RSS

அது ஒரு குடைக் காலம்

20 May

941389_468657489879652_1544889649_nமுன்னொரு காலத்திலே நடந்து போனவங்க குடை பிடித்து நடந்தார்கள். அது மழையா.. வெயிலா எதுவாக இருந்தாலும் சரிதான். மனிதர்கள் குடையோடு நடந்தார்கள்.

குடை .. ஒரு ஆளுமையின் சின்னம். கொடையின் அடையாளம்..நாட்டாமையின் செங்கோல். குடை கையில் இல்லாவிட்டால் சிலருக்கு நடையே வராது.

குடை … ஆளுக்கு ஆள் வித விதமாக பயன்படுத்தப்படும் . பணக்காரனுக்கு குடை பிடிக்க பணியாள் உண்டு. மழை பெய்தால் பணியாளர் மழையில் நனைந்து கொண்டு எஜமானர் நனையாமல் குடை பிடிப்பார்.. அத்தனை எஜமான விசுவாசம் . எத்தனைபேர் மழையில் நனைந்தாலும் செல்வந்தர்கள் குடையின் கீழ் யாரும் ஒதுங்க முடியாது. பண்ணையார்கள் குடை பிடித்தபடி வந்து தங்கள் வயலில் வேலை செய்யும் பெண்களை

அதட்டுவார்கள். மலையாள தம்புரான்களும் தம்புராட்டிகளும் இரவிலும் பகலிலும் குடையின் கீழ் பரிவாரங்களோடு பவனி வருவார்கள். உயர் சாதியைத் தவிர இதர சாதியினர் குடை பிடிக்கக் கூடாது என்ற தடையும் குடைக்கு இருந்தது.

குடை பல உபயோகமான வேலைகளையும் செய்யும். தங்களை கிண்டல் செய்யும் பொடியன்களை பல பெருசுகள் குடையால்தான் அடிக்கும். நாய் குரைத்தால் விரட்டுவதற்கு குடைகை கொடுக்கும். கடன்காரர்கள் கண்டுகொள்ளாமல் குடையால் முகத்தை மறைத்துக் கொள்ளும் கெட்டிக்காரர்களும் அவர்களின் பின்னாலேயே வந்து மடக்கிப் பிடிக்கும் கில்லாடி வட்டிகளும் செய்யும் வித்தைகள் அன்றைய பொழுது போக்கு நிகழ்சிகளாக இருந்தன.

குடையைக் கண்டால் சில மாடுகள் மிரள்வதும் உண்டு. அந்த ரகசியத்தை கண்டு பிடித்து மாடுகளை தங்களுக்குப் பிடிக்காத ” சண்டியர்கள் ” மேல் ஏவி விடும் இளசுகளின் குறும்பு …. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும். குடைகளை எறிந்து விட்டு வேட்டி அவிழ்ந்து விழுவதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ஓடும் ஓட்டம் இருக்கே… அடடா… கண்கொள்ளாக் காட்சி. இப்போ மாடுகளையும் காணோம் .. ஓடக்கூடிய பெரியவர்களையும் காணோம்.

ஒரு சண்டையின் போது மாமனார் குடையால் மருமகனை அடித்து விட்டார். கோபத்தில் மருமகன் குடையை பிடுங்கி மாமனாரை நைய்யப்புடைத்து குடையையும் உடைத்துப் போட்டு விட்டார். அடிபட்டதற்கு அழாத மாமனார் , ” அட கொர்நாகட்டுகாரா … சிங்கப்பூர் குடையை ஒடச்சி போட்டியே…” என்று புலம்பிய கதைகள் நிறைய இருக்கிறது.

பிள்ளைப் பிராயத்தில் வண்ண வண்ணக் குடைகள் மனதை மயக்கும் . வாப்பா அனுப்பிய அழகானக் குடையை பிடித்தபடி மழையில் நடந்து செல்ல மனம் மழைக்கு ஏங்கும்.

கல்லூரிக் காலங்களில் அதுவும் கோஎஜுகேசன் காலேஜ்களில் மாணவர்கள் குடை பிடிப்பது அவமானம். என்ன மழை அடித்தாலும் அதில் நனைந்து போவது ஹீரோயிசம். மாணவிகள் கையில் கட்டாயம் குடை இருக்கும். அது மழையில் நனையாமல் அவர்களின் மானத்தைக் காத்தது. வாத்தியார்மார் குடையை களவாண்டு வித்து சினிமா பார்க்க ஒரு கூட்டமே இருந்தது. மறுநாள் வாத்தியாரோடு சேர்ந்து தாங்கள் களவாடியக் குடையைத் குடையைத் தேடும் அந்த” கள்ளர்கள் ” கூட்டம். சிங்கப்பூர் குடைக்கு ஆசைப்பட்டு மண்டு பயல்களை பாசாக்கி விட்ட வாத்தியார்கள் கதை பரிதாபமானது.

பழமொழிகளிலும் குடைக்கு ஒரு இடம் இருந்தது.

” அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியிலே குடை பிடிப்பான் ”

இப்படி குடை கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்றிருந்தது…

இப்போ … கால் நடைகள் எல்லாம் வாகன நடைகளாகி விட்டதால் மான் மார்க் குடைகளும் சிங்கப்பூர் ஸ்பிரிங் குடைகளும் பல வீடுகளில் கரப்பான் பூச்சிகளின் காதல் மாளிகைகளாகி விட்டன.

அபூஹாஷிமா வாவர்அபூஹாஷிமா வாவர்

Abu Haashima Vaver
Advertisements
 

Tags: , ,

One response to “அது ஒரு குடைக் காலம்

  1. திண்டுக்கல் தனபாலன்

    May 20, 2013 at 11:39 am

    இனிய நினைவுகள்… முடிவில் சொன்னதும் உண்மை…

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: