RSS

டாக்டர் அனுபவங்கள் : டாக்டர் கதை 6:

31 Mar
Sisyphus Aeolus

1511681_248095212034773_1055815754_nதீபாவளி வியாபாரத்திற்கு ஒரு வாரம் முன்பிருந்தே தயாராக ஆரம்பித்து விடுவோம். சரியாக தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னே கூட்டம் வர ஆரம்பித்திராத ஒரு காலை வேளையில் யாசகம் கேட்டு வந்த ஒரு குடுகுடுப்பைக்காரர் “சாமி நாளைல இருந்து ஒரு நாப்பது நாளைக்குக் கண்டஞ் சரியில்ல” என்று சொல்லிவிட்டுச் சென்றார். தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாலையில் வழக்கம்போல் பசு மாட்டை வயலுக்கு மேய கூட்டிச்சென்றார் அப்பா. அந்த வருடம் கொஞ்சம் மழை தப்பிப் பெய்ய ஆரம்பித்திருந்தது. ரோட்டில் இருந்து வயக்காட்டிற்குள் இறங்கும்பொழுது மாடு லேசாக அப்பாவின் இடது கால் மொளியில் இடறிவிட்டது. “விண்ணுனு ஒரு சேண்டுதான் வலிச்சுது. அதுக்குப் பெறவு தீவாளி யாவார டென்சன்ல அயத்தே பேய்ட்டென் ” என்று பிற்பாடு சொன்னார் அப்பா.

 • தீபாவளிக்கு முந்தைய நாள் கடும் வியாபாரத்தை முடித்துவிட்டு வீடு சென்றோம். மறுநாள் காலை நல்லெண்ணெய்க் குளியல். காலைச் சாப்பாட்டை முடித்துவிட்டு சிறிது நேரம் தூங்கி எழும்போது அப்பாவின் பாதம் வீங்கியிருந்தது. மாடு இடறிய இடத்தில் ஒரு கோடு தெரிந்தது. வழக்கமாகச் சென்று காண்பிக்கும் டாக்டர் இல்லாததால் முதல் தவறைச் செய்தார். மெடிக்கல் ஸ்டோரில் சென்று மாத்திரை வாங்கிக்கொண்டார். மாலை நாங்கள் பட்டாசு வெடிக்கையில் அப்பாவுக்கு கால் நன்றாக வீங்கியிருந்தது. ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். போட்டிருந்த மாத்திரை வலியை மரக்கச் செய்திருந்தது. கடும் அசதியில் தூங்கிப் போனோம் நானும் அக்காவும்.அதிகாலை ஐந்து மணிக்கு அம்மா எழுப்பி “ஏலே அப்பாவுக்கு டீ வாங்கிட்டு வா” என்று கத்தி எழுப்பினாள். கோபத்தில் கத்தினேன். “ராத்திரியெல்லாம் அப்பா தூங்கலடா” என்றாள் அக்கா. விழுந்தடித்து எழுந்து அப்பாவைப் பார்த்தேன். அப்பா கட்டிலில் சுருண்டு கிடந்தார். கால் கடுமையாக வீங்கி சிவந்து போயிருந்தது. நானும் அக்காவும் டீ வாங்கப் போகும் வழியில் அக்கா சொல்லித்தான் தெரியும். இரவெல்லாம் வலியில் கடும் போராட்டம் நடத்தியிருக்கிறார் அப்பா. மூன்று மணி வாக்கில் அடுத்ததெருவில் இருந்த நர்ஸ் ஒருவர் வந்து
  பெயின் கில்லர் ஊசி போட்ட பிறகுதான் கொஞ்சம் அடங்கியிருக்கிறார். எவ்வளவு வலி என்றால் “ஏதாது ஊசி போட்டு என்ன கொன்னாவது போட்டுரு” என்று நர்சிடம் கத்தும் அளவுக்கு வலி.

  காலை ஏழு மணிக்கு முதல் டாக்டர் விசிட். பிறகு ஊரில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார் அப்பா. ஒரு வாரத்தில் பாதம் முழுவதும் கருப்பாக மாறியது. தென்காசியில் இருந்து ஆர்த்தோ டாக்டர் வந்து பார்த்துவிட்டு, மொளியைச் சுற்றி இருக்கும் தோலை எடுத்துவிட்டு, சீழை வெளியேற்ற வேண்டும் என்றார். புண் ஆறிச் சிவந்த பிறகு தோல் “பிளாஸ்டிக் சர்ஜரி” செய்துதான் தோலை மூடவேண்டும் என்றார். வேறு எங்கிருந்தாவது தோலை வெட்டி எடுத்து புண் இருக்கும் இடத்தில் வைத்து ஒட்ட வேண்டும். கேட்டுக்கொண்டிருந்த எனக்கு இண்டரெஸ்டிங்காக இருந்தது. மறுநாள் இரவு சீழ் நீக்க வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பினார். மறுநாள் மாலையே ஆஸ்பத்திரி போய் வேடிக்கை பார்ப்பதற்காக காத்திருந்தேன். ஒரு ஆக்ஸிடன்ட் கேஸ் பார்த்துவிட்டு நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு டாக்டர் வருவதற்குள் அங்கேயே தூங்கிவிட்டேன்.

  மறுநாள் காலை விழித்தவுடன் அப்பாவின் காலைக் கூட பார்க்காமல் ஸ்கூலுக்கு லேட்டாகிவிட்டது என்று கிளம்பிவிட்டேன். அப்பா அம்மாவிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். சீழ் எடுத்து இரண்டு நாட்கள் கழித்து திருநெல்வேலி ஷிபா கிளினிக்கில் சேர்க்கப்பட்டார். பிளாஸ்டிக் சர்ஜன் வசதி அங்கேதான் உண்டு. பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் முடிந்த பிறகுதான் அப்பாவைப் பார்க்கப் போனேன். உடன் வந்த அக்கா, அத்தைகள் எல்லோரும் ஓவென அழ, நான் அப்பாவிடம் ஓடிப் போய், “எங்க இருந்துப்பா தோல் வெட்டினாங்க?? ” என்று ஆர்வமாகக் கேட்டேன். அப்பா சிரித்துக் கொண்டே தொடையில் போட்டிருந்த கட்டைக் காட்டினார். இந்தப் பயலுக்கு பாசமே இல்லை என்று அப்பா முடிவு கட்டிய நாட்கள் அவை. ஆனால் உண்மையில் நான் வேறு அவர் வேறு என்ற எண்ணம் இன்றளவிலும் எனக்குத் தோன்றியதே இல்லை.

  சில நாட்கள் ஆஸ்பத்திரி ஓய்வுக்குப் பிறகு மீண்டும் கடையைத் திறந்தோம். க்ளீன் பண்ணி முடிக்க அரை நாள் எடுத்தது. அயர்ந்து போய் பருத்திக்கொட்டை மூடை மேல் உட்காரப்போன என்னிடம் “அந்தக் காலண்டரைக் கிழி” என்றார் அப்பா. மொத்தமாகக் கிழித்துவிட்டு மூடை மேல் அமர்ந்து கையில் இருந்த கிழித்த காலெண்டர் நாட்களை எண்ணினேன். நாற்பது!!!

  253804_102065686637727_190303041_nSisyphus Aeolus
 
Leave a comment

Posted by on March 31, 2014 in 1

 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: