RSS

காம அரசியல், காமத்தின் அரசியல், காமமே அரசியல்

26 Jun

10354661_10204189397284716_5568686845516892293_nசற்றே நீளமான கட்டுரைக்காக முதலில் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுகிறேன். இந்தக் கட்டுரையை எழுத தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. காமமானது அரசியலாக எப்போது உருவாக ஆரம்பித்தது என ‘ரூம் போட்டு யோசித்தபோது’ தோன்றிய விஷயங்களை வைத்து நண்பர்களுடன் உரையாடலாம் என்று தோன்றியது. அதனால்தான் இந்தக் கட்டுரை. மற்றபடி எதுவுமே இறுதி முடிவல்ல என்பது இதற்கும் பொருந்தும்.

உடலை குறித்து அறிய நிர்பந்திக்கப்பட்ட போதே காமம் குறித்த அரசியலும் என் மீது திணிக்கப்பட்டு விட்டது. 1990களில் வெளியான ‘கர்நாடகமுரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஒரு அமைப்பியல் ஆய்வும்’ என்ற நான் லீனியர் சிறுகதை தொகுப்பும், அதில் நாகார்ஜுனன் மொழிபெயர்த்திருந்த ஃபூக்கோவின் தன் நேர்காணலும் (வ்வாழ்வைத் தாண்டிய சொல்லாடல்) மாற்று உரையாடலை நோக்கி நகர்த்தின.

பாலியல் நடத்தையும், அதைச் சார்ந்த செயல்பாடுகளும், சுகங்களும் ஏன் ஒழுக்கவியல் விசாரணைக்குரிய பொருட்களாயின? இதற்கு ஏன் இத்தனை அறவியல் கவலை? எப்போது, எவ்வாறு, ஏன், இந்த பாலியல் வடிவங்கள் ஓர் ஒழுக்கவியல் மையமாக கட்டப்பட்டன? இதை ஏன் பிரச்னை மையமாக பார்க்க வேண்டும்? எப்போது முதல் இந்தவகையான பார்வை ஆரம்பித்தது?

 • பின் தொடரும் இந்த கேள்விகளுக்கான விடையை தேடி பயணித்ததில், எட்டுத் தொகையும், பத்துப்பாட்டும் வரை செல்ல முடிந்தது. அதாவது கி. மு. 3ம் நூற்றாண்டு முதல், கி. பி. 2ம் நூற்றாண்டு வரையான 5 நூற்றாண்டுகள். அதற்கு முந்தைய காலம் குறித்த பிரதி இல்லை என்பதால் எட்டுத் தொகை, பத்துப்பாட்டை வைத்து அதற்கு முன்னால் இருந்த சூழலையும், அந்த கால கட்டத்தையும், அதற்கு பின்னால் வரக் கூடிய காலகட்டத்தின் கூறுகளையும் – அறிய முடிகிறது.

  அப்படி பார்க்கும்போது தமிழனாகவும், தமிழ் நிலப்பரப்பை சேர்ந்தவனாகவும் அடையாளம் காணப்படும் என் காமத்தின் ஆதி எப்படி இருந்தது?

  இதை குறித்து தெரிந்து கொள்ள முயலும்போதே, ஆதிதமிழர்களின் உடல்கள் நடமாடிய நிலப்பரப்பு குறித்தும் பார்த்துவிடுவது மேலதிக புரிதலுக்கு வழிவகுக்கும். எந்தப் பொருளுமே புறப் பொருளின் தூண்டுதல், அல்லது மோதலால் மாற்றமடைகிறது அல்லது உருமாறுகிறது என்னும்போது எட்டுத் தொகையும், பத்துப்பாட்டும் உற்பத்தியான காலகட்டத்தில் இருந்த புறப் பொருட்கள் என்னென்ன?

  வடவேங்கடம், தென்குமரி, குட (மேற்கு) கடல், குண (கிழக்கு) கடல் ஆகிய நான்கு எல்லைகளுக்குள் இருந்த நிலப்பரப்பில் அப்போது தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் சம காலத்திலும், அதற்கு முன்னரும் – பின்னரும் வடக்கே இமயத்தை எல்லையாகக் கொண்ட, வற்றாத ஜீவநதிகள் பாயும் நிலப்பரப்பில், பல்வேறு குடிமக்கள் இருந்திருக்கிறார்கள்.

  அதாவது…. தமிழகத்தில் பல்வேறு பூர்வகுடிகளும், திணைநிலைக் குடிகளும், தலைவர்கள் – சிற்றரசர்கள் – வள்ளல்கள் – வேளிர்கள் – மலை / கடல் / காடு ஆகிய பகுதிகளில் தலையெடுத்த மன்னர்களும் –

  இவர்களை ஆயுதத்தாலும், அரசியல் சூழ்ச்சியாலும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கருத்தியல் அதிகாரத்தாலும் தங்கள் மேலாதிக்கத்துக்குள் கொண்டு வந்த மூவேந்தர்களும் வாழ்ந்த இந்த 5 நூற்றாண்டுகள் காலத்தில் – அதாவது கி. மு. 3ம் நூற்றாண்டு முதல், கி. பி. 2ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் –

  வடக்கே மகப் பேரரசு மறைந்து மவுரியப் பேரரசு உருவாகி ரோமப் பேரரசோடு அரசியல் – வர்த்தக தொடர்பு கொண்டிருந்தது. ‘வம்பமோரியர்’ என அந்தக் கால தமிழ்ப்புலவர்களால் மவுரியர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். வடநாட்டு அரசர்கள் பொதுவாக ‘வட ஆரியர்’ என அடையாளப்படுத்தப்பட, வேங்கடத்துக்கு வடக்கே இருந்த மக்கள் ‘கதநாய் வடுகர்’, ‘நீள் மொழி வடுகர்’ என அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

  சமணத்தையும் (சந்திரகுபத மவுரியன்), பவுத்தத்தையும் (அசோகன்) ஆதரித்த மவுரியப் பேரரசுக் காலம் கி. மு. 2ம் நூற்றாண்டோடு முடிவுக்கு வந்தது. அதன் பின் சுங்க வம்சத்தை சேர்ந்த புஷ்யமித்திரன் என்ற பிராமண மன்னனோடு வைதீக – மனுதர்ம காலகட்டம் தோன்றியது. சங்ககால தமிழகத்தை குறித்து உரையாடும்போது இந்தப் புள்ளியை நினைவில் கொள்வது நல்லது. அதேபோல் புஷ்யமித்திரனுக்கு முன்பு வரை ஆந்திரமும், இலங்கையும் சமண, பவுத்த மையங்களாக இருந்ததையும், தமிழகத்தில் இவை அறிமுகமாகியிருந்தன என்பதையும் உணர்வது பல புரிதலுக்கு வழிவகுக்கும்.

  எனவே இந்த 5 நூற்றாண்டு காலத்தில் தமிழகம் தனித்தீவாக இல்லை. சுற்றிலும் மக்கள் இருந்திருக்கிறார்கள். மேற்கிலிருந்து யவனர்கள் வந்து தமிழகத்தில் வாணிபம் புரிந்திருக்கிறார்கள். கடல் வழி, தரை வழி தொடர்புகள் பல நாடுகளுடன் இருந்திருக்கின்றன. அதனால் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்ககால பாடல்களில் தமிழ் நாகரீகத்தின் அப்பட்டமான சுய சிந்தனைகள் மட்டுமே இல்லை. கூடவே வேறு நிலப்பரப்பை சேர்ந்த புதிய சிந்தனைகளும் கலந்திருக்கக் கூடும்.

  இப்போது சங்ககால பாடல்களுக்கு வருவோம். பாலியலை இயற்கையான தூண்டுதலாக தமிழர்கள் நோக்கியிருக்கிறார்கள் என்பது எட்டுத் தொகையையும், பத்துப்பாட்டையும் வாசிக்கும்போது புரிகிறது. அதனை தீயது, பாவம், அசிங்கம் என்று ஒதுக்கும் போக்கு அன்று இல்லை. ஆனால், அப்படியான ஒரு பார்வை பின்னாளில் வருவதற்கான அடையாளங்களையும் அது தன்னகத்தே கொண்டிருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

  மனைவியோடு வாழும் கணவன், மனைவிக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற சட்டமோ, வழக்கோ காணப்படவில்லை. காதலியை நினைத்து காதலன் உருகுவது, ஏங்குவது, தவிப்பது எல்லாம் அந்தப் பிரதிகளில் காணப்படுகின்றன. ஆனால், ஒரு கணவனான பிறகு இந்த உணர்வுகள் பெரிதும் இல்லை என்பதையும் அதே பிரதிகள் சுட்டிக் காட்டுகின்றன.

  கூடல், இருத்தல், இரங்கல், பிரிதல், ஊடல் என்ற பாலியல் உறவுகளின் உணர்வுகள் எல்லாம் பெண்ணை சார்ந்தவையாக கூறப்பட்டுள்ளன. அதாவது பெண்ணின் நோக்கிலிருந்து பாலியல் விளக்கப்பட்டது என்றும் இதை கூறலாம். அதே நேரம், தனியுடமையின் உருவாக்கமும், சொத்துரிமையின் ஆரம்பமும், அதை கட்டிக் காப்பதற்கான முடியாட்சி அரசியல் வளரும் காலமும், அதே சங்ககாலமாக இருந்ததால், பழைய குழு வாழ்வின் இணக்கத்திலிருந்து விடுபடும் நிலையை நோக்கி ஆண் நகர வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால்தான் பொருள் தேடி புறப்பட்டான். போர் செய்ய கிளம்பினான். இவையெல்லாம் வேண்டாம். பழைய குழு வாழ்வின் இணக்கத்துக்கு திரும்புவோம் என பெண் அவனை அழைத்தாள். அப்போது தனது வேட்கையை கட்டுப்படுத்துவதுடன், பெண்ணின் வேட்கையையும் கட்டுப்படுத்தும் நிலைக்கு ஆண் தள்ளப்பட்டான். அதாவது பெண்ணிடம் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தான்.

  ஆனாலும் தவம், விரதம், நோன்பு ஆகிய பாலியல் துறவின் வடிவங்கள் அன்று கற்பிக்கப்படவில்லை. அதை கடைப்பிடித்த ஒரு சிலரும் வைதீக – அவைதீக மரபினரே.

  பெண்ணின் பாலியல் ஒழுக்கம் ஆணை சார்ந்து, அவனால் இயக்கப்படுவதாக இருந்தது. ஆணின் பாலியல் ஒழுக்கம் அவனைப் பொருத்தவரை ஒரு சொகுசு. விலை மகளிருடன் செல்லவும், கூடவும், வாழவும் அவனுக்கு உரிமை இருந்தது. ஆனால், ‘விலை ஆணுடன்’ செல்ல பெண் அனுமதிக்கப்படவில்லை! அப்படிப்பட்ட ‘விலை ஆணும்’ அன்று இருந்ததாக தெரியவில்லை.

  சரி, பிரதிக்கு வருவோம். புணர்ச்சி செயல், அதன் களிப்பு, ஆசை ஆகியவற்றை வேறு வேறாக பிரிக்காத புலவர் மரபு அன்று இருந்திருக்கிறது. அதனால்தான், வேறு வேறாக பிரிக்க ஆரம்பித்த பின், அதாவது சங்க காலத்துக்கு பின், பாலியல் குறித்த எண்ணம் – சதை குறித்த, ஒழுக்கத்துக்கு உரிய ஓர் அடிப்படை கூறாக மாறியிருக்கிறது.

  ஒரு செயலைச் செய்யும் காரியத்தோடு ஒரு சுகத்தை இணைப்பது இயற்கையின் நோக்கம். இந்த சுகம்தான் ஆசைக்கு வழிவகுத்தது. ஆனால், புணர்ச்சி செயலையும், அதனால் உண்டாகும் களிப்பையும், ஆசையையும் ஒரு முழுமையிலிருந்து (அளவுக்கு மீறாமல் அளவுடன் இயங்குவது) பிரித்துவிடும்போது, புணர்ச்சிச் செயலில் உண்டாகும் சுகமும், ஆசையும், நன்மை – தீமை என்ற மதிப்பீட்டு சிக்கலுக்கு உள்ளாகிறது. அதாவது பாலியல் நடத்தையிலுள்ள புணர்ச்சி செயல், ஆசை, சுகம், ஆகியவை ஒழுக்கவியலுக்கான பொருட்கள் இல்லை. இந்த மூன்றும் இணைந்த ஒரு இயக்கமே பாலியல் நடத்தையின் இலக்கு.

  அதனால்தான் சங்க கால புலவர் மரபு, எந்த ஆசைகள், எந்தவிதமான செயல்கள், எந்தவிதமான சுகங்கள் சரியானவை அல்லது தவறானவை என பார்க்கவில்லை. பதிலாக இந்த ஆசைகளும், சுகங்களும் ஒருவரை என்னவாக உருமாற்றுகின்றன என்று பார்த்தது. சுருக்கமாக சொல்வதென்றால் பாலியல் செயலின் பண்பை பார்க்காமல், அந்தச் செயலின் அளவை பார்த்தது.

  ஐந்திணை உரிப்பொருள்களில் பாலுறவின் வகைகள், முறைகள் குறித்து பேச்சில்லை. நிலைகளே புலவர் மரபுக்கு உரியதாக இருந்தன. களவு உறவில் ஏக்கம், தவிப்பு, ஏமாற்றம், நிச்சயமற்ற தன்மை, மணத்துக்கு வற்புறுத்துவது, சூள் உரைப்பது, இரவு – பகலாக சேரத் துடிப்பது, சந்திப்புக்கு வாய்த்த இடையூறுகள், உணவு செல்லாமை, தூக்கம் கொள்லாமை, உடல் மெலிவு, பசலை, பெற்றோரின் தடை, பொருள் இல்லாமை, மணம் தள்ளிப் போதல், ஊரார் கண்காணிப்பு, புலம்பல், தூது விடல், காமம் மிக்க கழிபடர் கூறல்… ஆகிய சந்தர்ப்பங்களும், உணர்ச்சி வெளிப்பாடுகளும்தான் விவரிக்கப்பட்டுள்ளன. அதாவது பாலுறவுச் செயல் மூடி மறைக்கப்பட்டு அதன் உணர்ச்சி மற்றும் மெய்ப்பாட்டுச் செயல்களே விளக்கப்பட்டுள்ளன.

  இயல்பான காமம், மாற்றுப் பாலுடன் இணைந்து இன்பம் அனுபவிக்க முடியாமல் போகும்போதே அது நோயாகிறது… ‘இடும்பை நோய்'(குறுந்தொகை:217), ‘துஞ்சா நோய்'(குறு:242), அதனை அறிவுடையோர் நெருங்கமாட்டார் (குறு: 206)… முதலிய ஆற்றாமைகள் எழுகின்றன. ‘காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ'(நற்றினை: 39) என்று அளவு மீறுகிறபோதுதான் காமம் பிரச்னைக்குரியதாக மாறுவதாக புலவர் மரபு குறிப்பிடுகிறது.

  ஆனால், அதே சங்க காலத்தில் ஊற்றெடுக்க ஆரம்பித்து, பிறகு வந்த காலகட்டத்தில் வெள்ளமாக பெருக்கெடுத்த காமத்தை கட்டுப்படுத்தல், மட்டுப்படுத்தல் ஆகிய பெருங்கதையாடல்கள் காமத்தின் அரசியலை வடிவமைக்க ஆரம்பித்தன.

  உடல்ரீதியான பாலியல் அனுபவம், ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுதான். ஆனால், அது நிகழ்த்துபவர் – நிகழ்த்தப்படுவது என்ற வேறுபாடான செயல்களை பொறுத்து இரு பாலினருக்கும் வேறு வேறாக ஏற்படுகிறது. இந்த வேறுபாடே ஏனைய தளங்களில், ஆணுக்கு ஆளும் பாத்திரத்தையும், பெண்ணுக்கு ஆளப்படும் பாத்திரத்தையும் ஏற்படுத்தியது.

  அதாவது பாலியலை கட்டுப்படுத்துவது ஞானத்துக்கு வழிவகுக்கும் என்பதாக மாறிப்போனது. பாலியல் சுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதிலிருந்து – அதாவது காமத்தை ஆளும் ஆணின் சுய எஜமானத்துவத்திலிருந்து – பிறரை, பெண்ணை, நாட்டை ஆளுகின்ற ஆதிக்க நிலை அவனுக்கு கிட்டியது.

  தன்னையே ஆளுதல், தனது நிலத்தை உழுவித்தல், நாட்டு நகர நிர்வாகத்தில் ஈடுபதல் ஆகிய மூன்று செயல்பாடுகளும் ஒரேவகையை சேர்ந்ததே. இது பாலியலை கட்டுப்படுத்துவதிலிருந்தே தொடங்குகிறது. இதன் நீட்சியாகத்தான் ஆண் – பெண் உறவு, ஆள்பவன் – ஆளப்படுபவர் என்ற உறவாக கட்டமைந்து ‘அரசியலாக’ மாறிப் போனது.

  ஆண் தனது பாலியல் உந்துதலை அடக்கி ஆளும்போது தனது ஆதிக்கம், அதிகாரம், செல்வாக்கு அதிகரிப்பதை உணர்கிறான். இப்படியாக வீட்டில் அவன் மேற்கொள்கிற இந்த ஒழுங்கு முறைப் பயிற்சியிலிருந்து நாட்டை ஆளும் அதிகாரம் அவனுக்கு வர தொடங்கியது.

  இதே சங்க காலத்தில் காமம் குறித்த வேறு பார்வைகளும் தலை தூக்க ஆரம்பித்துவிட்டன என்பதற்கான உதாரணங்களும் இருக்கின்றன. ‘புணரின் புணராது பொருளே, பொருள் வயிற்/பிரியின் புணராது புணர்வே'(நற்றினை: 16), அதாவது புணர்ச்சியில் திளைத்தால் பொருள் கிடைக்காது. பொருளுக்காக பிரிந்தால் புணர்ச்சி இன்பம் கிட்டாது என ஆண் நினைக்கிறான். ‘…நாளும் என் / நெஞ்சுபிணிக் கொண்ட அம்சில் ஓதிப்/ பெருந்தோள் குறுமகள் சிறுமெல் ஆகம்/ ஒருநாள் புணரப் புணரின்/ அரைநாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே’ (குறுந்தொகை: 280) அதாவது காதலியை ஒருநாள் புணர்ந்தால் அதற்கு ஈடாக தனது அரைநாள் வாழ்க்கை வேண்டாம் என்கிறான். புணர்ச்சி, ஆணின் வாழ்நாளைக் குறைக்கும் என்று இங்கே நேராக கூறப்படவில்லை என்றாலும், புணர்ச்சி போகத்தால் ஆணின் வாழ்நாள் குறையும் என்ற எண்ணம் அந்தக் காலத்தில், வழக்கத்தில் இருந்ததை இந்தப் பாடல் மறைமுகமாக வெளிப்படுத்துகிறது.

  ‘சிறு வெள் அரவின் அவ்வரிக் குருளை/ கானயானை அணங்கியா அங்கு/ இளையள் முளைவாள் எயிற்ற/ வளையுடைக் கையள் எம் அணங்கியோளே’ (குறுந்தொகை: 119)… அதாவது காட்டு யானையை சிறிய பாம்புக் குட்டி கடித்து துன்புறுத்துவது போல் தன்னை ஒரு இளம் பெண் துன்புறுத்தி விட்டதாக சொல்கிறான். அதேநேரம் மறைமுகமாக ஆணின் வலிமையை பாலியல் உறவு அழித்துவிடும் என்று இந்த பாடல் சொல்வதாகவும் வாசிக்கலாம்.

  இப்படியாக பாலியலை அற ஒழுக்கம் சார்ந்த விஷயமாக பார்க்காத மரபு சங்ககாலத்துக்கு முன்பு அதிகமும், சங்க காலத்தில் ஓரளவும் இருந்திருக்கின்றன. அப்படிப்பட்ட மரபு களப்பிரரை அழித்து தமிழகத்தை ஆள வந்த பல்லவ – பாண்டியர் காலத்தில் மெல்ல மெல்ல மாற்றமடைந்திருக்கிறது.

  அதாவது பாலியல் நடத்தையை ஒழுக்கவியல் பிரச்னையாக பார்க்காத சங்க கால இலக்கியத்துக்கு விதிகளை வகுக்க முற்பட்ட பிற்காலத்திய தொல்காப்பிய இலக்கண மரபு, பாலியல் ஒழுக்க விதிகளை வரையறுக்கும் வகையில் அதிகாரம் படைத்ததாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

  பக்தி இலக்கியங்களில் பெரும்பாலானவை தோன்றிய காலகட்டம் இந்த பல்லவ – பாண்டியர் காலகட்டமே என்பதை உணரும்போது பாலியல் அரசியலின் ஆரம்பம் புரிய ஆரம்பிக்கிறது….

  பின்குறிப்பு:

  1. இந்தக் கட்டுரை எழுத ராஜ் கெளதமன் எழுதியுள்ள ‘பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்’ என்ற நூல் (‘தமிழினி’ பதிப்பகம் வெளியீடு) பெரிதும் பயன்பட்டது.
  1069791_10203199636461314_600854483_n
  கே. என். சிவராமன்
  கட்டுரை ஆக்கம்
  திரு.கே. என். சிவராமன் அவர்களுக்கு நன்றி

  Advertisements
   
 • Tags: ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: