RSS

இப்படியும் ஒரு மனிதனா?

30 Sep

நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. காரணம் எனக்கு எந்த அரசியல்வாதியின் மீதும் நல்ல நம்பிக்கை இருந்தது கிடையாது.

“Politics is the last refuge of the scoundrels”

என்றான் சாமுவல் ஜான்சன். அதாவது “அரசியலானது அயோக்கிய சிகாமணிகளின் கடைசிப் புகலிடம்” என்பது அவனது சித்தாந்தம் நான் கேட்டிருந்த, படித்திருந்த, பார்த்திருந்த அரசியல்வாதிகள் பெரும்பாலும் இந்த வகையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்.

நேற்று முந்தைய தினம் என் மனைவியின் குடும்பத்தில் சொல்லவொணா சோகம் ஒன்று நிகழ்ந்தது. மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு. எதிரிக்குக் கூட இப்படிப்பட்ட ஒரு சோகம் கனவிலும் நிகழக்கூடாது.

என் மனைவியின் சொந்த தாய்மாமன் மகள் ஷாயிரா பானு காரில் சென்னைக்கு செல்லும் வழியில் திண்டிவனம் அருகே கோரவிபத்தில் பலியானார். உடன் சென்ற அவர் கணவர் செய்யத் ஜாஃபர், மற்றும் இளைய மகன் அப்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

 • கார் சென்று மோதியதோ காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில். கார் நேராக லாரியின் டீசல் டாங்கியில் சென்று மோதியதால், டீசல் முழுதும் தரையில் சிந்தியுள்ளது. ஒரு சிறு தீப்பொறி அதில் விழுந்தாலும் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிலிண்டர்கள் வெடித்துவிடும் அபாயம். பொதுமக்களுக்கு கிட்ட நெருங்க பயம்.

  இதற்கிடையில் மூத்த பையன் ஆஷிக் (14 வயது) ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி மண்டையில் அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். சுற்றி நின்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களேத் தவிர, அவனைக் காப்பாற்றுவதற்கு யாருமே முன்வரவில்லை. ‘போலீஸ்’, ‘கேஸ்’ என்று அலைய வேண்டுமே, ஏன் நமக்கு இந்த வேண்டாத வேளை என்று நினைத்தார்களோ என்னவோ.

  என்ன ஒரு மனிதாபிமானமற்ற சமூகம்? அவ்வழியே கடந்து சென்ற கார்களும், பஸ்களும் கண்டும் காணததும் போலவே சென்றுக் கொண்டிருந்தன.

  சம்பவம் நடந்து சிலமணித்துளிகளில் அரசியல் பிரமுகர் ஒருவரின் கார் அவ்வழியே சென்றுள்ளது. சம்பவத்தை நேரில் கண்டு பதறிப்போன அவர் வண்டியை உடனே நிறுத்தி கீழே இறங்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் ஆஷிக்கிடம் “உன் வீட்டுத் தொலை பேசி எண்ணைக் கூறு” என்று கேட்டிருக்கிறார். தொலைபேசி எண்ணை அவரிடம் கூறிவிட்டு உடனே மூர்ச்சையாகி போனான் அவன்.

  உடனே அப்பையனின் சிறிய பாட்டனாருக்கு, அவரே போன் செய்து தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு, நான்தான் இன்னார் பேசுகிறேன், இப்படி ஒரு விபத்து இங்கு ஏற்பட்டு விட்டது என்று தகவல் சொல்லியிருக்கிறார்.

  அதுமட்டுமன்றி, சிறுவன் ஆஷிக்கை விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்கிறார். மண்டையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதால் சென்னைக்கு எடுத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தால்தான் சிறுவன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று அந்த அரசியல் பிரமுகரிடம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

  உடனே சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக தொடர்பு கொண்டு அவருக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி. எல்லா வேலைகளையும் துரிதமாக நடப்பதற்கு உதவி புரிந்துள்ளார். சிறுவனைக் காப்பாற்றுவதற்கான முன்னேற்பாடுகளும் அனைத்தும் அசுர வேகத்தில் மளமளவென்று நடந்திருக்கிறது. மூளையில் ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டு கோமா நிலைக்கு போகவிருந்த அவனை மருத்துவர்கள் ஒன்றுகூடி காப்பாற்றி இருக்கிறார்கள். இன்று வந்த தகவலின்படி அந்தச் சிறுவன் ஆபத்துக் கட்டத்தை தாண்டி விரைவில் ICU வார்டிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படவிருக்கிறான் என்ற செய்தி மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது

  நான் முன்பு சொன்னதுபோல் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல. அந்த பிரமுகரை நான் இதுவரை நேரில் சந்தித்ததுகூட கிடையாது. அவர் வேறு மதம். நாங்கள் வேறு மதம். அவர் வேறு ஜாதி. நாங்கள் வேறு ஜாதி.

  அந்தப் பிரமுகருக்கு ஆயிரம் அலுவல்கள் இருந்திருக்கக் கூடும். அவர் மனதில் புதைந்திருக்கும் மனிதாபிமானம்தான் இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய அவரைத் தூண்டியிருக்க வேண்டும்.

  சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் வெட்டுண்டு கிடந்தபோது, அவ்வழியே கண்டும் காணாதது போல் சென்ற இரு அமைச்சர்களைப்போல் இவரும் காற்றாக பறந்திருக்கலாம்.

  காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
  ஞாலத்தின் மாணப் பெரிது

  என்றார் வள்ளுவப் பெருந்தகை.

  மனிதநேயம் இவ்வுலகத்தில் அறவே அற்றுப் போய் விடவில்லை என்பதற்கு இந்த நிகழ்வு நல்லதொரு எடுத்துக்காட்டு.

  மனிதநேயமிக்க அந்த நல்ல உள்ளம் வேறு யாருமல்ல. வைகோ என்று அழைக்கப்படும் வை.கோபால்சாமிதான் அந்த மாண்பு நிறைந்த மனிதன்.

  நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை

  என்கிறது மூதுரை.

  இன்று நம் நாட்டில் மழை பொழிகின்றதென்றால் இதுபோன்ற நல்ல உள்ளங்கள் நம்மிடைய உலவுவதினால்தான் போலும்.

  இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்து, அந்தச் சிறுவன் உயிர் காப்பாற்றப்படுவதற்கு திரு,வைகோ என்ற மனிதருள் மாணிக்கம்தான் காரணமாக இருந்தார் என்ற செய்தி வந்தபோது எதிர்பாராத விதமாக திரு நாஞ்சில் சம்பத் அவர்கள் இங்கு பஹ்ரைனுக்கு ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்காக வருகை புரிந்திருந்தார். நிகழ்வுப்பொருத்தம் (Coincidence) என்கிறார்களே, அது இதுதான் போலும்.

  அவரிடம் இந்த நிகழ்ச்சியை எடுத்துச் சொன்னேன், இது முதல்முறையல்ல இதுபோன்று எத்தனையோ முறை அவர் இதுபோன்ற உதவிகள் புரிந்திருக்கிறார் என்றறிந்து நெகிழ்ந்துப் போனேன்.

  நேற்றைய தினம் (28.09.12) மறுபடியும் அவர் தன் சகாக்களுடன் அப்போலோ மருத்துவமனைக்குச் நேரடியாகச் சென்று அவனை நலம் விசாரித்து, மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஆகுமான உதவிகள் செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.

  எனக்கு புரியாத புதிர் என்னவென்றால் எப்படி இந்த மனிதனால், இத்தனை முக்கிய அலுவல்களுக்கிடையிலும், போராட்டங்களுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி இப்படிப்பட்ட மனிதநேயமிக்க செயல்களை செய்ய முடிகின்றது? என்றுதான். எந்த ஒரு பிரதி உபகாரமும் எதிர்பாராமல் இப்படிப் பட்ட சமூகநலக் காரியங்களை செய்யும் அம்மனிதனைப் புகழ்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. சாமுவல் ஜான்சனின் கூற்றை பொய்யாக்கிவிட்ட மனிதனிவன்.

  வைகோ அவர்களுக்கு என் மனைவியின் குடும்பத்தாரின் சார்பில் நன்றி கூறவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்று (29.09.12) அவரது உதவியாளர்கள் அரியமங்கலம் அடைக்கலம், ருத்ரன். முத்து போன்றவர்களைத் தொடர்பு கொண்டு “உங்கள் தலைவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும்” என்றேன். அவர் மிகவும் பிஸியாக இருப்பதாகக் கூறினார்கள். விஷயத்தை எடுத்துக்கூறி என்னுடைய பஹ்ரைன் கைப்பேசி எண்ணை அவர்களிடம் கொடுத்தேன்.

  அடுத்த பத்தாவது நிமிடத்தில் எனக்கு போன்கால் வந்தது. “நான்தான் வைகோ பேசுகிறேன்” என்றது அந்தக் குரல். தொலைக்காட்சி செய்திகளில் நான் அடிக்கடி கேட்கும் அதே குரல்.

  “இதுக்கு எதுக்காக நன்றி சொல்லுறீங்க? மனுசனுக்கு மனுசன் இதுகூட செய்யலேன்ன என்ன இருக்கு?” என்றார். எனக்கு பேச்சு எழவில்லை. இத்தனை சோகத்துக்கிடையிலும் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது. என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்த குரல் எனக்குள்ளே அவரை வாழ்த்தியது.

  வியந்து போனேன் நான். இப்படியும் ஒரு மனிதனா? என்று.

  (பி.கு: இங்கு அரபு நாடுகளில் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்கள் ஒரு சிறந்த பழக்கத்தை கையாள்கிறார்கள். ரோந்து சுற்றும் எல்லா போலீஸ்வண்டிகளிலும் கைவசம் ரெடியாக வெள்ளைத் துணிகள் இருக்கும். சாலைகளில் உயிர்பலி ஏற்பட்டால் முதற் காரியமாக அந்த வெள்ளைத் துணியால் சடலத்தை மூடி விடுவார்கள். இறந்துபோன மனிதர்களுக்கு கொடுக்கப்படும் கெளரவமான கடைசி மரியாதை அது. ஏன் நம் நாட்டில் இதுபோன்ற பழக்கம் கையாளப் படுவதில்லை? ஏதோ நாதியற்று கிடக்கும் பிணம்போல் மணிக்கணிக்கில் சாலையில் கிடத்தி அவர்களை காட்சிப் பொருளாக ஆக்கி விடுகிறார்கள். அரசு அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?)
  Source : http://nagoori.wordpress.com/

  Advertisements
   
 • Tags: , , , , , ,

  One response to “இப்படியும் ஒரு மனிதனா?

  1. Bala Ganesan

   October 27, 2012 at 2:39 pm

   I am sorry to hear about the loss of your relative family.
   Good to know about Mr.Vaiko’s good deed. I am glad to read that the boy’s life is saved.

    

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: