RSS

களவாணியின் கைப்பேசி!

03 Aug

bladeஉலகம் போகும் போக்கைப் பார்த்தால் இனி பிளேடுகளுக்கு வேலையே இருக்காது போலிருக்கிறது. பிக்பாக்கெட் கணவான்கள் கடனை உடனை வாங்கி ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கிவிட்டால் போதும்.

சோலி சுத்தமாய் காரியம் ஆற்றலாம். எல்லாம் விஞ்ஞானத்தின் மகிமை.

சிறு வயதில் ஏபிசிடி படித்திருக்கிறீர்களா? அந்த ஆங்கில எழுத்துகளில் சிலவற்றை முன்னே பின்னே போட்டு அதன் உள்ளர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கு நமக்கு இடப்பட்டுள்ள விதி. அதற்குமுன் கடன் அட்டை!

இதைத் தெரியுமா என்று கேட்பதே அபத்தம். எல்.கே.ஜி. பாடத்திட்டத்தில் கடன் அட்டை பரிவர்த்தனையைச் சேர்க்கும் அளவிற்கு உலகம் முன்னேறியாகிவிட்டது. எனவே அதைத் தெரியாதவர்கள் வேறுலக ஜந்து! எட்டரைக்கு ஐந்தரை செ.மீ. அளவிலான ஒரு பிளாஸ்டிக் அட்டையில் முன்புறம் நம் பெயரைப் பதித்து, பின்புறம் காந்தப் பட்டை. ஏதோ இலவசமாய்த் தருவதுபோல், வங்கியானது இதை மக்கள் தலையில் கட்டிவிட்டிருக்கும். அதிலுள்ள அந்தக் காந்தப் பட்டைதான் உங்கள் தகவல்களின் ஜாதகம். அதை லவட்டி எப்படியெல்லாம் திருட்டு நடக்கிறது என்று ஏகப்பட்ட சைபர் க்ரைம் கட்டுரைகள் வந்துவிட்டன. எனவே அதெல்லாம் அரதப் பழசு. இப்பொழுது புதுவகை அட்டையும் புதுவகை களவும் பரவலாகி வருகின்றன.

கடன் அட்டையை உபயோகித்து பொருள் வாங்கும்போது என்ன செய்கிறோம்? அட்டையை எடுத்து கல்லாப்பெட்டியாளரிடம் இருக்கும் வெத்தலைப்பெட்டி போன்ற டப்பாவில் ஓர் இழுப்பு இழுத்தால் அது சடுதியில் நம் ஜாதகத்தைப் படித்து, ‘இந்தாளை இன்னும் இந்தளவுக்கு கடனாளியாக்கலாம்’ என முடிவுசெய்து அனுமதியளித்துவிடுகிறது. பொருள் உங்கள் கையில்.

விஞ்ஞானம் முன்னேறுகிறதா? ‘இதென்ன அட்டையை எடுத்து ரீடரில் இழுப்பது?’ என்று யோசித்தார்கள். RFID டெக்னாலாஜி புகுந்தது. RFID? அதான் பார்த்தோமே ஆங்கில எழுத்துகளை வரிசை மாற்றி அறிய வேண்டுமென்று. RFID என்பது Radio Frequency Identification. ‘எனக்கும் டெக்னாலஜிக்கும் ஒவ்வாமை ஏராளம்’ என்று ஓடவேண்டாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘என் ச்செல்லம்’ என்று உங்கள் இல்லாள்/இல்லான் கன்னத்தில் செல்லமாய்த் தட்டுவீர்களே அப்படியான கான்செப்ட்.

 • அதே ப்ளாஸ்டிக் கடன் அட்டைதான். தயாரிக்கும்போதே உள்ளே மைக்ரோசிப் ஒன்றைப் புதைத்துவிடுகிறார்கள். அதனுள் உங்கள் தகவல்கள் ஏற்றப்பட்டுவிடுகின்றன. இந்த அட்டைகளைப் படிக்கும் எலக்ட்ரானிக் ரீடர்கள் கடைகளில் இருக்கும். செலுத்த வேண்டிய தொகைக்கு அட்டையை இந்த ரீடரின்மேல் ஒத்தினால், அல்லது கடன் அட்டை இருக்கும் பர்ஸை அதன் அருகே ஆட்டினாலே போதும். எவ்வளவு ஸிம்பிள்? இந்த தட்டல், உரசல் காதலுக்கு இடையே வந்து மூக்கை நுழைக்கிறது ஸ்மார்ட்ஃபோன்.

  ஏ ஃபார் ஆண்ட்ராய்ட், ஐ ஃபார் ஐஃபோன் என்று உங்கள் குழந்தைகள் உங்களிடம் பாடம் சொல்லியிருப்பார்களே, அந்த வஸ்து. இன்று உலகமே உள்ளங்கை ஜோதிடர்கள்போல் கையில் ஸ்மார்ட் ஃபோனை வைத்துக்கொண்டு வேறுலக சஞ்சாரத்தில் மூழ்கி அலையும் ராட்சதக் கண்டுபிடிப்பு அது.

  இதைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களான ஸாம்ஸங், நோகியா, மோட்டோரொலா, எல்ஜி, ஹெச்டிஸி ஆகியோர் தங்களது ஸ்மார்ட்ஃபோன்களை NFC சக்தியுடன் வெளியிடுகிறார்கள். NFC யானது Near Field Communications என்பதாகும். மேற்சொன்ன RFID-யின் ஒரு வடிவம். அதாவது இந்த NFC வசதியுள்ள ஸ்மார்ட்ஃபோன்களின் வாயிலாய் RFID டெக்னாலஜியில் நிகழ்வுறும் தகவல் பரிமாற்றங்களை நிகழ்த்தலாம். அறுவையாக உள்ளதோ? பிளேடு ஆசாமிகளிடம் சென்று விடுவோம்.

  பிக்பாக்கெட் ஆசாமிகள் பிளேடுக்கு பதிலாக, தங்களது ஸ்மார்ட்ஃபோனில் சில மென்பொருள் வசதிகள் ஏற்படுத்திக்கொண்டால் போதும். அதற்கான மென்பொருள் தயாரித்து விற்பவர்கள் இணையவெளியில் பஞ்சமற நிறைந்து, கூவாத குறையாக இலவசமாகக் கிடைக்கிறது. அந்த மென்பொருளை ஸ்மார்ட்ஃபோனில் நிறுவிக்கொண்டு, மைக்ரோசிப் பொதிந்த கடன் அட்டையாளர்களின் பர்ஸ், ஹேன்ட்பேக் அருகே மென்மையாக ஆட்டிவிட்டு நடந்தால், அந்த அட்டையிலுள்ள தகவல்களை ஸ்மார்ட்ஃபோன் படித்து பத்திரப்படுத்திக் கொள்கிறது.

  அப்புறமென்ன? RFID ரீடர்கள் பொருத்தப்பட்ட கடைகளாகப் பார்த்து ஏறி, இறங்கி பிரியப்பட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு, அந்த ரீடரில் ஸ்மார்ட்ஃபோனை ஆட்டினால் போதும். பொருள் களவாணிக்கு. கடன் பில் ஸ்டேட்மெண்ட், அப்புராணிக்கு.

  இத்தகைய எலக்ட்ரானிக் பரிமாற்றங்களில் கடன் அட்டை உரிமையாளரின் பெயரும் இடம் பெறாததால் பொருளை விற்கும் கடைக்காரருக்கு எந்தச் சந்தேகமும் எழ வாய்ப்பில்லை.

  கடன் அட்டைகள் என்றில்லை, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாஸ்போர்ட், டிரைவர் லைஸென்ஸ் அட்டைகளெல்லாமேகூட மைக்ரோசிப் பொருத்தி இப்பொழுதைக்கு மக்களை மட்டும் சும்மா விட்டிருக்கிறார்கள். எனவே இத்தகைய அட்டைகளின் தகவல்கள் களவாடப்படாமல் தடுக்கக்கூடிய பிரத்யேக உரைகள், பர்ஸ்கள் தயாரிப்பு என்று ஒருபக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள்.

  அப்படியா? எனில் அட்டையை லபக்கிட்டு வா. மைக்ரோசிப்பை எப்படி பெயர்த்தெடுப்பது என்று சொல்லித் தருகிறேன் எனும் டுடோரியல் ஆசிரியர்கள் மறுபக்கம் யூடியூபில் இலவச பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  அதில் கள்வர்களுக்கு ரிஸ்க் அதிகம் என்பதால் ஸ்மார்ட்ஃபோன் டெக்னிக்தான் கள்வர்களுக்கு ஸ்மார்ட் ஐடியா. எல்லாம் கள்வன் பெருசா? காப்பான் பெருசா? கதைதான்.

  அனைத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு கோவணத்தில் சுருக்குப் பை வைத்து தைத்துக்கொண்டால் பெட்டர் போலிருக்கிறது.

  -நூருத்தீன்

  Source : http://www.darulislamfamily.com/family/dan-t/114-dan-books-t/seldom/368-digital-pickpokets.html

 

Advertisements
 
2 Comments

Posted by on August 3, 2013 in 1

 

2 responses to “களவாணியின் கைப்பேசி!

 1. DD

  August 3, 2013 at 10:52 am

  என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்…!

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: