RSS

பெண்ணே நீயும் புறப்படு….

09 Apr

கவிதை வானில் பாவரங்கில், புலவரேறு, தமிழ்மாமணி அரிமதி தென்னகனார் தலைமையில், நான் வாசித்தளித்த சந்தப் பாடலிது:
=======================================

பெண்

penn

 

 

 

மண்ணில் மலரும் பூக்களாய்
மலர்ந்து மணக்கும் பெண்மையே!
மென்மை மட்டும் வாழ்க்கையில்
மேன்மை யாமோ புறப்படு!               (மண்ணில்)

பேதை என்றே இருப்பதால்
பேரும் புகழும் வந்திடுமோ?
சூது நிறைந்த உலகையே
சுட்டெ ரிக்கப் புறப்படு!                     (மண்ணில்)

உள்ள துறைகள் அனைத்திலும்
உலகப் பெண்கள் இருக்கையில்
கிள்ளுக் கீரை  இந்தியரோ?
கிளம்பிக் கலக்கப் புறப்படு!                (மண்ணில்)

நாதம் ஒலிக்கும் மணியாக
நங்காய் நீயும் புறப்படு!
பாதம் மிதிக்கும் பூமியை
பாதை ஆக்கப் புறப்படு!                     (மண்ணில்)

tyaga

 

 

 

 

 

இராஜ. தியாகராஜன்
என்னைப் பற்றி….(இராஜ. தியாகராஜன்)
வலையுலா வரும் வழமைத் தமிழன்பர்களே!

இராஜ.தியாகராஜனின் வணக்கம்.

என்னைப் பற்றிய சிறு குறிப்புரை:  என் பெயர் இராஜ. தியாகராஜன், புதுச்சேரி அரசில் ஒரு அரசிதழ் அலுவலன்.  என் குடும்பத்திற்குப் பின் தமிழும் தமிழிசையும் எனதிரு கண்கள்.  ஏதோ என்னாலியன்றவரை தமிழுக்காகவும், குமுகாயத்திற்கும்  செய்கிறேன்; வாழ்கிறேன்.   இந்த தளத்தில் முகப்பில் இருக்கும் தமிழ்மொழி/ திருவள்ளுவர் என்ற படத்தினை நானே உருவாக்கி வலையேற்றினேன்.  அய்யனின் உருவம் எங்கள் புதுச்சேரி பேருந்து நிலையத்தின் முகப்பில் இருக்கும் சிலையினது.   என்னுடைய தளம்:  http://www.pudhucherry.com .

நான் எழுதுகையில் புனைப் பெயரென்று எதையும் பயன்படுத்தவில்லை.  என்னுடைய உண்மைப் பெயரே,    அன்புசால் அன்னையும், அறிவுசால் தந்தையும் எனக்களித்தவோர் புனைவுதானே!  தான் யார், இம்மெய்யா, அன்றி உள்ளிருக்கும் பொய்யா என்பதை ஆன்றோரும், சான்றோரும் ஆழ்ந்திங்கே தேடிச் சலிக்கையிலே, அத்தனை அறிவில்லா இச்சிறுவனுக்கு மட்டில் கிட்டுமோ அந்த அகச்சான்று? தந்தையின் பெயரான இராஜகோபாலன் என்பதில் இருக்கும் “இராஜ”  என்ற பகுதியை அடைமொழியாக்கி எனக்கிடப்பட்ட பெயரான தியாகராஜனுடன் சேர்த்து எனை அறிமுகம் செய்து கொள்கிறேன்.  எழுதுகிறேன்… இடையறாது எழுதுகிறேன்….. எனக்கிருக்கும் ஓய்விலெல்லாம் எழுதுகிறேன்….  எது, எவர், எப்படி, எதற்கு என்று கேட்காமல்,  தமிழுக்காய் எழுதுகிறேன்.

ஒரு நண்பர் கேட்டார், “உங்களுக்கிருக்கும் தமிழார்வத்திற்கு, அரசுப்பணியில் இருப்பதனால்,  தமிழில் ஒரு நூல் வெளியீடு செய்து, அரசு விழாக்களில் அரசியலார்க்குப் பொன்னாடை போர்த்தி, காணும் மேலோருடன் எல்லாம்  சேர்ந்து நிழற்படம் எடுத்துக் கொண்டு,  அரசு வழங்கும் பட்டங்களை எளிதாக பெற்று விடலாமே,” என்று.  அதற்கு நான் சொன்னேன், “விருதுகளைத் விழுந்து விழுந்து, வேகமாகத் தேடும் வியனுலகில்,  ஊரில் நடக்கும் கவிதைப்  போட்டிகளில் கூட எழுத தோன்றாத,  நான் ஒரு நிலையில்லாச்  சிந்தனை கொண்டவன் போலும்!  எனக்குத்  தெரிவதெல்லாம் என் குடும்பம், என் தமிழ், என் சமூகப் பணி.  சென்ற ஆண்டுவரை என்னைப் பற்றியும், தமிழைப் பற்றியும் நிறைய  பகிர்ந்தவன், என்னுடைய சமூகப் பணிகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள மிகவும் வெட்கப்பட்டு, எதுவுமே  கூறுவதில்லை.  ஆனால் இணையத்தில் திருமதி வசந்தா கிருஷ்ணசாமி என்ற இனிய சகோதரி அவர்கள் அவர்தம் பெற்றோர் பற்றியும், அவர்தம் தொண்டுகள் பற்றியும், சொன்ன கருத்தினால் ஈர்க்கப்பட்டு, இப்போது
பரவாயில்லை ஓரளவு பகிர்கிறேன்.

ஏனென்றால், என்னையும் ஒரு ஆதர்சமாக எண்ணிச்  செயல்படும் நண்பர்கள் வரத்  தொடங்கி விட்டனர்.  ஆகையினால் அப்பணிகள் அவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணமே  காரணம்.  அட இதென்ன பில்டப்பு என்று கேட்பதற்கு  முன்னால் சொல்லிவிடுகிறேன்.   நானொன்றும் பெரிய சமூகச் சேவகன்  இல்லைங்க.  ஏதோ, கடந்த சில ஆண்டுகளாகச் புதுவையின் சில இல்லங்களுக்கு இயன்ற உதவி செய்கிறேன்.  கடந்த சில ஆண்டுகளாக  மருத்துவம் அனுமதிக்கும் அளவுக்குக் குருதிக் கொடை செய்கிறேன்.  2001இல் என்னுடைய  விழிப்படலங்களை எடுத்துக் கொள்ள அனுமதி அளித்திருக்கிறேன்.  மேலும் 2007இல்,  தீத்தின்னும் இவ்வுடலத்தை மருத்துவத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும்படி எழுதிக் கொடுத்திருக்கிறேன்.  அவ்வளவுதாங்க!   இப்போது இறுதியாக, நான் தமிழை முதற்பாடமாகக் கொண்டு தமிழ் படித்த தமிழ்ப் பண்டிதன் இல்லை.  தமிழாசிரியனும் இல்லை.  இளங்கலைப் பொருளாதாரப் பட்டம் பெற்ற, சில கணினிச் சான்றிதழ்ப் பட்டயங்கள் வென்ற, இன்னும் ஒரு நூல் கூட வெளியிடத் தெரியாத,  அரசுத் துறையில் கணக்கிடல் பிரிவில் பணிபுரியும்  மிகச் சாதாரண, அரசிதழ் அலுவலன்.  பண்ணார் தமிழணங்கின் மீது மோகமுற்ற ஒரு பித்தன்.  வாருங்கள் தமிழைப் பேசுவோம், தமிழால் பேசுவோம், தமிழுடன் பேசுவோம், தமிழுக்காய்ப் பேசுவோம்!

இராஜ. தியாகராஜன்

http://tyagas.wordpress.com/

http://tyagas.wordpress.com/2012/02/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: