RSS

Monthly Archives: January 2013

ஒன்றிரண்டாய்க் கவிவரிகள் + பாசத்துடன் புகாரியின் பேசும் குரல்.

2002 buhari51

ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்றுஅந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்

சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி

உள்ளத்தின் பரப்புகளை
உழுதுநின்ற உணர்வுகளைச்
சொல்லும்சுவை நானுணர்ந்தேன்
சொன்னமொழி என்மொழிதான்

வென்றுவிட்ட நினைவெழுந்து
வெள்ளலையாய் வந்துமோத
கன்றுமனத் துள்ளலோடு
கவிஞனெனக் கண்சிலிர்த்தேன்

பெற்றெடுத்த காதுகளில்
புகுந்ததிந்தச் செய்திவெடி
கற்றுபலப் பதவிவேண்டும்
கைநிறைய காசுவேண்டும்

வெற்றுக்கவி ஆகிவிட்டால்
வேதனையே வீடுசேரும்
முற்றுப்புள்ளி இட்டுவிடு
மூட்டைகட்டி கொளுத்திவிடு

தொட்டுஒரு வரிமீண்டும்
தொடர்ந்தெழுதிப் போனாலோ
பட்டையாய்த் தோலுரிப்பேன்
பட்டினியே இருட்டறையில்

கட்டைக்குரல் கடுகடுக்கக்
கண்டிப்பாய்க் கூறிவிட்டார்
முட்டியதுநீர் அன்றேஎன்
முதற்கவிதை பிறந்ததடா

 • 0

  பதின்வயதில் விளையாட்டு
  பருவத்தின் குறுகுறுப்பு
  புதுவனப்பில் தரையிறங்கி
  பகல்நிலாக்கள் வலம்போக

  மதுக்குடத்தில் மனம்விழுந்து
  மதிமயங்கிக் கூத்தாட
  உதித்தகவி கொஞ்சமல்ல
  ஒவ்வொன்றும் முத்தழகு

  காதலெனும் புயல்ஊற்றைக்
  கவியேற்றாக் கவியுண்டோ
  காதல்நதி குதிக்காமல்
  கவிஞனென்று ஆனதுண்டோ

  காதலுக்குள் விழும்போதும்
  காதலாகி எழும்போதும்
  காதலோடு அழும்போதும்
  கவிதைகளோ பலகோடி

  கவிதைகளால் சிறகசைத்த
  காகிதங்கள் பார்வையிட்டு
  கவிஞரேயென அன்போடு
  கற்றுத்தரும் தமிழய்யா

  உயிர்மலர எனையழைத்து
  உற்சாகம் தந்திடுவார்
  பயிர்வளர்க்கும் உழவன்போல்
  பாசமுடன் அரவணைப்பார்

  அடுக்கடுக்காய்ப் புத்தகங்கள்
  ஆயிரமாய் அள்ளிவந்து
  படிக்கவேண்டும் என்றெனக்குப்
  பரிவோடு தந்திடுவார்

  விடுப்பில்தான் படிக்கவேண்டும்
  வேண்டாமிது இப்போது
  இடுப்பொடியும் பாடமுண்டு
  எப்படியும் முடிக்கவேண்டும்

  மருத்துவனாய் எனையாக்க
  மனமெல்லாம் கனவுகளாய்
  இருக்கின்றார் என்வீட்டில்
  எனைவிடுவீர் இப்போது

  வருத்தம்தான் எனக்குவேறு
  வழியுண்டோ கூறுங்கள்
  விருப்பத்தை ஒத்திவைத்து
  விடைகூறிப் புறப்பட்டேன்

  போதுமான மதிப்பெண்கள்
  பெற்றேநான் தேர்ந்தபோதும்
  மோதிமுட்டிப் பார்த்தேன்நான்
  முடியவில்லை மருத்துவமும்

  சாதிவழிச் சலுகையில்லை
  சந்துவழி வசதியில்லை
  வேதனையில் விளைந்ததடா
  வைரமணிக் கவிவரிகள்

  0

  பட்டமொன்று பெற்றுவிட்டேன்
  படையெடுத்தேன் வேலைகேட்டு
  வெட்டவெளிப் பொட்டலிலே
  வெறுமைகூட்டி நிற்கவைத்து

  கெட்டகெட்ட கனவுகளைக்
  கண்களுக்குள் கொட்டிவிட்டு
  பட்டமரம் போலஎன்னைப்
  பாதையோரம் நிறுத்தியது

  எல்லோரும் மன்னரென்ற
  என்நாட்டு நாற்காலி
  அல்லாடும் மனத்தோடு
  அரபுநிலம் புறப்பட்டேன்

  சொல்லவொருச் சொல்லுமில்லை
  சுகம்பெற்றேன் சத்தியமாய்
  இல்லாமைப் பேய்விரட்டி
  என்வீட்டைக் காத்திட்டேன்

  பாலைவனச் சாலைகளில்
  பார்த்ததெலாம் நெருப்பெனினும்
  ஊளையிடும் வறுமைபோக்கி
  உறவுகளைக் காத்துநின்று

  மாலையிட்டு மக்களீன்று
  மனம்முழுதும் பசுமைபூக்க
  வேலைதந்தப் பாலைவனம்
  வேதனையைத் தீர்த்ததெய்வம்

  பெற்றமண்ணை உறவைநட்பை
  பிரிந்துவந்த சோகவிதை
  நெற்றிவரி இழுத்துச்சென்ற
  நிலம்விழுந்து முட்டிமோத

  பெற்றதுன்பம் கொஞ்சமல்ல
  பிரிவென்பதும் வாழ்வுமல்ல
  கற்றபெரும் அனுபவங்கள்
  கவிதைகளாய் வெடித்ததடா

  0

  வருடங்கள் மூவாறு
  வாழ்வளித்தப் பாலையிலே
  உருண்டோடி விட்டபின்னர்
  ஊர்தேடிப் புறப்பட்டேன்

  அரும்புகளின் கல்வியெண்ணி
  அப்படியே திசைமாற்றம்
  அருமைநிலம் கனடாவில்
  அவசரமாய்க் குடியேற்றம்

  கனவுகண்ட புதியபூமி
  கருணைமனத் தூயவானம்
  இனங்களெலாம் இணைந்துபாடும்
  இனியரதம் கனடியமண்

  குணக்கேடு மதவெறியர்
  குத்துவெட்டு பகையில்லா
  மனிதநேயம் போற்றுமிந்த
  மண்பெருமை விண்பாடும்

  இணையத்தின் தமிழுக்கு
  இங்குவந்தே என்வணக்கம்
  முனைதீட்டிக் கவிபாட
  முத்தமிழின் புதுச்சங்கம்

  அணையுடைத்துக் கவிபாடும்
  ஆற்றுவெள்ள உற்சவம்போல்
  இணையமெங்கும் தமிழ்வாசம்
  இதயமெங்கும் தேரோட்டம்

  குளிர்தீண்டக் கவிகொஞ்சம்
  கொட்டும்பனி கவிகொஞ்சம்
  மலர்வண்ணம் இலைதாவும்
  மரக்கிளையின் கவிகொஞ்சம்

  வளர்தமிழை விண்ணேற்றி
  உலகமெலாம் மழைபொழியும்
  புலம்பெயர்ந்த ஈழத்தவர்
  புகழ்பாடி கவிகொஞ்சம்

  எழுதியெழுதி கவிதைகளை
  இணையமெங்கும் தூவினேன்
  எழுதிவைத்த தொகுப்பிரண்டை
  இங்கிருந்தே வெளியிட்டேன்

  அழகுதமிழும் கணினிமடியும்
  அமுதூட்டித் தாலாட்ட
  அழகழகாய்த் தேன்மழையாய்
  அருங்கவிதை பொங்குதடா

  0

  பார்க்கவரும் விழிகளெல்லாம்
  பார்ப்பதற்கே வருவதில்லை
  கோர்க்கவரும் விரல்களுமே
  கோர்ப்பதற்கே வருவதில்லை

  ஊர்ப்பாட்டைக் கேட்டிருந்தால்
  உன்பாட்டை மண்மூடும்
  மார்தட்டித் திடங்கொண்டால்
  மலைத்தொடரும் பொடியாகும்

  யானைநடை போட்டாலும்
  இடறிவிழும் காலமுண்டு
  தேனமுதச் சொல்லெடுத்துத்
  தித்திக்கப் பொய்யுரைத்து

  பூனைபோலப் பாலருந்தப்
  புறப்பட்டு வருவார்பின்
  கானகத்து முட்புதரில்
  கதியற்று நிறுத்திடுவார்

  நிலவோடு விழிகளாட
  நிலத்தோடு கால்களாட
  விலகியோடும் பனிமேகம்
  விருந்தாகும் சிலநேரம்

  தழுவவரும் யோகங்களைத்
  தடைபோடும் பாவங்கள்
  நழுவிவிழும் அடிகளுக்கும்
  நாடிவரும் ஒத்தடங்கள்

  கோடுகளில் நதியோட்டம்
  கரைகளிலோ நெஞ்சோட்டம்
  ஏடுகளில் காணாத
  எத்தனையோ கனவோட்டம்

  கூடிவரும் வாய்ப்புகளில்
  குறைவில்லாக் கொண்டாட்டம்
  தேடுகின்ற அமைதிமட்டும்
  தென்படாத திண்டாட்டம்

  எத்தனையோ இவைபோல
  என்வாழ்வில் காண்கின்றேன்
  அத்தனைக்கும் மருந்தாக
  ஆனதொரு மந்திரந்தான்

  சொத்தைகளும் சரியாகும்
  சுடர்வெற்றி வாழ்வாகும்
  நத்தைபோல நகர்ந்தாலும்
  நம்பிக்கை முன்னிறுத்து

  நம்பிக்கை வளர்த்தெடுக்க
  நாளெல்லாம் கவியெழுதி
  தெம்புக்கோர் பாட்டென்று
  திசையெங்கும் பாடவைத்து

  அன்புமனம் அமுதளக்க
  அன்னைத்தமிழ் எழுதுகிறேன்
  அன்புக்கரம் வளைத்துலகை
  அரவணைத்து நெகிழ்கின்றேன்

  அன்புடன் புகாரி
  http://anbudanbuhari.blogspot.in/2008/02/blog-post_24.html
  பாசத்துடன் புகாரி

  Advertisements
   
 • Tags:

  என் போக்குக்கு விடுங்கள்

  BeQuiet‘அதைச் செய்யாதே! இதைச் செய்யாதே ! அங்கு போகாதே! இங்கு போகாதே! இப்படிச் செய்!’ இவ்விதம் சொல்லிக் கொண்டிருக்கும் அப்பாவிடம் அவரது பிள்ளை சொல்வது
  ‘ஏன்பா! இப்படி இருக்கீங்க, நான் என்ன சின்ன பாப்பாவா!’
  ‘நான் வளர்ந்து விட்டேன் .நல்லது கெட்டது அறியும் ஆற்றலை நான் பெற்று விட்டேன் . என் போக்குக்கு விடுங்கள், நான் தவறு செய்தால் நானே திருத்திக் கொள்வேன்,திருந்தியும் கொள்வேன்’ என்று பேசும் அளவுக்கு மற்றும் திறமை உடையவர்களாக பிள்ளைகள் அறிவைப் பெற்று விட்டனர்.
  நாம் மிகவும் பாதுகாப்பாக வளர்ப்பதாக அவர்களை மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தால் ஆபத்து வரும் காலங்களில் அவர்களால் தன்னை திறன்பட சமாளிக்கும்திறமை இல்லாமல் போய்விடும்.
  குழந்தை ஓடி ஆடி விளையாடும்போது தவறி கீழே விழும் அது தானே எழும் அடுத்த முறை அவ்விதம் விழுவதை அந்த குழந்தை தவிர்த்துக் கொள்ளும். நாம் குழந்தை கீழே விழுந்து அடிபட்டு விடுமென்று அதனை விளையாட விடாமல் தவிர்ப்பது அந்த குழந்தை பெரிய ஆபத்து வரும் போது தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலை பெறாமல் போய்விடும்.

  குழந்தைகளுக்கு பாதுகாப்பாக நாம் செயல்படுவது நல்லது அதே நேரத்தில் அதன் ஆற்றலை குன்றச் செய்யும் அளவுக்கு நாம் செயல்பட்டு விடக்கூடாது

   

  சமூகத்தில் குழப்பம் விளைவிப்பவரே நம்மில் மோசமானவர்.

  61400_308607025909776_1319756926_nஆசை அலைபாய்கிறது .அது கனவிலும் வந்து மேய்கிறது.
  ஆசைக்கு ஒரு நங்கூரம் போட நான் ஒரு ஞானியா!
  அசை போடும் ஆசையை எனக்குள் முடங்கிக் கிடக்க விட மாட்டேன்
  ஆசையாக அசைபோட வைத்தவர் ஒருவர் இருக்க
  நப்பாசை நினைவில் இருந்துக் கொண்டுதானிருக்கும்
  வசைபாடி அதனை ஏன் வெளியேற்ற வேண்டும்
  என்னாசை எனக்குள் ஒரு தூண்டுதல் சக்தியாக உருவாகின்றது
  அதனை அடுத்தவருக்கு பாதகம் தர உருவாக்கி விட மாட்டேன்.

  ஆசையை அழித்துவிடு என்போர் இருக்க
  ஆசையே உன்னை உருவாக்கும் என்றும் சிலர்
  அடுத்தவர் ஆசைக்கு நான் என்னை உருவாக்குவேன்
  அடுத்தவருக்கு பாதகம் அமைந்துவிடாமல்

  தூக்கி விட்டவரையும் மதிக்க வேண்டும்
  தூக்குவதர்க்கும் நான்கு பேர் வேண்டும்
  தூக்குபவர்கள் வசை பாடாமல் தூக்க வேண்டும்
  தூனாக நின்றாலும் தூளாகும் நாள் வரத் தானே செய்யும்

 • சிலர் இதனை விரும்புகிறார்கள். சிலர் இது கூடாது என்று சொல்கின்றார்கள்.

  விரும்புவதும் விரும்பாததும் தனிப்பட்டவரின் மனதில் உருவாகும் செயல். திறமையின் வேகம், அறிவின் ஆற்றல் .ஆசையின் தாக்கம் இவைகளின் செயல்பாட்டினால் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபட்டதாக அமையும்.

  சமூகம் என்ற கட்டமைப்பில், விதி என்ற நியதியில் ஒவ்வொரு மனிதனும் தன்னை உட்படுத்திக் கொள்வதுதான் விவேகம் அதுவே மனித அறிவின் வளர்ச்சி. எவர் ஒருவர் சமூகத்தின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு வாழ்கிறாரோ அவரே உயர்ந்தவர்..

  சமூகத்தில் குழப்பம் விளைவிப்பவரே நம்மில் மோசமானவர்.

  (மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் – நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.- குர்ஆன் -7:56.

  ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;.- குர்ஆன்-2:217
  ஞானத்தின் திறவுகோல் நாயகம்…
  ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா!

   
 • Tags: , , ,

  கடந்தது, நிகழ்வது, நடக்கப் போவது!

  இப்படியும் இருக்கலாம் !

  களிப்பான நினைவு
  கவலையான நிகழ்வு
  கனமான மனது

  கடந்த காலம் மகிழ்வு
  இன்றைய காலம் கவலை
  நாளைய காலம் அடக்கம்.

  1wife-of-yesterday

  2wife-of-today

  3wife-of-future

   

  Tags: , , ,

  எழுது ஒரு கடுதாசி

  malliகிராமங்களில்தான் ஒரு நாட்டின் கலாச்சார உயர்வுகள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கிராமங்களில் வளர்ந்தவர்கள், பெருநகரத் தெருக்களில், கிராமிய மணங்கமழ தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நெறிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும்போதும், அவை தொடர்பான எண்ணங்களை பரிமாறிக்கொள்ளும்போதும், பெருநகரத்துச் செயற்கை நாடகங்களால் உள்ளே செத்துக்கிடக்கும் அத்தனை உணர்வுகளும் உயிர்பெற்று மீண்டும் புலர்ந்துவிடுவது இன்றும் நம்மை நம் அடிப்படைப் பண்பு மாறாமல் பாதுகாத்துவருகின்ற வரம்.

  இங்கே ஒரு கிராமத்து மகன், புகைப்படத்தையும் உறவினர்களின் பரிந்துரைகளையும் மட்டுமே முழுமனதுடன் ஏற்று, ஒரு வண்ண நிலவை வாழ்க்கைத்துணையாக்க நிச்சயம் செய்கிறான். உரையாடுவதோ கடிதம் வரைவதோ ஏற்றுக்கொள்ளப்படாத அந்த கிராமத்தில், பெருநகர வாழ்க்கையின் தூண்டுதலால், அவளிடம் கடித சுகம் கேட்டு அவன் எழுதும் கடிதமே இந்தக் கவிதை.

  அவர்களின் நாட்டுப்புற நடையிலேயே நடக்கிறது.

 • நேத்துவர எம்மனச
  நெலப்படுத்தி நானிருந்தேன்
  பாத்துவச்ச தாய்தம்பி
  பருசமுன்னு சொன்னாங்க

  வேத்துவழி தெரியாம
  விழுந்தேன் நான் வலைக்குள்ள
  ஊத்தாட்டம் எம்மனசு
  ஒன்னெனப்பா பொங்குதிப்போ

  பாழான எம்மனசு
  பனியே ஒன் வசமாயி
  நாளாவ நாளாவ
  நீ நடக்கும் நெலமாச்சி

  மாளாத கனவாச்சி
  மங்காத நெனப்பாச்சி
  தாளாத தனிமையில
  தீராத ஆசையில

  வாடாத மருக்கொழுந்தே
  வத்தாத தேனூத்தே
  போடேண்டி கடுதாசி
  பொல்லாத மனசமாத்தி

  போடாட்டி எம்மனசு
  புண்ணாகிப் போகூன்னு
  மூடாத முழுநிலவே
  மச்சினனத் தூதுவிட்டேன்

  ஆடாத மனசோட
  அசையாத மொகத்தோட
  போடாம கடுதாசி
  புதிராக இருந்துட்டே

  வாடாத எம்மனசும்
  வாடிப்போய்க் கெடக்குதடி
  கூடாத காரியமா
  குத்தமுன்னு யாருசொன்னா

  தாத்தா சொன்னாரா
  தாய்மாமஞ் சொன்னாரா
  பூத்த புதுப் பூவாட்டம்
  போட்டாவக் கொடுத்தாங்க

  கூத்தாத் தெரியலியா
  கூடாது கடிதமுன்னா
  வேத்தாளு ஆனேனா
  வீணாயேன் மறுத்தாங்க

  யாருவந்து கேட்டாங்க
  ஏம்பரிசம் போட்டாங்க
  ஊரயெல்லாங் கூட்டிவச்சி
  ஒன்னெனப்பக் கொடுத்தாங்க

  நீரயள்ளி எறைச்சாக்கா
  நெலம் ஈரம் ஆவாதா
  தூரநாடு வந்ததால
  தொலையுதுன்னு போவாதா

  தேர இழுத்தும் இப்போ
  தெருவசந்தங் காணலியே
  பூவப் பரிச்சும் இப்போ
  புதுவாசம் வீசலியே

  நாளமெல்லப் போக்காத
  நரகத்துல தள்ளாத
  யாருநின்னு தடுத்தாலும்
  எழுதமட்டும் தயங்காத

  நாந்தான ஒங்கழுத்தில்
  நல்லமல்லி மாலையிடுவேன்..
  வாந்தாலும் எங்கூட
  வாடினாலும் எங்கூட

  நாந்தானே ஒனக்கூன்ன
  நாடறிஞ்ச சேதிய நீ
  ஏந்தாமத் தூங்காத
  எழுது ஒரு கடுதாசி

  Source :
  http://anbudanbuhari.blogspot.in/2008/01/blog-post_5123.html

  கல்யாணமாம் கல்யாணம்.-புகாரி
  வாழ்த்துகள் கவிஞர் புகாரிக்கு

   
 • Tags: , , ,

  குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

  write எழுதியவர் மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

  “உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும்.

  நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் துறையினரிடம் புகார் செய்யலாம் என சில நாடுகள் சட்டம் இயற்றி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இருக்கும் மானசீக உறவுக்குத் தடையாக இருக்கின்றனர். உதாரணமாக, தந்தை அடிக்க முற்பட்டால் உடனே 555 இற்கு போன் செய்தால் காவல் துறை வீட்டில் வந்து நிற்கும் என்று சட்டம் போட்டால் பெற்றோர் எப்படி பிள்ளைகளைத் திருத்த முடியும். பெற்றோருக்குப் பிள்ளைகள் விடயத்தில் இருக்கும் உரிமைகள் என்ன? என்ற கேள்வி எழும்.

  மற்றும் சிலர் சட்டம் இருக்கின்றதோ இல்லையோ பாசத்தின் பெயரில் குழந்தைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாதிருந்து விட்டு தவறுகள் பெருத்த பின்னர் கவலைப்படுகின்றனர்.

  இது இப்படியிருக்க, குழந்தைகளைத் தண்டிக்கும் சிலர் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். குழந்தைகளை நல்வழிப் படுத்தல் என்பதுதான் தண்டனையின் நோக்கம். தண்டிக்காமலேயே வழிகாட்டுவதன் மூலம் அந்த இலக்கை அடையமுடியுமாக இருந்தால் தண்டனை இல்லாமலேயே நல்லுபதேசத்தின் மூலமே அடைய முயற்சிக்க வேண்டும்.

  சிலர் தமது கோபத்தைத் தீர்ப்பதற்காகவும் பழிவாங்குவதற்காகவும் கையில் கிடைத்ததை எடுத்து தண்டிக்கின்றனர். இல்லையில்லை தாக்குகின்றனர். இது குழந்தைகளை நல்வழிக்குட்படுத்துவதற்குப் பதிலாக மனரீதியில் பாதிப்படையச் செய்யலாம். வீட்டை விட்டு வெருண்டோட வைக்கலாம். போதை, தீய நட்பு, கெட்ட பழக்க வழக்கங்கள் போன்ற தவறுகளுக்கு உள்ளாக்கலாம். இத்தகைய தண்டனை முறையை இஸ்லாமும் ஏற்காது. இதயத்தில் ஈரமுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். எனவே தண்டித்தல் குறித்த சில வழிகாட்டல்களை வழங்குதல் நல்லதெனக் கருதுகின்றேன்.

 • 1. கோபத்தில் இருக்கும் போது தண்டிக்காதீர்கள்:
  “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்பார்கள். அதனால்தான் கோபப்பட்டவர் வீட்டில் பொருட்களை, கண்ணாடியை யெல்லாம் உடைப்பதைப் பார்க்கின்றோம். கோபத்தில் நாம் பேசினால் நமது பேச்சு சரியாக இருக்காது. தண்டித்தால் அது நியாயமாக இருக்காது. சின்னக் குற்றத்திற்குப் பெரிய தண்டனையளித்து அநியாயம் செய்துவிடுவோம். எனவே, உங்கள் கோபம் தணியும் வரையும் இருந்து நீங்கள் நிதானத்திற்கு வந்த பின்னர் நிதானமாகத் தண்டியுங்கள்.

  நமது பெற்றோர்கள் சிலரின் செயற்பாடு ஆச்சர்யமாக இருக்கின்றது. மூத்தவன் இளையவனைத் தள்ளிவிட்டான். இளையவனின் தலையில் இரத்தம் வடிகின்றது. பாதிக்கப்பட்ட இளையவனைக் கவனிப்பதற்கு முன்னர் மூத்தவனுக்கு நாலு மொத்து மொத்தாவிட்டால் இவர்களுக்கு ஆத்திரம் அடங்காது. இதனால் தவறு செய்த பிள்ளை அடிக்குப் பயந்து ஓடி வேறு பிரச்சினைகளைத் தேடிக் கொண்டு வருகின்றது. பிறகு இரு குழந்தைகளுக்குமாக மருத்துவம் செய்ய வேண்டிய நிலை பெற்றோருக்கு!

  எனவே, தண்டிப்பதிலும் நிதானமும் நியாயமும் தேவை. எனவே, கோபத்தில் இருக்கும் போது தண்டிப்பதைத் தவிருங்கள். நிதானமான நிலையில் தண்டியுங்கள். கோபம் அடங்கிய பின்னர் எப்படி தண்டிப்பது என்று கேட்கின்றீர்களா? குழந்தை இதன் பிறகு இந்தத் தவறை செய்யக் கூடாது என்று உணரும் அளவுக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்து வதற்காகத் தண்டியுங்கள். கோபத்தைத் தீர்ப்பதற்காகத் தண்டிப்பதென்றால் அது முறையான தண்டனையல்ல.

  2. சதா தண்டிக்காதீர்கள்:
  சில பெற்றோர் எப்போதுமே பிள்ளைகளை திட்டித் தீர்த்துக் கொண்டே இருப்பார்கள். சதாவும் தண்டித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு நடந்து கொண்டால் எமது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு எழாது. தவறில் பிடிவாதமும் முரட்டுத்தனமும் உண்டாகும். வெளியிடத்தில் கூட தவறு செய்து அடிவாங்குவது அவர்களுக்குப் பெரிய பாதிப்பாகத் தெரியாது. நாம் வாங்காத அடியா, கேட்காத ஏச்சா என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் வாழ்நாளிலேயே திருந்தமாட்டார்கள். எனவே, எப்போதாவது ஏதாவது பெரிய தவறுகளுக்காக மட்டும் தண்டியுங்கள். சின்னச் சின்னப் பிழைகளைத் திருத்துங்கள். அப்போது அடியென்றால் பயப்படுவார்கள். ஏச்சு என்றால் கூச்சப்படுவார்கள்.

  3. வன்முறை வேண்டாம்:
  குழந்தைகளைக் கண்டிக்கும் போது காயம் ஏற்படாவண்ணம் இலேசாகத் தண்டிக்க வேண்டும். கல் மனதுடன் நடந்து கொள்ளக் கூடாது. என் பெற்றோர் தண்டித்தாலும் என்னுடன் பாசத்துடன்தான் இருக்கின்றனர் எனக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். கடுமையான தாக்குதல்களால் குழந்தைகள் குடும்பத்தின் எதிரிகளாக மாறுவர். தகாத உறவுகளை ஏற்படுத்தி தம்மைத் தண்டித்த பெற்றோர்களை இழிவுபடுத்துவர்.

  4. தண்டித்தல் என்பது இறுதி முடிவாக இருக்கட்டும்:
  எடுத்ததற்கெல்லாம் அடிக்காமல் புத்தி சொல்லுங்கள். சிலபோது கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துங்கள். சிலபோது அவர்களது தவறுகளால் நீங்கள் வருத்தப்படுவதை நடைமுறையில் காட்டுங்கள். பிள்ளை தானாக மனம் இறங்கி நான் செய்த தவறால் பெற்றோர்கள் வருந்துகின்றார்கள் என்று தன்னை மாற்றிக் கொள்ளலாம். இவையெல்லாம் பலனளிக்காத போது இலேசாக அடியுங்கள். எடுத்ததும் கடுமையாகத் தாக்கி விடாதீர்கள்.

  5. தண்டிப்பதிலும் நீதி நியாயம் வேண்டும்:
  தவறுக்கு ஏற்ற தண்டனையே வழங்க வேண்டும். தண்டனை முறையில் கூட பிள்ளை படிப்பினை பெற வேண்டும். மகன் தவறுதலாக ஒரு கோப்பையை உடைத்துவிட்டான். இதற்காக தந்தை அடிக்கிறார். அதே மகன் ஒரு ஹறாத்தைச் செய்துவிட்டான். இப்போது கோப்பைக்காக அடித்ததை விட குறைவாக அடி என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஹறாத்தைச் செய்வதை விட கோப்பையை உடைத்ததைத்தான் எனது தந்தை பாரதூரமாகக் கருதுகின்றார் என்ற எண்ணத்தையும் குழந்தையின் உள்ளத்தில் ஏற்படுத்தி விடுகின்றோம். இது எவ்வளவு பெரிய தவறு என்று சிந்தித்துப் பாருங்கள். எனவே, தண்டனை நீதியானதாக, நியாயமானதாக, தவறின் அளவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.

  6. தண்டனையை சேமிக்காதீர்கள்:
  சில பெற்றோர் பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருப்பார்கள். நாலைந்து தவறுகளை ஒன்றாக சேர்த்து எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாக அடிப்பார்கள். இது குழந்தைகளுக்கு அதிக வேதனையைக் கொடுக்கும். எல்லாத் தவறுக்குமாகக் கிடைக்கும் அடியெனப் பார்க்காமல் ஒரு தவறுக்கு இப்படி அடிக்கிறார்களே என பெற்றோர்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவர். எனவே தவறுக்கு அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் தவறு நடந்தவுடன் அடித்து அதை அந்த இடத்திலேயே மறந்துவிட்டு சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.

  7. நிரபராதிகளைத் தண்டிக்காதீர்கள்:
  குழந்தைகள் தண்டனையிலிருந்து தப்புவதற்காகப் பொய் சொல்வார்கள். அடுத்தவர்களை மாட்டி விடுவார்கள். ஒரு தவறு நடந்து பின்னர் தான் தப்ப வேண்டும் என்பதற்காக அடுத்தவரை மாட்டிவிடுவர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குற்றத்தைக் குறித்த நபர் செய்தது உறுதியாகாத வரை தண்டிக்கக் கூடாது. தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்டால் குழந்தைகளின் உள்ளம் நொறுங்கிப் போகும். குறித்த நபர் தவறு செய்தது உறுதியாகாத சந்தர்ப்பங்களில் பொதுவாகப் புத்தி சொல்வதோடு விட்டுவிட வேண்டும். நிரபராதியைத் தண்டித்துவிட்டால் குழந்தையென்று பார்க்காமல் மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்.

  8. மறதி, தவறுதல், நிர்ப்பந்த நிலை என்பவற்றை மன்னியுங்கள்:
  தவறுதலாக அல்லது மறதியாக இடம்பெறும் தவறுகள் அல்லது நிர்ப்பந்த நிலையில் நிகழும் குற்றங்களுக்கு மன்னிப்பு அளியுங்கள். அல்லாஹ் இத்தகைய நிலைகளை மன்னித்துள்ளான். எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் புத்தி சொல்வதுடன் விட்டுவிடுங்கள்.

  9. உற்சாகத்திற்கு தண்டனையா?
  சில பெற்றோர் பிள்ளைகள் ஓடியாடி விளையாடும் போது எரிச்சல்பட்டு பேசாம ஒரு இடத்தில இரு என்று கண்டிப்பார்கள். குழந்தைகள் என்றால் ஓடியாடி விளையாடத்தான் செய்வார்கள். இதையெல்லாம் தவறு என்று தண்டிக்கக் கூடாது. எனவே, இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களை ஒழுங்குபடுத்துங்கள்.

  10. பிரச்சினைகளைக் கவனிக்காமல் தண்டிக்காதீர்கள்:
  ஒரு பாடத்தில் குழந்தை குறைந்த புள்ளி எடுத்துள்ளது அல்லது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறவில்லை போன்ற சந்தர்ப்பத்தில் குழந்தையை வையாதீர்கள். குழந்தையின் பின்னடைவுக்கு குழந்தை மட்டும் காரணமாக இருக்காது. ஆசிரியரின் குறை இருக்கலாம். பாடம் முறையாக நடக்காதிருந்திருக்கலாம். மற்றவர்கள் விட்ட குறைக்கு குழந்தைகள் தண்டிக்கப்படலாமா? எனவே, குழந்தையின் குறையில் அடுத்தவருக்கும் பங்கு இருக்கும் போது அல்லது குழந்தையிடம் மானசீகப் பிரச்சினைகள் இருக்கும் போது குழந்தையைத் தண்டிக்காமல், ஏசாமல் நீங்கள் பிரச்சினையை இணங்கான முயற்சியுங்கள். பின்னர் குழந்தையை நெறிப்படுத்துங்கள்.

  11. குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டிக்காதீர்கள்:
  குழந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டு இனி இப்படிச் செய்யமாட்டேன் என்று கூறினால் தண்டிப்பதை விட்டுவிடுங்கள். அதே போன்று அல்லாஹ்வுக்காக அடிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டால் அடிப்பதை நிறுத்திவிடுங்கள். தண்டிப்பது என்பது இனி இது போன்ற தவறைச் செய்யக் கூடாது என்று உணர்த்துவதற்காகத்தான். பிள்ளையே இனி இப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறிய பின் தண்டனை தேவையில்லையல்லவா?

  இது போன்ற வழிமுறைகளைக் கையாண்டு தண்டிப்பின் உண்மையான பயனை அடைந்து கொள்ள முயல்வோமாக!
  http://www.islamkalvi.com/portal/?p=7604

   
 • “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டி

  tamilschool5tamilschool3tamilschool7
  பேரன்புடையீர்!

  அனைவருக்கும் வணக்கம்,
  நமது தாய்த்தமிழ்ப் பள்ளி, பிரிஸ்பேன் தமிழ்ச் சமூகத்தினருக்குச் சிறப்பான கல்வியை தரமாக வழங்கி வருவது நீங்கள் அனைவரும் அறிந்தததே. தமிழ்க் கல்வி கற்பிப்பது மட்டுமல்லாமல் சமூகத்தினரிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், இலக்கியத்தில் நாட்டம் கொண்டோரிடையே புத்தகப் பரிமாற்றம் செய்வதற்கேதுவாகவும் தாய்த்தமிழ்ப் பள்ளி நூலகம் ஒன்றையும் நடத்திக் கொண்டுவருகிறது.

 • இதன் அடுத்த நகர்வாக தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டு “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இது ஆஸ்திரேலிய கண்டத்துக்குட்பட்ட ஒரு போட்டியாகும்.
  இப்போட்டியானது இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும்.
  இளையோர் பிரிவு – 17 வயதிற்குட்பட்டோர்
  பெரியோர் பிரிவு – 17 வயதிற்கு மேற்பட்டோர்
  போட்டியின் விதிமுறைகள்
  1. போட்டியில் கலந்துகொள்வோர் ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
  2. கதைக்களம் மற்றும் சூழல் ஆஸ்திரேலிய கண்டத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
  3. கதைக்களன் குடும்பம், காதல், அமானுஷ்யம், அனுபவம், மர்மம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உண்மைக் கதையாகவும் இருக்கலாம், புனைக்கதையாகவும் இருக்கலாம்.

  4. கதையின் அளவு 500 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  5. ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பலாம். ஆனால் வெவ்வேறு கதைக்களன்களில் இருக்கவேண்டும்.
  6. போட்டிக்கு வரும் சிறுகதை எந்தவொரு வடிவிலும் வேறெங்கிலும் வெளியாகியிருக்கக் கூடாது.
  7. வெற்றிபெறும் கதைகளையும் போட்டியில் பங்கெடுக்கும் கதைகளையும் போட்டி நடத்தும் அமைப்பு பயன்படுத்திக் கொள்ளலாம்
  8. ஒவ்வொரு பிரிவிலும் போட்டிக்கு வரும் கதைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 10 முதல் 20 கதைகள் வரை ஆஸ்திரேலிய தோ்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்படும். அவை அனுபவமிக்க எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பப்பட்டு அவர் மூலம் பரிசிற்குரிய கதைகள் தோ்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
  9. போட்டியில் தெரிவு செய்யப்படாத கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பியனுப்பப்பட மாட்டாது.
  10. கதைகளின் காப்புரிமை “தாய்த்தமிழ்ப் பள்ளி”க்குச் சொந்தமானது.

  இப்போட்டியைப் பொறுத்தவரையில் தேர்வுக்குழுவினரின் முடிவே இறுதியானது.

  கதைகள் அனுப்புவதற்கான கடைசி நாள் சித்திரை 1 (14/04/2013)

  இப்போட்டியின் முடிவுகள் ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் தாய்த்தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழாவின் போது கொடுக்கப்படும். பரிசும், அதை தேர்வு செய்யும் நடுவரும் பின்னர் அறிவிக்கப்படும்.

  மேலும் போட்டிக்கு வரும் கதைகளில் முத்திரைக் கதைகள் தொகுக்கப்பட்டு சிறுகதைத் தொகுதி புத்தகமாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் கதாசிரியர்களின் திறன் ஊரறியச் செய்யப்படும். கதைகளை PDF கோப்பு வடிவில் தாய்த்தமிழ்ப் பள்ளியின் மின்னஞ்சல் முகவரியான thaaitamilschool@gmail.com க்கு அனுப்பவும். கதைகளை அச்சுப்பிரதியாக ( Hard copy) அனுப்ப விரும்புவோர் பள்ளியின் தபால் பெட்டிக்கு அனுப்பலாம்.

  தாய்த்தமிழ்ப் பள்ளி த.பெ முகவரி
  Thaai Tamil School Queensland
  PO Box 6212 Fairfield Gardens, QLD 4103

  மேலும் விவரங்களுக்கு தாய்த்தமிழ்ப் பள்ளியின் இணையதளத்தின் வழியாக தொடர்புகொள்ளலாம்.www.thaaitamilschool.com
  அல்லது கீழ் உள்ள கைத்தொலைப்பேசி எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
  பார்த்தீபன் 0432276977
  முகுந்த்ராஜ் 0423730122

  ******
  நீங்களும், தங்களது சுற்றார் நண்பர்களுக்கு பரப்புரை செய்து ஆர்வத்துடன் பங்கெடுத்து தாய்த்தமிழ்ப்பள்ளியின் இம்முயற்சிக்கு ஆதரவு நல்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி
  http://www.thaaitamilschool.com/
  தகவல்
  557129_4332597400143_1960242949_n
  யுவ கிருஷ்ணா

   
 • Tags: ,