RSS

அவன் ஒரு தியாகியா !?

22 Jul

foreign jobஅயல் நாட்டு மோகம் யாரைத்தான் விட்டுவைத்தது. அதற்க்கு நம் நாட்டவர்களில் அநேகமானவர்கள் பலிகடாவாக ஆகியுள்ளோம்.எத்தனை விதமாக எடுத்துச்சொன்னாலும் எள்ளளவும் நம்மவர்கள் அதன் பின் விளைவுகளைப்பற்றி நினைப்பதில்லை.. காரணம் மோகத்தின் உச்சியில் மூற்ச்சையாகிப்போன நம் வெளிநாட்டு ஆசை. அதை சுவாசித்தாக வேண்டும் என்ற ஏக்கப்பெரு மூச்சு நிற்காத வரை என்றும் ஓயாது இந்த அந்நிய நாட்டு மோகம்.

இவ்வுலக வாழ்க்கையை வளமாக்கி வாழும் நோக்கில் காசை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்க்கையை தொலைத்து விட்டு வயோதிகர்களாய் தாயகம் வந்து தனது இளமையை இழந்த ஏக்கத்தில் நோய்வாய்ப்பட்டு மறிக்கும் பாவப்பட்ட மனிதன் என்றுதான் சொல்ல முடியும். அத்தகையோர் ஒரு விதத்தில் தியாகி என்று சொன்னால் அது மிகை அல்ல என நான் நினைக்கிறேன்.

அயல் நாட்டு அனுபவங்களை அளவிட்டுச்சொல்ல முடியாது. உலகின் அநேக நாட்டவர்கள் ஒன்று கூடும் சங்கமமாக திகழ்கிறது இந்த அயல் நாடு.! ஆகவே அதிக அனுபவம் இந்த அயல் நாட்டில் தான் கிடைக்கப்பெறுகிறது. கைநாட்டுக்காரர்களெல்லாம் கம்பியூட்டருடன் விளையாடக் கற்றுக்கொடுக்கும் பூமி இது. இவ்வாழ்வின் ஒருபகுதி இன்பமாய் இருந்தாலும் இன்னொரு பகுதி துயரமானதே.! இதனால் ஏற்ப்பட்ட இளமைகால இழப்பை எத்தனை கோடியை கொட்டிக்கொடுத்தாலும் திரும்பபெற முடியாது. ஆனால் அதன் அருமை அறியாது சுருக்கி வாழத்தெரியாமல் ஆடம்பரமும், அடுக்கி வைத்த சீட்டுக்கட்டைப்போல் குடும்பப்பிரச்சனைகளையும் தலையில் அடுக்காய் சுமந்து கொண்டு நமது வாழ்க்கையை நாமே தொலைத்துக் கொள்கிறோம் என்பதே மெய்யாகும்.

 • எந்த வேலையானாலும் பரவாயில்லை நான் வெளிநாட்டிற்க்குப் போகிறேன், என்று பெருமைப்பட்டுக்கொண்டு வேலைவாய்ப்புடன் வெளிநாடு செல்லும் கட்டிடத் தொழிலாளிகள், துப்பரவுத்தொழிலாளிகள் மற்றும் கிளினிங் கம்பெனிகளில் வேலைசெய்ய வருபவர்களின் நிலை பரிதாபத்திற்குரியாவையாக உள்ளது. நான் கேள்விப்பட்டவரை இவர்களது சம்பளம் குறைவாக இருப்பது மட்டுமல்லாது ஏதோ ஏழைக்கு தகுந்த எள்ளுருண்டை என்று சொல்லுமளவுக்கு தங்குமிடம் சாப்பாடு என்று அந்தந்தக் கம்பெனியர்கள் கொடுத்தாலும் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் உருவுகிற மெழுகுவர்த்தியாகத்தான் தனது வாழ்நாளை உருக்கிக் கழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.இதைப்பற்றி சொல்வதானால் இப்பகுதி போதாது. புத்தகமாகத்தான் வெளியிட வேண்டும்.

  அடுத்து சுதந்திரமாய் வேலைதேடிப்பெற்று கூட்டாக ரூம் எடுத்து தங்கியிருக்கும் இவர்களது நிலை சற்று வித்தியாசமானவை. அயல்நாட்டு வாழ்க்கையில் பெறப்படும் அனுபவத்தில் பெரும்பங்கை வசிப்பது இந்த ”பேச்சுலர் அக்கமன்டேசன்” வாழ்க்கையேயாகும்.!. அதைப்பற்றி கொஞ்சம் இங்கே பகிர்ந்து கொள்வோம். அயல் நாட்டில் பணிபுரியும் அனைவரும் அறிந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு துயரமான, வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவ வாழ்க்கை தான் இந்த பேச்சுலர் அக்கமன்டேசன். இங்கு பெரும்பாலும் அவரவர்கள் உறவுக்காரர்களாகவும், ஊர்க்காரர்களாகவும் இல்லையெனில் அவரவர் மொழிக்காரர்களாகவும் ஒன்று கூடி வசிப்பதையே விரும்புகிறார்கள். தாம் தமது குடும்பங்களையும் உறவுகளையும் பிரிந்து வந்தவர்களுக்கு ஒரு சிறு ஆறுதலாக இப்படி ஒன்றாக நம் சொந்தபந்தங்களுடனும் ஊர்க்காரர்களுடனும் வசிக்கிறோம் என்ற சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும் இவ்வாழ்க்கையை விட மோசமானதொரு தியாக வாழ்க்கை எதுவுமிருந்து விட முடியாது.

  பத்துக்கு பதினாறு வரை நீள அகலம் கொண்ட ரூமில் குறைந்தது எட்டு முதல் பத்து நபர்கள் வரை ஈரடுக்கு கட்டிலில் படுத்தெழுந்து பல மகிழ்ச்சிகளையும் இன்னல்களையும் மாறி மாறி சந்தித்து காலத்தை கழித்து வருகின்றனர். இங்கு பிரதான எதிரியாக மூட்டைப்பூச்சி முதலிடம் வகிக்கிறது..மூட்டைப்பூச்சி இல்லாத ரூமே இல்லையென்று சொல்லுமளவுக்கு குறைவில்லாமல் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளது. நாம் கஷ்ட்டப்பட்டு சாப்பிட்டு சேமிக்கும் இரத்தத்தை நாம் கண் அயர்ந்ததும் அது கண்விழித்து எடுத்துக்கொண்டு நம்மோடு இணைந்து நிறைந்து வாழ்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

  அடுத்துச்சொல்வதானால் பழக்கவழக்களின் தன்மை நாம் ஊரில் இருந்தகாலத்தில் பழகிய நமது நட்புக்கள் மற்றும் சொந்த பந்தங்களின் குணமும்,எண்ணமும்,பழக்கவழக்கமும், சுத்தமும், சுயரூபமும் ஆச்சரியப்படுமளவுக்கு இவ்வாழ்க்கையில் தான் அவரவர்கள் எப்படிப்பட்டவர்களென முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.

  இவ்வாழ்க்கையில் நல்ல நேர்த்தியான நட்பு பலமிழந்து தற்க்காலிகமாக பழகும் போலி நட்பே முழுபலத்துடன் இருந்து வருகிறது.ஊரில் இருந்த காலத்தில் ஏற்றத்தாழ்வு என்றால் என்னவென்று தெரியாமல் பழகிய பழக்கமெல்லாம் இவ்வாழ்வில் எள்ளளவும் எதிர்பார்க்கமுடியாது அவரவர் பணிபுரியும் பதவியும், பெறப்படும் சம்பளம் [(வருமானம்.?] செல்வாக்கு இதனை அடித்தளமாக கொண்டே மனிதர்களின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

  இன்ன பல மன உளைச்சலிலும், மன விரக்தியிலும் ஒவ்வொரு நாள் பொழுதும் ஓடை நீராய் கரைந்து ஓடிக் கொண்டிருக்கிறது.பணிச்சுமை, கடன் சுமை, கடமைச்சுமை அலுவலக கெடுபிடி, குடும்பத்தை பிரிந்து தனிமையின் ஏக்கம், உடல் நிலையின் ஒத்துழையாமை, சுயதேவைகள், சொல்லமுடியா துன்பங்கள் எண்ணிலடங்கா இன்னபல இன்னல்களுக்கு மத்தியில் இவ்வாழ்க்கையை மேற்கொண்டிருப்பது இது ஒரு வகையில் பெரும் தியாகச்செயலே !

  இப்படிப்பல இன்னல்களுக்கு மத்தியில் குடும்பத்தை காப்பாற்றுவதற்க்ககவும், பெற்றோர்களின் பிரச்சனைகளை போக்குவதற்காகவும், மனைவி மக்களை கஷ்டப்படாமல் சந்தோசமாக வைத்துக்கொள்வதற்க்ககவும், சகோதரிமார்களை மணம் முடித்துக்கொடுப்பதற்க்காகவும் சகோதரர்களுக்கு உதவுவதற்காகவும், தன் பிள்ளைகளை உயர்படிப்பு படிக்கவைப்பதற்க்காகவும் தனது உன்னத வாழ்நாளை இந்த அயல் நாட்டில் கழித்து அர்ப்பணித்து சுக இன்ப துன்பங்களை முழுமையாய் அனுபவிக்காது முதுமையடைந்து மரணத்தை அணைக்கும் இம்மனிதனும் ஒரு வகையில்…

  அவனும் ஒரு தியாகி தானே !?

  51mmx51mmஅதிரை மெய்சா
  Source : http://nijampage.blogspot.ae/2013/07/blog-post_780.html?utm_source=BP_recent

  Advertisements
   
 • 1 Comment

  Posted by on July 22, 2013 in 1

   

  Tags: , , , ,

  One response to “அவன் ஒரு தியாகியா !?

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: