக்கு
  குடிக்கிற தண்ணிக்கோ குடமெல்லாம் தவமிருக்கு”

  என்று ஒரு கவிஞன் புலம்புகிறான். இன்று குடிநீரை முறை வைத்து விடவேண்டுமென்று திட்டம் தீட்டுபவர்கள், ஊர் முழுதும் பரவிக்கிடக்கும் மதுக்கடைகளையும், அத்துடன் இணைந்த பார்களையும், இரவு களியாட்டங்கள் நடத்தும் விடுதிகளையும், சூதாட்ட விடுதிகளையும் குறைந்தபட்சம் இரண்டாவது காட்சி திரைப்படத்தையும் மின்சாரநிலையை காரணம் காட்டி மூடுவார்களா?

  வளைகுடா நாடுகளில் காவிரியோ, தென்பெண்ணையோ, பாலாறோ, வைகையோ ஓடவில்லை. ஆனாலும் அடிப்படைதேவைகளான தண்ணீருக்கும் ,மின்சாரத்துக்கும் தட்டுப்பாடு என்பதே தெரியாமல் மூலவளங்களின் நிர்வாகம் கோலோச்சுகிறது. பாலைவனத்தில் இல்லாத பஞ்சம் பாலாறு ஓடும நாடுகளில், வற்றாத ஜீவனதிகள் பாயும் நாடுகளில் வரக்காரணம் மிக மிக மோசமான நிர்வாகம்தான். (LACK OF RESOURCES MANAGEMENT). என்பதை அரை வேக்காட்டு அரசியல்வாதிகள் கூட ஒப்புக்கொள்வார்கள்.

  நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் மக்களின் அடிப்படை இன்றியமையா தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இன்சாட்டுகளை ஏவிவிட்டு, இருக்கும் மூலவளங்களையும் காலி செய்கிறோம். மண்ணில் இருக்கிறவன் குடிக்க தண்ணீர் இல்லாமலும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க மின்சாரம் இல்லாமலும் சாகக்கிடக்கிறான் சந்திரனுக்கு ஆள் அனுப்புவது அவசியமா? “கும்பி உருகுது! குடல் கருகுது! குளு குளு ஊட்டி ஒரு கேடா?” என்று அறுபதுகளில் ஒரு ஆட்சித்தலைவரைப்பார்த்து ஒரு அரசியல் தலைவர் கேட்டார். இன்றுவரை இதற்கு மாற்றம் உண்டா? குறைந்தபட்ச தேவையான குடிதண்ணீர் கூட தரமுடியாத அரசுகள் வேறு என்ன தந்துவிடும்? விளக்கெரிக்க மின்சாரம் இல்லை வெறும் வார்த்தைகள் வல்லரசு ஆக்கிவிடுமா?

  -இபுராஹீம் அன்சாரி
  Source : http://adirainirubar.blogspot.com/2012/02/blog-post_16.html

  Advertisements
   
 • Tags: ,

  One response to “அடிப்படை தேவைகளுக்கு ஆலாய்பறக்கும் அவலம்…

  1. Asraf Ali (Brunei)

   February 17, 2012 at 1:27 pm

   entha katchi atchikku vanthalum mudalil teerka vendiyathu intha minsara piratchanai than.aanal entha katchiyum itharkana akkappoorvamana muyarchi eduppathillai.konja kalatthukku ella ilavasangalaiyum nirutthi vittu antha thahaiyai minsara urpatthikku munnurimai koduttu urpattiyai perukka vendum.

    

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: