RSS

இந்தியாவில் பவுத்தம் ஏன் வீழ்ச்சி அடைந்தது?

12 Mar

1911823_10203385089537525_1768578579_nஇதையே சாதிகளின் ஆதிக்கம் இந்தியாவில் எப்படி மேலே வந்தன என்றும் கேட்கலாம்.

முதலில் பவுத்தத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களை பார்ப்போம்.

சந்தேகமேயில்லாமல் பவுத்தம் காணாமல்போக பவுத்தர்கள்தான் காரணம். அவர்களது பொருளாதார ஆசைகள்தான் காரணம். வேத மரபை மறுத்து கிளர்ச்சி செய்த பவுத்தம், பணத்தினால் வீழ்ச்சி அடைந்தது என்றால் நம்புவதற்கு சிரமமாக இருக்கும். ஆனால், டி.டி.கோசாம்பி அப்படித்தான் தனது ‘Introduction to the Study of Indian History’ நூலில் குறிப்பிடுகிறார்.

புத்த மத கட்டமைப்பை திட்டமிட்டு அழித்து வந்தவர், வங்கத்தை ஆண்டு வந்த சசாங்கன். கயாவில் இருந்த புனித மரத்தை வெட்டி எரித்ததும் அவர்தான்.

இந்த சம்பவம் நிகழ்வதற்கு சரியாக 12 நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் அந்த சம்பவம் நடந்தது. புத்தருக்கு ஞானம் கிடைத்த புனித சம்பவம். அதே மரம். அதே மரத்தடி. அதைதான் சசாங்கன் எரித்தார்.

 • அந்த மரத்திலிருந்து துளிர்த்த ஒரு சிறு கிளையை கண்டுபிடித்து அதிலிருந்து மீண்டும் அந்த மரத்தை துளிர்க்கச் செய்தவர் பூர்ணவர்மன். அசோகரின் கடைசி வழித்தோன்றலான இவர் மட்டும் அப்படி செய்திருக்காவிட்டால், அந்த மரம் இருந்ததற்கான அடையாளம் கூட மறைந்திருக்கும்.

  சசாங்கனை முறியடித்து இடிந்துபோன பவுத்த மடங்களுக்கு புத்துயிர் தந்தவர் ஹர்ஷன். ஹர்ஷ சக்கரவர்த்தி என வரலாற்றில் நாம் குறிப்பிடுகிறோமே… அதே மன்னர்தான். அவரே புதிதாக பல மடங்களையும் எழுப்பினார்.

  இந்த காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான பவுத்த மடங்கள், பிட்சுகளுடன் மிகப்பெரிய சேனைகளை தங்க வைத்து, வசதிகளை செய்துகொடுத்து, உணவுக்கும் ஏற்பாடு செய்து தந்தன.

  நாளந்தாவில் இருந்த பல்கலைக்கழகம் பெருமளவில் மானியம் பெற்று புகழின் உச்சியில் இருந்தது. கூட்டி கழித்து பார்த்தால் சசாங்கன் தந்த ஆபத்தை தவிர மற்றபடி பவுத்தம் நன்றாகத்தான் இருந்தது.

  பிறகு ஏன் சரிந்தது?

  இதற்கான விளக்கத்தை சீன பயணி யுவான் சுவாங் தன் பயணக் குறிப்பில் தந்திருக்கிறார்.

  ”பவுத்த மதத்தின் புனித நூல்களில் மூன்று தொகுதிகளை எவனொருவன் விளக்கிக் கூறுகிறானோ, அவனுக்கு சேவகம் புரிய பல பணியாளர்கள் ஒதுக்கப்பட்டார்கள். 5 தொகுதிகளை விளக்குபவனுக்கு யானை பரிசாக வழங்கப்பட்டது. 6 தொகுதிகளுக்கு உரை கூறுபவனுக்கு சூழ்ந்து வரும் பரிவாரம் வழங்கப்பட்டது.சொற்போரில் வெற்றி பெற்றவனுக்கு விலை மதிப்புமிக்க ஆபரணம் வழங்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது அவனை ஊர்வலமாக திருமடம் வரை அழைத்து சென்றார்கள். இதற்கு மாறாக சொற்போரில் ஒருவன் தோற்றாலோ, அழுத்தமில்லாமல் வாதம் புரிந்தாலோ அவன் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தப்பட்டது. தலையில் குப்பைகள் கொட்டப்பட்டன. கழுதையின் மீது அவனை ஏற்றி மனித நடமாட்டமில்லாத இடத்தில் கொண்டு போய் விட்டார்கள். அல்லது சாக்கடையில் தள்ளினார்கள். இப்படி ஞானவானுக்கும், மூடனுக்கும் இடையில் வித்தியாசம் காட்டினார்கள்…”

  என்று அந்தக்கால இந்திய சமுதாயத்தை பற்றி யுவான்சுவாங் பதிவு செய்திருக்கிறார்.

  புத்தரின் காலத்தில் கண்டிப்பாக பிட்சுகளின் தகுதி இந்த முறையில் நிர்ணயிக்கப்படவில்லை. எப்போதும் இடம் மாறிக்கொண்டிருக்கும் பிட்சுகள், மக்களுக்கு புரிகிற மொழியில் போதனைகளை விளக்க வேண்டும் என்பதே ஆதியில் நடைமுறையாக இருந்தது.

  புத்தர் முதலில் வகுத்து பின்பற்றிய விதிகள் பிட்சுகளுக்கு குறைந்த அளவிலான உடைமைகளை மட்டுமே அனுமதித்தன. தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை தொடக்கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

  ஆனால், யுவான் சுவாங் பதிவு செய்த காலத்தில் ஏராளமான பணக்கார மடங்கள் இருந்தன என்பது புலனாகிறது. அந்த மடங்களில் வசித்த பிட்சுகளுக்கு சொகுசான வாழ்வை தொடர்ந்து அளித்தவர்கள் யார்? உபரி உற்பத்திக்கு உண்மையான சொந்தக்காரர்களான கிராம மக்கள். இவர்களை பற்றி பிட்சுகள் கவலைப்படவில்லை.அதேபோல் பழைய பவுத்தம் அசோகனை போர் பாதையிலிருந்து விலக்கி, சமாதானப் பாதையில் திருப்பியது. ‘விழாக்களில் பார்வையிடப்படவும், அணிவகுப்புகளுக்கும் மட்டுமே இனி படைகள்’ என அசோகனின் அரசாணைகள் அறிவிக்கின்றன.

  இதற்கு மாறாக மத உணர்ச்சி மிகுந்த மாமன்னரான ஹர்ஷனோ, தான் வழிபட்ட சூரியனையும், மகேஸ்வரனையும் சமரசப்படுத்தியது போலவே… போரையும் பவுத்தத்தையும் சமரசப்படுத்தினான்.

  30 ஆண்டுக்கால ஓயாத ஆக்கிரமிப்புப் போரில் ஹர்ஷனின் படையானது 60 ஆயிரம் யானைகள், 1 லட்சம் குதிரைகள், மற்றும் இதைவிட எண்ணிக்கையில் அதிகமான காலாட்படைகளை கொண்டதாக பெருகியது. அகிம்சா மூர்த்தியை பின்பற்றியவன் ரத்தத்துக்காக அலைந்தான். ஆசையை விட்டொழிக்கச் சொன்னவரை பின்பற்றியவன், மண்ணாசைக்காக திசையெங்கும் சுற்றினான். இருந்தாலும் தன்னால் நிராயுதபாணியாக நிறுத்தப்பட்ட மன்னனை கொன்றுவிடும்படி மற்றவர்கள் கூறியபோது, அவனை மன்னித்து விடுதலை அளிக்கும் வகையில் ஹர்ஷன் பவுத்தனாக இருந்தான். இந்த மன்னனது போர்களுக்கும், வெற்றிவிழா கொண்டாட்டங்களுக்கும் தண்டம் அழுத நாட்டு மக்களைப் பற்றி அவன் யோசிக்கவேயில்லை.

  இதுதான்… இந்த ஆடம்பரம்தான் பவுத்த மதம் வீழ்ச்சியடைய காரணம். கணக்கற்ற மடங்கள், கணக்கற்ற சலுகைகளை அனுபவித்த பிட்சுகள். இவர்கள் வெறும் செலவினங்களாக, ஆடம்பர பொருட்களாக மட்டுமே மக்கள் மனதில் பதிந்தார்கள்.

  தொடக்கத்தில் பவுத்தம் சிறுசிறு போர்களுக்கு முடிவுகட்டி, பரந்துவிரிந்த முடியாட்சியை ஊக்குவித்தது. அதன் தொடர்ச்சியாக வந்ததுதான் பேரரசனுக்கு சமமான ஆன்மிக சக்கரவர்த்தியாக புத்தர் உருவகிக்கப்பட்டது.

  ஆனால், தனி மனிதனால் நிர்வகிக்கப்பட்ட அத்தனை பேரரசுகளும் பொருளாதார ரீதியாக திணற ஆரம்பித்தபோது, பவுத்தமும் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. இந்தியாவில் ஹர்ஷனுடையது போன்ற நிலப்பரப்பை நிர்வகித்த கடைசி மன்னனாக அவனே அமைந்தது காலத்தின் முரண்.

  அதற்கு பிறகு உருவான அரசுகள் அனைத்தும் அவனுடைய நிலப்பரப்பை விட குறைவாகவே அமைந்தன. இறுதியாக நிலவுடமை பெருக ஆரம்பித்ததும் நிர்வாகமும் கைமாறியது. தன்னிறைவு பெற்ற கிராமமே அதுமுதல் உற்பத்தியின் அலகாக மாறியது. வரிகள் பண்டமாக வசூலிக்கப்பட்டு வட்டார அளவில் நுகர்ந்து கொள்ளப்பட்டது. காரணம், அவற்றை பணமாக மாற்றுவதற்கு போதுமான வணிக வளர்ச்சி அப்போது அனுமதிக்கப்படவில்லை. பண்டமாற்று புழக்கத்தில் இருந்த காலம் அது.

  ஒரு மாபெரும் சமூக தேவையை நிறைவேற்றியதால்தான் பவுத்தம் தன் ஆரம்ப வெற்றியை பெற்றது. இதற்கு சமூக காரணிகளும், தேவைகளும் இருந்தன. உதாரணமாக கி.மு. 6ம் நூற்றாண்டில் கங்கை சமவெளியில் இருந்த சமுதாயம் தமக்கு வேண்டியதை பெரும்பாலும் தாமே உற்பத்தி செய்து கொள்ளும் கிராமமாக இல்லை. குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம், ஒன்றுக்கொன்று சண்டை பிடித்துக் கொள்ளும் இனக்குழுக்களாக சிதறியிருந்தன. வேத பார்ப்பனியமும், சடங்குகளும் மேய்ச்சல் இனக்குழு வாழ்வுக்கே பொருத்தமாக இருந்தன.

  ஆனால், இதற்கு அடுத்தகட்டமான விவசாய வளர்ச்சிக்கு, விலங்கு பலிகளும், வேள்விகளும் தடையாக இருந்தன. மவுரியருக்கு முந்தைய சிதறிக்கிடந்த சமூக இனக்குழுக்களுக்கு தொலைதூரங்களுக்கு போய் உலோகங்கள், உப்பு, துணிமணிகள் முதலியவற்றை வணிகம் செய்ய வேண்டிய தேவை இருந்தது. அதற்கு ஆற்றல்மிக்க அரசின் பாதுகாப்பு தேவைப்பட்டது. இப்படி இனக்குழுக்களின் அமைப்பிலிருந்து பரந்து விரிந்த சமுதாய அமைப்புக்கு மாறி செல்வதற்கு வேத பார்ப்பனியம் தடையாக இருந்தது.

  இதற்கு மாற்றாக ஒரு புதிய சமுதாய தத்துவம் தேவைப்பட்டது.பரந்து விரிந்த முடியரசும், நாடு தழுவிய ஒரு சமயமும் ஒன்றுக்கொன்று இணையானவை. காலம்தோறும் நிருபிக்கப்பட்டு வரும் உண்மை இது. ஹிட்லரின் ரத்தவெறி பிடித்த அன்றைய ஆர்பாட்டங்களும் சரி, இந்துத்துவாவை உயர்த்திப்பிடிக்கும் பா.ஜ.க.யின் இன்றைய நடவடிக்கைகளும் சரி உணர்த்துவது இதைதான்.

  இந்த உண்மையின் ஆரம்பம்தான் அன்று மகத பேரரசில் தோன்ற ஆரம்பித்தது. முடியரசும், நாடு தழுவிய ஒரு சமயமும் ஒருசேர எழுந்தன. பவுத்தம் மட்டுமல்ல, அதேகாலகட்டத்தில் மகதத்தில் தோன்றிய வேறுசில சமய பிரிவுகளும் இதே செய்தியைதான் உணர்த்துகின்றன.

  காட்டுவாசிகளான இனக்குழு மக்கள் வாழ்ந்த வனப்பகுதிகள் வழியே பயணம் செய்த ஆதி வணிகர்களுக்கு பவுத்தம் கூடவே சென்று பாதுகாப்பளித்தது. பழங்கால வணிகவழிகளின் சந்திப்புகளான ஜுன்னார், கார்லே, நாசிக், அஜந்தா முதலிய இடங்களில் காணப்படும் சான்றுகளிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம்.

  கி.பி. 7ம் நூற்றாண்டோடு பவுத்தத்தின் முதன்மையான நாகரீகப் பணி முடிந்துவிட்டது. அகிம்சை கோட்பாடானது மனதளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் சரி. மற்றபடி நடைமுறைக்கு வரவேயில்லை.இப்போதுதான், இந்த காலகட்டத்தில்தான் ஒரு புதிய சிக்கல் எழுந்தது. கூடுதலான வன்முறையை பயன்படுத்தாமல் கிராம சாகுபடியாளர்களிடம் நிரந்தரமான பணிவை எப்படி வரவழைப்பது?

  இந்த சிக்கலை பவுத்தத்தால் தீர்க்க முடியவில்லை. ஆனால், அன்றைய பிராமணனால் தீர்ப்பு சொல்ல முடிந்தது. கிராமங்களில் இருந்த சாதிவடிவில் வெளிப்பட்ட வர்க்க கட்டமைப்பை எப்போதுமே பவுத்தம் நகைச்சுவையாக பார்த்துவந்தது. ஆனால், பழைய இனக்குழுக்கள் புதிய சாதிகளாக 7ம் நூற்றாண்டு காலத்தில் பதிந்து போயிருந்தன. பவுத்த பிட்சுகளுக்கு தடுக்கப்பட்டிருந்த சடங்குகளையே இனக்குழு மக்கள் சார்ந்திருந்தார்கள். அந்த சடங்குகள் பிராமணர்களின் ஏகபோக உரிமையாக கி.மு.விலிருந்து தொடர்ந்திருந்தன.

  தவிர, 7ம் நூற்றாண்டு காலத்து பிராமணன், உற்பத்தியை ஊக்குவிக்கும் முன்னோடியாக இருந்தான். உழுவது, விதைப்பது, அறுப்பது முதலிய வேலைகள் நடைபெறவேண்டி காலங்களை கணித்து கூறுவதற்கான பஞ்சாங்க அறிவு அவனிடம் இருந்தது. புதிய பயிர்வகைகள், வணிக வாய்ப்புகள் பற்றியும் அவன் அறிந்திருந்தான். வேள்வியில் பொருட்களை வீணாக்கிய அவனது முன்னோர்களை போலவோ, வெட்டி சுமையாக மாறியிருந்த பவுத்த மடங்களை போலவோ அவன் இல்லை. புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு விசாலமான மனதுடன் வளர்ந்திருந்தான்.எனவே மரபுவழி பவுத்தம் தவிர்க்க முடியாமல் மறைந்து போனது. சாதிகளின் ஆதிக்கம் வளர ஆரம்பித்தது. அது இன்றுவரையிலும் தொடர்கிறது…
  ———

  பவுத்தம்: சில குறிப்புகள்

  இந்தக் குறிப்புகளை இங்கே எழுத காரணமிருக்கிறது. பின்நவீனத்துவத்தின் கூறுகள் பவுத்தத்தில் அடங்கியிருப்பதாக பலரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்தக் குறிப்புகளை வாசிப்பது ஒருவகையில் பின்நவீனத்துவம் தொடர்பான வாசிப்புக்கும் வழிவகுக்கலாம்…

  * பவுத்த மதத்தில் 1300க்கும் அதிகமான Sectகள் உண்டு. பெரிதும், சிறிதுமாக 120க்கும் மேல் பிரிவுகள் இருக்கின்றன. பலநூறு வழிபாட்டு முறைகள் இதில் அடக்கம். இவைகள் அனைத்துமே பவுத்த மதம் தொடர்பானவை. இதில், பவுத்த தத்துவவியல், பவுத்த தருக்கவியல், பவுத்த அறிவியல், பவுத்த சமூக அரசியல், பவுத்த அழகியல், பவுத்த மொழியியல் அடங்காது. அம்பேத்கரின் Buddha and his Dhamma நூலை வாசித்தால் இந்த வேறுபாடு புரியும். அம்பேத்கர் தனது பவுத்தத்தை ‘நவயாணா’ என குறிப்பிடுகிறார். நுணுக்கமான, அழகான காரணம் இதில் புதைந்திருக்கிறது. தனது உயிர்த்தல் என்பது பிறவற்றின் இருப்பில்தான் அடங்கியிருக்கிறது என்பதான அர்த்தம் கொண்ட சொல் இது.

  * நமக்கு தெரிந்த தம்மபதம் மட்டுமே பவுத்த நூல் அல்ல. அது சில நெறிகளை பிக்குகளுக்கு கூறும் கையேடு. அவ்வளவுதான். மகாயானம் என்றால் சில ஆயிரம் நூல்களும், ஹீனயானம் என்றால் சில ஆயிரம் நூல்களுமாக எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன. ‘தீபிடகம்’ என்பது 33 நூல்களை அடக்கிய தொகுப்பு. இவை அனைத்தையுமே அறிந்து, கடந்து செல் என்கிறது பவுத்த விஞ்ஞான்.

  * Distribution of desire, Channelising the desire, Will to truth, Will to power என்பனவற்றை பவுத்தம் மிக முக்கிய பிரச்னையாக கருதுகிறது. கையாள்கிறது. ‘ஆசையை ஒழி’ என பவுத்தம் சொல்வதாக நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், இந்த வார்த்தையை பவுத்தம் எங்குமே குறிப்பிடவில்லை!

  * துக்கத்துக்கு ஆசைகள் காரணமாக அமைகின்றன. எனவே ஆசையை நெறிப்படுத்த வேண்டும் என்றுதான் பவுத்தம் சொல்கிறது. அதிகாரமும், ஆதிக்கமும் பிறவற்றின் ஆசையை, வேட்கையை கட்டுப்படுத்தி விட்டு தாங்கள் மட்டும் Limitless desireஐ செயல்படுத்தக் கூடியவை. ஆனால், பவுத்தம் Disciplining self desire, Understanding & Acknowledging other’s desire கொண்டாடுகிறது.

  * இன்றைய பின்நவீனத்துவச் சூழலின் நுகர் பொருள் கலாச்சாரம் Desire the unlimited, Sky is the limit என்றெல்லாம் அறிவிக்கும்போது பவுத்தத்தின் சுய விசாரணை மூலம் பின்நவீனத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். ஃபாசிசம் தனது கருவிகளை, வேட்கையை மையப்படுத்தி பெருக்கும்போது பவுத்தம் Desire the otherness, Desire over desire of other, Desire of being other என்றெல்லாம் விளையாடுகிறது. ‘அதிதம் யேவ காமேசு அந்தகோ குருதே வாசம்’ (விழைவு அளவுக்கு அதிகமாகும்போது அழிவு நெருங்கி வருகிறது) என்கிறது தம்மபதம்.

  * அடிப்படை சமய உறுப்பினர்களுக்கு சிலவித நெறிகளையும், சங்க உறுப்பினர்களுக்கு சிலவித நெறிகளையும், அரசர்களுக்கும் & பிக்குகளுக்கும் சிலவித நெறிகளையும், சேவை செய்பவர், கல்வி கற்பவர், கல்வி போதிப்பவர் ஆகியவர்களுக்கு ஒருவித நெறிகளுமாக பவுத்தத்தில் பல நெறிகள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான Art of Self என்பதை சொல்லித்தருகிறது. திரிசரணம், பஞ்சசீலம், அட்டாங்க மார்க்கம் ஆகியவை உடனடியாக நினைவுக்கு வருபவை. பின்நவீனத்துவ அறிஞரான Jean Baudrillard விளக்கிய பல்வேறு பின்நவீனத்துவ Metaphorகள் பவுத்தத்தில் தட்டுப்படக்கூடியவை.

  * மொத்தத்தில் பவுத்தம் எதையும் வலியுறுத்துவது இல்லை. அதேநேரம் கண்டுகொள்ளாமலும் இல்லை. இச்சை என்பது ஒரு மனதில் தோன்றுகிறது. அது வெளியில் என்னவாக வினைபுரிகிறது என்பதுதான் முதலில். பிற உடலை, பிற மனதை இம்சிக்காத உனது இச்சை, பிறவற்றால் அங்கீகரிக்கப்படும்போது it is a mutual acceptance of other’s desires. இதையே ஃபூக்கோ Choice & Selection, Right of selection, Right of privacy, Choice of death என பலவிதமாக விவாதிக்கிறார். அம்பேத்கர் இதைதான் அழகாக சொல்கிறார் ‘Every impulse if uninhibited will lead to some creative act…’, ‘The Hindu social order does not recognize the individual as a centre of social purpose….’

  * கடந்த 2500 ஆண்டுகளாக பவுத்தம் Impermanacy of self பற்றியும் No – self பற்றியும்தான் பேசுகிறது. பின்நவீனத்துவமானது Fragmented self என்பதை கொண்டாடுகிறது. கொண்டாட்டமும் ஒருவகையில் Fiction தான். அர்த்த சூன்யதா, சத்ய சூன்யதா, அகம் சூன்யதா… என்று போய்க் கொண்டேயிருந்தால் தம்மமே மிஞ்சும். பின்நவீனத்துவம் முக்கியத்துவம் தரும் Sublime (Kant) என்பதை பவுத்தத்தின் ‘நிப்பானா’வுடன் தொடர்புபடுத்தலாம். நீட்ஷே Affirmation x Negation, Active x Reactive, Slave morality x Master morality என்ற இருண்மைகளுக்குள் தவித்துப் பார்த்ததை இதனுடன் தொடர்புப்படுத்தலாம்.இப்படி உரையாடிக் கொண்டே போகலாம். இங்கே பதிவாகி இருப்பவை வெறும் அறிமுகம்தான். நண்பர்களின் சொந்த இச்சைப்பூர்வமான தேடுதலை பொறுத்து இது இன்னமும் விரியக்கூடும்.

  பின்குறிப்பு:

  1. இந்தக் கட்டுரையின் முதல்பகுதிக்கு டி.டி. கோசாம்பியின் ‘Introduction to the Study of Indian History’ நூல் பெரிதும் பயன்பட்டது.

  2. போலவே இரண்டாம் பகுதிக்கு – ‘காலச்சுவடு’ இதழ், பிரேம்:: ரமேஷ் நேர்காணலை வெளியிட்டபோது அதை மறுத்து சாரு நிவேதிதா ஒரு கடிதம் எழுதினார். அதை தொடர்ந்து ஒரு உரையாடல் நடந்தது. அதில் பவுத்தத்துக்கும் பின்நவீனத்துவத்துக்குமான இணைவு பற்றி விவாதிக்கப்பட்டது. அந்த குறிப்புகளை இங்கே பயன்படுத்தி இருக்கிறேன்

 •                                                1069791_10203199636461314_600854483_n                                               கே. என். சிவராமன்

 

 

Tags: , ,

One response to “இந்தியாவில் பவுத்தம் ஏன் வீழ்ச்சி அடைந்தது?

 1. Bala Ganesan

  March 12, 2014 at 2:51 pm

  Interesting post. Thanks for sharing your thoughts.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: