RSS

முதல் காதல், முதல் கவிதை

23 Feb


காதல் தொடர்பான சொற்கள் நான்கைந்தை வரிசையாக சொல்லிப் பாருங்கள். உறுதியாகச் சொல்கிறேன். ‘கவிதை’ என்கிற சொல்லை கண்டிப்பாக சொல்லியிருப்பீர்கள். காதலுக்கும், கவிதைக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் கவிதை எழுதாத அல்லது எழுத முயற்சிக்காத காதலன் எவனுமே உலகில் இல்லவே இல்லை. உலகின் முதல் காதலன் மட்டுமல்ல. முதல் கவிஞனும் ஆதாமாகத் தான் இருக்கக்கூடும்.

 • பெண்களுக்கு நிஜமாகவே கவிதை பிடிக்குமா என்கிற சந்தேகம் எனக்குப் பல வருடங்களாக உண்டு. கடும் குளிரடித்த, வெக்கையால் தொப்பை தொப்பலான, கோரஸாக கொசுக்கள் ரீங்காரமிட்ட.. என்று பலவகைகளில், காலப்பருவங்களில் வேறுபட்ட ஏராளமான இரவுகளை வீணடித்து, மூளையைக் கசக்கிப் பிழிந்து, அடித்துத் துவைத்து யோசித்ததில் ஒரே ஒரு உண்மை சட்டென்று பல்பிட்டது. நியாயமாக பார்க்கப் போனால் ‘யுரேகா’ என்று கத்திக்கொண்டு அம்மணமாக அன்று இரவு நான் தெருவுக்கு ஓடி வந்திருக்க வேண்டும். மாறாக ‘காயத்ரீ’ என்று அப்போது லவ்விக் கொண்டிருந்த ஃபிகரின் பெயரை உரக்கச் சொல்லிக் கொண்டே ஓடினேன். அதிர்ஷ்டவசமாக லுங்கி மட்டுமாவது இடுப்பில் இருந்தது. “மாரியாத்தா எம்புள்ளைக்கு பேய் புடிச்சிடிச்சி” என்று என் பின்னாலேயே அம்மாவும், “கிறுக்குப்பய மவனே!” என்று அப்பாவும் ஓடிவந்ததும் நினைவிருக்கிறது.

  நான் கண்டறிந்த உண்மை யாதெனில் பெண்களுக்கு ‘பாவனை’ அதிகம். சில விஷயங்களைப் பிடிக்கிறதோ இல்லையோ ரொம்பப் பிடிப்பதைப் போலவே பாவனை செய்வார்கள். சிவாஜி, மார்லன் பிராண்டோவையெல்லாம் மிஞ்சக்கூடிய நடிப்பு பெண்களுக்கு உண்டு. குறிப்பாக காதல் விவகாரங்களின் போது ஓவர் ஆக்டிங்குக்கு போய்விடுவார்கள். பெண்களுக்கு teddy bear பிடிக்கும் என்று கண்டறிந்து, காதலர் தினத்துக்கு பரிசாக முதன்முதலாக பரிசளித்த காதலன் எவனென்று கண்டுபிடித்து அவனைச் செருப்பால் அடிக்க வேண்டும். காதலனிடம் குழந்தைத்தனமான குணம் கொண்டவள் என்று வெளிப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு காதலியும் தனக்கு teddy bear பிடிப்பதாக நடிக்கிறாள். ஒரு பொம்மையின் விலை அநியாயத்துக்கு ஐநூறு ரூபாய் விற்கிறது சார். ஐஸ்க்ரீமே பிடிக்காத பெண் கூட “ஸ்ட்ராபெர்ரி சாப்பிடலாமா?” என்று காதலித்ததும் கொஞ்சத் தொடங்கி விடுகிறாள். ‘அ ஆ இ ஈ’ படிக்கத் தெரியாத சர்ச்பார்க் பெண் கூட “ஐ லைக் பாலகுமாரன் ஸ்டோரீஸ்யா” என்று ஃபிலிம் காட்டுகிறாள். இதுமாதிரியான பாவனைகளில் ஒன்றுதான் அவர்களுக்குக் கவிதை பிடிப்பதும்கூட. அது எப்படி சார்? ஸ்டெல்லாவுக்கும் கவிதை பிடிக்கிறது, ஃபாத்திமாவுக்கும் கவிதை பிடிக்கிறது, பத்மினிக்கும் கவிதை பிடிக்கிறது. பெண்கள் எல்லோருக்கும் கவிதையைப் பிடிக்குமென்றால், கவிதைத் தொகுப்புகள் லட்சக்கணக்கில் விற்பனையாகி கவிஞர்கள் எல்லாம் அம்பானி ஆகியிருக்க வேண்டுமா, இல்லையா?

  கவிதை மீது இவ்வளவு obsession எனக்கிருப்பதை வைத்து, நான் ஒரு கவிஞனாகவோ அல்லது தீவிர கவிதை வாசகனாகவோ இருக்கக்கூடும் என்று இந்நேரம் நீங்கள் யூகித்திருக்கக்கூடும். உங்கள் மூளையில் தோன்றிய இந்த படிமத்தை உடனே delete keyயைத் தட்டி தயவுசெய்து அழித்துவிடுங்கள். குறிப்பாகக் காதல் தொடர்பான கவிஞர்களைக் கழுவில் ஏற்றவேண்டும், அந்தக் கவிதைத் தொகுப்புகளை நடுத்தெருவில் கொட்டி போகி எரிக்கவேண்டும் எனுமளவுக்கு நான் ஒரு கவிதை அந்நியன். இப்படிப்பட்ட என்னையே ஒருத்தி கவிதை மாதிரி எதையோ கிறுக்க வைத்துவிட்டாள் என்கிற கோராமையை எங்கு போய் சொல்வது?

  அது என்னுடைய வெற்றிகரமான முதல் காதல். முதல் முத்தமும் கூட என்று நினைக்கும்போது பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும்.. சனியன்.. இப்போது வெட்கம் பிடுங்கித் தொலைக்கிறது. மிகச்சரியாக பதினாறு வயதில் மலர்ந்த காதல். அந்த வயதில் வசீகரப்படுத்த வைக்கும் தோற்றப் பொலிவு எனக்கு இல்லாத நிலையில், அதை ஈடுக்கட்டும் வகையில், அவளை வசியப்படுத்த செய்த கோமாளித்தனங்களுக்கு அளவேயில்லை.

  பதிமூன்று வயதுப் பெண்ணுக்கு காதல் கவிதை பிடிக்கும் என்று யாராவது என் எதிரில் இப்போது சொன்னால், இடுப்பிலிருக்கும் ரிவால்வரை எடுத்து நெற்றிப்பொட்டை குறிவைத்து ‘டுமீல்’ என்று சுட்டுவிடுவேன். துரதிருஷ்டவசமாக காதல்வசப்பட்டிருந்த நான் அப்போது நம்பித் தொலைத்தேன். எனக்குள் இல்லாத கவிஞனை, இருப்பதாக எண்ணி பேப்பரும், பேனாவுமாக பாத்ரூம் போய் உட்கார்ந்தேன். அப்போது ஹைக்கூ பிரபலமாகிக் கொண்டிருந்த காலக்கட்டம். சுலபமாக எழுதிவிடக் கூடிய வடிவமென்பதால் ஹைக்கூவில் அவளை அசத்தலாம் என்பது என் திட்டம். எவ்வளவோ சிந்தித்தும், அவ்வப்போது சிறுநீர் வந்ததே ஒழிய, கவிதை வந்து தொலைத்தபாடில்லை. இரவு முழுக்க என் படைப்பாற்றலை பால் கறந்து முயற்சித்தும், படைப்புக்காம்புதான் இரத்தம் கட்டிக் கொண்டதே தவிர கவிதை சுரக்கவேயில்லை.

  தூக்கமின்றி எரிச்சலடைந்து சிவந்த கண்களோடு வகுப்பறைக்குச் சென்றால் மேத்ஸ் மாஸ்டர் எதையோ சுவற்றில் கிறுக்கி தாலியறுத்துக் கொண்டிருந்தார். கடைசி பெஞ்ச் என்பதால், டேபிளில் தலைவைத்து தூங்கிவிட்டேன். தூக்கம் வரத் தொடங்குவதற்கு முன்பே கனவு வந்துவிட்டது. கனவுக்கு நிறம் கருப்பு வெள்ளை. ஆனால் காதலிகள் வரும் கனவுகள் மட்டும் வண்ணமாய் தெரிவதாய் காதலன்களுக்கு அப்படியொரு மூடநம்பிக்கை. அன்றைய கனவில் வெள்ளுடையில் அவள் வந்தாள். அசத்தலான குரலில், மொழியில் ‘ஐ லவ் யூ’ சொன்னாள். பறக்கும் முத்தம் தந்தாள். ஒரு கதாநாயகனைப் போல ஸ்டைலாக அவளை நெருங்கினேன். கண்களாலேயே பேசினேன். அவள் நாணினாள். கோணினாள். உதட்டோடு உதட்டை நெருக்கமாக கொண்டுச் செல்ல அவள் விலகினாள். வற்புறுத்தினேன். ‘ணங்’கென்று மண்டையில் கொட்டு வைத்தாள். கனவென்றால் வலிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக சுறாத்தனமாக வலித்தது. அனிச்சையாக ‘அனிதா’வென்று கத்திக் கொண்டு தலையைத் தடவ, இன்ஸ்டண்ட் பூரி மாதிரி டீக்கடை பொறை சைஸில் நடுமண்டை வீங்கியிருந்தது. கனவு எது, மெய் எது என்று புரியாத தருணம் அது. கண் திறந்துப் பார்த்தால் கட்டை டஸ்டர் வைத்து என் நடுமண்டையை பதம் பார்த்திருந்தார் மேத்ஸ் மாஸ்டர்.

  (அதையடுத்து நடந்த சோக நிகழ்வினை சொன்னால் இக்கட்டுரையின் காதல் சுவை கெடக்கூடும். என்னுடைய ரொமான்ஸ் மூட் ஸ்பாயில் ஆகும். எனவே அடுத்த மூன்று பாராகிராப்புகளை இங்கே தணிக்கை செய்கிறேன்)

  அந்தக் கனவால் விளைந்த பயன் யாதெனில், ஓரிரவு செலவிட்டும் என்னால் எழுத முடியாத கவிதையை ஓரிரு நொடிகளில் கண்டுகொண்டேன். அவள் பெயரைவிட சிறந்த கவிதையை என்னால் எழுதிவிட முடியாதென்று தெளிவு கண்டேன்.

  வகுப்பறைக்கு வெளியே முட்டி போட்டுக் கொண்டிருந்த நேரத்தில், குப்பையாக கீழேக் கிடந்த ஒரு காகிதத்தில் என்னுடைய முதல் காதல் கவிதையை எழுதினேன்.

  அனிதா..
  இரு இமைகளை
  இறுகமூடி
  தேன்சுளை உதடு விரித்து
  Honey தா!

  (சுபம்)

  கட்டுரை ஆசிரியரின் பின்குறிப்பு : வாசகர்களே! இந்தக் கவிதை அனிதாவுக்கு பிடிக்கவில்லை, வாசித்துவிட்டு நம் இன்ஸ்டண்ட் கவிஞரின் முகத்தில் கொத்தாக காறி உமிழ்ந்திருப்பாள் என்பதையெல்லாம், அச்சு பிச்சுவென்று இம்மாதிரி ஆரம்பத்தில் சில காதல் கவிதைகளை எழுதிய நீங்களே இன்னேரம் யூகித்துவிட்டிருப்பீர்களே? விடுங்க பாஸூ. ALL IS WELL.

  (நன்றி : பண்புடன்.காம் காதலர்தின ஸ்பெஷல்)
  எழுதியவர் யுவகிருஷ்ணா

  என்னைப் பற்றி!
  ஆளப்பிறந்தவன் – ஆத்திரப்பட மாட்டேன்!
  Source : http://www.luckylookonline.com/2012/02/blog-post_16.html

  Advertisements
   
 • Tags: , ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: