RSS

சந்தன கடத்தல் வீரப்பன், தமிழக நக்சல்பாரிகள், ரஷ்ய – சீன புரட்சிகள் மற்றும் சகுனியின் தாயம்

26 May

‘‘வாட்?’’ வால்டர் ஏகாம்பரம் அதிர்ந்தார். ‘‘சந்தன கடத்தல் வீரப்பனா?’’

‘‘யெஸ்…’’ நிதானமாக பதில் சொன்னான் ஸ்காட் வில்லியம்ஸ்.

‘‘வீரப்பன் எப்ப கம்யூனிஸ்ட் ஆனான்?’’

‘‘ஆனதா நான் எப்ப சொன்னேன்?’’

‘‘இப்பத்தானே அப்படி சொன்னீங்க?’’

‘‘இல்லை. உதாரணம் காட்ட அவன் பெயரை குறிப்பிட்டேன்…’’

‘‘புரியலை…’’

‘‘தெளிவாவே சொல்றேன். சத்தியமங்கலம் காடுகள் அவன் கட்டுப்பாட்டுல இருந்தது…’’

‘‘ஆமா…’’

‘‘தன்னோட இறுதி காலத்துல தமிழ்த் தேசியவாதியா மாறினான்…’’

‘‘ம்…’’

‘‘அப்புறம் விஜயகுமார் தலைமையிலான அணி அவனை என்கவுன்ட்டர் செஞ்சது.

‘‘இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். இதன் மூலமா என்ன சொல்ல வர்றீங்க?’’

 • கேட்ட வால்டர் ஏகாம்பரத்தை உற்றுப் பார்த்தான் ஸ்காட் வில்லியம்ஸ். அவன் உதடுகளில் புன்னகை பூத்தது. ரிவால்விங் சேரில் அமர்ந்தவன், சிகரெட்டை பற்ற வைத்தான். அவருக்கும் ஒன்றை கொடுத்தான். சுருள் சுருளாக புகையை கசியவிட்டவன் நிமிர்ந்தான்.

  ‘‘இனிமே சத்தியமங்கலம் காட்டை எந்த புரட்சிகர அமைப்பாலயும் பயன்படுத்த முடியாது. ஆயுதம் தாங்கிய குழு அங்க பயிற்சி பெற முடியாது. இதுதான் வீரப்பன் நமக்கு செய்த நன்மை…’’

  ‘‘அதாவது அந்தக் காட்டை அவன் காட்டிக் கொடுத்துட்டான்னு சொல்றீங்க…’’

  ‘‘எக்ஸாட்லி. ஒருவேளை நாளை நக்சல்பாரிகள் தமிழகத்துல தலைதூக்கினாலும், ஆயுதக் குழுவை அமைச்சாலும் அவங்களால எங்கயும் பதுங்க முடியாது. தமிழக காடுகள் எப்படி அடர்த்தியா இருக்கு… அது தென் மாநிலங்களோட எப்படி இணைஞ்சிருக்கு… எந்த பாதைல நடமாடணும்… என்னென்ன விலங்குகள் அந்தக் காட்ல இருக்கு… இது எல்லாத்தையும் அவன் அக்குவேறு ஆணிவேறா வெளியுலகுக்கு சொல்லிட்டான். படம் வரைஞ்சு பாகங்களை குறிச்சுட்டான். அதை வைச்சு அரசால அந்தக் காட்டை சுலபமா கண்காணிக்க முடியும்…’’

  ‘‘இதுக்கும் ரங்கராஜனையும், தேன்மொழியையும் சுதந்திரமா நடமாட விட்டதுக்கும் என்ன தொடர்பு இருக்கு?’’

  ‘‘நிறைய. இங்க பாருங்க ஏகாம்பரம்… உலகளவுல கம்யூனிஸ்ட்டுகள் ரஷ்ய & சீன புரட்சிகளைத்தான் குறிப்பிட்டு பேசுவாங்க. இந்த இரண்டு நாடுகள்லயும் நடந்த ஆட்சி மாற்றங்கள் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை தர்றதா சொல்வாங்க. ஆனா, இந்த இரண்டு நாடுகள்லயும் நடந்த போராட்டங்கள், அவங்களை விட கேப்பிடலிசத்துக்குதான் நிறைய பாடங்களை கற்றுத் தந்திருக்கு…’’

  ‘‘அது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?’’

  ‘‘தாராளமா. மக்களை எப்படி கம்யூனிஸ்ட்டுகள் அணி திரட்டறாங்க, எந்த வழிமுறைல போராட்டத்தை முன்னெடுத்துச் செல்றாங்க… இதையெல்லாம் கேப்பிடலிசம் ஒரு பாடமா படிச்சது. விளைவு… சீனாவுக்கு பிறகு வேறு எந்த நாடுகள்லயும் இன்னி வரைக்கும் புரட்சி வெடிக்கலை. கியூபா, வெனிசூலா மாதிரியான ஆப்பிரிக்க நாடுகள்ல நடந்த ஆட்சி மாற்றங்களை கம்யூனிஸ்ட் புரட்சியோட ஒப்பிட முடியாது. திரும்பத் திரும்ப மூன்றாம் உலக நாடுகள்ல இருக்கிற கம்யூனிஸ்ட்டுகள் ஒண்ணு ரஷ்ய பாணி இல்லைனா சீன பாணில போராடறாங்க. இந்த இரண்டு வழிமுறைகளையும் எப்படி தடுத்து நிறுத்தணும்னு அதிகார வர்க்கம் நல்லாவே பாடம் கத்துகிட்டு இருக்கறதால சம்பந்தப்பட்ட நாடுகள்ல புரட்சிகர குழுக்கள் வளரும்போதே கிள்ளி எறிய முடியுது. வியட்நாம்ல அமெரிக்கா தோத்துப் போனதா சொல்வாங்க. ஆனா, அங்க கம்யூனிசமும் ஜெயிக்கலை. இதுதான் முக்கியம்…’’

  ‘‘புரியுது ஸ்காட் வில்லியம்ஸ்…’’

  ‘‘சமீபத்துல நடந்த அரபு புரட்சியையும், வால்ட் ஸ்டீரீட் ஆக்கிரமிப்பையும் எடுத்துக்குங்க. என்ன ஆச்சு? ஒண்ணுமே இல்லை. அரபு நாடுகள்ல ஜனநாயக உரிமைக்காகத்தான் போராட்டம் நடந்தது. சமூக மாற்றத்துக்காக இல்ல. அதே மாதிரி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலா வால்ட் ஸ்டீரீட்டை மக்கள் ஆக்கிரமிச்சாங்க. இதன் மூலமா என்ன சாதிச்சாங்க? ஒண்ணுமே இல்லை. ஏன் தெரியுமா?’’

  ‘‘ஏன்?’’

  ‘‘ஏன்னா, கம்யூனிஸ்ட் கட்சி எங்கயும் வலுவா இல்லை. இனிமேலும் அவங்களால மக்களை பெருமளவு திரட்ட முடியாது. அதுக்கான எல்லா கதவுகளையும் திட்டம் போட்டு அடைச்சாச்சு…’’

  ‘‘அப்ப வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் ஒரு விஷயம் இல்லையா?’’

  ‘‘காமெடி பண்ணாதீங்க வால்டர் ஏகாம்பரம். வறுமையை விட நுகர்வுப் பசிதான் இன்னி தேதில உலக மக்களை ஆட்டிப் படைக்குது. ஆறு மாசத்துக்கு ஒரு செல்ஃபோனை அவன் வாங்கணும். இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை டிவியை மாத்தணும். மூணு மாசத்துக்கு ஒருமுறை புது டிரெஸ் போடணும். இதுதான் இன்னி தேதில மக்கள் சந்திக்கிற பிரச்னை. புரட்சிகர சக்திகளுக்கு எதிரா கேப்பிடலிசம் கண்டுபிடிச்சிருக்கிற மிகப்பெரிய ஆயுதம் இதுதான். இதுக்கு இன்னொரு பெயரும் இருக்கு. அதுதான் உலகமயமாக்கல். கண்ணுக்கு தெரியாத மின்சாரம் மாதிரி நிதிமூலதனம்தான் இன்னிக்கி உலகையே ஆட்சி செய்யுது. ஒளியை விட வேகமா நாடுவிட்டு நாடு… கண்டம் விட்டு கண்டம்… அது பாயுது. இதன் மூலமா உலக நாடுகள் அனைத்தையும் ஒரே வலைப்பின்னலுக்குள்ள கொண்டு வந்தாச்சு. இதனால என்ன லாபம் தெரியுமா? ஒரு நாட்ல அடிச்சா இன்னொரு நாட்ல வலிக்கும். அதனால தனித்தனியா எந்த நாட்லயும் போராட்டம் நடத்த முடியாது. உலகம் பூரா ஒரே நேரத்துல புரட்சி வெடிச்சாதான் சமூக மாற்றம் நிகழும். அப்படியொரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை…’’

  ‘‘அப்புறம் ஏன் கம்யூனிஸ்ட்டுகள் சின்ன அளவுலயாவது ஒவ்வொரு நாட்லயும் இருக்காங்க?’’

  ‘‘ஏன்னா அவங்க உதவி நமக்குத் தேவை. அதனால அவங்களை விட்டு வைச்சிருக்கோம்…’’

  ‘‘எப்படி?’’

  ‘‘ரொம்ப சிம்பிள். கனிம வளங்கள் எங்க எல்லாம் இருக்கு… சுத்தமான தண்ணீர் எங்க கிடைக்கும்… இயற்கையான சூழல் எங்கிருக்கு… அந்த இடங்கள்ல என்ன மாதிரியான மக்கள் வாழறாங்க… அவங்க அடிப்படைத் தேவை என்ன… இதையெல்லாம் கம்யூனிஸ்ட்டுங்க வெளி உலகுக்கு சொல்வாங்க. அதாவது எந்த ஆராய்ச்சியும் செய்யாம எல்லா தகவல்களையும் நமக்குத் தருவாங்க. அப்புறமென்ன… ஜாம் ஜாம்னு அந்த இடங்களை நாம ஆக்கிரமிச்சிடலாம். சம்பந்தப்பட்ட மக்களுக்கு என்ன தேவையோ அதுல கொஞ்சத்தை வீசி எறிஞ்சா போதும். வாலை ஆட்டிட்டு நம்ம பக்கம் வந்துடுவாங்க…’’

  ‘‘ரைட். இப்ப தேன்மொழியும், ரங்கராஜனும் என்ன செய்வாங்கன்னு நினைக்கறீங்க?’’

  ‘‘பிரசாரம் பண்ணுவாங்க. போஸ்டர் ஒட்டுவாங்க. பிட் நோட்டீஸ் விநியோகிப்பாங்க. அவங்க பத்திரிகைல எழுதுவாங்க. துண்டு பிரசுரம் வெளியிடுவாங்க. பொது நிகழ்ச்சி நடத்துவாங்க. ரெட் மார்கெட் பிசினஸ் தமிழகத்துக்கு வந்தாச்சுன்னு அடித்தட்டு மக்கள் மத்தில கொண்டு போய் சேர்ப்பாங்க. ‘மெடிகோ’ நிறுவனம்தான் இதையெல்லாம் செய்யுதுன்னு அடையாளம் காட்டுவாங்க. ஒவ்வொரு உடல் பாகத்துக்கும் எவ்வளவு விலைனு பட்டியல் போடுவாங்க. அதாவது ஒரு பைசா செலவில்லாம நமக்கு விளம்பரம் தேடித் தருவாங்க. நமக்கான வாடிக்கையாளர்கள்கிட்ட நம்மை கொண்டு போய் சேர்ப்பாங்க!’’

  ‘‘பிரில்லியண்ட்…’’ என்று வால்டர் ஏகாம்பரம் வியந்த அதே நொடியில் –

  ரங்கராஜனிடமும், தேன்மொழியிடமும் இதையேதான் கூறிக் கொண்டிருந்தார் தமிழரசன். அவர் வேறு யாருமல்ல, சுகாதாரத் துறை அதிகாரியான ராம் வீட்டில் தேன்மொழி சந்தித்தாளே… அதே பெரியவர்தான்.

  ‘‘இப்படியெல்லாம் நாம செய்வோம்னுதான் ஸ்காட் வில்லியம்ஸ் நினைக்கிறான். ஆனா, நாம வேறொரு நடவடிக்கைல இறங்கப் போறோம். ரஷ்யா, சீனா மாதிரியான கம்யூனிச நாடுகள் பின்னடைவு அடைஞ்சதுலேந்து நாம பாடம் கத்துகிட்டு இருக்கோம். அதனால போராட்ட வழிமுறைகளை மாத்தப் போறோம்…’’
  என்றபடி மத்திய கமிட்டியில் ஒப்புதல் பெறப்பட்ட திட்டத்தை விளக்க ஆரம்பித்தார்.

  *இன்று (26.05.2014) வெளியாகியிருக்கும் ‘குங்குமம்’ வார இதழில் ‘சகுனியின் தாயம்’ தொடரின் 20வது அத்தியாயம் பிரசுரமாகியிருக்கிறது. அதன் ஒரு பகுதி இங்கே…
  1069791_10203199636461314_600854483_n
  கே. என். சிவராமன்

  Advertisements
   
 • Tags: , ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: