RSS

டாக்டர் அனுபவங்கள் :

28 Mar
Sisyphus Aeolus
டாக்டர் அனுபவங்கள் : 1

நம்புங்கள் எனக்கு இதுவரை எந்த மருத்துவமனையிலோ , டாக்டருடனோ நேரடியாக எந்தக் கசப்பான அனுபவமும் ஏற்பட்டதில்லை. இருபது வருடங்களுக்கு முன்பு, ஒருமுறை நல்ல காய்ச்சலுடன், சாப்பிடாமல் போய், இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டதால் வாந்தியெடுத்ததுதான் எனக்கு ஏற்பட்ட அதிகபட்ச மோசமான அனுபவம். ஊரில் இருக்கும் வரை ஏழு கழுதை வயதான பிறகும் கூட அந்தக் குழந்தைகள் நல மருத்துவர்தான் எனக்கு சர்வரோக டாக்டர். இத்தனைக்கும் எங்கள் குடும்பத்திலேயே ஏழெட்டு டாக்டர்கள். நான் வாந்தி எடுத்ததை இன்றளவும் ஞாபகம் வைத்துக் கிண்டல் செய்வார். எங்கள் கடையிலிருந்து இருநூறு மீட்டர் தொலைவிலேயே க்ளினிக் இருந்தது வேறு வசதியாக இருந்தது. நான்காம் வகுப்பிலிருந்தே தனியாகப் போய் கன்சல்டேஷனை முடித்து விட்டு கடையில் வந்து உட்கார்ந்து விடுவேன்.

 • “உங்கப்பன் கடைய விட்டுட்டு வரமாட்டானே” என்பதுதான் அவருடைய வழக்கமான முகமன். “விறு விறுன்னு உள்ள போய் பாத்துட்டு வந்துரு” என்பார் அப்பா. ஆனால் நான் வரிசைப் பிரகாரம்தான் போவேன். அவருக்கும் அது தெரியும். டோக்கன் முறையெல்லாம் அங்கே கிடையாது ஆனால் எப்போதும் கூட்டம் இருக்கும். பெரும்பாலும் கைக்குழந்தையுடன் தாய்மார்கள் கூட்டம். “கூட யாரு வந்திருக்கா?” என்பது போல் பார்க்கும் தாய்மார்களிடம் “நா மட்டுந்தான் வந்தேன்” என்பேன். சமீபத்தில் போயிருந்த போது “யாருக்குக் காமிக்க வந்துருக்க?” என்பது போல் பார்த்த ஒரு அழகிய அம்மாவிடம் “எனக்குதான்” என்றேன். அடுத்த முறை செல்லும்போது பையனை துணைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும்.

  டாக்டர் அனுபவம் – 2

  ஒன்றரை வயதில் அக்காவுக்குக் காலில் கரப்பான் நோய் என்று அழைக்கப்படும் ஒருவிதத் தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனை , அரசு மருத்துவமனை, சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம் என்று எதற்கும் கட்டுப்படவில்லை. கால் முழுவதும் பரவி பார்க்கவே கொடூரமாக மாறியது. இரவெல்லாம் தூங்காமல், தூங்கவிடாமல் அழுகை . “ஏய்யா பொட்டப்புள்ளைலா!! இப்பிடியே வச்சிருக்கலாமா ? நாளைக்கு எவன் கெட்டுவான்” என்று பாட்டி புலம்பினாள். “திருநேலி தம்பி டாக்டர்ட்ட போய்க் காட்டுய்யா எதாவது வழி சொல்லுவாரு” என்று ஒரு தூக்கம் தொலைத்த இரவின் மறுநாள் பக்கத்துக்கு வயல் மேத்தன் அறிவுறுத்தினார். மூன்று மணி நேரம் திருநெல்வேலி நோக்கிப் பேருந்துப் பயணம்.

  இரண்டு ஆண்டுகளுக்கு முன் அக்காவுக்கு ஒரு மனை எழுதி வைத்தோம். (கூட்டுக்குடும்பம் என்பதால் “தோம்”). நான்கைந்து மனைகள் தேறும் அந்த இடத்தில் பல வருடங்களுக்கு முன்பாகவே ஒரு லே-அவுட்டை மனதில் வைத்து தென்னை , தேக்கு போன்ற மரங்களை வாகாக பாட்டியும் அப்பாவும் நட்டு வைத்து வளர்த்து வந்தனர். அக்காவிடம் பெரியப்பா, “உனக்குப் புடிச்ச மனைய எடுத்துக்கோ தாயி” என்றார். அவள் நட்டு நடுவாந்தரமாய் ஒரு டப்பா போட்டுக் காட்டி இந்த இடம்தான் வேண்டுமென்றாள். எந்த மரமும் இடையூறு செய்யாமல் முழுவதும் நிலமாகவே ஒரு மனையைத் தேர்ந்தெடுத்தாள். அது பரவாயில்லை. எங்கள் எல்லோரிடமும் “நீங்க அந்த மரத்தையெல்லாம் வெட்டக் கூடாது. அது நம்ம பாட்டி நட்டது” என்றாள். கொலைவெறியான என்னை அண்ணன்கள் சமாதானப்படுத்தினர். ஆறு மாதம் கழித்து அந்த மனையை விற்க விலை பேசுவதாகக் கேள்விப்பட்டதும் அப்பா சிரமேற்கொண்டு பணம் புரட்டி மனையைச் சந்தை விலைக்கு மேல் கூடுதல் விலைக்கு வாங்கினார்.

  திருநெல்வேலிக்குப் பேருந்தில் செல்லும் போது தோளில் தூக்கி வைத்துக் கொண்டு நின்றபடியே போக வேண்டும். சீட்டில் அமர்ந்து , மடியில் உட்கார வைத்தால் ஊரைக் கூட்டுவாள். வாரத்தின் உச்சபட்ச விற்பனை நாளான சனிக்கிழமை வியாபாரம் முடித்து லேட்டாகத் தூங்கி , ஞாயிறு அதிகாலைக் கிளம்பி இரண்டு வயதுக் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு ஆறேழு மணி நேரம் அலைவதன் கொடுமையை அனுபவித்தால்தான் தெரியும். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஒரு நாள் பாட்டியும் கிளம்பிப் போய் தம்பி டாக்டரிடம் “அய்யா தங்க விக்கிரகம் மாதிரிப் புள்ள. இப்புடிக் காணக் கண்ணவியுது” என்று முறை வைத்தாள். “அடுத்த வாரம் சாங்க்யாலம் மூணு நாலு மணிப்போல வாங்க. மெட்ராஸ்ல இருந்து ஒரு த்தோல் டாக்டர் வாராரு அவர்ட்ட கேப்போம் ” என்றார்.

  அடுத்த வாரம் ஆடித் தபசு. பேருந்து நெரிசலில் அடித்துப் பிடித்து , அழுகை ஆர்ப்பாட்டம் கடந்து ஆஸ்பத்திரிக்கு ஓடிப் போய்ச் சேர்வதற்குள் லேட் ஆகிவிட்டது. மெட்ராஸ் செல்ல டிரெய்னைப் பிடிக்க கையில் ப்ரீஃப்கேசுடன் வெளியே வந்து கொண்டிருந்தார் டாக்டர். ஆஸ்பத்திரி வராண்டாவில் அவரை மறிக்க மனமில்லாமல் மூச்சு வாங்க நின்றுகொண்டிருந்த அப்பாவிடம் , “டிரெய்னுக்கு நேரமாச்சே என்ன பிரச்னை” என்று நடந்து கொண்டே கேட்க, என்னைப் போலல்லாமல் , நறுக்கென்று அப்பா சொல்லி முடித்தார். நின்று சில வினாடிகள் காலைக் கூர்ந்து பார்த்த டாக்டர் , அப்பாவிடமே துண்டு பேப்பர் வாங்கி ஒரு மருந்தை எழுதிக் கொடுத்துவிட்டு “இதத் தொடர்ந்து குளூரப் போட்டுட்டு வாங்க . சரியாப்பேரும் ” என்று சொல்லிவிட்டு விறு விறுவெனப் பறந்து விட்டார். மண்ணெண்ணெய் போல் வாசனை வரும் அந்த மருந்து ஏழு ரூபாயோ என்னவோ. ஒரு வாரத்தில் குறைய ஆரம்பித்த வியாதி, ஒரே மாதத்தில் சுத்தமாகப் போய்விட்டது. அந்த டாக்டரின் பெயர் இப்போது வரைத் தெரியாது.

  “அந்த சொத்துல எனக்கும் பங்கிருக்கு” என்று அக்கா இப்போது ஊருக்குள் சொல்லிக்கொண்டு திரிவதாகக் கேள்வி.

  டாக்டர் கதை – 3

  குலக்கல்வி முறை எதில் சரியாக வேலை செய்கிறதோ இல்லையோ டாக்டர் குடும்பங்களிலும், பலசரக்குக் கடை குடும்பங்களிலும் மட்டும் சரியாக வேலை செய்யும். ஆறு ஆண் பிள்ளைகள் உள்ள எங்கள் வீட்டில் நான்கு பேர் கடையிலேயே செட்டில் ஆகிவிட்டனர். காட்ஃபாதர் அல்-பசீனோ போல் நான் வீட்டில் கொயந்தைப் பையனாகவே நடத்தப்படுகிறேன்.”நீ மூடைய தூக்கப் போறியா? முக்காக்கிலோ சீனிய சிந்தாம பொட்டணம் கட்டு. அரக்கிலோவாது தேறுதா பாப்போம்” என்று அண்ணன்களால் அவமானப் படலம் நடக்கும். என்றைக்காவது கடைக்குப் போனால் அல்வாவும், மிச்சரும் வாங்கிக்கொடுத்துப் பாசத்தையும் , “என்னைக்கிருந்தாலும் நீ விருந்தாளிதாண்டா பங்காளி கிடையாது” என்ற தொலைநோக்குப் பார்வையையும் கலந்து கொடுப்பார்கள். “பெருசு மட்டும் போய்சேரட்டும் அன்னைக்குலேருந்து நான்தான்டா காட்ஃபாதர்” என்று யாருக்கும் தெரியாமல் மனதுக்குள் சொல்லிக் கொள்வேன்.

  அப்பாவின் ஒன்று விட்ட அண்ணன்கள் மூன்று பேரும் டாக்டர்கள். அவர்களின் பிள்ளைகள் சுமார் பத்து பேர் டாக்டர்கள். இரண்டு பேரன்கள் “டாக்டர் இன் மேக்கிங்”. சேலத்தில் இருந்த வேலு பெரியப்பா மட்டும் அரசாங்க ஆஸ்பத்திரியில் இருந்து ரிட்டையர் ஆனவுடன் ஊரில் வந்து செட்டில் ஆகிவிட்டார். எப்போதாவது திருவிழாவில் மட்டும் பார்ப்பவரை ஊரிலேயே வந்து தங்கிய பிறகு ஊர்க்காரர்களால் ஒன்ற முடியவில்லை. எந்தவொரு பெருநகரத்தின் வளர்ச்சிக்கும் இணையாக மாறிப்போயிருந்தது எங்கள் ஊர். தவிர சொந்தக்கார டாக்டர்களிடம் வைத்தியம் பார்க்கும் பழக்கம் எங்கள் ஊரிலேயே இல்லை.

  போர் அடித்துப் போய் சில காலம் உள்ளூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் கன்சல்டன்டாகப் பணியாற்றினார். அதுவும் பிடிக்காமல் நின்றுவிட்டார். வீட்டில் தனியன் நானும், ஊரில் தனியன் அவரும் பம்பு செட்டிலோ, மெயின் ரோட்டிலோ சந்தித்தால் பழங்கதைகள் சொல்லுவார். “இருவது வருஷத்துக்கு மேல ஒரே தொழில்ல இருக்கவே கூடாதுய்யா” என்பார். திருமணமாகி நீண்ட நாள் கழித்துக் கருத்தரித்த மூத்த மகளுடன் பெரியம்மா சென்று தங்கிவிட்டார். இளைய மகளும் , மகனும் அப்போது மருத்துவக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தனர். தனிமை அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக அவர்களின் பள்ளி சார்ந்த ஊர்களைச் சுற்றியே கால காலமாக வேலை செய்த ஒரு நேர்மையான மருத்துவர் மற்றும் பொறுப்பான தகப்பன் அவர்.

  எனக்கும் வியாபாரத்திற்கும் ஒத்துவராது என்பது திறமை சார்ந்த விஷயம் மட்டுமல்ல. என் ராசி அப்படி என்ற நம்பிக்கையும் உண்டு. தவிர்க்க முடியாத காரணங்களால் சில சமயம் கல்லாவில் நான் உட்கார வேண்டி வரும். “இந்தக் கடைய தெறந்து உக்காரதுக்கு பூட்டிட்டு வீட்லயாது போய்த் தூங்கலாம்” என்ற அளவுக்குத்தான் வியாபாரம் இருக்கும். அப்படியாக அமர்ந்திருந்த ஒரு நாளில் பெரியப்பா வந்தார். “லிஸ்ட்ல இருக்க சாமானெல்லாம் போட்டுட்டு வீட்டுக்கு குடுத்து விட்டிருய்யா” என்றார். “வேலப்பா வீட்ல யாரு இருக்கா ? எதுக்கு இம்புட்டுச் சாமான்? ” . “நாளைக்கு பெரியம்மா வாராள்ளா, அதான் ரெடி பண்ணனும்லா.. நான் இப்பம் ராசம்மா அத்த வீட்லதான இருக்கேன் .. அங்கேயே குடுத்து விட்டுரு”. ராசம்மா அத்தை அவருடைய அக்கா. இவருக்கும் சேர்த்துப் பொங்கிப் போட்டுக்கொண்டிருக்கிறாள். டேபிளில் பளபளவென்று இருந்த பூட்டை எடுத்து ஆச்சரியமாகப் பார்த்தார். அது ஒரு இம்பொர்டெட் ப்ரெஸ் லாக். ஒருநாள் கடையைத் திறந்த பிறகு சாவி எங்கேயோ தொலைந்துவிட்டது. அதனால் பேப்பர் வெயிட் ஆக பயன்பட்டுக் கொண்டிருந்தது . “இத எப்டிய்யா தொறந்தே இன்னும் வெச்சிருக்கீங்க. நீயும் உங்கப்பனும் ஒரே மாதிரி ” என்றார். அப்போதுதான் எனக்கே அது உரைத்தது. அவரிடமிருந்து வாங்கி அமுக்கிப் பூட்ட முயன்றேன். “வேண்டாம் வேண்டாம் , இத நான் வெச்சுக்கிடுதேன்” என்று ஆவலாக வாங்கிக் கொண்டு கிளம்பினார்.

  அப்பா வந்த பிறகு வீட்டுக்குக் கிளம்பினேன். “போம்போது இந்தச் சாமான குடுத்துட்டுப் போயிரு. ரூவா ஒண்ணும் கேக்காத” என்றார். சைக்கிளில் அட்டைப்பெட்டியைக் கட்டிவிட்டுக் கிளம்பினேன். ராசம்மா அத்தை வீடு வழக்கம்போல் அமைதியாக இருந்தது. வீட்டின் முன்னறைக் கதவில் பளபளவெனத் தொங்கிக் கொண்டிருந்தது ப்ரெஸ் லாக். திடுக்கிட்டுப் போய் கதவின் துளைக் கட்டையைத் தள்ளிவிட்டு உள்ளே பார்த்தேன்.மங்கலான விடிலைட்டின் வெளிச்சத்தில் கட்டிலில் பாதியும் தரையில் பாதியுமாகக் கிடந்தார் பெரியப்பா. நான் இப்போதெல்லாம் திருவிழாவிற்கு ஊருக்குப் போவதில்லை

  253804_102065686637727_190303041_nSisyphus Aeolus

  அனுபவங்கள் தொடரும்..

  Advertisements
   
 • Tags:

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: