RSS

ஆளுக்கொரு பாடம்

23 May

1184759_850644248296486_6623685932769302007_n
by கதிர் வேல்
———–
நம்மை பொருத்தவரை பளிச்சென்று தெரியும் ஒரு மிகப்பெரிய மாற்றம் இது: மத்தியில் அமையும் புதிய அரசுக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
குறுகிய காலம் அதிமுகவும், நீண்டகாலம் திமுகவும் மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இருந்தன. பாமக, மதிமுக போன்ற சிறிய கட்சிகள்கூட இடம் பெற்றிருந்தன. அது முடிவுக்கு வந்துவிட்டது. ஒரேயொரு பிஜேபி எம்.பி.யான ராதாகிருஷ்ணனும், ஒரேயொரு பாமக எம்.பி.யான அன்புமணியும் அமைச்சர் பதவி பெற்றாலும் ஒப்புக்கு சப்பாணி போல அது ஒரு அடையாள பிரதிநிதித்துவமாக மட்டுமே பார்க்கப்படும்.

எதிர்க்கட்சிகளை அடியோடு ஒழித்துக்கட்டி, மொத்த இடங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றிய மாநிலங்களின் பட்டியலை பாருங்கள். ஆளும் கட்சியாகவும் பிரதான எதிர்க்கட்சியாகவும் செயல்பட்ட கட்சிகளின் தலைவர்களை தே.ஜ.கூட்டணி மண் கவ்வ வைத்த மாநிலங்களை கவனியுங்கள். பகீரென்று ஒரு ஒற்றுமை புலப்படும்.

எல்லாமே இந்தி பேசும் மாநிலங்கள்.

 • மராத்தியும் குஜராத்தியும் இந்தியில் இருந்து பெரிதாக வேறுபடும் மொழிகள் அல்ல. ஆகவே அவற்றையும் இ.பே.மா பட்டியலில் இணைத்தது குற்றமாகாது. நாட்டின் வடக்கும் மேற்கும் கைகோர்த்து பிஜேபிக்கு வரலாறு காணாத வெற்றியை வழங்கி நரேந்திர மோடியை பிரதமர் நாற்காலியில் அமர்த்தியுள்ளன. இந்தி பேசாத தெற்கும் கிழக்கும் இந்த சுழலில் சிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளன. இங்கே ஜெயலலிதாவும் அங்கே மம்தா, நவின் பட்நாயக் ஆகியோரும் கோட்டைக்குள் ஊடுருவல் நிகழாமல் தடுத்துள்ளனர்.

  மேற்கு வங்கத்தில் 2 இடங்களில் பிஜேபி வென்றுள்ளது. டார்ஜிலிங் வழக்கமாக திருணாமுல் காங்கிரசுக்கு தொல்லையான தொகுதி. அங்கு அலுவாலியா வென்றிருப்பதை மம்தா பின்னடைவாக்கருதவில்லை. ஆனால்,அசன்சால் தொகுதியில் 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அவரது வேட்பாளர் பிஜேபியிடம் தோற்றிருப்பதில் சதி நடந்திருப்பதாக நம்புகிறார். தேர்தல் கமிஷன் மீது அவருக்கு கோபமில்லை. தனது கட்சிக்குள் உள்குத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகம். விசாரணைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதேபோல தமிழகத்தின் கன்னியாகுமரியில் பிஜேபியைவிட அதிமுகவுக்கு 2 லட்சம் ஓட்டுகள் குறைவாக கிடைத்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதில் அரசியல் சதி நடந்திருக்கலாம் என்று அதிமுக மேலிடம் கருதுகிறது. தர்மபுரி தொகுதியின் ஓட்டு வித்தியாசமும் அதிமுகவை யோசிக்க வைத்திருக்கிறது. விசாரணையில் வில்லங்கமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்போது சில தலைகள் உருளலாம்.

  பிஜேபிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போயிருந்தால் ஜெயலலிதாவுக்கும் மம்தாவுக்கும் டெல்லியில் நிறைய வேலை இருந்திருக்கும் என்பது உண்மை. ஆனால், பிஜேபி அசுர பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துவிட்டதால் இந்த இரு தலைவர்களும் பெற்ற வெற்றி வீணாகிவிட்டது என்பது அரசியல் புரியாதவர்களின் கணிப்பு. நாடாளுமன்ற மேலவையில் பிஜேபிக்கு பலமில்லாத நிலையில், மாநிலக் கட்சிகளின் ஒத்துழைப்பு அதிகமாகவே தேவைப்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே மோடி அதை சமாளித்தாக வேண்டும்.

  மோடியின் பிரசார உத்திகள் குறித்து நிறையவே எழுதப்பட்டு விட்டது. கடைசிக் கட்டமாக தேர்தல் நடந்த உ.பி., பிகாரை வலையில் வீழ்த்த அமித் ஷா உள்ளிட்ட அவரது தளபதிகள் கையாண்ட வழிமுறைகள் தடாலடியானவை. இலக்கை எப்படியாவது எட்டிவிட துடிப்பவர்கள் தெரிந்தே துணியக்கூடிய விதிமீறல்கள் உண்டு. இலக்கை அடைந்த பின்னர் செய்யக்கூடிய நல்ல காரியங்களால் பழியை துடைத்துவிடலாம் என்ற நம்பிக்கை. பிஜேபியும் அந்த சபலத்துக்கு ஆளானது ஏமாற்றம் அளித்தாலும், இந்திய அரசியலில் இவ்வாறு நடப்பது இது முதல்முறை அல்ல.

  பிஜேபிக்கு கிடைத்திருக்கும் மகத்தான வெற்றியைவிட நாட்டில் அதிகமாக விவாதிக்கப்படுவது காங்கிரஸ் கட்சி சந்தித்திருக்கும் வரலாறு காணாத தோல்விதான். பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி பெரிதாக எதுவும் சாதிக்காவிட்டால்,மக்கள் அதற்கு ஓய்வு கொடுப்பது இயல்பானது. ஆனால், அடித்து உதைத்து .அடையாளம் காண முடியாத அளவுக்கு காயப்படுத்தி அனுப்புவது ஓய்வெடுக்க அல்ல. அது தண்டனை. கடுமையான தண்டனை. கைப்பற்றிய இடங்கள் கேவலமானதாக இருந்தாலும், கிடைத்த ஓட்டுகள் சதவீதம் ஆறுதல் அளிக்கிறது என்று சமாதானம் சொல்வது அவமானம். அந்த ஓட்டுகள் காங்கிரஸ் கட்சி மீதுள்ள நல்லெண்ணத்தில் கிடைத்தவை என்று நம்ப எந்த முகாந்திரமும் கிடையாது. பிஜேபி, கம்யூனிஸ்டுகள், ஆமாத்மி போன்ற எந்தக் கட்சியையும் நம்பத் தயாராக இல்லாதவர்கள் வேறு வழியின்றி அளித்த ஓட்டுகளாக இருக்கும். அதாவது போட்டாவுக்கு கொஞ்சம் கம்மி.

  குடும்ப அரசியல் ஆதிக்கம் செலுத்திய அத்தனை கட்சிகளுக்கும் மக்கள் இந்த தேர்தலில் மரண அடி கொடுத்திருப்பதை காங்கிரஸ் மேலிடம் கவனத்தில் கொள்ள வேண்டும். பிகாரில் லாலு பிரசாத், உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங், பஞ்சாபில் பாதல், தமிழகத்தில் கருணாநிதி என வரிசையாக குடும்ப உறுப்பினர்கள் வழிகாட்டுதலில் இயங்கிய கட்சிகள் எல்லாம் சொல்லிவைத்ததுபோல ஒரே தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது இதுதான் முதல்தடவை. இந்த குடும்பங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கியது நேரு – இந்திரா – ராஜிவ் – சோனியா – ராகுல் வம்சம். சோனியா தலைவராக வந்தபோது, பலவீனமாக இருந்த கட்சியில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேறு தலைவர்கள் ஆர்வம் காட்டாததும், ஒருவரைமற்றவர் ஆதரிக்க முன்வராததும் காரணங்களாக சொல்லப்பட்டன. ஆனால் ராகுலை துணைத்தலைவராக நியமித்தபோது துதிபாடிகளின் கோஷங்களை தவிர வேறுவகையான நிர்ப்பந்தங்கள் கிடையாது.

  அதேபோல மன்மோகனை பிரதமராக்கியதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை காங்கிரஸ் மேலிடம் சொல்ல முடிந்தது; ஆனால், அந்த பிரதமர் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட முடியாதது அல்ல அத்தனை முட்டுக்கட்டைகளும் போடப்பட்டதற்கு எந்த நியாயமும் கிடையாது. தேசிய ஆலோசனை குழுவின் தலைமை பொறுப்பில் அமர்ந்து அரசுக்கு வழிகாட்டியாக சோனியா செயல்பட்டதிலும் மேலோட்டமாக நியாயப்பூச்சுக்கு வழி இருந்தது. ஆனால், பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்ல முடியாமல் மன்மோகனுக்கு தடை போட்டதும், பகிரங்கமாக ஊழலில் ஈடுபட்ட கூட்டணிக் கட்சிகள் மற்றும் சொந்தக்கட்சி அமைச்சர்களை கண்டிக்கக்கூட இயலாதவராக பிரதமரை கட்டிப் போட்டதும் மன்னிக்கக்கூடிய குற்றமல்ல. பேச முடியாதவரை செயல்படவும் முடியாதவராக மாற்றிய பிறகு இந்திய அரசு பொம்மை அரசாக மாறிவிட்டது.

  கட்சிக்கும் ஆட்சிக்கும் வித்யாசம் காட்டுவதற்காக வரையப்பட்டிருந்த மெல்லிய கோடும் அழிக்கப்பட்ட பிறகு அரசு நிர்வாகம் என்பது கண்கட்டு வித்தையாக மாறிப்போனது. இத்தனை மாற்றங்களுக்கும் காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாக அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்க அல்லது ஒதுங்கி நிற்க மேலிடத்துக்கு துணிவு வர வேண்டும். ராகுல் காந்தி இன்னும் மாணவனாகத்தான் இருக்கிறார். செமஸ்டரில் சொதப்பினாலும் கோர்ஸ் முடிக்க முடிந்தால் சரி.

  காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்று சொல்லிதான் ஊழல் எதிர்ப்ப்பு இயக்கத்தை ஆம் ஆத்மி பார்ட்டி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றினார் அரவிந்த் கெஜ்ரிவால். அரசியலின் அடிப்படை இலக்கணங்கள் என்ன, அரசியல் நியாயங்கள் என்றால் என்ன என்பதையெல்லாம் புரிந்துகொள்ள முயலாமல் ’இதோ நான் புதிய விதிகளை எழுதுகிறேன்; எல்லோரும் அதன்படி ஆட வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார். அந்த இலக்கணங்களுக்கு உயிர் கொடுக்க டெல்லி மக்கள் வாய்ப்பும் கொடுத்தனர். ஆனால் ஆணவத்தின் உச்சத்தில் அரசியல் பார்வையை இழந்த கெஜ்ரிவால், கைகொடுத்த டெல்லியை தூக்கி எறிந்துவிட்டு இந்தியாவை கைப்பற்ற ஆயத்தமானார். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையாக நாட்டுமக்களால் நிராகரிக்கப்பட்டு கூனிக்குறுகி நிற்கிறார்.

  ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பாட்த்தை புகட்டி இருக்கிறான் இந்திய வாக்காளன். அறிவும் அதன் வழியாக உருவாகும் அடக்கமும் கொண்ட தலைவர்களால் அதை புரிந்துகொள்ள முடியும். ’வெற்றியும் தோல்வியும் அரசியலில் சகஜம், ஏனென்றால் இது ஒரு விளையாட்டு’ என்று அலட்சியமாக கூறுபவர்களை காலம் கவனித்துக் கொள்ளும்.

  (இழு தள்ளு 29 / கதிர் / 25.05.2014)
  1509273_822563767771201_2089649643210206418_nKathir Vel

   
 • Tags: , , , , , ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: