RSS

மனித நாகரிகத்துக்கு விழுந்த சாட்டையடி

07 May

10245496_841152582578986_2991010818609790755_n

10246235_841153152578929_339437201293338451_n

1175502_841152919245619_1333695373227362744_nகல்லூரி மாணவிகள் 5 பேரில் ஒருவர் வல்லுறவுக்கு ஆளாகிறார் என்றால் அதிர்ந்து போகாமல் என்ன செய்வது?

ஒபாமா அதிர்ந்துதான் போனார். ‘இது மனித நாகரிகத்துக்கு விழுந்த சாட்டையடி’ என்று அமெரிக்க அதிபர் உருக்கமாகவும் கோபமாகவும் சொன்னார்.

டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி ஓடும் பஸ்ஸில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும் அதன் தொடர்ச்சியாக நடந்த இளைஞர்களின் போராட்டமும், ஏனைய நாடுகளை போலவே அமெரிக்காவிலும் பரபரப்பான செய்தியாக விவாதிக்கப்பட்டது. ’இந்திய ஆண்கள் ஒவ்வொரு முறை ஜிப்பில் கை வைக்கும்போதும் ஒரு பெண்ணின் மானம் பறிக்கப்படுகிறது’ என்று எழுதி கேவலமாக கார்ட்டூன் போட்டு விமர்சனம் செய்தார்கள்.

இப்போது, அமெரிக்காவில் 2 கோடியே 20 லட்சம் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் அவர்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. அந்த நாட்டில் 16 லட்சம் ஆண்களும் வன்புணர்ச்சிக்கு இலக்கானார்கள் என்ற தகவல் ஐரோப்பிய, அரபு நாடுகளில் தீயாகப் பரவி அமெரிக்கர்களிடம் சங்கடத்தை உண்டாக்கியிருக்கிறது.

கல்வி நிலையங்களில்தான் மிக அதிகமான அளவில் வல்லுறவு சம்பவங்கள் நடக்கின்றன என்று அமெரிக்க அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘நமது நாட்டின் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் மாணவிகள் எந்த நேரமும் ரேப் செய்யப்படலாம் என்ற அச்சத்துடன் வாழ நேர்வது நாட்டுக்கே பெரிய அவமானம்’ என்று ஒபாமா பலமாக கண்டித்துள்ளார்.

 • அங்கு போதை பொருட்களுக்கு எதிராக கடும் சட்டங்கள் இருக்கின்றன. மது அருந்துவதற்கும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கல்வி வளாகங்களில் மது அருந்துவதும், போதை பொருட்களை பயன்படுத்துவதும் பரவலாக நடக்கிறது. ’பார்ட்டி’ என்ற பெயரில் அடிக்கடி நடக்கும் இரவு விருந்துகளின் முடிவில்தான் பெரும்பாலான வன்புணர்ச்சி சம்பவங்கள் நடப்பதாக கல்வித்துறை திரட்டியுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

  இந்த விவரங்கள் துல்லியமானதாக இருக்க முடியாது; இதைவிட அதிகமான அத்துமீறல்கள் நடக்கின்றன என்று கல்வியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். கல்வி நிறுவனங்களின் பெயர் கெட்டுப்போகும் என்ற கவலையால், நிர்வாகங்கள் அநேக சம்பவங்களை மூடி மறைக்கின்றன.

  சம்பவத்தை முழுமையாக விசாரிக்கும்போது, மது மற்றும் போதை பொருட்கள் தொடர்பான சட்ட விதிகளை நிர்வாகம் சரியாக அமல்படுத்தாததுதான் மூல காரணம் என்று அம்பலமாகிவிடும் என்பது இன்னொரு காரணம். எனவே, எழுத்துபூர்வமான புகார் வந்தாலும், உரிய முறையில் குழுஅமைத்து, முறையான விசாரணை நடத்தி, அதன் முடிவை வெளியிடவோ அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ நிர்வாகம் முன்வருவதில்லை.

  குழு அமைத்து விசாரணை நடத்தினால்கூட, அது உண்மையை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியாக இருக்காது. ‘அவர்கள் ரேப் செய்ததாக உன்னால் நிச்சயமாக கூற முடியுமா? ரேப் என்ற வார்த்தைக்கு சட்டரீதியான அர்த்தம் உனக்கு தெரியுமா? சம்பவம் நடந்தபோது உன் ரத்தத்தில் எத்தனை சதவீதம் ஆல்கஹால் இருந்தது என்பதை அறிவாயா? அவர்கள் உடலுறவுக்கு சம்மதம் கேட்டபோது நீ வேண்டாம் என மறுத்ததை உன்னால் நிரூபிக்க முடியுமா? சுய நினைவு இல்லாத நிலையில் ஒருவன் செய்யும் காரியங்களுக்கு சட்டப்படி அவன் பொறுப்பாவான் என்று நினைக்கிறாயா? தெரிந்து செய்வது குற்றம்; தெரியாமல் செய்வது பிழை. அவ்வாறு பிழை செய்தவர்களை மன்னிக்குமாறு ஆண்டவன் கூறியதாக படித்திருக்கிறாயா? அவர்கள் தண்டிக்கப்பட்டால், இந்த கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டால் நீ மன உறுத்தல் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியுமா? தண்டிக்கப்படுபவர்களால் எதிர்காலத்தில் உனக்கு கெடுதல் நேரலாம் என்று உனக்கு பயம் இருக்கிறதா? இந்த சம்பவம் பகிரங்கமாக ஊடகங்களில் வெளியாகும்போது, இந்த கல்லூரிக்கு அது எவ்வளவு பெரிய அவமானம் என்பதை நீ உணர்ந்திருக்கிறாயா? கல்லூரி விதிக்கும் தண்டனையை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் சென்றால், அங்கே மிகப்பெரிய வக்கீல்களுக்கு எதிராக உன்னால் அவர்களின் குற்றத்தை நிரூபிக்க இயலுமா?’ என்ற ரேஞ்சில் கேள்விக்கணைகள் தாக்கும்போது, ஏற்கனவே உடலிலும் உள்ளத்திலும் வலியால் துடிக்கும் ஒரு பெண்ணின் நிலைமை எப்படி இருக்கும்?

  ’நடந்தது நடந்துவிட்டது; சீக்கிரம் படிப்பை முடித்து பாஸ் ஆகி வாழ்க்கையை எதிர்கொள்வோம்’ என்ற மன நிலையை பாதிக்கப்பட்ட மாணவிகள் மீது திணிக்கவே நிர்வாகங்கள் முயற்சி செய்கின்றன என்பதை ஒபாமாவிடம் தாக்கல் செய்த அறிக்கை வெளிச்சமிட்டு காட்டுகிறது. மாசசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள ஆம்ஹெஸ்ட் காலேஜில் 2011ல் வன்புணர்ச்சிக்கு ஆளான ஒரு மாணவியை, இதுபோன்ற ஒரு போலி விசாரணையின் முடிவில் மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசுக்கு சிபாரிசு செய்தது நிர்வாகம். அவள் கல்லூரியில் இருந்து வெளியேற நேர்ந்த்து. அவளால் குற்றம் சாட்டப்பட்ட மாணவன் படிப்பு முடித்து பட்டதாரி ஆனான்.

  அந்த மாணவி நடந்ததை எல்லாம் தன் பிளாகில் குமுறிக் கொட்டியதை படித்து அமெரிக்காவே திடுக்கிட்டது.
  பாதிக்கப்பட்ட பல மாணவிகள் தங்கள் மவுனத்தை கலைக்க அந்த குமுறல் வழி திறந்து விட்டது. பெயர், முகவரி, கல்லூரி, துறை, சம்பவ இடம், நேரம், புகார் உள்ளிட்ட சகல விவரங்களையும் பகிரங்கப்படுத்தினர் அவர்கள். வல்லுறவு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உதவ நன்கொடை வசூலித்து வலைதளம் தொடங்கினர் மாணவர்கள். கட்டணம் வாங்காமல் அவர்களுக்காக ஆஜராக நாடெங்கும் பல வக்கீல்கள் கைதூக்கினர். ஆர்ப்பாட்டங்கள் பரவின.

  இன்றைய உலகத்தைவிட எதிர்கால உலகம் குறித்து அதிகமாக கவலைப்படும் அதிபர் ஒபாமா, மாணவ சமுதாயத்துக்கு முழு ஆதரவை அறிவித்தார்.
  ‘எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு தந்தைக்கு உரிய எல்லா கவலைகளும் எனக்கும் இருக்கிறது. ரேப் ஒரு சாதாரண குற்றம் அல்ல. ஒரு பெண்ணின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போடக்கூடிய பெரும் குற்றம். அதற்கு எதிராக குரல் கொடுக்கும் துணிச்சல் ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் இருக்க வேண்டும். வாயை மூடிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டச் சொல்லும் நலவிரும்பிகளின் அறிவுரைகளை காதிலேயே போட்டுக் கொள்ளாதீர்கள்’ என்று ஊக்கம் அளித்தார் ஒபாமா. தன் பங்குக்கு, இந்தக் கொடுமைக்கு முடிவுகட்ட கடுமையான நடவடிக்கைகள் வர இருப்பதாகவும் சொன்னார்.

  சொன்னதை செய்தார். அதிகமாக பாலியல் குற்றங்கள் நடந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் ஒன்றை புதன்ன்று வெளியிட்டார். அதில் 55 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. ஒபாமா படித்த பிரபலமான பல்கலைக்கழகங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. ஹார்வர்ட், கலிஃபோர்னியா, மிஷிகன், பிரின்ஸ்டன், அரிசோனா, சிகாகோ, ஃப்ளாரிடா என உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் வெள்ளை மாளிகை அறிவித்துள்ள விசாரணை வரம்புக்குள் வந்திருக்கின்றன. வல்லுறவு தொடர்பான புகார்கள் மீது போதிய நடவடிக்கை எடுக்க தவறியதாக இவை கண்டறியப்பட்டுள்ளன.

  ஒபாமாவின் அதிரடி அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையையும், கல்வி நிறுவன நிர்வாகங்களில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பெரிய குழு ஒன்றை ஒபாமா அமைத்துள்ளார். அது விசாரணை நடத்தி அறிக்கை தர 90 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

  அங்கு இங்குமாக பாலியல் குற்றங்கள் நடப்பதாக செய்திகள் கசிய ஆரம்பித்த 1980களிலேயே ரேப் என்ற வார்த்தை கல்லூரி நிர்வாகங்களுக்கு அலர்ஜியாக இருந்தது. தங்கள் நிறுவனத்தில் படிக்கும் ஒரு மாணவன் மீது ரேபிஸ்ட் முத்திரை குத்தப்படுவதை அவை விரும்பவில்லை. நிறுவனத்தைதான் அது பெரிதும் பாதிக்கும் என்பது முக்கிய காரணம். எனவே, செக்சுவல் அப்யூஸ் என்ற வார்த்தையை உருவாக்கினார்கள்.

  கத்தோலிக்க சாமியார்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் அந்த வார்த்தை பிரபலமானதால் அதை கைவிட்டு இன்னொரு சொல்லை அறிமுகம் செய்தனர். ‘நான்கான்சென்சுவல் செக்ஸ்’. சம்மதமில்லாத உடலுறவு என்ற பொருள் தரும் அந்த வார்த்தை இப்போது கல்வி வளாகங்களில் வல்லுறவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ரேப் என்ற வார்த்தைதான் அந்த செயலின் வக்கிரத்தையும் அக்கிரமத்தையும் வன்முறையையும் பிரதிபலிக்கிறது; எனவே, வேறு எந்த வார்த்தையை பயன்படுத்தினாலும், ‘என சொல்லப்படும் ரேப்’ என்று உடன் சேர்க்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கோருகின்றன.

  யேல் யுனிவர்சிடியில் சென்ற ஆண்டு 4 பாலியல் குற்றங்கள் மீது விசாரணை நடந்தது. ஒரு மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டான். 3 பேரை படிப்பு தொடர அனுமதித்தது நிர்வாகம். ஆண்டறிக்கையில் இது இடம்பெற்றது. அதை படித்த ஊடகர்கள் செய்தியாக்கினர். பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யேல் நிர்வாகம் தடாலடியாக ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.

  சம்மதமில்லாத உடலுறவில் எத்தனை வகைகள் உள்ளன, எந்த எந்த குற்றத்துக்கு என்ன தண்டனை என்பதை விலாவாரியாக விளக்கியிருந்தது. அதில் சுட்டிக் காட்டப்பட்ட அனைத்து சம்பவங்களும் அந்த பல்கலைக்கழக வளாகங்களில் நடந்து விசாரிக்கப்பட்டவை. ‘குற்றவாளிகளை தண்டிக்காமல் விடமாட்டோம். ஆனால், குற்றத்தின் தன்மைக்கு ஏற்றபடிதான் தண்டனை’ என்று நிர்வாகம் சொன்னது.

  ’வாலிப பருவத்தில் பசங்க அதெல்லாம் செய்யத்தான் செய்வார்கள். அதுக்கு மரண தண்டனையா கொடுக்க முடியும்?’ என்று முலாயம் சிங் கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது.

  பின்குறிப்பு: அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு லட்சம் பேர் இந்தியர்கள்.

  (இழு தள்ளு 25/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 11.05.2014)
  1509273_822563767771201_2089649643210206418_nKathir Vel

  Advertisements
   
 • Tags: , , , , , , , ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: