RSS

நொச்சி வந்தாச்சி

21 May

நொச்சி வந்தாச்சி
nochi treeஅரசோ, தனிமனிதர்களோ என்ன செய்தாலும் அடக்கமுடியாத கலவரம் ‘கொசுக் கலவரம்’. கொசுவர்த்தியில் தொடங்கி எலெக்ட்ரானிக் கொசுவிரட்டும் இயந்திரம் வரை அறிவியல் ஆயிரம் தீர்வுகளை இதற்கு கொடுத்தாலும், எல்லாவற்றையும் முறியடித்து, ‘ங்கொய்’ என்று காதில் ரீங்கரித்து மனிதனுக்கு ‘பெப்பே’ காட்டும் புரட்சிவீரன் கொசு. ராணுவத்தால் கூட அடக்கமுடியாத இப்பிரச்சினைக்கு நம்மூர் பாட்டிவைத்தியம் மூலமாக அதிரடித் தீர்வு காண களமிறங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. கொசுக்களுக்கு எதிரான மனிதர்களின் உரிமைப்போருக்கு சென்னை மாநகராட்சி பயன்படுத்தப் போகும் ஆயுதத்தின் பெயர் ‘நொச்சி’.

நீர்வழித்தடங்களின் ஓரத்தில் நொச்சிச் செடிகளை வளர்த்தல், வீடுகளுக்கு நொச்சி செடி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தப் போவதாக சென்னை மாநகராட்சியின் சமீபத்தைய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாசிக்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் நொச்சியின் மகத்துவத்தை அறிந்தவர்கள் இதை வரவேற்கவே செய்வார்கள். சென்னை மாநகருக்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே கூட இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம். வெப்பமண்டல பிரதேசங்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மாபெரும் கொடை நொச்சி செடி.

“இதென்ன புதுச்செடி?” என்று ஆச்சரியப்படாதீர்கள். வேலியோரங்களிலும், கிராமச்சாலைகளின் இருபுறங்களில் புதராக வளர்ந்த நொச்சிச் செடிகளை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். வெண்ணொச்சி, கருநொச்சி என்று இதில் இரண்டு வகை உண்டு. வெண்ணொச்சி சுமார் முப்பதடி வரை மரம் மாதிரி வளரக்கூடிய தன்மை கொண்டது. இதன் கிளைகள் வெண்மை நிறத்தில் இருக்கும். ஆற்றங்கரையோரங்களில் புதர் மாதிரி வளரும். இதன் கிளைகள் ஒல்லியானதாக இருந்தாலும் வலிமையானவை. முன்பெல்லாம் வகுப்பறைகளில் மாணவர்களை மிரட்ட ஆசிரியர்கள் வைத்திருக்கும் பிரம்பு பெரும்பாலும் நொச்சிப் பிரம்பாக இருக்கும். கிராமங்களில் இதன் இளம் கிளைகளை கொண்டு கூடை பின்னுவார்கள். இந்த கூடையில் வைக்கப்படும் பொருட்களை பூச்சிப்பொட்டு நெருங்காது. வயற்காடுகளுக்கு வேலியாக நொச்சி வளர்ப்பதுண்டு. வலிமையான வேலியாக கால்நடைகளிடமிருந்து பயிரை காக்கும். வெள்ளாடு கூட நொச்சி இலைகளை சாப்பிட விரும்புவதில்லை. நொச்சித்தழைகளை இயற்கை உரமாகவும் பயன்படுத்துகிறார்கள்.

தமிழர் போர் மரபிலும் நொச்சிக்கு இடமுண்டு. சங்கக் காலத்தில் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த தித்தன் என்கிற சோழமன்னன் தன்னுடைய நாட்டு எல்லைக்கு நொச்சிவேலி அமைத்ததாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தில் நொச்சித்திணை என்று ஒரு திணையே உண்டு. நொச்சித்திணை வீரர்கள் நொச்சிப்பூ மாலை சூடி எதிரிகளின் முற்றுகையை ஊடறுப்பார்கள் என்று பாடல்கள் குறிப்பிடுகின்றன. நொச்சிப்பூக்கள் மயில்நீல நிறம் கொண்டவை.

நொச்சியின் எல்லா பயன்பாடுகளை காட்டிலும் அதன் மருத்துவக்குணங்களே சிறப்பானதாக இருக்கிறது. இன்றும் கிராமங்களில் கொசுக்களையும், பூச்சிகளையும் விரட்ட நொச்சி இலைகளை எரித்து புகை போடும் பழக்கம் நீடிக்கிறது (நொச்சி இல்லாத இடத்தில் வேம்பு). சிறுநகரங்களில், ஈக்கள் மொய்க்கக்கூடிய பழங்களை விற்கும் வியாபாரிகள், இலைகளோடு கூடிய நொச்சிக்குச்சிகளை விசிறி அவற்றை விரட்டுவதை கவனித்திருக்கலாம். நொச்சி இலைகளை தலையணை உறைக்குள் பஞ்சுக்கு பதிலாக அடைத்து பயன்படுத்தினால் கழுத்து வலி, தலைவலி நீங்கும் என்பது பழங்காலத்து வைத்தியம். நொச்சி இலையை சாறெடுத்து கட்டிகளின் மீது தடவிவர கரைந்துவிடுமாம். எதற்கெல்லாம் தைலம் பயன்படுத்துகிறோமோ அந்த உபாதைகளுக்கு எல்லாம் நொச்சி இலை சாறை தைலத்துக்கு பதிலாக உபயோகப்படுத்தலாம். குடிநீருக்கு வெட்டிவேர் பயன்படுத்துவதைப் போல நொச்சி வேரையும் பயன்படுத்தலாம். நொச்சிவேர் போட்டு நீர் காய்ச்சி குடித்தால் வயிற்றில் பூச்சித்தொல்லை தீரும். இவ்வாறாக நம்முடைய பாட்டிவைத்திய முறைகளில் இன்னும் ஏராளமான பிரச்சினைகளுக்கு நொச்சி தீர்வளிக்கிறது. நாட்டு மருத்துவர்கள் தயார் செய்யும் பல மருந்துகளில் நொச்சி கட்டாயம் இடம்பெறுகிறது.

nochi with flowerகிராமப்புறங்களில் வசிப்பவர்கள் நொச்சியை வளர்க்க பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. ஆறு, ஓடை, காடுகளில் கிடைக்கும் நொச்சிச் செடிகளை பெயர்த்தெடுத்து வந்து வளர்க்கலாம். நகரங்களில் வசிப்பவர்கள் நொச்சி வளர்க்க விரும்பினால், அருகிலிருக்கும் வனத்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை உதவிக்கு நாடலாம். சில தனியார் நர்சரிகளிலும் நொச்சிச்செடி வேண்டும் என்று குறிப்பிட்டு கேட்டோமானால், ஏற்பாடு செய்து தருவார்கள். அரசு சித்த மருத்துவ வளாகங்களில் நொச்சி வளர்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் நொச்சி வளர்ப்புத் திட்டம் பெரும் வெற்றியடையும் பட்சத்தில், இதற்கு வணிக அந்தஸ்தும் கிடைத்துவிடக்கூடும். யாருக்குத் தெரியும்? இப்போது கேட்பாரற்று ஆங்காங்கே வளரும் நொச்சியைக்கூட பயிர் செய்யக்கூடிய நிலைமை வந்தாலும் வரும்.

இயற்கைக் காடுகளை அழித்து கான்க்ரீட் காடுகளை ஏகத்துக்கும் உருவாக்கியதற்கு நாம் இன்னும் என்னென்ன விலைகளை தரப்போகிறோமோ? தற்போது கொசுவை ஒழிக்க நாம் பயன்படுத்தி வரும் கெமிக்கல் முறைகளை எதிர்க்கும் திறன் கொசுக்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விட்டிருக்கிறது. எனவே இயற்கை ஏற்கனவே நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஏற்பாடுகளை மீண்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். என்ன இருந்தாலும் உலகம் உருண்டைதானே… வாழ்க்கை வட்டம்தானே?

(நன்றி : புதிய தலைமுறை)

yuvakrishnaஎழுதியவர் யுவகிருஷ்ணா

http://www.luckylookonline.com/2013/03/blog-post_25.html

Advertisements
 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: