RSS

மீண்டும் ஒரு வெயில் காலம்

02 Mar

மீண்டும் ஒரு வெயில் காலம்
************************
1511025_604910659587667_347611189_n
சாயங்காலமே
தண்ணீர் ஊற்றி குளிரவைக்கப்பட்ட
மொட்டை மாடியில்
படுத்துக் கிடந்தேன் !

பதினாலாம் ராத்திரி
பவுர்ணமி வெளிச்சத்தில்
ஆகாயம் அழகாக இருந்தது !

ஆங்காங்கே ஏற்றி வைக்கப்பட்ட
சிம்னி விளக்குகளைப்போல்
நட்சத்திரங்கள்!

 • எத்தனை விளக்குகள் என்று
  எண்ணிக்கொண்டிருக்கும்போதே
  இரண்டு விளக்குகள்
  ஒளிச் சிறகுகளாய் மாறி
  இறங்கி வந்து
  என் இருபுற விலாக்களிலும்
  ஒட்டிக் கொண்டு மேலே மேலே
  என்னைத் தூக்கிச் சென்றன!

  ஆனந்தமாய்
  விண்ணில் மிதக்க ஆரம்பித்தேன்!

  ஆஹா…ஆஹா…அற்புதம் !
  பாதையெல்லாம் பனிக்காற்று பூத்தூவ
  சிலிர்த்துப்போனது தேகம் !

  ஊர் முழுவதும்
  உறக்கத்திலும் இருளிலும்
  மூழ்கியிருக்க
  எல்லை கடந்து தொடர்ந்தது
  சிறகுகளின் பயணம் !

  கொடைக்கானல் –
  மலைகளின் இளவரசி !
  என்னை அண்ணாந்து பார்த்து
  அழகாய்ச் சிரித்தாள் !
  செல்லமாய் அவள் கன்னத்தை
  தட்டி விட்டு சிட்டெனப் பறந்தேன் !

  வழியில்
  கங்கை நதி வெள்ளமாய் நடந்து வந்தது!
  புராதன நதியில் பாதம் நனைத்து
  வியர்வைக் கழுவலாமென்றால்
  ஆடையில்லாத மனிதர்கள் அங்கே
  தீ வளர்த்துக் கொண்டு
  மாமிசம் தின்று கொண்டிருந்தார்கள் …
  அச்சத்தோடு விலகிப் போனேன் !

  சோகத்தில் தோய்த்தெடுத்த
  வேதனை கீதமொன்று
  யமுனை நதிக் கரையில் தவழ்ந்து வந்தது !
  சற்றே இறங்கிப் போய் பார்த்தேன்
  மும்தாஜ் மஹலின் காதலை எண்ணி
  மன்னர் ஷாஜஹான் உருகிக் கொண்டிருந்தார் !

  ” ரஹ்மான் இசையில் பாடினால்
  அற்புதமாக இருக்கும்” என்றேன் !
  ” இத்தனை நாள் பாடிக் கொண்டிருக்கிறேன் ..
  நீ ஒருவன்தான் கேட்டிருக்கிறாய்..சந்தோசம்” என்றார் !

  மன்னருக்கு சலாம் சொல்லி
  விடை பெற்றுச் சென்றபோது
  காஷ்மீர் பனிப் பள்ளத்தாக்குகளில்
  சிப்பாய்கள்
  சாராயம் குடித்துக் கொண்டிருந்தார்கள் !

  மயானங்களில் …
  ” யா ஷஹீதே…யா ஹபீபே …”என்று
  தாய்மார்கள் தாலாட்டிக் கொண்டிருந்தார்கள் !
  இரு துளி கண்ணீரை சுண்டி எறிந்து விட்டு
  சைனாவின் நெடுஞ்சுவரில்
  நடந்து பார்க்க ஆசைப்பட்டேன் !
  ” வேண்டாம்… அது தரையில்லை …
  உரிமை மறுக்கப்பட்டவர்களின் உடல்…” எனத் தடுத்து
  உயரே பறந்தது சிறகு !

  அதோ…நைல் நதி
  வா..வா..நீராடு என்றது!
  மூஸா நபியை கூடையில் சுமந்து சென்ற
  நைலின் நேசக்கரங்கள்
  வாஞ்சையாய் என் நெஞ்சை வருடி விட
  அத்தனைச் சூடும் அணைந்து குளிர்ந்தது கூடு!

  மூசாவின் எதிரி எப்படியிருக்கிறான் என
  பிரமிட் ஒன்றின் உள்ளே எட்டிப் பார்த்தேன் !
  சதை உதிர்ந்து எலும்புத் தோலாக ஆனாலும்
  கண்களில் மட்டும்
  வெறுப்பின் நெருப்பு அணையாமல் நின்றான்
  பிர் அவன் !
  மூஸா நபியின் கவ்ம்களுக்கு எதிராக
  தன் புதிய தளபதிகளுக்கு
  பாடம் நடத்திக் கொண்டிருந்தான் !
  ” நாசமாப்போ ” என வாழ்த்தி விட்டு நகர்ந்தேன்!

  சிறகுகளின் அசைவில் எழுந்த
  காற்றின் வேகத்தால்
  பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை
  சற்றே நிமிர வைத்து விட்டு
  நாடு கடந்தபோது
  ஆல்ப்ஸ் மலைச் சிகரம்
  பனிப் பிஞ்சுகளால் மாலை செய்து
  எனக்கு வரவேற்பு விழா நடத்தியது !
  சிறகுகள் பெருமையோடு
  சிரித்துக் கொண்டு வேகமெடுத்தன !

  அமெரிக்காவின் பாதுகாக்கப்பட்ட
  வான் வெளியில் நான் நுழைந்தபோது
  சூரியன் அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தான்!

  நாசாவின் விண்வெளிக் கண்கள்
  என்னை நோட்டமிட்டு துரத்த
  கட்டிட வரிசைகளில் புகுந்து நெளிந்து
  சிறகுகள் வித்தைக் காட்டிச் சிரித்து
  ஒரு வீட்டின் ஒழிந்த மூலையின் அருகே
  என்னைக் கொண்டு சென்றன !
  அங்கே …
  கிழவனொருவன் தலையிலடித்தும்
  ஆடை கிழித்தும் சுவரில் முட்டிக்கொண்டும்
  உளறிக் கொண்டிருந்தான் ..

  அடடா ….அதே ஜார்ஜ் புஷ் !
  அப்படியே அவன் முகத்தில்
  காறி உமிழ்ந்து விட்டு
  விண்வெளியில் மீண்டும் மிதந்து
  வரும்போது …
  சிறகுகளின் முனைகளில் இருந்து
  புகை கசிய ஆரம்பித்தது!

  என்ன நிகழ்ந்தது என்று
  புரிந்து கொள்வதற்கு முன்னாலேயே
  சிறகுகள் தீப்பிடித்து எரிய
  பர்மாவின் நிலப்பரப்பு
  கண்ணில் விழுந்தது!

  ” அல்லாஹ் …அல்லாஹ் .. ” என
  ஆண்களும் பெண்களும் அலறிக் கொண்டே ஓட
  ” புத்தம் சரணம் கச்சாமி…’ என்று கூறிக் கொண்டே
  காவி கட்டிய புத்தன்
  அவர்களின் பின்னால் ஓடி வந்தான்
  கொலை வாளோடு !

  மசூதிக்கு வைத்த நெருப்பில்
  சிறகுகள் சிக்கிப் பொசுங்க …
  ” அய்யோ ….” என அலறியபடி
  கீழே கீழே விழுந்து
  அண்ணாந்து பார்த்தபோது
  புத்தம் புதிதாய்
  சில நட்சத்திரங்கள்
  வானில்
  நம்பிக்கையோடு சிரித்துக் கொண்டிருந்தன!

  வெயில் ஆரம்பித்து விட்டதால்
  உங்களுக்கு
  முகம் துடைக்க உதவும் என்று பதிவிட்டிருக்கிறேன் !
  Abu_HaashimaAbu Haashima Vaver

  Advertisements
   
 • Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: