RSS

நேரலை” இணையக் கவியரங்கில் (சந்த வசந்த குழுமத்தார் நடத்தும் 14/09/2013 அன்று நடந்த கவியரங்கில்​ கவியன்பன் கலாம்

17 Sep

நேரலை” இணையக் கவியரங்கில் (சந்த வசந்த குழுமத்தார் நடத்தும் 14/09/2013 அன்று நடந்த கவியரங்கில்​ கவியன்பன் கலாம் அழைத்ததும் கவிதை அரங்கேற்றி​யதும்/ பின்னூட்டங்களும் காண்க
அக்கவியரங்கில் கலந்து கொண்டோர் உலகளாவிய அளவில் 38 கவிஞர்கள்/ புலவர்கள்/ பாவலர்கள்/ தமிழறிஞர்கள் ஆவார்கள். இத்தமிழ்ச் சங்கத்தில் அடியேனுக்கும் ஓர் அங்கீகாரம் கிட்டியது இறைவன் எனக்களித்த அருளென்பேன்; எல்லாப் புகழும் இறைவனுக்கே!
;
அழைப்பு – 2

கவியன்பன் கலாம் – எனக்குக் கவிதை எழில்

விழியிரண்டில் கழிவிரக்கம் நிறைத்துக் கொண்டு
விருப்பமுடன் நோன்பியற்றி மகிழ்ந்து நின்றே
அழுதழுதே ஆசைகளை அறவே நீக்கி
அறவழியில் செல்வதையே அகத்தில் கொண்டு
தொழுதபடி மேலோர்கள் செல்லும் பாதை
துணையாகக் கொண்டபடி கடப்பார் ஆகிப்
பழுதெதுவும் போகாத கவிதை செய்யும்
பண்புடைய கலாம்காதர் அறியார் யாரே.

நாணல்மகன் செல்வழியில் தாமும் சென்று
நலமளிக்கும் கவிபலவும் நன்கு மாந்தி
மாணவராய் மாண்புடனே பாடல் யாத்து
மகிழ்வுடனே மன்றிலிங்கு கொடுப்பார் தம்மைப்
பூணநல்ல மலர்போலே பாடல் செய்து
புகழென்றும் ஈட்டுகின்ற புலவர் தம்மைக்
காணவேண்டும் ஆசையினால் அழைக்கின் றேனே
கலாமிங்கே கவியெழிலைப் பொழியத் தானே.

-சிவசூரி

 • என் கவிதையிடப்பட்டு அரங்கேற்றம்

  இக்கவியரங்கத்தில் அடியேனின் “ஒரு பா ஒரு பஃது” என்னும் வாய்பாட்டில் அந்தாதியாக வனைந்து 10 வெண்பாக்கள் பாடினேன்

  கவியரங்கம்- 38

  என் கவிதையின் தலைப்பு: “எனக்குக் கவிதை எழில்”(கவிதையும் காதலியும்)

  இறைவாழ்த்து:

  அலகிலா அருளும் அளவிலா அன்பும்

  இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி!

  சபை வாழ்த்து:

  சந்த வசந்தச் சபையோரை வாழ்த்தியே

  இந்தக் கவிதையை இவ்விடம்-தந்தே

  அரங்கேற்றம் செய்யும் அபுல்கலாம் யானும்

  கரங்கூப்பி வந்தேன் கனிந்து.

  ஒரு பா ஒரு பஃது

  எழிலாய்த் தெரியும் இதழைக் கடித்து

  விழியால் நுழைந்து விளக்கம் படித்து

  மொழியும் உணர்வை முழுதும் சுவைத்துக்

  கழியும் கவிதையாய்க் காண். 1)

  காண்பதும் ஆங்குக் கவிதை எழிலெலாம்

  மாண்புள பெண்ணின் மருவிலாத் தோற்றமே

  கேண்மையும் கேட்கக் கிளையும் மயங்கிட

  ஆண்மையை ஈர்க்கும் அது 2)

  அதனெழில் கூடும் அசையும் தொடையில்

  மதுரமாய்ச் சீராய் மயக்கும் நடையில்

  இதுவரை யானும் இதுபோல் சுவைக்க

  எதுவரை போவேன் இயம்பு 3)

  இயம்பும் கவிதை இதயம் விரும்பும்

  நயமும் ஒலியும் நயமுடன் பேசும்

  வியக்கும் அணிகள் விரவிக் கிடக்கும்

  செயலை மறக்கும் செயல் 4)

  செய்யப் படுமிந்தச் செய்யுள் வரிகளில்

  நெய்யப் படுமந்த நேர்த்தியாம் பட்டினை

  கையா லுடுத்திய கன்னித் திறமையை

  மெய்யா லுமுணரும் மெய் 5)

  மெய்தான் உடலும் மெதுவாய் அழியுமே

  பொய்தான் கவிதையெனப் பொய்யாய் மொழிந்தாலும்

  செய்யும் புலவரின் செய்யுள் எழிலெலாம்

  உய்யும் புகழில் உயர்ந்து 6)

  உயர்ந்து நிமிர்ந்த உணர்வை எழுப்பி

  வியக்கும் புலமை விதைகள் நிரப்பி

  மயக்கும் வழிகளில் மங்கை எழிலாய்

  இயக்கும் கவிதை இனிது 7)

  இனிக்கும் எதுகைகள் ஈரிதழ் போல

  கனியாய்ச் சுவைக்கக் கவியின் எழிலாய்த்

  தனித்து விளங்கும் தளையடி மோனை

  அனைத்தும் அழகியின் அன்பு 8)

  அன்பினால் ஈர்க்கும் அழகிய மங்கைபோல்

  என்பையும் ஆட்டும் எழிலார் கவிதைகள்

  மன்பதை எங்கும் மகிழ்ச்சியை ஊட்டிடும்

  என்பதைச் சொல்லுவேன் இன்று 9)

  இன்று படித்த இனிய கவிதையால்

  நன்றாய் உணர்வோம்; நளின வரிகளில்

  குன்றா இளமை; கொழிக்கும் வளமையில்

  என்றும் கவிதை எழில் 10)

  .அவற்றைப் பார்த்து என்னையும் என் வெண்பாக்களையும் பாராட்டியோரின் பின்னூட்டங்கள் இவைகளாகும்:

  அன்புள்ள கலாம்.

  ஒருபா ஒருபஃது சிறப்பு.
  கவிதையும், கருத்தும்”எழில்”

  வாழ்த்துகள்

  இலந்தை (நிறுவனர்/ தலைமையாசான், “சந்த வசந்தம்” யாப்புக்குழுமம்.)

  கலாமின்கை பற்றிக் கவிதையாம் கன்னி
  உலாவந்தாள் ஊட்டினாள்.

  கவிதைக் கன்னிக்கு அழகிய அந்தாதிமால சூட்டியுள்ளீர்கள். பாராட்டுகள்.

  ..அனந்த்

  காதலியை எண்ணிக் கவிதை வடித்திட்ட
  காதிரின் காதல்வாழ் க.

  -sdn

  நல்ல அந்தாதிப் பாக்கள்.
  சங்கரன்

  அந்தாதி முயற்சியைப் பாராட்டுகிறேன்.

  -சிவா சிவா

  அழகான அந்தாதிக் கவிதைகள்! மனத்தை ஈர்த்தன! நன்றியும் வாழ்த்துக்களும்!கலாம் அவர்களே மேன்மேலும் சீரும் சிறப்பும் பெற்று இலக்கியப் பணி தொடர்வீர்.

  -சுப்பராமன்

  கலாமின் காதற் கவிதை எழில்தான்!
  சலாம்செய் வதுவே சரி!
  பொதுவாக எல்லா ஈற்றடிகளும் நன்று.

  எழிலான கவிதை.. கலாம் ஐயா அருமை
  அன்புடன் அகிலா

  கலாம் கவிதை அழகு..

  -கவியோகி வேதம்

  திரு கலாம் அவர்களின் அந்தாதிக் கவிதையை படித்து இன்புற்றேன். கலாம் கவிதை கலக்கல். வாழ்த்துக்களுடன்
  பாரதி எழிலவன்

  கவிதையில் காதலியைக் கண்ட கலாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
  சோதரி
  புஷ்பா கிறிஸ்ரி

  இறுதியுரையில் கவியரங்கத் தலைவர் உயர்திரு. சிவசூரியார் அவர்கள் வாழ்த்தளித்த வாழ்த்துப்பா:

  கண்ணசைவில் பலகோடி கற்பனைகள் சிந்தும்
  கலாம்காதர் கட்டிவந்த கவிநங்கை வந்தாள்
  பண்ணிசைத்துப் பாடுகின்ற வெண்பாவாய் வந்தாள்
  பாவடியாம் பட்டாடை மின்னிவர வந்தாள்
  பெண்ணிதழாய்ப் பீடுடனே எதுகையெழில் கொண்டாள்
  பெருமைமிகு அணிபலவும் உடலேந்தி வந்தாள்
  மண்ணுலகில் நடக்கின்ற மதிபோல வந்தாள்
  வாசமிகு அந்தாதி மாலையென வந்தாள்.

  அண்மையிலே வந்துநின்றே அன்புமழை பெய்தாள்
  அசைகின்ற சீரழகில் ஆனந்தம் தந்தாள்
  வண்ணமயில் தோகையென வடிவேந்தி வந்தாள்
  மழலைமொழி போலினிக்கும் கவியன்பன் நெஞ்சில்
  எண்ணுகின்ற பொருள்யாவும் எழிலாகத் தோன்ற
  எம்மரங்கில் ஒளியூட்ட மரபுவழி வந்தாள்
  தண்டமிழின் தொடையெல்லாம் பின்னிவர வந்தாள்
  தளையெல்லாம் வளையாக்கித் தானணிந்து வந்தாள்.

  செப்பலோசை சிரிப்பாகச் செவிமடலில் மோத
  செம்மாந்து நடைநடந்து தேனாறாய் வந்தாள்
  முப்பொழுதும் முத்தமழை பொழிபவளாய் வந்தே
  முத்தமிழாய்ச் சித்தமெலாம் முறுவலித்து நின்றாள்
  தப்பெதுவும் நினையாத தமிழ்நெஞ்சில் தோன்றிச்
  சந்தமுடன் நடைநடந்து சபைநடுவே வந்தாள்
  எப்பொழுதும் துணையாகும் எழில்நங்கை போலே
  எம்மனத்தில் கலாம்காதர் இடம்பிடிக்க வந்தாள்.

  சிவசூரி.

  என் நன்றியுரை:

  என்னுடைய கவிதையைப் பாராட்டியும் ஆய்ந்தும் கருத்துச் சொன்ன, சொல்ல நினைத்த அனைவருக்கும் என் நன்றி

  அன்பின் கவியரங்கத் தலைவர் சிவசூரியார் ஐயா அவர்கட்கு, தமிழ் மணக்கும் தமியேனின் வணக்கம்.
  அற்புதமாய்ச் சொற்களென்னும் கற்களில் கட்டிய எனக்கான இவ்வாழ்த்து மாளிகை என்னும் வசந்த மாளிகைக்குள் உள்ளத்தால் குடிபுகந்தேன்; அதனால், தங்களை உளம்நிறைவாய்ப் புகழ்கிறேன்.
  சொன்னதைச் செய்யும் உன்னத நற்பண்பின் பெருந்தகையாளரின் பக்கத்தில் இருப்பதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிப்பதற்கு என்றும் யாப்பு மணம் வீசும் “சந்த வசந்தம்” என்னும் இப்பாத்தோட்டத்தில் அடியேனும் அடியெடுத்து வைத்ததும் இறைவன் அளித்த பேறென்பேன். தங்களின் அனுமதியுடன் இப்பாராட்டுப் பத்திரத்தை என் வீட்டின் வரவேற்பறையில் காட்சிக்கு வைப்பதே அதன் மாட்சிக்கு யான் செய்யும் கடனாகும் என்பதையும் இம்மாமன்றத்தில் அறிவிக்கிறேன்.
  என்றும் நன்றிகளின் ஆனந்தக் கண்ணீருடன்,
  பணிவுள்ள மாணவன்,
  கலாம்

  அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
  kalam
  “கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
  அதிராம்பட்டினம் ( பாடசாலை),
  அபுதபி (தொழிற்சாலை)
  வலைப்பூந் தோட்டம்:
  http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
  அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
  மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com , kalamkader2@gmail.com
  Skype : kalamkader

  Advertisements
   
 • Tags: , , , ,

  One response to “நேரலை” இணையக் கவியரங்கில் (சந்த வசந்த குழுமத்தார் நடத்தும் 14/09/2013 அன்று நடந்த கவியரங்கில்​ கவியன்பன் கலாம்

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: