RSS

சிரியா : சிரிப்பை துறந்த தேசம்

30 Aug

1சிரியாவின் உள்நாட்டுப் போர் ‘சீரியஸாகி’
போர்ப்பதட்டம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அச்சுறுத்துகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிரியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பாதி பேர் அப்பாவி சிவிலியன்கள். முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. நாற்பது லட்சம் பேர் குடும்பம், வீடு, ஊரையெல்லாம் இழந்து உயிர்பிழைக்க நாட்டுக்குள் ஆங்காங்கே சிதறிப்போயிருக்கிறார்கள். ஓரளவுக்கு வசதி படைத்த பதினெட்டு லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டார்கள்.

2010ல் தொடங்கி, அரபுநாடுகளை புரட்டிப்போட்ட ‘அராபிய வசந்தம்’ எனப்படுகிற மக்களிடையே ஏற்பட்ட புரட்சியுணர்வு இப்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் இன்னமும் சிரியாவில் மட்டும் வசந்தம் பெரும்புயலாக வீசிக்கொண்டிருக்கிறது.

மத்திய கிழக்கில் சிரியாவை சுற்றி இஸ்ரேல், ஜோர்தான், ஈராக், துருக்கி ஆகிய ‘எப்போதும் பிரச்சினை’ நாடுகள் அமைந்திருக்கின்றன. நெருப்புக்கு நடுவில் எரியாத கற்பூரமாய் சிரியா மட்டும் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

மக்கள் தொகை கிட்டத்தட்ட இரண்டு கோடி. தொண்ணூறு சதவிகிதம் முஸ்லிம்கள். பத்து சதவிகிதம் கிறிஸ்தவர்கள். ஜனநாயகத்தின் வாசனையே சிரியாவில் அரைநூற்றாண்டாக கிடையாது. 1963ல் ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகளாக அராப் சோசலிஸ்டு பாத் கட்சியின் ஆட்சிதான். 1971ல் தொடங்கி, தற்போதைய அதிபர் பஸார் அல் ஆஸாத்தின் குடும்பம்தான் அதிபர் பதவியை தொடர்ச்சியாக தக்கவைத்திருக்கிறது.

 • அராபிய வசந்தம் காரணமாக அரபுநாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களைத் தொடந்து கடந்த 2011 மார்ச் வாக்கில் சிரியாவிலும் போராட்டங்கள் தொடங்கின. தொடர்ந்து ஒரே குடும்பம் சிரியாவில் ஆட்சியதிகாரம் செய்வதை மறுத்து, அதிபரை ராஜினாமா செய்யக்கோரி பேரணிகள் நடந்தன. அதிபருக்கு இவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணடிப்பது பிடிக்கவில்லை. இராணுவத்தை அனுப்பி ‘என்ன செய்தாவது’ அடக்கச் சொன்னார். துப்பாக்கி முனையில் போராட்டக்காரர்களை இராணுவம் அணுக, கொடி பிடித்துக் கொண்டிருந்த போராட்டக்கார்கள் கொடியை கீழே போட்டுவிட்டு பதிலுக்கு துப்பாக்கி ஏந்தத் தொடங்கிவிட்டார்கள். இதுதான் சிரியப் பிரச்சினை.

  சிரிய இராணுவத்தை ஆங்காங்கே நடந்த சண்டைகளில் துப்பாக்கி ஏந்திய போராட்டக்காரர்கள் போட்டுத்தள்ளிக் கொண்டிருக்க, நாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிபர் அல் ஆஸாத்தின் கையை விட்டு நழுவிக்கொண்டிருக்கிறது. அரசை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இதுவரை பொதுவான தலைமை ஒன்று உருவாகவே இல்லை. முஜாகிதீன் அமைப்பான ஜபாத் அல் நுஸ்ரா என்கிற மத அமைப்புக்கு அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களிடையே நல்ல மதிப்பு இருக்கிறது. எனவே அரசுக்கு ஆதரவாகவும் ஹிஸ்புல்லாவினர் (அரபுநாடுகளில் இயங்கும் இராணுவக் கட்டுமானம் கொண்ட மத அரசியல் கட்சி) களமிறங்கியிருக்கிறார்கள். நாட்டின் முப்பதிலிருந்து நாற்பது சதவிகிதம் நிலப்பரப்புதான் இப்போதைக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீதி இடங்களை கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.

  சிரிய அரசாங்கத்துக்கு ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் இராணுவரீதியாக உதவி வருகின்றன. போராட்டக்காரர்களுக்கு கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஆயுதங்களை தருகின்றன. போராட்டக்காரர்களை நியாயமே இன்றி அடக்குவதாகக் கூறி அரபுக் கூட்டமைப்பு சிரியாவை தங்கள் அமைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டது. ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்றவையும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான போக்கையே கடைப்பிடிக்கிறார்கள்.

  அதிபர் ஆஸாத் இஸ்லாமியக் குழுக்களில் மைனாரிட்டியான அலாவிட் குழுவைச் சேர்ந்தவர். மைனாரிட்டியினர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மெஜாரிட்டியினரை அடக்கி ஆளுவதா என்கிற குமுறல் ஏற்கனவே இருந்தது. ஆஸாத்தின் உறவினர்களும், அவரது குழுவைச் சேர்ந்தவர்களும்தான் சிரிய இராணுவத்தின் முக்கியமானப் பதவிகளைப் பிடித்திருந்தார்கள். மேலும் சிரியாவில் வாழும் குர்திஸ் இனமக்களும் தங்களுடைய கலாச்சாரம், மொழி, இனத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஏற்கனவே குமைந்துக் கொண்டிருந்தார்கள். 2011ன் தொடக்கத்தில் சிரிய கிராமப்புறங்களில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம். அதன் காரணமாக ஏற்கனவே ஏழைகளாக இருந்தவர்கள் பரம ஏழைகளானது. புதிய பொருளாதாரக் கொள்கைகளால் மக்களிடையே சமத்துவத்துக்கான இடைவெளி அதிகரித்தது. இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலைவிரித்து ஆடுவது என்று ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ நிறைய காரணங்கள் இருக்கிறது.

  கொல்லப்பட்டவர்கள்உலகிலேயே அதிகளவில் இரசாயன ஆயுதங்களை ‘ஸ்டாக்’ வைத்திருக்கும் நாடுகளில் மூன்றாவது பெரிய நாடாக சிரியா கருதப்படுகிறது. போராட்டக்காரர்களை அடக்க சிரிய இராணுவம் இவற்றை பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்ஜசீரா தொலைக்காட்சி சந்தேகப்பட்டது. அப்போதிலிருந்தே தொடர்ச்சியாக ஆங்காங்கே இரசாயன ஆயுதங்களால் மக்கள் தாக்கப்படுவதாக ஊடகங்கள் அலறிக்கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் நடத்தப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலில் சுமார் 635 பேர் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல். இதை உறுதிப்படுத்த வந்த ஐ.நா. விசாரணை அதிகாரிகளை, அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து அரசு வெளியேற்றியிருக்கிறது.

  இந்நிலையில் அமெரிக்கா இனியும் பொறுக்கமுடியாது என்று தன்னுடைய போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடலுக்கு அனுப்பியிருக்கிறது. ஏற்கனவே அங்கே நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஹாரி ட்ரூமான் என்கிற விமானந்தாங்கி கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு விரைந்திருக்கிறது. அங்கிருந்து சிரியா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. ஏவுகனை தாங்கி கப்பல் ஒன்றும் மத்திய தரைக்கடலுக்கு விரைந்தது. அமெரிக்காவுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் படைகளும் தயார்நிலையில் இருக்கின்றன.

  “எங்கள் பிரச்சினையில் யார் தலையிட்டாலும், அது எண்ணெயில் தீயை வைப்பதற்கு ஒப்பாகும். அந்த தீ சிரியாவை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் எரித்துவிடும்” என்று சிரியாவின் தகவல்துறை அமைச்சர் அமெரிக்காவின் தலையீட்டை எச்சரித்து மிரட்டியிருக்கிறார்.

  “அபாயக்கோட்டை அமெரிக்கா தாண்டுகிறது. இதன் விளைவுகளை வெள்ளை மாளிகை சந்திக்கும்” என்று சிரியாவின் ராணுவ துணைத்தலைவர் மசூத் ஜஸாயரியும் சவால் விட்டிருக்கிறார்.

  சிரியாவுக்கு ஆதரவாக ஈரானும் தொடை தட்டி களமிறங்கியிருக்கிறது. ரஷ்யாவும் நேரடியாக களமிறங்கும் பட்சத்தில் மத்திய தரைக்கடல் இரத்தக்கடல் ஆகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அரபு நாடுகள் கவலையோடு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

  உலகம் இன்னொரு போரை சந்திக்க தயார் ஆகிவிட்டது.

  yuvakrishna(நன்றி : புதிய தலைமுறை)
  எழுதியவர் யுவகிருஷ்ணா
  Source:http://www.luckylookonline.com/2013/08/blog-post_30.html

  Advertisements
   
 • One response to “சிரியா : சிரிப்பை துறந்த தேசம்

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: