RSS

இலங்கை அதிபருக்கு மோடியின் மெசேஜ்

04 Jun

10380356_858112004216377_6267204845005294259_n

10262243_858112177549693_317715389695511340_nமாற்றம் வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். மாற்றம் ஏற்படும்போது அதன் வீச்சு, வேகம், விளைவை புரிந்துகொள்ள தவறிவிடுகிறோம். மனம் அந்த அளவுக்கு பழைய நிலைக்கு பழகிப் போயிருப்பதால் இப்படி. மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபிறகும் மன்மோகன் சிங்தான் இன்னும் பிரதமராக
இருப்பதைபோல நினைத்து செயல்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். வைகோ போல.

ராஜபக்ச வருகையை கண்டித்து டெல்லியில் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, ‘தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வைகோவை கொண்டுவர முதலில் சிபாரிசு செய்த தமிழக பிஜேபி நிர்வாகி யார்?’ என்று விசாரித்திருக்கிறார் மோடி. தனது நிலைப்பாடுகளையும் அணுகுமுறையையும் ஏற்றுக்கொள்ளாத எவரையும் மோடி கண்டுகொள்ள மாட்டார். இது அவர் குஜராத் முதல்வராக வருவதற்கு முன்பே சுவீகரித்துக் கொண்ட குணாதிசயம். இன்று இந்தியாவின் பிரதமர் என்ற ஸ்தானத்தை எட்டிய பிறகு அது பலப்பட்டிருக்குமே தவிர பலவீனமாகி இருக்க வழியில்லை.

 • ராஜபக்சயின் வருகையை வைகோ கண்டித்ததாக மோடி கருதவில்லை. அண்டை நாட்டு அதிபரை டெல்லிக்கு வரவழைத்த தன்னுடைய அழைப்பை வைகோ அவமதிப்பதாக மோடி பார்த்தார். கோபத்துக்கு காரணம் அதுதான். ‘கோடானுகோடி தமிழக மக்களின் உணர்வுகளை’ தான் பிரதிபலிப்பதாக வைகோ சொன்னதை கேட்டு வயிறு குலுங்க அவர் சிரித்திருக்கக் கூடும். விருதுநகர் தொகுதி வாக்காளர்கள் வைகோவை நிராகரித்தது அவர் அறியாத ரகசியமா, என்ன?

  விஷயம் என்ன என்றால், ‘இந்தியா மாறிவிட்டது. நேற்றுவரை நீங்கள் டீல் செய்த பலவீனமான அரசோ பிரதமரோ இப்போது இல்லை. ஆகவே நீங்களும் மாறியாக வேண்டும்’ என்ற மெசேஜை உணர்த்தவே அண்டை நாட்டு அதிபர்கள், பிரதமர்களுக்கு அழைப்பு விடுத்தார் நரேந்திர மோடி. அவர்களுக்கும் அது தெரியும். இதே போன்ற அழைப்பை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் மன்மோகன் விடுத்திருந்தால், இந்த தலைவர்களெல்லாம் தங்கள் செயலாளர் அல்லது ஜூனியர் அமைச்சரை பதவியேற்பு விழாவுக்கு அனுப்பிவிட்டு அவரவர் வீட்டில் அமர்ந்து டீவியில் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்கள். மோடியின் இந்திய அரசு அம்மாதிரியான அவமதிப்பை அமைதியாக ஏற்றுக்கொள்ளாது என்பது தெரிந்து அவர்கள் நேரில் ஆஜராகி இருக்கிறார்கள். மக்கள் செல்வாக்கை இழந்த வைகோ போன்றவர்களின் எதிர்ப்புக் குரலை சாக்கிட்டு ராஜபக்ச வராமல் போயிருந்தால் மோடியின் கோபம் முற்றாக எந்தப் பக்கம் திரும்பி இருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை.

  பதவி ஏற்ற பிறகு ஒவ்வொரு நாடாக சென்று அதன் தலைவரை அறிமுகம் செய்து கொண்டு நமது நிலையை வலியுறுத்தி ஒத்துழைப்பு கோருவது ஒருவகை டிப்ளமசி. பதவியேற்பு வைபவத்தையே வெளிநாட்டு கொள்கை மாற்றத்தின் முதல்படியாக உலக அரங்கில் அறிமுகம் செய்வது புதுவகை ராஜதந்திரம். இந்தியாவில் மோடி அதை முதல் முறையாக செயல்படுத்தி இருக்கிறார்.

  சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய வல்லரசுகளும் அமெரிக்காவின் வாலாக செயல்பட்ட காரணத்தால் அதோடு சேர்ந்து செல்வாக்கு இழந்து வருகின்றன. பிரிக் என குறிப்பிடப்படும் பிரசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவை உருவாகும் உலக சக்திகளாக இனம் காணப்பட்டுள்ளன. எனினும், இவை ஒன்றுக்கொன்று தோழமை பாராட்டும் நிலைமை இல்லை. யாரை பற்றியும் கவலைப்படாமல் சீனா தனது ராணுவ, பொருளாதார பலத்தை பயன்படுத்தி உலகெங்கும் செல்வாக்கை பெருக்கி வருகிறது. ஜனநாயக நாடான அமெரிக்காவின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படாத நடுத்தர நாடுகளும் சிறு நாடுகளும் கம்யூனிச சீனாவின் செல்வாக்கால் மிரண்டு போயிருக்கின்றன. அவை ஒரு மாற்று தலைமையை எதிர்பார்த்து தவம் இருக்கின்றன.

  இந்தியாவால் அந்த தலைமையை வழங்க முடியும் என ஆர்.எஸ்.எஸ் நீண்டகாலமாக சொல்லி வருகிறது. மோடியின் புதிய அவதாரத்துக்கு பிறகு அதை பிஜேபி நம்புகிறது. உலக வல்லரசாக உருவெடுப்பதன் முதல் கட்டம், சொந்த பிராந்தியத்தில் வஸ்தாது என பெயர் வாங்குவது. இந்தியா இன்று அண்டைநாடுகளால் மதிக்கப்படவில்லை. நாம் சொல்வதை இலங்கை, வங்கதேசம் போன்ற சிறுநாடுகள்கூட காதில் வாங்குவதில்லை. இதன் காரணம் என்னவென்று அறிய கஷ்டப்பட வேண்டியதில்லை. பத்தாண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி.

  சொந்த நாட்டில் உள்ள மாநில அரசுகளும் கட்சிகளுமே மதிக்காத ஒரு ஆட்சியை அண்டைநாடுகள் எப்படி மதிக்கும் என்ற கேள்வியை மோடி 2009லேயே எழுப்பினார். எனக்கு 300+ எம்.பி.க்கள் வேண்டும் என அவர் குரல் கொடுத்ததன் பின்னணி அதுவே. அவர் விரும்பியது போலவே பிஜேபிக்கு தனிப் பெரும்பான்மையை இந்திய மக்கள் வழங்கியிருக்கிறார்கள். பலமான மத்திய அரசை உருவாக்க அதை அவர் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்.

  தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே கூட்டணிக் கட்சி வேட்பாளரான அன்புமணிக்கு அமைச்சர் பதவி கேட்டும் கொடுக்கவில்லை. மாபெரும் வெற்றி பெற்ற சிவசேனாவுக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவி. சிவசேனா எதிர்ப்பை மீறி பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு. தமிழக கூட்டணி கட்சிகள் மற்றும் முதல்வரின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் இலங்கை அதிபருக்கு அழைப்பு. இதெல்லாம் மாநில அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட சக்தி மிகுந்த அமைப்பு மத்திய அரசு என்பதை வெளிச்சமிட்டு காட்ட அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள்.

  அந்த மாநிலத்தில் அவர்கள் எதிர்க்கிறார்கள், இங்கே இவர்கள் கொடி பிடிக்கிறார்கள் என்ற தகவலை வெளியுறவு துறை ஃபைல் போட்டு அனுப்பியபோது, இது உங்கள் வேலை அல்லவே என்று கேட்டிருக்கிறார் மோடி. ‘இதையெல்லாம் உள்துறை பார்த்துக் கொள்ளும். நீங்கள் வெளிநிலைமைகளை மட்டும் பாருங்கள்’ என்ற அவரது ஆணைக்கு வேறு உள்ளர்த்தம் இருக்கிறதோ என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள் டெல்லி ராஜதந்திரிகள்.

  ‘தமிழ்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியும் மத்திய அரசு இப்போது கிடையாது. எனவே, உங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றி தலையிட மாட்டோம். ஆனால் அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கையை நீங்கள் உள்நாட்டு விவகாரமாக சித்தரிக்க அனுமதிக்க முடியாது. அவர்களின் மறுவாழ்வுக்கும் சட்டரீதியான உரிமைகளுக்கும் வழிசெய்தாக வேண்டிய கடமையில் இருந்து நீங்கள் தப்ப முடியாது’ என்று ராஜபக்சயிடம் மோடி தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்.

  இலங்கை தமிழர்களை நாம் சிறுபான்மை என குறிப்பிடுகிறோம். இலங்கை அரசும், சிங்கள பெரும்பான்மை மக்களும் அவ்வாறு கருதவில்லை. அவர்கள் இலங்கை தமிழர்களை இந்தியாவின் ஏழரை கோடி தமிழர்களின் எக்ஸ்டென்ஷனாக பார்க்கிறார்கள். அதனால் ஒரு பயம். அது உருவாக்கும் சந்தேகம். அதன் விளைவான பாரபட்சம் அவர்களின் நடவடிக்கைகளில் எதிரொலிக்கிறது. அந்த அச்சத்தை போக்க புதிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சரியான ஆள் என மோடி நம்புகிறார். இலங்கை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் அந்த நம்பிக்கையை பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்.

  ‘இலங்கையை பிரித்து ஈழம் உருவாக்கும் திட்டத்துக்கு பிஜேபி அரசு ஒருக்காலும் ஆதரவு அளிக்காது. அதேசமயம், தனிநாடு கோரும் சில தீவிரவாதிகளை காரணம் காட்டி, சம உரிமையோடு வாழ சம்மதிக்கும் தமிழர்களை அரசு புறக்கணிக்கக்கூடாது. அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள், போதும்’ என சுஷ்மா 2012லேயே ராஜபக்சவிடம் நேரில் சொல்லியிருக்கிறார். இதை ராஜபக்சவுக்கு நினைவுபடுத்திய மோடி, இந்தியாவின் நியாயமான இந்த கோரிக்கையை ஏற்காமல் சீனாவுடன் நெருங்கிச் செல்வது போல ஒரு தோற்றத்தை இலங்கை உருவாக்கினால் அதன் விளைவுகள் வேறுமாதிரி அமைந்துவிடும் என்று நாசூக்காக எச்சரித்துள்ளார். அதற்கே ராஜ்பக்ச முகம் சுருங்கி விட்டது.

  தொலைதூரத்தில் உள்ள அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதிலும் அங்கிருந்து இறக்குமதி செய்வதிலும் காட்டும் ஆர்வத்தை அண்டை நாடுகள் விஷயத்தில் நமது தொழிலதிபர்கள் காட்டாததற்கு என்ன காரணம் என்று மோடி கேட்கிறார். தொழில், வர்த்தகம் மூலம் இந்த நாடுகளுடன் உறவை பலப்படுத்த அவர் ஆர்வமாக இருக்கிறார். தெற்காசிய நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம் வெறும் 2,000 கோடி டாலர்தான். நமது மொத்த வர்த்தகத்தில் இது இரண்டரை சதவீதம் மட்டுமே. இதை பெருக்க வேண்டுமானால், அண்டைநாட்டு மக்கள் மனதில் இந்தியா தொடர்பான நல்லெண்ணத்தை உருவாக்குவது அவசியம். அதற்கான முதல் படியில் மோடி அடியெடுத்து வைத்திருக்கிறார்.

  சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ராஜபக்சவை நிறுத்தும் முயற்சிக்கு மோடி அரசின் நடவடிக்கைகள் தடையாக அமையாதா? இந்த கேள்வி உதாசீனம் செய்யக்கூடியது அல்ல. எனினும், இதில் பிஜேபியின் நிலைப்பாடு வைகோ போன்றவர்கள் ஆறுதல் அடையும் வகையில் இல்லை. இலங்கையில் நடந்ததுஇன ஒழிப்பு என்பதை அக்கட்சி ஏற்கவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையாக அதை பார்க்கிறது. அதில் இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல், அத்துமீறல் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நியமித்த குழுவின் பரிந்துரைகள் மீது ராஜபக்ச நடடிக்கை எடுக்க வேண்டும் என சுஷ்மா எதிர்பார்க்கிறார்.

  ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்க கோரும் தீர்மானம் இந்தியா ஆதரித்தால்கூட நிறைவேறப் போவதில்லை. இலங்கையின் புதிய நண்பர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். உச்சகட்ட போரில் இலங்கை ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த ஒன்றுசேராத உலக நாடுகள் அந்நாட்டு அதிபரை தண்டிக்கும் முயற்சிக்கு மட்டும் எவ்வாறு ஒத்துழைக்கும் என பிஜேபி கேட்கிறது. ‘சில கட்சிகள் நடந்ததை மட்டுமே நினைத்து புலம்புகின்றன. பிஜேபியோ இனி நடக்க வேண்டியதை எண்ணி செயல்படுகிறது’ என்றார் அக்கட்சியின் தேசிய நிர்வாகி ஒருவர்.

  யாரை சொல்கிறார், புரிகிறதா?

  (இழு தள்ளு 31/ கதிர்/ குமுதம்ரிப்போர்ட்டர் 01.06.2014)
  1509273_822563767771201_2089649643210206418_nKathir Vel

  Advertisements
   
 • Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: