RSS

சிறுகதையாக ஆலிஸின் அற்புத உலகம்

25 Mar

1529745_10203473859876728_119211259_oலூயி கரோல் மன்னிப்பாராக. புகழ்பெற்ற அவரது ‘ஆலிஸின் அற்புத உலகம்’ நாவலை சிறுகதையாக சுருக்கியிருக்கிறேன். முக்கியமாக கடைசி மூன்று வரிகளை மாற்றியிருக்கிறேன்.

ஆங்கிலத்தில் இந்நாவலை படித்திருந்தாலும் இப்படி சிறுகதை எழுதிப் பார்க்கலாமா என்று முயன்றதற்கு காரணம், எஸ்.ராமகிருஷ்ணன். அவரது தமிழாக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘ஆலிஸின் அற்புத உலகம்’ நாவலை படித்ததன் விளைவு இது. இதற்காக எஸ்.ரா.வுக்கு நன்றி.

சிறுகதை வடிவில் இதை பகிர்ந்து கொண்டதில் நாவலில் உள்ள பல விஷயங்கள் விடுபட்டிருக்கின்றன. அனைத்து குறைகளுக்கும் முழுக்க முழுக்க எனது பலவீனங்களும், அலட்சிய மனநிலையுமே காரணம்.

இந்த சிறுகதையை படிப்பவர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு வேகமாக முழு நாவலையும் ஆங்கிலத்திலோ, தமிழாக்கத்திலோ தேடிப் பிடித்து படித்து விடுங்கள்.

அவ்வப்போது இது போல் உலகளவில் புகழ்பெற்ற – பேசப்பட்ட நாவல்களையும் சுருக்கி சிறுகதையாக முகநூலில் பதிக்க திட்டமிட்டிருக்கிறேன். எழுதிப் பார்ப்பதன் வழியே எழுத்தை கற்பதுதான் நோக்கம்….

இனி –
————–

 • அது அலுப்பும் சோர்வும் தரும் கோடைக்காலம்.

  இதுபோன்ற காலங்களில் செவ்வந்தி மலர்களைப் பறிப்பதுதான் ஆலிஸின் வழக்கம். அன்றும் அதேபோல பூக்களைப் பறிப்பதற்காக தோட்டத்துக்குச் சென்றாள்.

  அப்போது வெள்ளை நிற முயல் ஒன்று தன் கோட் பாக்கெட்டில் இருந்த கடிகாரத்தை எடுத்துப் பார்த்துவிட்டு, ”ஓ டியர், நேரமாகிவிட்டதே…” என்றபடி ஓடியது.

  கடிகாரத்தை பார்க்கும் முயலைப்பற்றி இதற்கு முன்பு அவள் கேள்விப்பட்டதும் இல்லை; பார்த்ததும் இல்லை.

  எனவே அந்த முயலைப் பிடித்து அதனுடன் பேச வேண்டும், பழக வேண்டும், விளையாட வேண்டும் என்று தோன்றியது. உடனே அம்பைப் போல் முயலை துரத்தியபடியே ஓடினாள்.

  ஆனால், அதை பிடிப்பதற்குள் ஒரு பெரிய பொந்தினுள் அந்த முயல் புகுந்துவிட்டது. முன் தீர்மானம் இல்லாமல் ஆலிஸும் அதனுள் குதித்துவிட்டாள்.

  அதன்பிறகுதான் அவளுக்கு விபரீதம் புரிந்தது. அவள் கீழே… கீழே விழுந்து கொண்டிருந்தாள்.

  முடிவில் காய்ந்த சருகுகளின் மீது கிடந்தாள். அவளுக்கு, தான் பூமியின் மத்திய பாகத்தில் இருக்கிறோமோ என்று தோன்றியது.

  சரியாக அந்த கணத்தில் தோட்டத்தில் கண்ட முயலை மறுபடியும் பார்த்தாள்.

  அந்த முயலால்தான் இப்படி நிகழ்ந்தது. இதற்கு மேலும் அதை பிடிக்காமல் விடக் கூடாது என்று நினைத்தபடி மறுபடியும் முயலை பின் தொடர ஆரம்பித்தவள், விளக்குகள் தொங்கும் அறை ஒன்றுக்கு தன்னால் வந்து சேர்ந்தாள்.

  அந்த அறையில் நிறைய கதவுகள் இருந்தன. எந்தக் கதவின் வழியே முயல் சென்றிருக்கும் என்பதை அறிய ஒவ்வொன்றாக திறந்துப் பார்த்தாள்.

  ஆனால், அனைத்துமே பூட்டப்பட்டிருந்தன. சட்டென ஆலிஸுக்கு பயம் வந்தது.

  எப்படி இங்கிருந்து வெளியேறுவது?

  ஒன்றும் புரியவில்லை. சுற்றிலும் பார்த்தாள். கண்ணாடி முக்காலியும், அதன் மீது தங்கச் சாவியும் அவள் பார்வையில் தென்பட்டது. ஆர்வத்துடன் அதை கையில் எடுத்தாள்.

  கதவு திறக்கும்… வெளியேறி விடலாம். மலர்ச்சியுடன் முயற்சி செய்தாள்.

  ஆனால், கண்களுக்கு தட்டுப்பட்ட எந்தக் கதவையும் அந்தச் சாவி திறக்கவில்லை. பதிலாக, திரைச்சீலைக்குப் பின்புறம் இருந்த சிறிய கதவைத் திறந்தது.

  ஆவலுடன் எட்டிப் பார்த்தாள். அருவியுடன் அழகான தோட்டம் ஒன்று அவள் கண்களுக்கு முன்னால் விரிந்தது.

  அங்கு செல்வதென முடிவு செய்தாள்.

  ஆனால், அங்கு செல்லவேண்டுமானால் அவள் உடல் தொலைநோக்கு கருவியை போல நீண்டதாக வளர வேண்டும். அப்போதுதான் அங்கு செல்ல முடியும்.

  என்ன செய்வது?

  அங்கும் இங்கும் ஓடினாள். ‘என்னைக் குடிக்கவும்’ என்ற லேபிள் ஒட்டப்பட்ட பாட்டிலைக் கண்டாள். அதில் விஷம் என்று எழுதியிருக்கவில்லை. எனவே சட்டென அதை எடுத்து குடித்தா

  என்ன ஆச்சர்யம்… ஆலிஸின் உடல் நீளமாக வளரத் தொடங்கியது.

  தோட்டத்துக்கு இப்போது எளிதாக செல்லலாம். உற்சாகத்துடன் ஓடினாள். ஆனால், அவள் முன்பு திறந்து பார்த்த கதவு, இப்போது பூட்டியிருந்தது. சாவியையும் காணவில்லை.

  அழுகையாக வந்தது. அழுவதால் என்ன பயன்? அடக்கிக் கொண்டாள்.

  சுற்றும்முற்றும் அலைந்தபோது, ஓர் அட்டைப்பெட்டியும் அதில் ஒரு கேக் துண்டும் தட்டுப்பட்டது. அதுவரை இல்லாத பசி, கேக்கை பார்த்ததும் வந்தது. எடுத்து சாப்பிடத் தொடங்கினாள்.

  கேக் வயிற்றினுள் செல்லச் செல்ல, அதிசயங்கள் நடக்க ஆரம்பித்தன. ஆமாம், சொல்லி வைத்தது போல ஆலிஸ் தன் பழைய உருவத்தை அடைய ஆரம்பித்தாள்.

  சரி, எப்படி தப்பிச் செல்வது?

  அதுதான் பரீட்சைக்குப் படிப்பதை விட பெரிய சவாலாக இருந்தது. யோசித்தபடியே நடந்தபோது எதேச்சையாக ஒரு கையுறை தட்டுப்பட்டது.

  அது முயலின் கையுறை.

  குதூகலத்துடன் அணிந்து பார்த்தாள். அவ்வளவுதான். அவள் உடல் சுருங்கத் தொடங்கி, கழுத்து தரையைத் தொடும் அளவுக்கு சின்னதாகிவிட்டாள்.

  முன்பைப் போல் இதை ஆலிஸால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அவளது கண்ணீர் அந்த அறையை நிரப்பத் தொடங்கியது.

  இதை துரதிருஷ்டம் என்றுத்தான் சொல்ல வேண்டும். தனது கண்ணீர் குளத்தில் தானே நீந்தும் துர்பாக்கியநிலைக்கு தள்ளப்பட்டாள்.

  வேறு வழியில்லை. தன்னை தேற்றிக் கொண்டு அதில் நீந்தத் தொடங்கினாள்.

  தன்னைப் போலவே வேறு சிலரும் நீந்துவதை பார்த்தபோது, அந்தநிலையிலும் அவளுக்கு வியப்பு ஏற்பட்டது.

  அப்படி நீந்துபவர்கள் மனிதர்களல்ல. சுண்டெலிகளும், பறவைகளும்.

  அவைகளுடன் உடனே ஸ்நேகம் வைத்துக் கொண்டாள். நீந்தியபடியே அவைகளையும் அழைத்துக்கொண்டு கரையை அடைய முயற்சி செய்தாள். அந்த முயற்சியில் வெற்றியும் கிடைத்தது.

  கரையை அடைந்த அவர்களுக்கு தங்கள் உடைகளை – உடல்களை எப்படி உலர்த்துவது என்பது பெரிய சிக்கலாக இருந்தது.

  ஒருவர் சொல்லும் யோசனை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போனது. விவாதம் நீண்டதுதான் மிச்சம்.

  ஆனால், இந்த தொடர் விவாதமே அவர்களை நாற்காலி ஓட்டப்பந்தயம் விளையாடும்படி தூண்டியது.

  உற்சாகத்துடன் விளையாடும்போது ஏதேதோ பேசினார்கள். அப்போது தன் வீட்டில், தான் வளர்க்கும் டினா பூனை குறித்து, அதன் சேஷ்டைகள் குறித்து ஆலிஸ் பரவசத்துடன் பகிர்ந்து கொண்டாள்.

  ஆனால், அதுவே அவளை சிக்கலில் மாட்டிவிட்டது. பூனை குறித்த பேச்சு எழுந்ததுமே சுண்டெலிகளும், பறவைகளும் பயந்துபோய் மாயமாக மறைந்துவிட்டன.

  மீண்டும் தனித்துவிடப்பட்டாள். சந்தோஷம் மறைந்து துக்கம் அவள் மீது படர ஆரம்பித்தது.

  அந்தநேரம் பார்த்து முதன்முதலில் அவள் பார்த்த முயல், அவளை நோக்கி வேகமாக வந்ததுடன், ”எனது கையுறையை விரைவாக கொண்டு வா…” என கட்டளையும் இட்டது.

  முயல் காட்டிய திசையில் ஓடிய ஆலிஸ், அழகான ஒரு வீட்டை அடைந்தாள்.

  அந்த வீட்டினுள் எவ்வளவு தேடியும் முயலின் கையுறை கிடைக்கவேயில்லை. அப்படியும் விடாமல் முயற்சி செய்தாள். களைப்பு அவளை சூழ்ந்தது. தாகம் எடுத்தது. ஒரு சொட்டு நீராவது குடித்தால்தான் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியும் என்ற நிலை.

  கையுறையை மறந்துவிட்டு, தண்ணீரை தேடியபோது, ‘என்னைக் குடிக்கவும்’ என்று எழுதப்பட்ட பாட்டிலை கண்டாள். தனக்காகவே அது காத்திருப்பது போல் ஆலிஸுக்கு தோன்றியது. எடுத்து மடமடவென்று குடித்தாள்.

  முந்தைய அனுபவம் போல தன் உடல் மாறுதலடையும் என்று அவளுக்கு தெரியும். ஆனாலும் இப்படி மாறுவோம் என்று அவள் நினைக்கவில்லை.

  ஆமாம், கூரையை முட்டும் அளவுக்கு இப்போது அவள் உயரமாகிவிட்டாள். எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து பெரும் சத்தத்தை எழுப்பின.

  அவ்வளவுதான்.

  ஏதோ அபாயம் வந்துவிட்டது என்று நினைத்து, அதை எதிர்கொள்ளும் விதமாக பறவைகளும், சுண்டெலிகளும் ஓநாய்களும் அந்த வீட்டை குறிபார்த்து வேகமாக வந்தன.

  அனைவரையும் தன்னால் ஒரேநேரத்தில் எதிர்கொள்ள முடியாது. என்ன செய்வது என்று அச்சத்துடன் ஆலிஸ் நின்றபோது, முயல் ஒரு காரியம் செய்தது. கூடையில் இருந்த கேக் அனைத்தையும் அந்த அறையில் கொட்டியது.

  அதை எடுத்து சாப்பிட்டால் ஏதேனும் மாற்றம் தெரியும் என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தாள். அவள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. அவள் உடல் சுருங்கத் தொடங்கி சிறிய பொடி உருவமாக மாறியது.

  அதேநேரம் ஓநாயும் நெருங்கிவிட்டது. இங்கேயே நின்றால், ஓநாய் தன்னை விழுங்கிவிடும் என்ற பயத்தில், அந்த வீட்டைவிட்டு ஓடத் தொடங்கினாள்.

  அப்போது அவள் ஒரு காளானின் உருவமே இருந்தாள். நினைத்தபோதெல்லாம் தன் உடல் இப்படி வளர்வதும், சுருங்குவதுமாக இருக்கிறதே… இதைக் குறித்து ஒரு புத்தகம் எழுதினால் என்ன?

  எழுத வேண்டியதுதான். ஆனால், இப்போதல்ல. வளர்ந்த பிறகு…

  இப்படி நினைத்தபடியே அவள் ஓடியபோது, சில காளான் துண்டுகள் அவள் கைக்கு கிடைத்தன.

  அவற்றில் ஒன்றை தன் வாயில் போட்டு கொண்டாள். அவள் உடல் கொஞ்சம் வளர்ந்தது.

  இப்போது ஓடுவதை நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கினாள்.

  அவளது நடை அவளை ஒரு வீட்டின் முன்னால் நிறுத்தியத

  அந்த வீட்டில் ஒரு சீமாட்டி வசித்து வந்தாள். அந்த சீமாட்டியின் குழந்தை பன்றி போலவே இருந்தது. ஆலிஸ் அங்கு சென்றநேரம், அந்த சீமாட்டி வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

  ராணியுடன் சூதாட அந்த சீமாட்டிக்கு அழைப்பு வந்திருந்தது.

  ”நீயும் அங்கு செல்கிறாயா?”

  யாரோ தன் செவியில் கிசுகிசுத்ததும் ஆலிஸ் பயந்துவிட்டாள். திரும்பிப் பார்த்தால், முயல்!

  தன்னையும் அறியாமல் தலையசைத்தாள். ராணியின் இருப்பிடத்தை முயல் தன் கைகள் மூலம் சுட்டிக் காண்பித்தது. அந்தத் திசையில் நடக்கத் தொடங்கினாள்.

  ஆனால், அங்கு சென்றதும்தான், தான், முயல் சொன்ன திசைக்கு எதிர்திசையில் வந்திருக்கிறோம் என்பதே ஆலிஸுக்கு புரிந்தது.

  அவள் சென்ற இடத்தில் தேனீர் விருந்து நடந்துக் கொண்டிருந்தது. முயல், சுண்டெலியுடன் ஒரு குல்லாய்காரனும் அங்கிருந்தான்.

  ஆலிஸ் அவர்களுடன் தேனீர் விருந்தில் கலந்து கொண்டாள். விருந்து அவளுக்கு பிடிக்கவில்லை. எனவே பாதியில் எழுந்து தென்பட்ட சோலைப்பாதை வழியே நடக்கத் தொடங்கினாள்.

  அங்கிருந்த ஒரு மரத்தில் கதவு இருந்தது. ஆவல் மேலிட அந்தக் கதவைத் திறந்தாள். கூடம் தென்பட்டது. நுழைந்தாள். சின்ன கண்ணாடி மேசயின் மீதிருந்த தங்கச் சாவி அவள் கண்களில் தட்டுப்பட்டது. சாவியை எடுத்து, முன்னால் இருந்த கதவைத் திறந்தாள். அழகான பூந்தோட்டம் அவளை வா… வா… என வரவேற்றது.

  பரவசத்துடன் தோட்டத்துக்கு சென்றாள். சத்தம் கேட்டது. அந்தத் திசையில் பார்த்தாள். சீட்டுக் கட்டின் எண்களைப் போல தென்பட்ட காவலாளிகள் புடை சூழ, ராஜாவும் ராணியும் தோட்டத்துக்கு வந்துக் கொண்டிருந்தார்கள். மலர்ப் பந்தாட்டப் போட்டி நடைபெறப் போகிறது என்பதை ஆலிஸ் புரிந்து கொண்டாள்.

  அவளை பார்த்த ராணி, அவளையும் விளையாட்டில் சேர்த்து கொண்டாள். ஆனால், விளையாட்டு ஆலிஸுக்கு பிடிக்கவில்லை. காரணம் ராணியின் நடவடிக்கை. எதற்கெடுத்தாலும் ‘தலையை வெட்டு’ என கட்டளையிட்டுக் கொண்டேயிருந்தாள்.

  எப்படியோ விளையாட்டு முடிந்ததும் விசாரணை மண்டபத்துக்கு அனைவரும் சென்றார்கள். ராணியின் பழச்சாறை யாரோ பருகிவிட்டார்களாம். அதைப் பருகியது யாரென்று விசாரணை நடக்கத் தொடங்கியது.

  அதைப் பார்த்தபடியே தன் கையில் எஞ்சியிருந்த காளான் துண்டுகளை ஆலிஸ் சாப்பிட்டு தன் பழைய உருவத்தை அடைந்தாள். நீண்டுக் கொண்டே சென்ற விசாரணையின் போக்கு ஆலிஸுக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவளும் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டாள்.

  விசாரணைக் கூண்டில் ஆலிஸ் ஏறியதும் சீட்டு கட்டு கோபுரம் உதிர்வது போல் காவலாளிகளும் ராஜா, ராணியும் உதிரத் தொடங்கினர்…
  ————

  ”ஆலிஸ், ஆலிஸ் எழுந்திரு. எத்தனை நேரமாக உன்னை எழுப்புவது?” தங்கை உலுக்கியதும் எழுந்தாள்.

  இவ்வளவுநேரம் தான் கண்டது கனவா?

  கண்களை கசக்கியபடி பார்த்தாள்.

  தங்கையின் கையில் ஒரு குட்டி முயலும், சில காளான்களும் இருந்தன.

  முயல் தன் கழுத்தில் அணிந்திருந்த கடிகாரத்தை பார்த்து பதறியது.

  திமிறிக் கொண்டு கீழே குதித்தது.

  ”ஓ டியர் நேரமாகிவிட்டதே…” என்றபடி ஓடியது.

  1069791_10203199636461314_600854483_nகே. என். சிவராமன்
  Works at Chief Editor at Dinakaran

   
 • Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: