RSS

இறைவனின் குறைவற்ற அருள் எனது மனதுக்குள் நிரம்பி வழிகிறது.

03 Jan

ஒரு திரும்பிப் பார்த்தல் 2014

எல்லா வருடங்களையும் போலவே 2013ம் ஆண்டும் இனிமையாகவே கடந்ததில் இறைவனுக்கு நன்றி சொல்வதில் எனது திரும்பிப் பார்த்தல் துவங்குகிறது.

புது வருடங்களின் வசீகரம் அதன் புரட்டப்படாத பக்கங்களில் இருக்கிறது. ஒரு மழலையின் கையில் கிடைக்கும் சாக்லேட் போல அதன் வசீகரம் விழிகளை ஈர்க்கிறது. ஒரு மர்மப் புதிர் போல கைகளில் இருக்கும் இந்த வருடத்தில் நாம் அவிழ்க்க நினைக்கும் பலவும் புதிர்களாகவே நீடிக்கக் கூடும். கடந்த கணங்களின் புரியாத புதிரானவை சட்டென புதிரவிழ்த்து பிரமிக்க வைக்கவும் கூடும். எனினும் அந்த எதிர்பார்ப்புகளின் கரைகளே பயணத்தைக் குறித்த வசீகரத்தை விஸ்தாரமாக்குகின்றன.

 • அதன் சில பக்கங்களில் புன்னகைகள் புறப்படலாம். சில பக்கங்களில் அழுகையின் துளிகள் ஈரமாகலாம். இன்னும் சில பக்கங்களின் முதுமக்கள் தாழிகளில் அதிர்ச்சியும், ஆற்றாமையும் அடைபட்டும் கிடக்கலாம். இப்போதைக்கு அதன் வெள்ளைப் பக்கங்களை கருப்புச் செயல்களால் அழுக்காக்கி விடக் கூடாதே எனும் பதட்டம் மட்டுமே மென்மையாய் மனசில் உண்டு.

  2013 விடிகையிலும் கனவுகள் இருந்தன. புத்தாண்டு தினம் என்பது மைல் கற்கள் போல. அவை பயணத்தின் அளவுகளை அறியப்படுத்துகின்றன. அவையே பயணமல்ல, அவையே இலக்குகளுமல்ல. எனினும் பாதைகளின் திசைகளையும், மிதித்துக் கடந்த தூரங்களையும் அவை எச்சரிக்கையுடனும், ஆனந்தத்துடனும் அறிவிக்கின்றன.

  ஜனவரி மாத புத்தகக் கண்காட்சி, அதைத் தொடர்ந்த மாதங்களில் என இந்த ஆண்டு எனது புத்தகங்கள் 7 வெளியானது மகிழ்ச்சியான விஷயம். அவற்றில் சில புத்தகங்கள் எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் பாராட்டுகளையும், அழைப்புகளையும், அன்பையும் சம்பாதித்துத் தந்தது கூடுதல் மகிழ்ச்சி.

  குறிப்பாக நிக் வாயிச்சஸ் – குறித்த சுருக்கமான வாழ்க்கை வரலாறு கல்லூரி வட்டாரங்களிலிருந்தும், பல எழுத்தாளர்களிடமிருந்தும், பதிப்பகங்களிலிருந்தும் நிறைய பாராட்டுகளை அனுப்பி வைத்தது.

  பெண் – ரகசியமற்ற ரகசியங்கள், நூலும் தனது முதல் பதிப்பை அசுரவேகத்தில் முடித்துக் கொண்டு இரண்டாவது பதிப்பை நோக்கிக் காத்திருக்கிறது.

  மற்ற நூல்களில் நீயும் வெல்வாய் எனும் தன்னம்பிக்கை நூலும், தெரியும் ஆனா தெரியாது எனும் தொழில்நுட்பம் சார்ந்த நூலும், வேலை வேண்டுமா எனும் நூலும் அதனதன் பாதைகளில் பயணிக்கின்றன.

  மீன் உணவின் பயன்கள் குறித்து எழுதிய நூல் இந்த ஆண்டில் நிறைய எதிர்வினைகளையும், திட்டுகளையும், கசப்பு கடிதங்களையும் சம்பாதித்துத் தந்தது. அதே வேளையில் அந்த நூலுக்குத் தென்மாவட்ட புத்தகக் கண்காட்சிகளில் கிடைக்கும் ஏகோபித்த வரவேற்பு பிரமிக்க வைக்கிறது. மீன் துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தொலைபேசியில் அழைத்து ஒரு மணி நேரம் பேசியது அந்த நூலுக்கு வந்த எதிர்வினைகள் அனைத்தையும் ஒற்றைக் கோடால் அழித்துப் போட்டு விட்டது !

  அதிக மகிழ்ச்சி தந்த நூல் என்று பார்த்தால் எனது “வெள்ளக்காரன் சாமி” எனும் சிறுகதை நூலைத் தான் சொல்வேன். பத்திரிகைகளில் வெளியான, பரிசுகள் வாங்கிய சிறுகதைகளை மட்டுமே அதில் தொகுத்திருந்ததால் அது ஒருவகையில் வாசித்தவர்களையெல்லாம் நேசிக்க வைத்தது. எனது முதல் சிறுகதைத் தொகுப்பு இதுவே.

  லண்டன் டி.பி.பி இசைக்குழுவினருடனான பயணம் இந்த ஆண்டின் மிக இனிமையான அனுபவங்களில் ஒன்று. நண்பர் சஞ்சேயை நெருக்கமாய் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், அவருடன் அதிகமாய்ப் பணியாற்றவும் இந்த ஆண்டு உதவியது.

  இரண்டு ஆல்பங்கள் இந்த ஆண்டு வெளிவந்தன. “ஒன் வே” ஆல்பத்தின் முழு பாடல்களையும் நான் எழுதியிருந்தேன். சஞ்சேயின் இசையில் அந்த ஆல்பம் ஜெர்மனியில் தொலைக்காட்சியில் அடிக்கடி அரங்கேறியது

  இரண்டாவது ஆல்பமான “பைரவன்”, தமிழ் ஆல்பம் வரலாற்றில் மிக முக்கியமான ஆல்பம். அதில் 15 பாடல்களை நான் எழுதியிருந்தேன். திரைத்துறையைச் சேர்ந்த பல நண்பர்கள், பாடலாசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்றது. சஞ்சே அவர்கள் தான் அதன் இசை. பல நண்பர்கள் பாடல்களைப் பாடியிருந்தார்கள். அந்த ஆல்பத்தின் சில பாடல்கள் தமிழ்த் திரைப்படங்களில் தலைகாட்டும் சாத்தியம் உண்டு.

  டி.பி.பி குழுவினருடன் செலவிட்ட தருணங்கள், வீடியோ ஆல்பத்துக்காக மதுரைக்குப் பயணமான இனிமையான நிகழ்வுகள், மைனா படப்பிடிப்பு நடந்த இடங்களில் அலைந்து திரிந்த அனுபவங்கள் என இந்த ஆண்டின் சுவாரஸ்யங்கள் ஏராளம்.

  யூகே2மதுரை, மற்றும் யாரிவன் எனும் இரண்டு ஆல்பங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன. கூடவே டி.பி.பி குழுவினரின் முதல் கிறிஸ்தவ ஆல்பம் ஒன்றும் இந்த ஆண்டு வெளிவரும் என்பது கூடுதல் இனிப்பு.

  வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு பாடல் பாடியிருக்கிறேன் என்பதும், அது அடுத்த ஆல்பத்தில் வெளிவரும் என்பதும் நண்பர்களுக்கு நான் விடுக்கும் கான்ஜூரிங் எச்சரிக்கை !

  மக்கள் தொலைக்காட்சியில் சில வாரங்கள் தொடர்ந்து தன்னம்பிக்கை குறித்த உரையாற்றியதும், சில வாரங்கள் தொழில்நுட்பம் குறித்துப் பேசியதும் தவிர தொலைக்காட்சி பக்கம் இந்த வருடம் செல்லவில்லை. புதிய தலைமுறை உட்பட சில தொலைக்காட்சி அழைப்புகளை தவிர்க்க முடியாத சூழலில் கைவிட நேர்ந்ததும் நிகழ்ந்தது.

  பத்திரிகைகளுக்கு எழுதுவது இந்த ஆண்டு குறைந்திருக்கிறது. மலையாள மனோரமா ஆண்டு இதழ், ஹையர் எட்ஜூகேஷன் இதழ் இரண்டிலும் இந்த ஆண்டும் இடம் பிடித்தது மகிழ்ச்சி. கல்கியில் சிறுகதைப் போட்டியில் சிறுகதை ஒன்று பிரசுரமானதும், ஜெர்மனியில் வெளிவரும் “வெற்றி மணி” இதழில் தொடர் எழுதுவதும், தேசோபகாரி இதழில் தொடர் எழுதுவதும், நடப்பு இணைய இதழ் தொடரும், சிவத் தமிழ், இந்தியா டுடே இதழ்களில் எழுதிய ஓரிரு கட்டுரைகளும் தவிர்த்து பெரும்பாலும் இணைய அரட்டைகளாய் கழித்திருக்கிறது.

  இந்த மாதம் எனது புத்தகங்களில் நான்கைந்து வெளிவரக் கூடும். நீண்ட இடைவெளிக்குப் பின் எனது கவிதை நூல் ஒன்று வெளிவரக் கூடும் எனவும் நம்புகிறேன். பதிப்பகத்தாரிடம் இருக்கின்ற நூல்களில் எவையெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு வரும் என்பது கடைசி நிமிட மாறுதலுக்கு உட்பட்டே எப்போதும் இயங்குகிறது.

  ஜெருசலேம் பல்கலைக்கழகம் வழங்கிய “பரம எழுத்தோவியர்” பட்டம் இந்த ஆண்டின் இனிய ஆச்சரியம். இயேசுவின் கதை – புதினத்தை அடிப்படையாகக் கொண்டு தோழி ஒருத்தி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வாங்கிய டாக்டர் பட்டம் இன்னோர் ஆச்சரியம்.

  இந்த ஆண்டு ஒரு திரைப்படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இருக்கிறேன். கூடவே இரண்டு குறும்படங்களுக்கான எழுத்துப் பணியிலும். இந்த ஆண்டேனும் முடித்து விட வேண்டும் எனும் புதுப்பித்தக் கனவுகளோடு இருக்கிறது அரைகுறையாய்க் கிடக்கும் நாவல்.

  அலுவலகத்தைப் பொறுத்தவரையில், நடக்கின்ற அடித்தல் திருத்தல்களுக்கிடையே தப்பிப் பிழைப்பதே ஒரு சாதனை தான். காயம்படாமல் தப்பித்திருக்கும் சந்தோசத்தில் அடுத்த ஆண்டு வந்திருக்கிறது.

  நண்பர்களின் அருகாமையும், உறவுகளின் இறுக்கமும் கடந்த வருடத்தை அர்த்தப்படுத்தியிருக்கின்றன. கலப்படமற்ற அன்பு நதிகளின் கரைகளில் தான் வாழ்க்கையின் அர்த்தம் பூத்துக் குலுங்குகிறது. அந்த வகையில் இறைவனின் குறைவற்ற அருள் எனது மனதுக்குள் நிரம்பி வழிகிறது. 2014ல், நட்பும் அன்பும் தொடரவேண்டும், மனதில் எளிமையும் பணிவும் படரவேண்டும், யாரையும் காயப்படுத்தாத கணங்களால் எனது நாட்கள் நிரம்பவேண்டும் என இறைவனை வேண்டுகிறது மனசு.

  மற்றபடி பெயரை மாற்றி அழைப்பதால் செம்பருத்திப் பூ ஆம்பல் ஆவதில்லை. வருடங்களெல்லாம் வரங்களே வாழ நினைப்பவர்களுக்கு.

  யாதும் ஊரே, யாவரும் தோழர். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  aசேவியர்
  Joseph Xavier Dasaian Tbb
  மனித நேயம் வேண்டும.வாழ்த்துகள் To சேவியர்http://www.youtube.com/watch?v=dXErUzubG2Y

  mqdefault

  Advertisements
   
 • 2 Comments

  Posted by on January 3, 2014 in 1

   

  Tags: , , ,

  2 responses to “இறைவனின் குறைவற்ற அருள் எனது மனதுக்குள் நிரம்பி வழிகிறது.

  1. திண்டுக்கல் தனபாலன்

   January 3, 2014 at 2:40 pm

   அருமை… சேவியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

    

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: