RSS

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டணி

11 Aug

10561639_899597720067805_574744982616309687_nசிண்டிகேட் பேங்க் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. 2ம் தேதி கைதானவரை 6ம் தேதி சஸ்பெண்ட் செய்துள்ளது மத்திய அரசு. வேகமாகத்தான் நடக்கிறது வேலைகள்.

‘இதெல்லாம் தப்பு’ என்ற விமர்சன குரல்களும் வேகமாகவே கிளம்பி விட்டன. ‘ஒரு பேங்கின் சேர்மன்-கம்-மேனேஜிங் டைரக்டரையே கைது செய்ய சி.பி.ஐ துணிந்து விட்டால் இனி எந்த அதிகாரியும் தைரியமாக வேலை பார்க்க முடியாது’ என்பது இந்த விமர்சகர்கள் வாதத்தின் சாராம்சம்.
இத்தகைய எதிர்ப்பு குரல்கள் நமக்கு புதிதல்ல. நிலக்கரி சுரங்க ஊழல் பூதம் வெளியே வந்தபோது பார்த்தோம். டெலிகாம் ஊழல் வெடித்து எழுந்த வேளையில் பார்த்தோம். ராணுவ தளவாடங்கள் இறக்குமதி பேரங்கள் வெளிச்சத்துக்கு வரும் போதெல்லாம் பார்க்கிறோம்.

’இந்தியா மீது மற்ற நாடுகளுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். இங்கே முதலீடு செய்ய வருபவர்கள் நம்பிக்கை இழந்து திரும்பி போய்விடுவார்கள். மேல்மட்டத்தில் உள்ளவர்களை தண்டிக்கும்போது, கீழ்மட்டம் வரையில் ஊழியர்கள் மனம் சோர்ந்து போவார்கள். பிற்பாடு விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற பயத்தில் யாருமே எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். இதனால் அரசு நிர்வாகம் அடியோடு முடங்கி விடும்’ என்பார்கள். ஏற்கனவே தள்ளாடி கொண்டிருக்கும் இந்திய பொதுத்துறை வங்கிகள் மேலும் நசிவடைய இது ஆரம்பமாக அமையும் என்று சி.பி.ஐ.யின் நடவடிக்கையை கண்டித்து சில வங்கியியல் நிபுணர்கள் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

ஊழல் செய்பவன் பெரிய பதவியில் இருந்தால் அவன் மேல் கை வைக்க கூடாது என்ற தத்துவத்தை வெட்கமே இல்லாமல் வெளிப்படையாக சொல்லக்கூடியவர்களை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

சுதிர் குமார் ஜெயின் என்ன தப்பு செய்தார்? ஏற்கனவே கோடிக் கணக்கில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாத கம்பெனிகளுக்கு திரும்பவும் கடன் கொடுக்க லஞ்சம் வாங்கினார். டெல்லியில் உள்ள ஒரு கம்பெனியிடம் 50 லட்சம் கேட்டார்.

அவர் கேட்டார் என்பதற்கு என்ன ஆதாரம்? ‘என் காதால் கேட்டேன். பிறகுதான் கைதுக்கு உத்தரவு போட்டேன். ஆட்களை அனுப்பினே. சோதனை செய்தார்கள். லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்தார்கள்’ என்கிறார் சி.பி.ஐ டைரக்டர் ரஞ்சித் சின்கா.

ஒருநாள் இரண்டு நாள் அல்ல, ஆறு மாதமாக ஜெயினின்
டெலிபோனை ஒட்டு கேட்டிருக்கிறார் ரஞ்சித் குமார். ’அவர் மேல் பல புகார்கள் வந்தன. முன்பெல்லாம் அவரை போன்ற பெரிய அதிகாரிகளை கண்காணிப்பது, வழக்கு போடுவது, கைது செய்வது போன்ற விஷயங்களில் அரசிடம் முன்கூட்டி அனுமதி பெற வேண்டி இருந்த்து. சுப்ரீம் கோர்ட் தலையிட்டு அந்த மாதிரி எந்த அனுமதியும் தேவையில்லை என்று சொன்னதால் இது சாத்தியம் ஆகியிருக்கிறது. கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் எனக்கு 50 லட்சம் தா என்று ஒரு பேங்க் சேர்மன் நேரடியாக பேரம் பேசுவதை கேட்டு ஆடிப் போனேன்’ என்கிறார்.

இணை செயலாளர் ரேங்க் அல்லது அதற்கு மேல் அந்தஸ்து உள்ள பதவிகளில் இருப்போரை அரசின் அனுமதி இல்லாமல் விசாரிக்க முடியாது என்ற தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கிய பிறகு சி.பி.ஐ வட்டாரத்தில் உற்சாகம் திரும்பி இருக்கிறது. ‘அஞ்சாயிரம் பத்தாயிரம் லஞ்சம் வாங்கும் சிறிய மீன்களை பாய்ந்து பிடிக்கும் சி.பி.ஐ., கோடி கோடியாக ஊழலில் திளைக்கும் திமிங்கலங்களை ஏறிட்டும் பார்க்காமல் பதுங்குவது ஏன் என்று எல்லாரும் எங்களை கிண்டல் செய்தார்கள். இனிமேல் பாருங்கள், வேடிக்கையை..’ என அட்டகாசமாக சிரிக்கிறார் ரஞ்சித் சிங்.

ஜே.டி ரேங்குக்கு மேல் உள்ள பதவி வகிக்கும் அதிகாரிகள் சென்ற ஆண்டு 18 பேர் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளனர். முந்தைய ஆண்டு 38 பேர் சிக்கினர். 2012ல் 28. இந்த ஆண்டில் இதுவரை 9 பேர்.

சில மாதங்களுக்கு முன்பு ஜெயின் ஒரு கம்பெனியிடம் லஞ்சம் வாங்குவதாக சி.பி.ஐ.க்கு தெரிய வந்தது. பொறி வைத்து பிடிக்க நினைத்தும், ஜெயின் தப்பி விட்டார். அதிலிருந்து அவரது நடமாட்டமும் டெலிபோனும் கண்காணிப்பில் வந்தன. பூஷன் ஸ்டீல், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இரண்டு டெல்லி கம்பெனிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலையில், அவை மீண்டும் அனுப்பிய விண்ணப்பத்தை பேங்க் அதிகாரிகள் தொடவே இல்லை. அதற்காக ஜெயின் அந்த அதிகாரிகளை தரக்குறைவாக திட்டியதை சி.பி.ஐ டேப் செய்துள்ளது.
ஜெயினுடன் சேர்த்து 12 பேர் கைதாகி உள்ளனர். பூஷன் ஸ்டீல் கம்பெனியின் வைஸ் சேர்மன் நீரஜ் சிங்கால், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் சிஎம்டி வேத் பிரகாஷ் ஆகியோர் அதில் அடக்கம். கைமாறிய 50 லட்சம் தவிர ஜெயின் வீட்டில் 21 லட்சம் ரொக்கம், 1.68 கோடி நகைகள், 63 லட்சம் ஃபிக்சட் டெபாசிட் டாகுமென்ட்ஸ் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர்.

லஞ்சம் வாங்குவது, பேரம் பேசுவது ஆகியவை வழக்கமாக இந்த அளவுக்கு நேரடியாக நடப்பது இல்லை. அதற்கென தனி தரகர்கள் உண்டு. முன்பு போல அவர்கள் புரோக்கர் என்ற அடையாளத்துடன் திரிவது கிடையாது. எக்ஸ்ஒய்இசட் என ஏதோ ஒரு பெயர் சூட்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் ஏஜன்சி என்று போர்டு மாட்டிக் கொண்டு, பக்கா தொழில்ரீதியாக இயங்குகிறார்கள். நீங்கள் ஒரு கம்பெனி தொடங்குகிறீர்கள், அல்லது தொடர்ந்து நடத்த கடன் தேடுகிறீர்கள். நேராக எந்த பேங்குக்கு போனாலும் உங்கள் விருப்பம் நிறைவேறாது. நிறைவேறுமா றாதா என்பதைக்கூட உங்களால் தெரிந்து கொள்ள முடியாது. இந்த ஏஜன்சியை போய் பாருங்கள், அவர்கள் வழிகாட்டுவார்கள் என்று அந்த பேங்கிலேயே யாராவது உங்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்கள். ஏஜன்சி உங்கள் தேவையை தெரிந்து கொண்ட பிறகு, டீல் பேசும். எந்த பேங்கில் யாரை தொடர்பு கொண்டால் உடனே லோன் சேங்ஷன் ஆகும் என்பது அவர்களுக்கு அத்துபடி. சம்பந்தப்பட்ட பேங்க் மேலிடத்தில் பேசி, லஞ்சம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வார்கள். அதோடு அவர்களுக்கும் ஒரு தொகை கமிஷனாக சேர்த்து கொள்வார்கள். அதை கொடுக்க நீங்கள் ரெடி என்ற சொன்ன மறு நிமிடம் பிராசஸ் தொடங்கி விடும்.

பெரிய தொகை கடன் கொடுப்பது என்றால், ஒரு குழு அந்த விண்ணப்பத்தை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது. பேங்கின் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் கடன் கேட்பவரை பற்றியும், அவரது தொழில் லாபகரமானதா, அதில் கிடைக்கும் வருமானத்தில் அவரால் கடனை திருப்பி செலுத்த இயலுமா, அவ்வாறு இயலாத பட்சத்தில் பேங்க் அவரது சொத்துகளை ஏலத்தில் விட்டு கடன் தொகையை மீட்க முடியுமா என்பதை எல்லாம் பரிசீலிக்கும். கல்விக்கடன், சிறுகடன் போன்ற தேவைகளுக்காக பேங்க் வாசல்படியை மிதித்த ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத அனுபவங்கள் நிச்சயம் இருக்கும். ஆயிரங்கள் கடன் வாங்கவே அந்த பாடு என்றால் கோடிகள் சும்மா கிடைக்குமா என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். உண்மையில் கோடிகள் கிடைப்பது சுலபம்.

டைரக்டர்ஸ் குழு முடிவு எடுக்கும் என்ற விதியை நிதி அமைச்சகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாற்றியது. சேர்மன் தன் இஷ்டப்படி 50 கோடி வரை யாருக்கு வேண்டுமானாலும் கடன் கொடுக்க வசதியாக வளைக்கப்பட்டது அந்த விதி. அதற்கு மேலான தொகைக்கு மட்டுமே குழு பரிசீலித்து முடிவு எடுக்கும். குழுவில் எக்சிகியுடிவ் டைரக்டர்ஸ், ஜெனரல் மேனேஜர்ஸ் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிஎம்டிதான் தலைவர். அவரை மீறி என்ன செய்ய முடியும்? உறுப்பினர்கள் டிஸென்ட் நோட் எழுதலாம். அதாவது, இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட கடன் ஒப்புதல் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என்று பதிவு செய்யலாம். அவ்வளவுதான்.

கொடுத்த பெருங்கடன் திரும்ப வராவிட்டால் பேங்க் என்ன செய்யும்? ஒன்றரை லட்சம் கோடி அப்படி வரவில்லை என்று பேங்க் அதிகாரிகள் சங்கம் சமீபத்தில் பட்டியல் வெளியிட்டு இருந்தது நினைவிருக்கிறதா? சில ஆயிரங்கள் வாங்கி விட்டு அல்லது சொத்துக்கு நிகரான வீட்டு கடன் போன்றவை வாங்கிவிட்டு எதிர்பாராத ஏதாவது காரணத்தால் தவணை தவறினால்கூட பத்திரிகையில் படத்துடன் விளம்பரம் போட்டு அவமானப்படுத்தும் பொதுத்துறை வங்கிகள், கோடிகளை விழுங்கி ஏப்பமிட்ட பெரிய மனிதர்களின் பெயரைக்கூட வெளியிடுவது இல்லை. மாறாக, நாட்டின் பொருளாதார நிலைமை சரியில்லை; உலக பொருளாதாரமே மந்தகதியில் நடக்கிறது; ஆகவே இந்த கடன்களை வராக்கடன் பட்டியலில் – நான் பெர்ஃபார்மிங் அசெட்ஸ், சுருக்கமாக என்பிஏ – சேர்க்கலாம் என்று அவர்களே தீர்மானம் போட்டு ஒதுக்கி விடுவார்கள்.

அப்படியே விட்டுவிட முடியுமா? இந்த வராக்கடன்களை உங்களால் முடிந்த அளவு வசூலித்து கொள்ளுங்கள் என்று ஒரு தொகைக்கு அதை வசூல் கம்பெனிக்கு விற்று விடுவார்கள். அசெட் ரெக்வரி கம்பெனி – சுருக்கமாக ஏஆர்சி – எனப்படும் இந்த கம்பெனிகளிடம் கடன் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு பேங்கில் அந்த கடன் பற்றி துண்டு சீட்டுகூட இருக்காது. விவகாரம் வெளியே கசிந்தாலும் எங்கிருந்து விசாரணை நடத்துவீர்கள்? நோ சான்ஸ். கல்லுளி மங்கன்களான பெருங்கடன் ஆசாமிகளிடம் ஏஆர்சியால் மட்டும் எப்படி வசூலித்துவிட முடியும்? முடியாது என தெரிந்தும் அவை அந்த கடன்களை பேங்கிடம் ஏன் வாங்குகின்றன? ஏன் என்றால், அந்த கம்பெனிகளிலும் இதே பேங்குகளுக்கு பங்கிருக்கிறது. இது ஒரு வகையில் தடயங்களை அழிக்கும் வழி.

கர்நாடகாவின் உடுப்பியில் 1920களில் பஞ்சம் வந்து நெசவாளர்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உதவ ஆளுக்கு ஒரு அணா முதலீடு செய்வோம் என்று ஒரு டாக்டர், ஒரு இன்ஜினியர், ஒரு வியாபாரி ஆகியோர் கைகோர்த்து வீடு வீடாக சென்றனர். அப்படி எட்டாயிரம் ரூபாய் மூலதனத்தில் உயர்ந்த பொது நோக்கத்துடன் தொடங்கப்பட்டது சிண்டிகேட் பேங்க். இன்று அதன் தலைவர் பொதுமக்களின் பணத்தை மோசடிக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்க லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டார் என்பது கொடுமை.

சிண்டிகேட் பேங்கில் மட்டும் இப்படி நடக்கவில்லை. பொதுத்துறை வங்கிகள் நிலைமை பொதுவாகவே இப்படித்தான். பல ஆயிரம் ஊழியர்கள், அலுவலர்கள் சின்சியராக இழைத்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில மேலதிகாரிகளால் மக்களின் சேமிப்பு கரியாக்கப்படுவது சோகம். ரிசர்வ் பேங்க் இதை அறியாமல் இருந்திருக்க வழியே இல்லை. அரசியல்வாதிகள் – உயர் அதிகாரிகள் – பிசினஸ்மென் அடங்கிய சக்தி வாய்ந்த கூட்டணிக்கு எதிராக ஆர்.பி.ஐ நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது கண்கூடு. பேங்க் சேர்மன் பதவிக்கு ஆட்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய நிதியமைச்சரை சார்ந்தது. பேங்க் டைரக்டர்ஸ் குழுவில் வெளி உறுப்பினர்களை நியமிப்பதும் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது. கட்சிக்கார்ர்கள், பெட்ரோல் பங்க் ஓனர்கள், டீவியில் செய்தி வாசிப்பவர்கள் எல்லாம் பேங்க் டைரக்டர் பதவியில் இருக்கிறார்கள் என்ற தகவலே இப்போதுதான் வெளியே தெரிய வந்திருக்கிறது. இன்னும் வர வேண்டிய தகவல்கள் ஏராளம்.

இந்தியன் பேங்க் சேர்மனாக இருந்த கோபால கிருஷ்ணனால் அரசுக்கு 32 கோடி நஷ்டம் நேர்ந்தது என்று கூறி அவருக்கு சி.பி.ஐ கோர்ட் ஜெயில் தண்டனை விதித்த செய்திதான் மீடியாவில் பெரிதாக அலசப்பட்டது. தமிழர் அல்லாதவர்களின் ஊழல்கள் அந்த அளவுக்கு மீடியாவின் கவனத்தை எப்போதுமே ஈர்ப்பதில்லை. ஸ்டேட் பேங்க் டெபுடி மேனேஜிங் டைரக்டர் ஷ்யாம்லால் ஆச்சார்யா இரண்டு வெளிநாட்டு வாட்ச் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவானது. மூன்றாண்டுக்கு முன்னால் எல்ஐசி ஹவுசிங் சிஇஓ ஆர்.நாயர் லஞ்சம் வாங்கி கைதானார். சமீபத்தில் யுனைடெட் பேங்க் சிஎம்டி அர்ச்சனா பார்கவா திடீரென ராஜினாமா செய்தார். எதையெல்லாம் வராக்கடனாக பட்டியல் இடுவது என்பதில் சக அதிகாரிகள் சொன்ன யோசனையை அவர் கேட்க மறுத்துள்ளார். இன்ஃபோசிஸ் தயாரித்து உலகம் முழுவதும் பேங்குகளில் பயன்படுத்தப்படும் ஒரு சாஃப்ட்வேர், தானாகவே வராக்கடனை அடையாளம் கண்டு பட்டியலில் சேர்க்கும். அதை யுனைடெட் பேங்க் அதிகாரிகள் செயலிழக்க செய்து, தங்கள் விருப்ப்ப்படி பட்டியல் தயாரித்ததை அர்ச்சனா ஏற்காததால், 10 ஜெனரல் மேனேஜர்கள் சேர்ந்து அவரை பற்றி ரிசர்வ் பேங்குக்கு புகார் மனு அனுப்பி, அதன் மீது விசாரணை நடத்த ரிசர்வ் பேங்க் உத்தரவிட்டதால் கொதித்து அர்ச்சனா விலகினார் என்றும் செய்தி உலவுகிறது.

உடன் பணியாற்றும் பத்து பேரை எதிர்த்து ஒரு நல்லவனால் உருப்படியாக செயல்பட முடியாது. இது எந்த துறைக்கும் பொருந்தும். வங்கி துறையும் விதிவிலக்கு அல்ல. மக்களின் பணத்தை மலைமுழுங்கி மகாதேவன்களுக்கு காணிக்கையாக்குவது அக்கிரமம். வங்கிகளை அரசுடமை ஆக்கியது எப்படி அன்றைய காலத்தின் கட்டாயமோ, அதே போல ஒன்று வங்கிகளை சீர்படுத்த வேண்டும் அல்லது தனியாருக்கு விற்றுவிட்டு மக்கள் பணத்தை காப்பாற்ற வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.

(இழு தள்ளு 48/ கதிர் / குமுதம் ரிப்போர்ட்டர் 14.08.2014)

kathirkathirvaelKathir Vel

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: