RSS

டீ-யா வேலை பார்க்கணும் பாஸ்!

26 May

உழைக்கும் மக்களின் பிரியத்துக்குரிய உற்சாக பானமான ‘டீ’
அடுத்த ஆண்டு முதல் தேசிய பானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

பிப்ரவரி 26, 1858ல் மணிராம் திவான், பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டார். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் பலமாக காலூன்ற ஆரம்பகாலங்களில் செயல்பட்டவர் அவர். ஆயினும் பிற்பாடு முதல் இந்திய சுதந்திரப்போரின் எழுச்சியை அஸ்ஸாமில் பரப்பியவர் என்கிற அடிப்படையில் அவரது உயிர் பறிக்கப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் எழுபத்தைந்தாம் ஆண்டு விழா கடந்த மாதம் நடந்தது. விழாவில் கலந்துக் கொண்டு பேசிய திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், டீ இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்கப்படும்” என்று அறிவித்து பலமான கைத்தட்டலைப் பெற்றார். நம்மூர் டீக்கடை நாயர்களும் இந்த அறிவிப்பால் குஷியாகியிருக்கிறார்கள்.

 • முதல் பத்திக்கும், இரண்டாம் பத்திக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால் டீ இந்தியாவின் தேசியபானமாக அறிவிக்கப்படப் போவது மணிராம் திவானின் 212வது பிறந்தநாள் அன்றுதான். அஸ்ஸாமில் சிங்போ எனப்படும் பழங்குடியினர் உண்டு. இவர்கள் தேயிலைகளை பயிரிட்டு பயன்படுத்துவதை பிரிட்டிஷாருக்கு முதன்முதலாக தெரிவித்தவர் மணிராம். இதையடுத்து கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் அஸ்ஸாமில் முகாமிட்டு, தேயிலை எஸ்டேட்களை நிறைய உருவாக்கினார்கள். அந்தக் காலக்கட்டத்தில் இங்கே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சீன நாட்டு தேயிலைக்கு சுத்தமாக மவுசு போனது (இந்தியத் தேயிலையும், சீனத் தேயிலையும் வகைரீதியாக வேறுபட்டவை). அதுவரை ‘டீ’ என்பது ஆடம்பரபானமாக இருந்து வந்தது. இந்தியாவில் தேயிலை எஸ்டேட்கள் பெருக, பெருக அடித்தட்டு மக்களும் தங்களுடைய அத்தியாவசியத் தேவையாக ‘டீ’யை ஏற்றுக் கொண்டார்கள்.

  பிரிட்டிஷாரின் அஸ்ஸாம் டீ கம்பெனியின் திவானாக மணிராம் நியமிக்கப்பட்டார். பிற்பாடு சுதேசிக் கொள்கைகளில் ஆர்வம் கொண்ட அவர் பணியிலிருந்து விலகி, சொந்தமாக டீ எஸ்டேட் உருவாக்கினார். முதன்முதலாக டீ எஸ்டேட் உருவாக்கிய இந்தியர் என்கிற பெருமையை பெற்றார். இந்த தொழில் மட்டுமன்றி இரும்பு, நிலக்கரி, தங்கம், செராமிக், ஐவரி, கைத்தறி, படகு தயாரித்தல், கட்டுமானம், யானை வர்த்தகம் என்று வகைதொகையில்லாமல் தொழில்கள் செய்து, கொடிகட்டிப் பறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர், பன்தொழில் வித்தகர் என்றெல்லாம் ஏராளமான சிறப்புகள் இருந்தாலும் ‘டீ’ தான் தீயாய் அவரது புகழை இன்றும் பரப்பி வருகிறது. இன்று நாம் குடிக்கும் ஒவ்வொரு கப் ‘டீ’லும் மணிராம் சர்வநிச்சயமாக கலந்திருக்கிறார்.

  ‘டீ’யின் ரிஷிமூலம் எதுவென்று சரியாக வரலாற்றில் பதியப்படவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சீனர்கள் கப், கப்பாக குடித்துத் தள்ளினார்கள் என்பதில் இருந்துதான் ஓரளவுக்கு சீரான வரிசையில் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலேயே கின் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சீனாவில் ‘டீ’ பிரபலமான பானமாக இருந்ததாகவும் சொல்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேயிலைத் தொழிலில் சீனர்கள் உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தார்கள். இந்தியாவில் இத்தொழில் பிரபலமாகும்வரை சீனர்களை இதில் அடித்துக்கொள்ள ஆளே இல்லாத நிலை இருந்தது.

  பண்டைய சீனாவில் ‘டீ’யை ‘ச்சா’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த பெயர் பாரசீகத்துக்குப் போனபோது ‘ச்சாய்’ என்று திரிந்திருக்கிறது. இப்போதும் நம்மூரில் ‘டீ’யை ‘ச்சாயா’ என்று பாதிபேர் விளிப்பது குறிப்பிடத்தக்கது. தைவான் பக்கமாக இருந்தவர்கள் ‘டே’ என்று இதை அழைக்க, அவர்களோடு வணிகத் தொடர்பில் இருந்த ஐரோப்பியர்களால் ‘டீ’ என்று நாமகரணம் சூட்டப்பட்டது.

  தயார் செய்யப்படும் பானங்களில் இன்று உலகளவில் ‘டீ’ தான் லீடர். காபி, சாக்லேட், குளிர்பானங்கள், மதுபானங்கள் என்று மீதியிருக்கும் எல்லா பானங்களையும் அருந்துபவர்கள் நூற்றுக்கு ஐம்பது பேர் அருந்துகிறார்கள் என்றால், மீதி ஐம்பது பேர் அருந்துவது டீ.

  உலகிலேயே ‘டீ’ அதிகம் போடப்படுவது இந்தியாவில்தான். சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் முக்கால் கிலோ டீத்தூளை முழுங்குவதாக ஒரு கணக்கெடுப்பு இருக்கிறது. 750 கிராம் x 122 கோடி-யென்று கால்குலேட்டரில் கணக்கு போட்டு பார்த்தீர்களேயானால், ஒரு வருடத்துக்கு நம்முடைய டீத்தூள் தேவை என்னவென்று துல்லியமாக தெரிந்துக் கொள்ளலாம். துருக்கியர்கள் நம்மைவிட மோசம். வருடத்துக்கு ஆளொன்றுக்கு இரண்டரை கிலோ டீத்தூள் தேவைப்படுகிறதாம். ஆனால் மக்கள் தொகை நம்மை ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை என்பதால், இவ்விஷயத்தில் நாம் தான் ‘டீ’ம் லீடர். உற்பத்தி அடிப்படையில் சீனா, இந்தியா, கென்யா, இலங்கை, துருக்கி ஆகியவை டாப் ஃபைவ் நாடுகள்.

  அடுத்த ஆண்டுதான் ‘தேசிய பானம்’ முடிசூட்டு விழா நடக்கப் போகிறது என்றாலும், இப்போதே நாட்டில் ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது.

  அமுலின் தாய்மாநிலமான குஜராத்தில் இருந்து ‘பால்தான் இந்தியாவின் தேசியபானம்’ என்று அறிவிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுகிறது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு இதை வலியுறுத்துகிறது. “எல்லா நாடுகளிலுமே, எல்லா வயதினருக்கும் பொதுவான பானமாக பால் தான் இருக்கிறது. இத்தனைக்கும் வெண்மைப் புரட்சியை சாதித்துக் காட்டியவர்கள் நாம். இப்போது இந்த தேசிய பானம் என்கிற அறிவிப்பே தேவையற்றது. இந்தியாவின் தேசிய உணவு என்று அரிசி சோற்றையோ, சப்பாத்தியையோ அறிவித்திருக்கிறார்களா என்ன?” என்று பொங்கியெழுகிறார் அந்த கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனரான ஆர்.எஸ்.சோதி.

  பஞ்சாப்பின் ரெஸ்டாரண்டுகளோ ‘லஸ்ஸிதான் நம் நாட்டின் தேசிய பானம்’ என்று களமிறங்கியிருக்கிறார்கள். அதற்காக அரசினை கவருவதற்காக ‘லஸ்ஸி திருவிழா’வெல்லாம் நடத்தி ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் நம்மூர் டாஸ்மாக் குடிமக்கள்தான் களமிறங்கவில்லை.

  டயர்டா இருக்கு பாஸ். ஒரு டீ அடிப்போம் வர்றீங்களா?

  (நன்றி : புதிய தலைமுறை)
  எழுதியவர் யுவகிருஷ்ணா

  http://www.luckylookonline.com/2012/05/blog-post_26.html

  Advertisements
   
 • Tags: , ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: