RSS

பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்

26 Jun

75178_535471276479074_1717261488_n
அ. முஹம்மது கான் பாகவி

முன்பெல்லாம் பெற்றோர்கள் ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்துவந்தார்கள். பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்த அதேநேரத்தில், கண்டிப்பும் அவர்களது வளர்ப்பில் இருந்தது. பல பிள்ளைகளிடையே பாசம் பகிர்ந்துபோனதாலோ என்னவோ, அளவுக்கதிகமாகச் செல்லம் காட்டியதில்லை. இதனால், பொறுப்புள்ளவர்களாக அவர்களின் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம்.

ஆனால், இன்று -நாடு பொருளாதார வளர்ச்சி கண்டுவிட்டதாகச் சொல்லப்படும் இந்நாளில்- நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலோர் இரண்டு குழந்தைகள் மட்டுமே திட்டமிட்டுப் பெற்றுக்கொள்கின்றனர். சிலருக்கு ஒன்றே ஒன்று போதும் என்ற எண்ணம்.

பொருளாதார நெருக்கடி பற்றிய அச்சம், குழந்தை வளர்ப்பிலே முளைத்துள்ள அவநம்பிக்கை, வாழ்க்கையை அனுபவிக்க அதிகக் குழந்தைகள் தடையாகிவிடுவர் என்ற தவறான எண்ணம், பிரச்சினைகளை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள துணிவின்மை, எல்லாவற்றையும்விட உலகமயமாக்கல் பெற்றெடுத்த நுகர்வுக் கலாசாரம் முதலான பிற்போக்கு அம்சங்களே ஒற்றைக் குழந்தை நாகரிகத்திற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

 • வாரிசுகள் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டாகச் சுருங்கிவிட்டதால் பெற்றோரின் மொத்தப் பாசமும் ஒன்றிரண்டு குழந்தைகள்மீது மழையாகப் பொழிகிறது. பெற்றோரின அன்பு மழையில் குழந்தைகள் குளித்து, திக்குமுக்காடுகின்றனர். செல்லமோ செல்லம். கண்டிப்பு தேவைதான்; சிறிது பாசமும் காட்டுங்கள் என்று சமூக ஆர்வலர்கள் உபதேசித்த நிலை மாறி, பாசம் காட்ட வேண்டியதுதான்; கொஞ்சம் கண்டிப்பும் தேவை என்று உபதேசிக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

  இளைய தலைமுறை பெற்றோர்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள்; பிள்ளைகள் கேட்பதையெல்லாம் தகுதிக்கு மீறி வாங்கிக்கொடுக்கிறார்கள். ஏன்? எதற்கு? என்று கேட்பதுகூட இல்லை. அல்லது அப்படி கேட்கத் தயங்குகிறார்கள். எங்கே மகன், அல்லது மகள் நம்மை மதிக்கமாட்டார்களோ! நம்மீது கோபப்பட்டுவிடுவார்களோ என்ற பயம்.

  பிள்ளைகள் எங்கே போகிறார்கள்; யாருடன் பழகுகிறார்கள்; வீட்டில் சாப்பிடவோ நேரத்திற்கு உறங்கவோ வருவதில்லையே, ஏன்; ஒழுங்காகப் படிக்கிறார்களா? என்ன மதிப்பெண் வாங்குகிறார்கள்; அப்பாவிடம் அல்லது அம்மாவிடம் சண்டைபோட்டு வாங்கும் பாக்கெட் மணியை என்ன செய்கிறார்கள்… என்றெல்லாம் விசாரிப்பதை, இளைய தாய் அல்லது தந்தை அநாகரிகமாகக் கருதுகின்றனர்; பிள்ளைகள் இந்த விசாரணையை அவமானமாகப் பார்க்கின்றனர்; தங்கள் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்று எண்ணுகின்றனர்.

  இன்றைய பிள்ளைகள் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்படுவதும் கொந்தளிப்பதும் பெற்றோர்களின் இந்தக் கண்டுகொள்ளாமைக்கு ஒரு காரணம். இன்றைய புதிய தலைமுறைக்கு அறிவுரை என்றாலே நஞ்சு. ஏன் மதிப்பெண் குறைந்து போய்விட்டது என்று கேட்டுவிட்டால், தற்கொலை முயற்சி, தேர்வில் தோல்வி என்றால் தற்கொலை. ஆசிரியர் திட்டிவிட்டால் பழிவாங்கும் வெறி. நினைத்ததை அனுபவிக்க முடியாவிட்டால், பார்ப்பவர்மீதெல்லாம் எரிச்சல். தவறான உறவுகள், நடத்தைகளைக்கூட யாரும் கண்டித்துவிடக் கூடாது என்ற இறுமாப்பு.

  முடிவு, பொறுப்பற்ற ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. நிதானமோ விவேகமோ இல்லாத, வேகம், சுயநலம், கட்டுப்பாடற்ற போக்கு ஆகிய விரும்பத் தகாத குணங்கள் கொண்ட ஒரு படை வளர்ந்துவிட்டது. மூத்தவர்கள் இவர்களின் நிலை கண்டு அஞ்சிக்கொண்டிருக்க, இவர்களின் வாரிசுகன் எப்படியிருப்பார்களோ என்ற கலக்கம் சீர்திருத்தவாதிகளை வாட்டிக்கொண்டிருக்கிறது.

  செலவினங்கள்

  தேவைக்காகச் செலவு செய்வது ஒரு ரகம்; தகுதியை உயர்த்திக் காட்ட, நண்பர்களைத் திருப்திப்படுத்த செய்யப்படும் ஆடம்பர வீண்செலவு இன்னொரு ரகம். இன்றைய பிள்ளைகளின் செலவினங்கள் இரண்டாம் ரகம்.

  அலைபேசி, அவசரத் தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவி. அலைபேசியில் சாதாரணமானது முதல் சிறப்பம்சங்கள் நிறைந்த உயர்தரமானதுவரை தொகைக்கேற்ப பல ரகங்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. அதற்காக 15 ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள பிளாக்பெர்ரிதான் வேண்டும் என்று பிள்ளைகள் அடம்பிடிக்கலாமா?

  அலைபேசியில், பேசப்பேச விநாடிக்கு விநாடி பணம் செலவாவதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. தேவையோ அவசியமோ இல்லாமல் அரட்டையடிப்பதற்கெல்லாம் அலைபேசியைப் பயன்படுத்திவிட்டு, மாதந்தோறும் ரூ.800க்கும் 1000க்கும் ரீசார்ஜ் செய்யப் பெற்றோரிடம் பணம் கேட்பது என்ன நியாயம்? தவறான பயன்பாடுகள் வேறு.

  வீட்டில் அறுசுவை உணவு காத்திருந்தாலும், உணவகங்களில் சாப்பிடுவதை விரும்பும் பிள்ளைகளை என்ன சொல்ல? அரும்பாடுபட்டுச் சமைத்து வைத்துவிட்டுப் பிள்ளையை எதிர்பார்த்திருக்கும் தாய்க்கு இவன் சொல்லும் பதில், நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டேன். ஏன்? என்று கேட்கக்கூடாது. கேட்டுவிட்டால் வீட்டில் ஒரே களேபரம்.

  ஹோட்டல் உணவு பணத்திற்கு மட்டுமல்ல; உடல் நலத்திற்கும் கேடு. அங்கு உபயோகப்படுத்தப்படும் எண்ணெய், பொடிகள், தரமற்ற பொருட்கள் எல்லாம் சேர்ந்து இளமையிலேயே முதுமையை உண்டாக்கிவிடும். இது தேவைதானா?

  மேற்கத்திய உணவு வகைகளெல்லாம் நம் நாட்டு சுகாதார உணவுகளுக்கு முன்னால் நிற்காது. அந்த உணவுகளால் காசுதான் கரையுமே தவிர வயிறும் நிறையாது; ஊட்டமும் கிடைக்காது. போதாக்குறைக்கு, வயிற்றுக்குக் கேடுவேறு.

  பிறந்தநாள் கொண்டாட்டம் இஸ்லாத்தில் இல்லாத புதுப்பழக்கம்; மேற்கத்திய காலாசாரத்திற்குத் தவறான வழியில் பிறந்த சவலைக் குழந்தை. இன்று பிள்ளைகள் தங்களின் பிறந்தநாளை வெகு விமரிசையாகக் குடும்பத்துடன் கொண்டாடுவது மட்டுமன்றி, நண்பர்களின் பிறந்த நாளுக்காகச் சக்திக்கு மீறி பரிசுப் பொருட்களை அன்பளிக்கின்றனர்.

  பரிசுப் பொருளாவது உபயோகமானதாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. உயர்ரக மது பாட்டில்கள், கேமராக்கள், ஆபாச புத்தகங்கள் என மனிதனைக் கெடுக்கும் நச்சுப் பொருட்கள். பொதுவாக பிறந்தநாள், புத்தாண்டு தினம், காதலர் தினம் போன்ற களியாட்டங்களில் நண்பர்கள் ஒன்றுகூடிவிட்டாலே குடியும் கும்மாளமும்தான். இந்த அநியாயத்திற்கும் பெற்றோர் மறுக்காமல் பணம் தர வேண்டுமாம்!

  POCKET MONEY

  ‘கைச்செலவுக்கு’ (Pocket Money) என்ற பெயரில் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் தரும் பணம்தான் எல்லாத் தவறுகளுக்கும் பெரும்பாலும் காரணமாகிறது. பெற்றோரின் வருவாய்க்குச் சம்பந்தமில்லாத தொகையைப் பிள்ளைகள் கேட்பதும் அதைப் பெற்றோர்கள் வழங்குவதற்காகக் குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் ஒரு பகுதியைச் செல்லமாக ஒதுக்குவதும் இப்போது நாகரிகமாகிவிட்டது.

  ஏதோ மாத ஊதியம் வழங்குவதைப் போன்று ஐயாயிரம், பத்தாயிரம் என்று பாக்கெட் மணி தரக்கூடிய பெற்றோர்கள், பிள்ளைகளைத் தாங்களே படுகுழியில் தள்ளுகிறார்கள் என்பதுதான் உண்மை. இப்போது நீங்கள் காட்டும் செல்லம், நாளை உங்கள் செல்வங்களை மீளாத் துயரத்தில் சிக்கவைத்துவிடும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!

  இவ்வாறு தகுதிக்கு மிஞ்சி செலவழித்துப் பழகிவிடும் பிள்ளைகள், ஒரு கட்டத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லி பணம் பறிக்கும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். பணம் கேட்க முடியாத நிலை ஏற்படும்போது, சொந்த வீட்டிலேயே திருட ஆரம்பித்துவிடுகிறார்கள். தெரிந்தும் இதைக் கண்டிக்காத பெற்றோர்களும் இருக்கிறார்கள். நூறு, இருநூறு என்று ஆரம்பிக்கும் இத்திருட்டு ஆயிரக்கணக்கை எட்டிவிடுவதுண்டு.

  பெற்றோரின் அனுமதியும் இசைவும் இன்றி வீட்டில் ஒரு ரூபாய் எடுத்தாலும் அது திருட்டுதான்; ஆயிரம் எடுத்தாலும் திருட்டுதான். சொந்த வீட்டில் குறைந்த தொகையில் தொடங்கும் திருட்டு உறவினர் வீடு, நண்பர்கள் வீடு, மாணவர் விடுதி என எல்லா இடங்களிலும் தொடர வாய்ப்பு உண்டு. பெற்றோர்கள் முளையிலேயே இப்பழக்கத்தைக் கிள்ளி எறிய வேண்டும்.

  தீர்வுகள்

  பிள்ளைகள் புரிந்துகொள்ளாமலும் விவரமில்லாமலும் நடந்துகொள்வதற்கு ஒருவகையில் பெற்றோர்களே காரணம். சிறுவயதிலிருந்தே குழுந்தைகளுக்குச் சில ஒழுக்க நடைமுறைகளைச் சொல்லி வளர்க்க வேண்டும்.

  இதனால்தான், நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒருவருக்கு இவ்வாறு ஆலோசனை கூறினார்கள்:

  உன் பிள்ளைக்கு ஒழுக்கம் கற்பிப்பாயாக! அவனுக்கு என்ன ஒழுக்கம் சொல்லிக்கொடுத்தாய்; என்ன கல்வி கொடுத்தாய் என உன்னிடம் (மறுமையில்) விசாரிக்கப்படும். அவ்வாறே, உன் பிள்ளை உன்னிடம் எப்படி நடந்துகொண்டான்; உனக்கு என்ன நன்மை செய்தான் என்று அவனிடம் விசாரிக்கப்படும். (பைஹகீ)

  முதலில் பணத்தின் அருமையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். தந்தை பிள்ளையிடம் நட்போடு பழகி, ஒரு பத்து ரூபாய் சம்பாதிக்கத் தான் படும் பாட்டைச் சொல்லிக் காட்ட வேண்டும்; அப்பணம் வீணடிக்கப்படும்போது தனக்கு ஏற்படும் வலியைப் புரிய வைக்க வேண்டும். நம் கஷ்டம் நம்மோடு போகட்டும்; குழந்தைகளுக்குத் தெரிய வேண்டாம் என்று பெற்றோர்கள் நினைப்பதுதான் முதல் தவறே. திட்டாமல், சபிக்காமல், பக்குவமாக, நளினமாக எடுத்துச்சொல்லும்போது எந்தப் பிள்ளையும் புரிந்துகொள்வான்.

  பணத்தைத் தேவைக்குமேல் செலவழிப்பது -அதாவது விரயம் செய்வது- எவ்வளவு பெரிய பாவம் என்பதை விளக்கிக் கூற வேண்டும். அவ்வாறே, சிக்கனத்தின் சிறப்பையும் சேமிப்பின் அவசியத்தையும் உள்ளத்தில் பதிக்க வேண்டும்.

  நல்லடியார்களின் நற்பண்பு குறித்துத் தெரிவிக்கும்போது பின்வருமாறு அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

  அவர்கள் செலவு செய்தால் விரயம் செய்யமாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள்; அதற்கு இடைப்பட்ட (நடு)நிலையாகவே அ(வர்களின் செலவான)து இருக்கும். (25:67)

  மற்றொரு வசனம் இவ்வாறு கூறுகின்றது:

  உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை (இறைவன்) நேசிப்பதில்லை. (7:31)

  நிச்சயமாக விரயம் செய்வோர் ஷைத்தான்களின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். (17:27)

  சேமிப்பின் அவசியம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  எந்த வீட்டாரிடம் பேரீச்சம்பழம் (சேமித்து) வைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் பட்டினி கிடக்கமாட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

  பணம் கையாளும் முறை

  அடுத்து நிதியைக் கையாளும் முறையையும் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும். கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் செலவு செய்து அழித்துவிடுவது பெரிதன்று; வேண்டிய தேவைகளுக்கு மட்டுமே செலவழிப்பதும் வேண்டாதவற்றைத் தவிர்த்துவிடுவதும்தான் பெரிய சாதனை ஆகும்.

  பெருமைக்காகச் செலவழிக்கும் போக்கு மிகவும் ஆபத்தானது. நண்பர்களும் உறவினர்களும் ஆச்சரியப்படும் அளவுக்குச் செலவு செய்வதால் யாருக்கு என்ன நன்மை? வீண் பிதற்றலுக்குத்தான் இது உதவுமே தவிர, உருப்படியான எந்தப் பயனும் இதனால் விளையப்போவதில்லை. அதே நண்பர்களும் உறவினர்களும் முன்னால் போகவிட்டுப் பின்னால் என்ன விமர்சனம் செய்வார்கள், தெரியுமா? தலைக்கனம் பிடித்தவன்; ஊதாரி; உருப்படாதவன் என்றுதான் உங்களை அவர்கள் எடைபோடுவார்கள்.

  நபிமொழி ஒன்றைப் பாருங்கள்:

  உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தானம் செய்யுங்கள்; அதில் விரயமோ பெருமையோ (பகட்டோ) கலந்துவிடாமல் இருக்கும்வரை. (இப்னுமாஜா)

  இருவரின் உணவு மூவருக்குப் போதும்; மூவரின் உணவு நால்வருக்குப் போதும் (மனம் இருந்தால்). (புகாரீ)

  இந்தியாவில் நுகர்பொருள் செலவின புள்ளி விவரக் கணக்கு (2007-08) ஒன்று கூறுவதைப் பாருங்கள்:

  இந்தியர் ஒருவர் செலவழிக்கும் 100 ரூபாயில் 22 ரூபாய் மட்டுமே அத்தியாவசிய செலவாகும்; 48 ரூபாய் பகட்டுச் செலவுகள் ஆகும். கல்விக்கு ரூ. 2.60; மருத்துவம் ரூ. 5.70 செலவிடப்படுகிறதாம்; பகட்டுச் செலவுகளில் ஐஸ்கிரீம் வகைகளுக்கு மட்டும் ரூ. 10.50 செலவு செய்கின்றனராம்!

  நுகர்வுக் கலாசாரம், மேலைநாடுகளைப் பின்பற்றி அநியாயத்திற்குப் பிள்ளைகளை அலைக்கழித்துவருகிறது. ஊடகங்களில் செய்யப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து இளைய தலைமுறை சொக்கிப்போகிறது; ஏமாந்துபோகிறது. விளைவு பெற்றோரின் உழைப்பு உறிஞ்சப்படுகிறது.

  விளம்பரத்தில் எதைக் காட்டினாலும் அதை உண்மை என்று நம்பும் பேதமைதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடே. அவர்கள் கோடிகோடியாய் சம்பாதிப்பதற்காகச் சாமானிய மக்களை விளம்பரத்தால் கிறங்கவைக்கிறார்கள். விளம்பரங்கள் போலியானவை என்பதைப் புரியாத மக்கள் பணத்தை விரயம் செய்கிறார்கள்.

  ஆக, பணத்தின் அருமை, அதைச் சம்பாதிப்பதில் சிந்தும் வியர்வை, அதைக் கையாளும் முறை, சிக்கனத்தின் தேவை, சேமிப்பின் அவசியம், விரயத்தின் விளைவு, பகட்டின் படுதோல்வி போன்ற எதார்த்தங்களைச் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும்; செய்முறைப் பயிற்சியும் அளிக்க வேண்டும். அப்போதுதான், வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்படும் நல்ல தலைமுறையை உருவாக்க முடியும்.

  ஏன், பையன் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுகூட, அவனின் வரவு-செலவு கணக்கைப் பெற்றோரிடம் அவன் ஒப்படைப்பதே அவனது எதிர்காலத்திற்கு நல்லது.

  தயவு செய்து இதையெல்லாம் தாழ்வு என்று கருதாதீர்கள். பிள்ளைகளே! நிச்சயம் இதுதான் உயர்வுக்கு வழிவகுக்கும்.
  அ. முஹம்மது கான் பாகவி
  Khan Baqavi 4


  http://khanbaqavi.blogspot.in/2013/02/blog-post.html

  Advertisements
   
 • One response to “பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்

  1. திண்டுக்கல் தனபாலன்

   June 27, 2013 at 1:21 am

   சொல்லப்பட்ட தீர்வுகள் அனைத்தும் அருமை… உணர வைக்க வேண்டியது நமது முக்கியமான பொறுப்பும் கூட… அதை விட வாழ்வில் என்ன சாதித்து விட போகிறோம்…?

   வாழ்த்துக்கள்… நன்றி…

    

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: