RSS

கேக் “களிப்பு”..

28 Jan

இன்று புதியதலைமுறை நேர்படப்பேசு குழுவினருக்கும் அதன் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் குணசேகருனுக்கும் மகிழ்ச்சியான நாள்..சிறந்த தொ.கா நிகழ்ச்சியாக நேர்படப் பேசு நிகழ்வை விகடன் தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது.. அந்த மகிழ்ச்சியை இன்றைய விருந்தினர்களான எம்மோடு பகிர்ந்து கொண்டனர்…. இது நான் பங்கேற்ற முதல் நேர்படப் பேசு நிகழ்ச்சி…முதல் நாளிலேயே பேச்சில் வெட்டுகுத்து ஒருபுறம் இருக்க கேக்கையும் வெட்டி இனிப்பாக்கியது நேர்படப்பேசு குழு…
1005797_10202944200316983_408778475_n

 • ஒரு சர்க்கரைத் தருணம் நேர்படப் பேசு நிகழ்வின் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்து, மூன்றாமாண்டில் இன்று அடியெடுத்து வைக்கும் சர்க்கரைத் தருணத்தில் நெகிழ்வூட்டும் விகடன் விருது. ஊடகவியலாளனாக 18 ஆண்டுகளில் பெற்றிராத எண்ணற்ற பல அனுபவங்களையும் படிப்பினைகளையும் தந்த ஈராண்டுகள் இவை . “You handle the show” என ஜனவரி 26, 2012-ல் ஆசிரியர் திரு சீனிவாசன் பணித்த நாள் முதல் தொடங்கியது, நேர்படப் பேசுவுடனான என் பந்தம். அமெரிக்கப் பயணத்தின்போது ஒரு மாத காலம் நண்பர் கல்யாணும், அண்மையில் சில காலம் ஜென்ராம் மேற்பார்வையிலும்! அரை மணி நேரமாகத் தொடங்கிய விவாதம், ஒரு மணி நேரத்துக்கும், சில தருணங்களில் ஒன்றரை மணி நேரம்கூட நீண்டிருக்கிறது. என் மீது எனக்கிருந்த நம்பிக்கையைவிட, ஆசிரியர் சீனிவாசன் கொண்ட மதிப்பீடு அதிகம். தலைப்புக்கேற்ற பொருத்தமான கருத்தாளர்களைத் தேடும் பயணம், பல தருணங்களில் களைப்பூட்டக்கூடியது. பல மணி நேரத்துக்கு நீண்ட இந்தத் தேடலில், செல்போன் பேட்டரி தீர்ந்து, காதுகளும் வாயும் வலிக்கப் பேசிய நாட்கள் பல. ஆனால், அந்த நாளின் நிறைவி்ல் பகிரப்படும் கருத்துகள், அந்தச் சோர்வை நொடியில் போக்கிவிடும். வெளிச்சத்துக்கு வராத எண்ணற்ற வல்லுநர்களும் ஆளுமைகளும் நேர்படப் பேசினர். எத்தனையோ தலைவர்கள் விருந்தினர்களாக வந்திருந்தாலும், நெஞ்சை விட்டு அகலாத ஆளுமைகள் சிலர்…. மதுரை அருகே, முதுமையின் காரணமாக முடித்திருத்தம் செய்ய மறுத்ததால் ஊரைவிட்டு விலக்கி வைக்கப்பட்ட பெரியவர் சிதம்பரம், வறுமையால் மகனை கருணைக் கொலை செய்ய மனுப்போட்ட ஈரோட்டைச் சேர்ந்த பெண்மணி, கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமைக்கு ஆளான விழுப்புரத்தைச் சேர்ந்த கொத்தடிமைத் தொழிலாளி, கூவாகத்தில் இருந்து திருநங்கைகளின் துயரத்தை பகிர்ந்து கொண்ட பிரியா பாபு, காவல் நிலையத்தில் பாலியல் சுரண்டலுக்கு ஆளான சகோதரி, இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அலங்கரித்த நேர்படப் பேசு என பல தமிழுலகுக்குப் புதிது. தொலைக்காட்சி அரங்கத்தில் இருந்து மக்கள் மன்றத்துக்கும் விவாதத்தை எடுத்துச் சென்ற புதுமையும் நேர்படப் பேசுவுக்குச் சொந்தம். பள்ளிக்கரணையில் குப்பைக் கிடங்கு பற்றி எரிந்தபோது, அங்கிருந்தே விவாதம் நடத்தினால் என்ன என்று எதேச்சையாகக் கேட்டார் நண்பர் பிரேம். அனுபவம் வாய்ந்த தொகுப்பாளர்களே திணறிப்போகும் இடம் On-location anchoring. அசாத்திய துணிச்சலோடு முன்வந்தார் நண்பர் மதிவாணன். ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் சகிதம், சந்தியா ஏற்பாடுகளைக் கவனித்துக்கொள்ள, பள்ளிக்கரணையில் இருந்து நேரலையாக நடந்த விவாதம் வரலாறு. குப்பைமேட்டு சகதிக்கே வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றவாறே கருத்துகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். மின்வெட்டு தமிழகத்தை வாட்டியபோது, தமிழகத்தின் நாலா திக்கிலிருந்தும் 5 நாள்கள் மக்கள் மத்தியில் விவாதத்தை நடத்தியதும் இதே டீம்தான். அசைன்மென்ட்டின் கணேஷ், பிரபாகரன், ஸ்ரீதர், செய்தியாளர்கள் தியாகச்செம்மல், ஹசீப், சுப்பையா, மகாலிங்கம், கலாநிதி டெல்லி கணபதி, மதுரை ராமானுஜம், திருச்சி சார்லஸ், கோவை மார்ட்டின், சேலம் மோகன்ராஜ், நெல்லை நாகராஜன் எனப் பலரும் கடைசி நேர நெருக்கடியில் விருந்தினர்களைக் கொத்தி வந்தவர்கள். பழ. கருப்பையா, ஆவடி குமார், நாஞ்சில் சம்பத், டாக்டர் சமரசம் என தொலைக்காட்சி அரங்குக்கு வர மறுத்த அதிமுக முகங்களை அறிமுகப்படுத்தியவர் பீர் முஹம்மது. தொகுப்பாளராக மட்டுமன்றி, ஜெனிவாவில் இருந்தும்கூட விருந்தினர்களை ஏற்பாடு செய்து நேரலையில் நேர்படப் பேசுவை அடுத்த தளத்துக்கு நகர்த்த உதவியவர் முரளி. இவர்களின் உதவியின்றி, புயலோ, மழையோ ஒரு நாள்கூட தொய்வின்றி இந்த விவாதம் நிகழ்ந்தேறியிருக்காது. துல்லியமாக 9 மணிக்குத் தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு, முக்கியமான விருந்தினர்கள் சிலர் தாமதமாக வந்தபோது தெருமுனையில் காத்திருந்து ஓட்டமும் நடையுமாக அரங்குக்கு அழைத்து வந்த பதற்றமான நிமிடங்கள், நினைக்க சுவாரஸ்யமானவை. “சிறந்த ஆளுமைகளை அழையுங்கள். எப்போதும் தரத்தை உயர்த்துவது எப்படி என்பதையே சிந்தியுங்கள்” என்பது ஆசிரியர் சீனிவாசனின் மந்திர வரிகள். “சம வாய்ப்பைத் தர வேண்டும், எந்த நிலையிலும் பொறுமையையும் நடுநிலையையும் இழக்கக்கூடாது. மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் நாம். விவாதத்துக்குகான தயாரிப்பு எப்போதும் நேர்த்தியாக இருக்க வேண்டும்” என்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் நிறுவனத்தின் தலைவர் திரு ஆர்.பி. சத்ய நாராயணன். இருவரின் பங்களிப்பும் கண்காணிப்பும்தான் விவாதம் மேம்படத் தூண்டுதல். இருவர் கொண்ட நம்பிக்கைக்கும் சுதந்திரத்துக்கும் இதய நன்றி. பிற்பகலில் உறுதி செய்த தலைப்பை, மாலையில் ஏற்படும் மாற்றத்தை ஒட்டி, இரண்டு மணி நேர இடைவேளையில் சுடச்சுட விவாதித்த அனுபவம் இதனாலேயே சாத்தியமாயிற்று. தன் பல்லாண்டுகால பத்திரிகை அனுபவத்தில் செழுமை பெற்ற தி. சிகாமணி, விவாதம் பிறழாமல் செல்ல, ஆய்வில் துணைநின்று வழிகாட்டி வருகிறார். “உங்களுக்கெல்லாம் ஆய்வு உதவியே தேவை இல்லை” என்று சொல்லிக்கொண்டே, விஷயங்களின் பின்புலத்தை ஆர்வத்தோடு தேடித்தந்த திரு ரஞ்சன், எப்போதும் ஒத்துழைத்து வரும் நிர்வாக ஆசிரியர் திரு ராம், சீனியர் எடிட்டர் ஷண்முக சுந்தரம் ஆகியோருக்கும் நன்றி. அழகுத் தமிழுக்கும் தெளிந்த உச்சரிப்புக்கும் சொந்தக்காரருமான தொகுப்பாளர் சகோதரர் வெங்கட பிரகாஷ், விவாத ஒருங்கிணைப்பாளராகப் பரிணமித்து வரும் சகோதரி பூங்குழலி ஆகியோரின் ஒத்துழைப்புக்கும், விருந்தினர்களை ஒருங்கிணைக்கும் தம்பி மன்னர் மன்னன், முன்னர் உதவிய ராஜேஷுக்கும் நன்றிகள் பல. நிறைவாக, புதிய தலைமுறை வாய்ப்பு வந்தபோது, நாளிதழில் இருந்து தொலைக்காட்சி ஊடகத்துக்கு மாறுவதா, வேண்டாமா என்று எப்போதும் இல்லாத தயக்கம் எனை ஆட்கொண்டது. 16 ஆண்டு காலம், தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் கிரானிக்ள் என இதுகாறுமான இதழியல் வாழ்க்கையில் இருந்து வேறுபட்ட சூழலுக்குச் செல்வதா வேண்டாமா என குழப்பமும் தயக்கமும்! அப்போது தொலைக்காட்சி நல்லதொரு வாய்ப்பைத் தரும் என்று ஆற்றுப்படுத்திய என் தோழமைகள் ஏ.எஸ். பன்னீர்செல்வன் (ஹிந்து வாசகர் தரப்பு ஆசிரியர்), இன்டியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் பாபு ஜெயக்குமார், வாழ்த்தி வழியனுப்பிய டெக்கான் கிரானிக்ள் ஆசிரியர் பகவான்சிங், துவண்டுபோகும் வேளைகளில் எல்லாம் தோள்தரும் என்னுயிர்த் தோழர்கள் ப. கோலப்பன், எஸ். திருநாவுக்கரசு, தங்கவேல் ஆகியோருக்கு நன்றி. தன் அலுவலகப் பணிச் சுமையையும் குடும்பப் பணியையும் தாங்கிக் கொண்டு, எல்லா நேரங்களிலும் எனக்குத் துணிச்சலை மட்டுமே வழங்கும் என் ப்ரிய மனைவி அன்புமதிக்கு நன்றி சொல்வது வெற்று சம்பிரதாயமல்ல. திறமைக்கு மரியாதை என்கிறது விகடனின் விருது. உண்மையில், கூட்டு உழைப்புக்குக் கிடைத்த கனி இது. “ரொம்ப கலர்புல்லான நிகழ்ச்சி” என தொலைபேசியில் வாழ்த்தினார் அதன் ஆசிரியர் நண்பர் கண்ணன். தமிழின் பல தொலைக்காட்சிகளிலும் இன்று விவாதங்கள். காலச் சக்கரம் பின்னோக்கிச் சுழலாது. தயாரிப்பாளர், தொகுப்பாளர், விருந்தினர் மாறினாலும், விவாதம் தமிழுலகில் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது, இந்தப் புதுமையை சாத்தியமாக்கிய புதிய தலைமுறையின் சாதனை. திறமையைத் தமிழர்கள் ஆராதிப்பர். போட்டி நிறைந்த சூழலில், பெற்ற பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள மேலும் சலிக்காது உழைக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி பொறுப்புச் சுமையை மேலும் கூட்டுகிறது விகடன். (படங்கள்… விருந்தினர்களுடன் கொண்டாட்ட வேளையில்… தயாரிப்பு அறையில் உள்ள தொழில்நுட்பக் கலைஞர்களும் ஒளிப்படக் கலைஞர்களும் காமிராவுக்குப் பின்னால் இருந்து தொடர்ந்து தங்கள் பங்களித்து வரும் உழைப்பாளிகள்)
  Haja Gani shared Gunaa Gunasekaran’s status.

  Advertisements
   
 • Tags: ,

  One response to “கேக் “களிப்பு”..

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: