RSS

ஆராதனை எனும் தலைப்பில்…

25 May


அதிரை நிருபர் என்ற வலைப்பூங்காவில் கவிதைகள் பற்றிய ஒரு கருத்தாடலில் இப்படி ஒரு கேள்வி வந்தது எனக்கு

கேள்வி: விளக்கம் தரும் ஓர் எழுத்தாளராக இதுவரை உங்களைக் காண முடிகிறது. ஒரு கவிஞராய்க் காண ஆசைப் படுகிறேன் *ஆராதனை* எனும் தலைப்பில் சிறு கவிதை ஒன்றைத் தாருங்களேன் (அதிரை சித்திக்)

பதில்: இங்கே நான் இப்படி உரைநடை எழுதினாலும் நான் கவிதைக்கு ஆதரவாக எழுதி வருகிறேன். நான் உரைநடை எழுதும்போதே அர அல போன்ற சகோதரர்கள், இறைவனுக்கு இணைவைப்பதை நான் ஆதரிப்பதுபோல் தவறாக எண்ணி இருக்கிறார்கள். நான் கவிதை எழுதினால் என்னாகும்? சற்றே கலக்கமாக இருக்கிறதல்லவா 🙂

உரை நடையில் நான் அழுத்தமாகச் சொன்னாலும் அதை சகோ அர அல லேசாக எடுத்துக்கொள்வார். ஆனால் கவிதையில் நான் மென்மையாகச் சொன்னாலும் கடும் கோபம் கொண்டுவிட வாய்ப்பிருக்கிறதல்லவா? அப்படி இருக்க, ஏன் என்னை வம்பில் மாட்டிவிடும் விதமாய் இப்படி ஒரு விருப்பத்தை என்முன் வைக்கிறீர்கள்? சகோ அர அல அவர்களைக் கோபம் கொள்ளச் செய்வதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. அதே சமயம் என் முன் வைக்கப்பட்ட உங்கள் விருப்பத்தை நிராகரிக்கவும் மனம் வரவில்லை. ஆகவே…..

 • முதலில் கவிதையைப் பற்றி சில வரிகள் சொல்லிவிடுகிறேன். கவிஞனிடம் கவிதைக்கான தலைப்பைக் கொடுத்து கவிதை கேட்கக் கூடாது. ஏனென்றால் கவிதை என்பது செய்வதல்ல. இயல்பாக இதயத்திலிருந்து ஓர் உந்துதலில் தானே வருவது. அந்த உந்துதலுக்குக் காரணம் எதுவோ அந்தத் தலைப்பில்தான் கவிதை அமையும். அதுதான் உண்மையான கவிதை என்ற நம்பிக்கை உள்ளவன் நான். என் கவிதை நூல் ஒன்றுக்கு இப்படி ஒரு முன்னுரை எழுதினேன்:

  *

  இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?’ என்று கேட்கிறார்கள் சிலர்.
  என் கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற தாகம் அவர்கள் கண்களில் மிதக்கலாம் அல்லது ஒரு கவிஞனை விசாரிக்கும் சம்பிரதாய கேள்வியாகவும் அது இருக்கலாம்.

  இந்தக் கேவிக்கு பதிலாக ‘இல்லை’ என்று ஒரு சொல்லிலும் பதில் கூறலாம் அல்லது எனக்கு எப்பொதெல்லாம் கவிதைச் சிறகுகள் முளைக்கும் என்ற ரகசியத்தை விளக்கியும் கூறலாம். ஆனால் நானோ ‘விரைவில் எழுதுவேன் எழுதியதும் முதலில் உங்களுக்குத்தான் அனுப்பிவைப்பேன்’ என்று கூறுவதுண்டு.

  இந்த பதிலுக்குப் பின்னணியாய் நான் பிறந்த ஒரத்தநாட்டில் எங்கள் தெருவில் நெடுங்காலம் தபால்காரராய் எங்களுக்கு தபால்ப் பால் ஊட்டிய கண்ணையா என்பவரின் உயர்ந்த பண்பு இருக்கிறது. எங்களுக்குக் கடிதம் வராவிட்டால் ‘இன்று கடிதம் இல்லை’ என்று அவர் சொல்லமாட்டார் ‘அவசியம் நாளை தருகிறேன் தம்பி’ என்று அன்போடும் கனிவோடும் கூறுவார்.

  ஒரு கவிதையாவது எழுதாமல் உறங்கச் செல்லாத நாட்கள் அடர் மழைக் காலத்தைப்போல தொடர்ந்து எனக்குச் சிலகாலம் இருப்பதுண்டு. அதே போல கவிதைகளே எழுதாமல் பலகாலம் அப்படியே மௌனமாயும் மூடிக்கிடப்பேன்.

  கவிதைகள் என் உயிரின் கதவுகளைத் தட்டும்போது நடு இரவானாலும் உடனே எழுந்து எழுதுவதும் உண்டு, மூளைக்குள் அப்படியே ஒரு சேமிப்பாய்க் கிடத்திவிட்டு பின்னொருநாள் தட்டி எழுப்பி அதற்கொரு வடிவம் அமைக்கப் பாடுபடுவதும் உண்டு. ஆனால் இன்று ஒரு கவிதை எழுதியே தீரவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு ஒரு நாளும் அமர்ந்ததே இல்லை.
  இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.

  தலைப்பு தந்து கவியரங்கம் பாட அழைக்கும்போது வலுக்கட்டாயமாக அமர்ந்து கவிதை எழுத வேண்டிய சூழல் அமையும். அப்ப்டி அமையும் போதெல்லாம் கவிதை எழுதிப் பழகிய அனுபவ விரல்கள் வார்த்தை விளையாட்டுகளில் இறங்கிவிடும். சில சமயம், பழைய கவிதைகளை எடுத்துக் கோத்து இடைச் செருகல்களோடு புதிய கவிதைகள் உருவாக்கும் நிலைப்பாடும் அமையும்.

  இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், கவிதைகள் என்பன உள்ளத்தில் கருக்கொண்டு உணர்வுகளில் உந்திக்கொண்டு உயிரை உரசிக்கொண்டு அறிவின் சீரமைப்போடு தானே வெளிவருபவை. அப்படி வராதவை கவிதைகளாய் இருப்பதில்லை, வார்த்தை விளையாட்டுக்களாய்த்தான் அமையும்.

  ஆகையினால்தான் நான் என் இணையக் குழுமமான அன்புடனில் கவிதைப் போட்டிகளை அறிவித்தபோது கவிதை எழுதுவதற்கு எந்த ஒரு தலைப்பினையும் தரவில்லை. அது மட்டுமல்லாமல் கவிதை எழுதுவதற்கான காலத்தையும் அதிகமாக நீட்டிக்கொடுத்தேன்.
  தானாய்க் கனிவதுதான் கனி. தடியால் அடித்துக் கனியவைப்பது என்பதே கவிதை உலகில் தனி.

  *

  சரி, ஆராதனை என்ற தலைப்பில் ஒரு கவிதை கேட்டீர்கள் அல்லவா? நான் இருட்டை ஆராதித்த ஒரு கவிதையை இங்கே இடுகிறேன். நான் எப்படி இருட்டை ஆராதிக்கிறேன் என்று இருட்டே சொல்வதுபோல் அமைந்த இந்தக் கவிதை என் முதல் தொகுப்பான வெளிச்ச அழைப்புகளில் வெளிவந்தது. எத்தனை முரண் பார்த்தீர்களா? வெளிச்ச அழைப்புகளில் இருட்டு பேசுகிறது 🙂

  *

  இருட்டு பேசுகிறது
  ==================

  நான் இருட்டு
  கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்
  நானே நிஜம்

  வெளிச்சம் விருந்தாளி
  நானே நிரந்தரம்

  புலன்கள் ஐந்து
  அவற்றுள் ஒற்றைப்புலனே
  வெளிச்சத்தின் அடிமை
  அந்த விழிகளும் என்னில் மட்டுமே
  கனவுகள் காண்கின்றன
  கனவுகளே உங்களின்
  சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன

  உங்களின் சரியான முகவரி
  உங்கள் கனவுகளில்தான்
  பொறிக்கப் பட்டிருக்கிறது

  வெளிச்சம் உங்களைப் பொய்யுடன்
  பிணைத்துக் கட்டுகிறது

  வெளிச்சம் பொய்களின் கூடாரம்
  இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்

  என்றாவது உங்களை
  வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
  இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்
  வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்
  இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்
  வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்
  இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்

  வெளிச்சம் பொய்
  இருட்டே நிஜம்

  வெளிச்சம் துயரம்
  இருட்டே சந்தோசம்

  வெளிச்சம் அரக்கன்
  இருட்டே உங்கள் தாய்

  நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்
  அவை அனைத்தும்
  வெளிச்சம் உங்களுக்குத் தந்த விசங்கள்
  அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க
  இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது

  கரு எங்கே உதிக்கிறது
  விதை எங்கே முளைக்கிறது
  உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே

  வெளிச்சம் வேசம்
  வெளிச்சத்தில் சொல்லப்பட்ட
  கதைகள்தாம் இருட்டை பயமென்று பிதற்றுகிறது

  கருப்பையில் பயந்தீரா
  வெளிவந்து அழுதீரா
  இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது
  வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை
  இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை
  புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்
  உங்களுக்குக் காட்டி இருக்கிறதா
  சொல்லுங்களேன்
  பாசமென்பது பெத்தவளின் முகமா
  அவள் அரவணைப்பா
  காதல் தந்தது காதலியின் வெளியழகா
  அவள் உள்ளழகா
  நிம்மதிச் சொத்து உருவங்களாலா
  உள்ளங்களாலா

  யோசித்துப் பாருங்கள்
  இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்
  வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்

  வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை
  இருட்டு உருவத்தை மதிப்பதில்லை
  தினம் தினம் வெளிச்சம் உங்களை
  ஏமாற்றுகிறது

  தவறாக எண்ணாதீர்கள்
  இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
  ஓடி ஒளிவதில்லை
  வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது
  வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்
  இருட்டே இல்லாமல்
  வெளிச்சம் எங்கே இருக்கும்

  பூமி இருட்டு நிலா இருட்டு
  கோள்களெல்லாம் இருட்டு பிரபஞ்சமே இருட்டு
  உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்
  இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்

  *

  பின்னூட்டங்கள்:

  கவிஞர் சபீர்:
  இருட்டில் இத்துனை வெளிச்சம் பாய்ச்சுதல் எங்ஙனம் சாத்தியம் என எழுதியவர்க்கே சாத்தியம். முதன்முதலாக இருட்டைத் தெளிவாகப் பார்க்க வாய்த்தது, எனினும் எனக்கென்னவோ… வெளிச்சமே இருப்பு எனவும் இருட்டு இல்லையின் வறையரை எனவும் ஓர் அபிப்ராயம் உண்டு. நேரம் வாய்க்கும்போது பதிலடி தருகிறேன்,,,வெளிச்சமே வெற்றி என்று. க்ளாஸ் பீஸ் ஆஃப் ரைட்டிங், சகோ.

  *

  அதிரை சித்திக்:
  எதையும் தெளிவாய் சொல்ல கவிஞனால் மட்டுமே முடியும். கருவுக்குள் இருளில் அமைதியாய் இருந்த குழந்தை வெளிச்சத்தை கண்டு வீரிடுவதாக கூறும் கவி மனிதனுக்குள் திணிக்க படும் முதல் விஷயம் வெளிச்சம் …கவியின் ஆழம் கருத்து கடலின் ஆழம் ..கவிஞர் சபீர் கருத்து மோதலுக்கு தயாராகிறார். நானோ கவிஞரின் கவியில் மயங்கி கருத்தில் ஆழ்ந்து போனேன் இருளில் துவக்கமும் முடிவும் உள்ளதாகவே நினைகிறேன் தூக்கத்திற்கும் இருள் தேவை ..இருளின் குணம் அமைதி .கோழைக்குஇருள் பிடிக்காது பயம் பிடிக்கும் இருள் ..மீது ஒரு காதலையே கொண்டு வந்து விட்டீர்கள் கவிஞரால் எதையம் எப்படியும் கூறி மனதில் பதிய வைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று.

  *
  கவிஞர் சபீர்:

  நான்… வெளிச்சம்!
  ==================

  விடியல் என்றொரு வினையில்
  சற்றுமுன்தான்
  உலகின் இருட்டு அழுக்கைத்
  துடைத்தெடுத்தத்
  தூய்மை நான்.

  இருட்டு
  இல்லையின் வறையரை
  நானோ
  இருப்பின் அறிவிப்பு

  என்னைக்கொண்டே
  நாட்களைக் கணக்கிடுவர்
  இருட்டைக் கொன்றே
  நானும் வெளிக்கிடுவேன்

  உள்ளுக்குள் உறங்கும்
  மிருகம்
  இருட்டின் தயவிலேயே
  குற்றம் புரியும்
  இருட்டை உடுத்தியே
  எங்கும் உலவும்
  நான்
  நல்லது கெட்டதை
  நானிலத்திற்குக் காட்டும்
  நல்லவன்

  இருட்டு
  கண்கொத்திப் பாம்பு
  துரோகத்தின் துணைவன்
  எல்லாப் பொருட்களையும்
  இல்லையென்றாக்கும்
  ஏய்ப்பு இருட்டு.

  நான் நிஜம்
  இருட்டு நிழல்

  வெளிச்சம் விருந்தாளியல்ல
  இருட்டு தரிக்கும்
  வேடம் திருத்தி
  யதார்த்தமாக்க முயலும் அறிவாளி

  யாவற்றின்
  இயல்புகளையும்
  கருமை பூசி
  போலியாகக் காட்டும்
  முகமூடி இருட்டு

  நிஜம்தான்
  நிரந்தரம்
  இருட்டு
  எத்தனை முயன்றாலும்
  என்னைக்கொண்டு
  விரட்டவே விழையும் உலகு

  இருட்டு
  காத்திருக்கு மொரு கயமை
  நான்தான்
  அதைக் கட்டுப்படுத்தும்
  காவல்காரன்.

  நான் துவக்கம்
  இருட்டு இறுதி
  என்னில்
  வாழ்க்கைத் துவங்கும்
  இருட்டில் எல்லாம் இறக்கும்

  இருட்டு இருமாப்பு
  வெளிச்சமே இறை வார்ப்பு!

  *

  கவிஞர் அபுல் கலாம்:

  கறுப்பும் வெள்ளையும்:
  =====================

  கருவறை இருட்டெனும் கறுப்பு;
  பயணிக்கும் உயிரணுவோ வெள்ளை!
  இருட்டும் வெள்ளையும் கலந்து
  பிறப்பது குழந்தை எனும் கவிதை!
  கரும்பலகையில்
  வெள்ளைக் கட்டியால்
  எழுதினாற்றானே
  பழுதின்றிப் பாடம் கற்கலாம்!

  கருமையையும் வெண்மையையும்
  பிரித்துக் காட்டும் வைகறைப்
  பொழுதில் எனக்கு ஓர் ஈர்ப்பு!

  இருட்டு அறியாமையை
  வெளிச்ச அறிவு வென்ற பின்னரும்
  அறியாமையும் அறிவும் கலந்து
  ஐயமும் தெளிவும்
  ஐக்கியமாய் இருப்பதும் கண்கூடு!

  கல்லறையெனும் இருட்டறைக்கு
  அமல்கள் எனும் வெளிச்சம்
  கொண்டு சேர்த்த பின்னரும்
  மீண்டும் எழுப்பும் வரை
  பயமெனும் இருளும்
  நம்பிக்கை எனும் வெளிச்சமும்
  கூடவே நிற்கும்!

  எழுதியவர் புகாரி

  Source: http://anbudanbuhari.blogspot.in

  Advertisements
   
 • Tags: , , ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: