RSS

டாக்டர் அனுபவங்கள் : டாக்டர் கதை 5:

31 Mar
Sisyphus Aeolus

சில ஞாபகங்கள் இம்சையானவை. எட்டாம் வகுப்பு வரையான எல்லாப் பாடப் புத்தகங்களின் முதல் பாடமும் அச்சரம் பிசகாமல் நினைவில் உள்ளது. அதற்குப் பின் கணிதமும் , இயற்பியலும் மட்டும் விரும்பிப் படித்ததால் மனதில் தங்கி விட்டது. ஆனால் மூன்று வயது கூட முற்றுப்பெறாத காலத்தில் நிகழ்ந்த ஒரு விஷயம் மட்டும் மனதிலேயே தங்கி இம்சிக்கிறது.

என் தலைமுறையில் நான்தான் கடைசிப் பையன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. எனக்குப் பிறகு ஒரு தம்பி பிறந்தான். லோயர் மிடில் கிளாஸ் கூட்டுக் குடும்பங்களின் வாழ்க்கை முறை குழந்தைகளைச் சுற்றியே தீர்மானிக்கப்படும். பெரும்பாலான வளர்ந்த பிள்ளைகளின் தேவையை முன்னிட்டு வீட்டில் பசு மாடு அப்போதுதான் வாங்கப்பட்டது. பிள்ளைகள் வளர்ந்து விட்டதால் கடையில் பிஸ்கட் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டது. “இவனுவளுக்கே போட்டு முடியாது. தோட்டத்துல பாதி கெணறா?” என்று தர்க்கம்.

  • தம்பி பிறந்தபோது அம்மாவுக்கு அம்மை போட்டுப் பிறகு சீக்குக் கண்டு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. பசும்பாலோ அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. கடைசி அத்தை கொஞ்ச நாள் தாய்ப்பால் கொடுத்தாள். அவ்வப்போது லாக்டோஜென்னோ, கிளாக்ஸோவோ. ஆனால் அது வாங்கி முடியவில்லை என்று குடும்பத்தில் சலசலப்பு. ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போது கடும் வயிற்றுப்போக்கு. எந்த மருத்துவத்துக்கும் கட்டுப்படவில்லை. ஒரு நாள் திடீரென்று மூர்ச்சையானான். டாக்சி பிடித்து தென்காசி சென்றால் “ஹைகிரவுண்ட்” கொண்டு செல்லுங்கள் என்றார்கள். அங்கிருந்து திருநெல்வேலிக்கு அடித்துப் பிடித்துப் போய்த் தம்பி டாக்டர் வீட்டுக் கதவைத் தட்டினார் அப்பா.

    பெட்டில் படுக்கவைத்து வயிற்றைக் கிள்ளுவது போல் பிடித்து இழுத்து விட்டார். சிவந்து உள்ளிழுத்தது வயிறு. “பயப்படாதீங்க” என்று சொல்லிவிட்டு ட்ரிப்ஸ் ஏற்றி உயிர் பிழைக்க வைத்து அனுப்பினார். இனி பசும்பால் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அடுத்த சில மாதங்கள் மீண்டும் பவுடர் பாலில் வண்டி ஓடியது. ஒரு வயதை நெருங்கும்போது மீண்டும் குடும்பத்தில் சலசலப்பு. அவன் வேறு ஏகத்துக்கு தின்று தீர்த்தான். மீண்டும் ஆரம்பித்தது பசும்பால் டெஸ்ட். ஒரு வயதை நெருங்க பதினைந்து நாட்கள் இருக்கும்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஒரு வாரத்துக்கு உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. அவ்வப்போது முழித்து லேசாகச் சிரிப்பதோடு சரி. ஆஸ்பத்திரிக்கு வருபவரெல்லாம் ஒரு லாக்டோஜென் டப்பா வாங்கி வந்தனர். நாடி வெகுவாகக் குறைந்த ஒரு அதிகாலையில் மீண்டும் தம்பி டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ஓடினார் அப்பா. இந்த முறை வயிறு உள்ளிழுக்கவில்லை.

    #
    இதுவெல்லாம் நினைவில் இல்லை. எல்லோரும் சொல்லிக் கேட்டதுதான். அவனைக் கூடத்தில் கிடத்தி வைத்திருந்த நாளில் சொந்தக்காரப் பையன்களுடன் திண்ணையில் விளையாடியதும் , அழுதுகொண்டிருந்த அம்மாவின் மடியில் அவ்வப்போது சென்று புதைந்து கொண்டதும் , கூடத்தில் குவிந்து கிடந்த பூமாலைகளும், முற்றத்தில் மயங்கி விழுந்த அப்பாவும் , அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிய பரமசிவம் அத்தானும் மறக்கவே இல்லை. மறுநாள் ஒரு சாக்கு நிறைய லாக்டோஜன் டப்பாக்களை அப்பா தெருவில் கொட்டினார். ஒரு வாரம் கழித்து சேலத்தில் இருந்து வேலு பெரியப்பா ஒரு கார்டு அனுப்பியிருந்தார். “சிறு வயதில் இறந்தவர்கள் நம் குடும்பத்தை தெய்வமாக இருந்து காப்பார்கள்” என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கார்டு நீண்ட காலம் நிலைப்படிக்கு மேலேயே சொருகி வைக்கப்பட்டிருந்தது.

    253804_102065686637727_190303041_nSisyphus Aeolus

 

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: