RSS

தஞ்சை வளநாடு கல்லுடைத்து

18 May

10295809_847801755247402_6582565109773327935_nஅக்னி நட்சத்திரம் தொடங்கிய நேரத்தில் கோடைமழை பெய்து குளிர்வித்தது. சென்ற ஆண்டை போலவே சமாளித்து விடலாம் போலிருக்கிறதே என்று நம்பிக்கை துளிர்த்த வேளையில் மழை நின்றது. வெப்பம் அனலாக உருமாறியது. குடிநீருக்கு தட்டுப்பாடு வராது என்று அடித்துச் சொல்ல அதிகாரிகளுக்கு துணிவில்லை.

அவர்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 10 சதவீதம் வரை குறைவாக மழை பெய்யும் என்று கடந்த மாதமே கணிப்பு வெளியாகிவிட்டது. மழை வரும் என்ற கணிப்புகூட தேர்தல் கணிப்பு போல பொய்யாகலாம். வராது என்ற வார்த்தை அப்படியே பலிக்கும்.
ஒரு இடத்தில் மழை குறையும்போது இன்னொரு இடத்தில் மழை கொட்டும். அதனால் நிரம்பும் ஏரி, குளம், அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மழையால் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு கைகொடுக்கும். இது நமது நாட்டில் காலம் காலமாக நடந்து வரும் இயற்கை பரிபாலனம். சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்த பிறகும் காவிரி நீரை திறந்துவிடாமல் கர்நாடகா அடம் பிடிக்கும்போது, அப்படித்தானே வருணன் பலமுறை தமிழகத்தை காப்பாற்றியிருக்கிறார்.

 • ஆனால் இந்த தடவை கர்நாடகாவிலும் மழை குறையப்போகிறது. இப்போது கோடைமழை அங்கே சில இடங்களில் பெய்கிறது. சத்தியமங்கலம் காடுகளில் பெய்யும் மழையால் பாலாறில் பெருகும் நீர் மேட்டூருக்கு வருகிறது. இது தொடரப்போவதில்லை. மற்றபடி காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை வழக்கமான அளவில் இருக்காது. தமிழகத்தை காட்டிலும் அங்கே மழையின் அளவு வெகுவாக குறைந்திருக்குமாம். ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வுமையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அவர்கள் இந்த முடிவுக்கு வர காரணமான புள்ளிவிவரங்கள், செயற்கைக்கோள் படங்கள் எல்லாம் இந்திய வானியல் ஆய்வு மையத்துக்கும் கிடைத்திருக்கும். ஆனால் அரசு அதிகாரிகள் மேலிடத்தின் ஒப்புதல் இல்லாமல் ஆரூடம் சொல்லக்கூடாது.

  ஆறு லட்சம் காவிரி டெல்டா விவசாயிகளின் நிலைமை மோசமாக பாதிக்கப்படும். விவசாய பிரதிநிதிகள் விஷயம் தெரிந்தவர்கள். மேட்டூரில் 35 அடி நீரை வைத்துக் கொண்டு, ஜூன் 12ல் அணை திறப்பு சாத்தியமில்லை என்பது தெரியும். கர்நாடகா அதற்குள் 10 டிஎம்சியாவது திறந்துவிட்டால்தான் குறுவை சாகுபடியை தேற்ற முடியும். சென்ற ஆண்டில் எட்டு லட்சம் ஏக்கருக்கு பதில் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவையை சுருக்கிக் கொள்ள நேர்ந்தது. இம்முறை என்ன செய்வதென்று மத்தியில் அமையும் புதிய அரசை பார்த்தால்தான் அவர்களால் முடிவெடுக்க முடியும். பிஜேபி பெரும்பான்மை பெற முடியாமல் போனால்தான் கூட்டணி அமைச்சரவையில் அதிமுக இடம் பெற முடியும். எனினும் அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள், கர்நாடகாவில் பிஜேபிக்கு கிடைக்கும் எண்ணிக்கையை பொருத்து மாறுபடும்.

  என்றாலும், டெல்டா மாவட்டங்களில் மவுனமாக நடந்துவரும் மாற்றத்தை பார்த்தால், காவிரி பிரச்னைக்கு யாரும் எதிர்பாராத புது வழியில் தீர்வு கிடைத்துவிடும் போல் தெரிகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாரம்பரியமான விவசாய நிலங்கள் மிக வேகமாக ரியல் எஸ்டேட் திமிங்கலங்களின் கைக்கு சென்று கொண்டிருக்கிறது. எப்போதுமே பிசியாக காணப்படும் சென்னை நகர பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஈடாக தஞ்சையிலும் வெகு சுறுசுறுப்பாக பத்திரபதிவுகள் நடப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

  வளமான வயல்களையும் தூர்க்கப்பட்ட ஏரி குளங்களையும் பிளாட் போட்டு விற்கும் கொடுமை தமிழகத்தில் தொடங்கி பலகாலம் ஆகிவிட்டது. ஏனைய மாவட்டங்களில் அந்த வேலை ஏறக்குறைய முடிந்த நிலையில், டெல்டா பக்கம் பார்வையை திருப்பியுள்ளனர் ரியல் எஸ்டேட் புள்ளிகள். இன்னும் சொல்லப்போனால் எல்லா மாவட்டங்களிலும் நில பதிவுகள் சென்ற ஆண்டைவிட குறைந்துள்ளது. சென்னையிலும் தஞ்சையிலும் மட்டும் பதிவுகள் ஏறுமுகமாக உள்ளன. வளம் கொழிக்கும் தஞ்சை மண்ணில் நிலம் விற்பனைக்கு என்ற விளம்பரங்கள் உள்ளூர் பத்திரிகைகளைவிட டெல்லி, மும்பை பத்திரிகைகளிலும் இன்டர்நெட்டிலும் அதிகமாக வெளியாகின்றன. அதை பார்த்துவிட்டு டெலிபோனில் தொடர்பு கொண்டால், உரையாடல் நெஞ்சை உலுக்கி விடுகிறது.

  ’தலைமுறை தலைமுறையாக சோறு ஓட்ட நிலத்தை விற்க மனமில்லைதான். ஆனால் காவிரி நீரும் கிடையாது, நிலத்தடி நீர் எடுக்க முன்சாரமும் கிடையாது, ஜகஜாலம் செய்து பயிர் வைத்தாலும் வயல்வேலைக்கு கூலியாள் கிடையாது. எத்தனை காலம்தான் நிலத்தை காயவிடுவது? பிழைப்புக்கு வேறு என்ன செய்வது? விவசாயம் தவிர எதுவுமே தெரியாமல் வளர்ந்து விட்டோமே?’ என்று நில உரிமையாளர் கேட்கும்போது, வேளாண்மையையும் விவசாயிகளையும் போற்றிப்பாடும் கவிதை வரிகளெல்லாம் வரிசையாக மனதில் அணிவகுத்து சென்றன. பரம்பரை குடும்ப சொத்தான நிலத்தை விற்பது பாவம் என்ற குமுறல் இப்போதெல்லாம் திருக்காட்டுப்பள்ளி – திருவையாறு பெல்ட்டை தாண்டி கேட்பதில்லை என்று எழுதுகிறார் ஒரு ஆங்கில நாளேட்டின் நிருபர்.

  ரியல் எஸ்டேட் ஆசாமிகள் விளை நிலங்களை ஸ்வாஹா செய்வதாக பரவும் தகவல் மிகைபடுத்தப்பட்டது என்கிறார், ஒரு விவசாயி. ‘ஆந்திரா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்யும் செய்திகள் தினந்தோறும் வருகின்றன. அந்த நிலைமைக்கு போகாமல் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள தஞ்சை விவசாயி நிலத்தை பறிகொடுக்கிறான். அவன் தெரிந்து செய்யும் தவறு. ஆண்டவனும் ஆள்பவனும் கைவிட்டால் அவனுக்கு நாதியேது?’ என்று கேட்கிறார்.

  தமிழகத்தில் 2001ம் ஆண்டில் 62.26 லட்சம் ஹெக்டேரில் வேளாண் சாகுபடி நடந்த்து. பத்து ஆண்டுகளில் அந்த பரப்பு 57.56 லட்சம் ஹெக்டேராக சுருங்கிப் போனது. கடந்த மூன்றாண்டுகளில் அது இன்னமும் வேகமாக குறைந்திருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. 2050ம் ஆண்டில் தமிழக மக்களின் பசியை தீர்க்க 24.30 கோடி டன் உணவு தானியங்கள் தேவைப்படும். அதாவது இன்றைய உற்பத்தியைவிட 53 சதவீதம் அதிகம் தேவை. ஆனால் தானிய உற்பத்தி செய்யும் நிலத்தின் அளவு குறைந்து கொண்டே போகிறது. இது எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டுவிடும் என்பதை யாரும் முழுமையாக உணர்ந்ததாக தெரியவில்லை.

  தென்னிந்தியாவின் தானியக்கிடங்கு என்று புகழப்பட்ட தஞ்சையில் கதி பயமுறுத்துகிறது. காவிரி நீர் பங்கீடு பெரிய விவகாரமாக மாறியதில் இருந்தே அந்த புகழுக்கு ஆபத்து தொடங்கிவிட்டது. அரசும் சுதாரித்துக் கொண்டு, விளை நிலங்களை வேறு உபயோகத்துக்கு மாற்றுவதை கட்டுப்படுத்த சட்டங்களை திருத்தியது. ‘இந்த நிலத்தில் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை. சில ஆண்டுகளாக வேளாண்மை நடக்காமல் நிலம் காய்கிறது. அதை காப்பாற்ற வழியில்லை’ என்று தாசில்தார் பார்வையிட்டு சான்றிதழ் கொடுத்தால் வேறூபயோகத்துக்கு மாற்ரலாம், விற்கலாம் என இருந்த விதி, கலெக்டர் பார்த்து சான்றிதழ் அளித்தால்தான் முடியுமென திருத்தப்பட்டது. தாசில்தாரை சரிக்கட்டவோ மிரட்டவோ சாத்தியம் உண்டு; கலெக்டரை ரியல் எஸ்டேட்காரர்கள் மிரட்ட முடியாது என்ற நம்பிக்கையில் செய்த திருத்தம். எத்தனை பேரின் வயலுக்கு கலெக்டர் நேரில் செல்ல முடியும்? தாசில்தார் தலைக்குதான் பாரம் திரும்புகிறது.

  விளை நிலத்தை இண்டஸ்ட்ரியல், கமர்ஷியல், எஜுகேஷனல், ரெசிடென்ஷியல் உள்ளிட்ட 6 பிரிவுகளுக்கு மாற்றலாம். முறையான அனுமதிகளை பெற்று இந்த மாற்றத்தை செய்யலாம் என சட்டம் சொல்கிறது. யார் கேட்கிறார்கள்? டெல்டா பகுதி சாலைகளில் இருபுறமும் பில்லர்கள் போட்டு அடித்தளம் அமைத்து குடியிருப்புகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே முளைக்கும் பெயர் தெரியாத ஃபேக்டரிகளுக்கு சுற்றுச் சுவர் கட்ட கல் உடைக்கும் வேலை ஜரூராக நடக்கிறது.

  சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிர்வாகிகளிடம் பேசும்போது, அவர்கள் முதலாளிகளல்ல; சென்னை பெங்களூர் போன்ற இடங்களில் செயல்படும் மிகப்பெரிய பில்டர்களின் ஏஜென்டுகள் என்பது புரிகிறது. அரசுத் துறைகளின் ஒப்புதல் வாங்காமல் கட்டினால் சிக்கல் வராதா என கேட்டதற்கு, ’சென்னையில் மட்டும் ஒரு லட்சம் கட்டடங்கள் எந்த ஒப்புதலும் பெறாமல் கட்டப்பட்டவை. தமிழகம் முழுவதும் பல லட்சம் கட்டடங்கள். எந்த அரசு வந்தாலும் எந்த கோர்ட் என்ன உத்தரவு போட்டாலும் கட்டடங்களுக்கு ஆபத்து வருவதில்லை. பிறகென்ன?’ என்கிறார்கள் சகஜமாக.

  ஒருவனின் நஷ்டம் இன்னொருவனுக்கு லாபம் என்ற தத்துவம் எந்த தொழிலுக்கும் பொருந்துகிறது.

  (இழு தள்ளு 28/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 22.05.2014)
  1509273_822563767771201_2089649643210206418_nKathir Vel

  Advertisements
   
 • Tags: , , , , , , , , , ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: