RSS

குறைபாடு குழந்தைகளிடம் அல்ல

16 Aug

10550948_903330573027853_3904629875477593467_n7054_903331119694465_3811296765653217991_n10363930_903331229694454_4300865206281918951_n10460784_903331383027772_7523667502037705987_n10553345_903331063027804_3394246963991921802_nகற்றல் குறைபாடு உள்ள பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விஷயம். எத்தனை பேருக்கு அந்த குறைபாடு இருக்கிறது என்பதில் ஒவ்வொருவரும் முரண்படுவது அந்த கவலையை அதிகரிக்கும் விஷயம்.

லே(ர்)னிங் டிசபிலிடி (எல்டி) என்பதை கற்றல் குறைபாடு
என அரசு குறிப்பிடுகிறது. 2ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களிடம் கற்றல் குறைபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கண்டறிய மாநிலம் தழுவிய ஆய்வு நடத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. ஸ்டேட் போர்ட், சிபிஎஸ்இ, மெட்ரிக், ஆன்லோ இண்டியன் ஆகிய அனைத்து வகை பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்படும்.

சென்னை நகரில் 200 மாணவர்களை சோதித்ததில், 40 பேருக்கு எல்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இது 20 சதவீதம். உலக அளவில் 12 சதவீத குழந்தைகளுக்கு எல்டி இருப்பதாக ஒரு ஆய்வில் அறியப்பட்ட்து. ஆனால் அதை நடத்தி 4 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அந்த சதவீதம் 20 ஆக உயர்ந்து இருக்கலாம் என்று நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அப்படி பார்த்தால் சென்னையில் இப்போது தெரிய வந்துள்ள 20 சதவீதம் சரியாக தோன்றுகிறது.

அதாவது ஐந்தில் ஒரு மாணவன் அல்லது மாணவியால் ஆசிரியர் சொல்லித் தருவதை புரிந்து கொள்ள இயலவில்லை. பிழை இல்லாமல் வாசிக்கவோ எழுதவோ தெரியவில்லை.

ஆனால், அரசு திரட்டியுள்ள புள்ளிவிவரம் அதிலிருந்து பெரிதும் மாறுபடுகிறது. தமிழக பள்ளிகளில் பயிலும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் ஏறத்தாழ 92 லட்சம். இதில் வெறும் 1,405 குழந்தைகளே கற்றல் குறைபாடு உள்ளவர்கள் என்கிறது அரசு வசம் உள்ள அறிக்கை. ஆண், பெண் விகிதம் இதில் சமமாக இருக்கிறது. ஆனால், மேலே சொன்ன 20 சதவீதத்துக்கு மாறாக, கால் சதவீதத்துக்கு குறைவான (0.015%) குழந்தைகளே எல்டியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சொல்கிறது.

நிச்சயமாக இந்த புள்ளிவிவரம் குறைபாடுள்ளது என்று மருத்துவ நிபுணர்களும் ஆசிரிய ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். கற்றல் குறைபாடு என்றால் என்ன என்ற விவரம் பெரும்பாலான பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியாது என்பது இந்த முரண்பாடுக்கான முக்கிய காரணம். எல்டி குறித்த விழிப்புணர்வு போதாது.

எல்டியில் பல வகை உண்டு. மிகவும் பரவலானது டிஸ்லெக்சியா. இது மொழி சம்பந்தப்பட்டது. வாசிக்க, பேச, எழுத தடுமாறுவது. எழுத்துகளை இடம் மாற்றி போடுவது இவர்களுக்கு சகஜம். தமிழ் என்பதை தழ்மி என்று வாசிப்பார்கள். அல்லது சரியாக வாசித்து விட்டு, பிழையாக எழுதுவார்கள். இந்த குழந்தைகளுக்கு எழுத்துக்கள் சித்திரம் மாதிரி. வழுக்கை தலையும் மூக்கு கண்ணாடியும் இருந்தால் காந்தியாகதான் இருக்கும் என்று மனதில் பிம்பம் படிவது போல, வார்த்தைகளின் தொடக்க எழுத்துக்கள் இரண்டை வாசித்ததுமே – பார்த்ததும் என்பது பொருத்தமாக இருக்கும் – ஏற்கனவே அதுபோல் மனதில் பதிந்திருக்கும் வார்த்தையை சொல்லி விடுவார்கள். அது பெரும்பாலும் தவறாக இருக்கும்.

எழுத்து கூட்டி வாசிப்பது இவர்களுக்கு மிகவும் சிரமமான வேலை. தமிழ்நாடு என்ற வார்த்தையை வாசிக்க வைக்க வேண்டுமானால், த – தமி – தமிழ் – தமிழ்நா – தமிழ்நாடு என்று ஐந்து கட்டமாக அழைத்து சென்றால்தான் முடியும். எழுத்துகளை கண்ணாடியில் காட்டினால் நமக்கு அந்த எழுத்துக்கள் இடம் வலமாக பின்புறமாக தெரியும். டிஸ்லெக்சியா குழந்தைகளால் அந்த வார்த்தைகளை மிக வேகமாக – பிழையில்லாமல் – வாசிக்க இயலும்.

இதே போல டிஸ்கேல்குலியா என்பது நம்பர்கள் சம்பந்தப்பட்ட பார்வை. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போட வராது. கணக்கு பாடத்தில் ஒவ்வொரு அடியாக செய்து காட்டினால் புரிந்து கொண்டாலும் திரும்ப செய்ய வராது. ஸ்டெப்ஸ் எதையும் போடாமல் விடையை சரியாக எழுதி விடுவார்கள். எப்படி வந்த்து என்று கேட்டால் விளக்க தெரியாமல் விழிப்பார்கள். இப்போது நேரம் என்ன, வகுப்பு முடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று கேட்டால் கணக்கிட்டு சொல்ல தெரியாது. இடது வலது குழப்பம் வரும். திசைகளை சரியாக புரிந்து கொள்ள முடியாது. சரியான விலை கொடுத்து பொருட்கள் வாங்கவோ, மீதியை சரி பார்க்கவோ வராது.
நேராக கோடு போடுவது, கத்தரியால் சரியாக வெட்டுவது போன்ற நரம்புகளுக்கு வேலை கொடுக்கும் விஷயங்களை துல்லியமாக செய்ய இயலாது.

இது போன்ற பல குறைபாடுகளை பொதுவில் எல்டி என்கிறார்கள். இது பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து ஓரிரு ஆண்டுகளுக்குள் வெளிப்படும். ஆனால் முறையான பயிற்சி இல்லாததாலும், வேலைப்பளு போன்ற வேறு காரணங்களாலும் ஆசிரியர்களால் குழந்தைகளின் குறைபாட்டை கண்டுபிடிக்க முடிவதில்லை. மாறாக, சொல்லிக் கொடுப்பதை கவனிப்பது இல்லை; கவனம் போதாது; பிடிவாதம் பிடிக்கிறான்; பார்வை கோளாறு; வயதுக்கு ஏற்ற மூளை வளர்ச்சி இல்லை என்று வெவ்வேறு காரணங்களை சொல்லி பெற்றோரை வரவழைத்து புகார் வாசிக்கிறார்கள். அவர்களும் அதை அப்படியே நம்பி, வீட்டில் குழந்தையை திட்டி, கட்டாயப்படுத்தி, அழவைத்து துன்புறுத்துகிறார்கள். இதனால் குழந்தையின் மனதில் கீறல் விழுகிறது. இப்படியே மாதங்கள், ஆண்டுகள் உருளும்போது நிரந்தரமான பாதிப்புகள் ஏற்பட்டு அந்த குழந்தையின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறி ஆகிறது.

ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு பெற்றோரை வரவழைத்து தெரிவிக்கும் ஆசிரியைகள் குறைவு. தாங்களே கண்டுபிடித்து டாக்டரிடம் அழைத்து சென்று ஆலோசனை கேட்கும் பெற்றோரும் குறைவு. இது மூளை பாதிப்போ நோயோ அல்ல என்று சரியாக கணித்து, மனநல மருத்துவரின் ஆய்வுக்கு பரிந்துரைக்கும் டாக்டர்களும் குறைவு.

உண்மையில் எல்டி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவு போன்ற எந்த பிரச்னையும் கிடையாது. நமக்கு தெரிந்த 3டியை தாண்டி இவர்களுக்கு 4டி ஆற்றல் இருப்பதாகக்கூட சிலர் கூறுகின்றனர். வெவ்வேறு துறைகளில் உலக புகழ் பெற்ற சாதனையாளர்கள் பலரும் எல்டி இருந்தும் எதிர்நீச்சல் போட்டு ஜெயித்தவர்கள். ஆரம்பத்தில் இதை கண்டறிந்து, கற்பிக்கும் முறையில் சிறு மாற்றங்களை புகுத்தினால் போதும். சில ஆண்டுகளில் மற்ற குழந்தைகளுக்கு சம்மாக வந்து விடுவார்கள். அரசு டாக்டரால் அவ்வாறு சர்டிபிகேட் பெறப்பட்ட குழந்தைகளுக்கு கல்லூரி படிப்பு முடியும் வரையில் பல சலுகைகள் தரப்படுகிறது. மொழிப்பாடத்தில் இருந்து விலக்கு, கணித தேர்வில் கேல்குலேட்டர் பயன்படுத்த அனுமதி, எழுத்து பிழைகள் இருந்தாலும் முழு மதிப்பெண், தேர்வுக்கு கூடுதல் நேரம் எல்லாம் தரப்படுகிறது.

இவ்வளவு சலுகைகள் கொடுப்பதால் அரசு அதிக உஷாராகவும் இருக்கிறது. டாக்டர்கள் அதனால் சுலபத்தில் சர்டிஃபை செய்வதில்லை. பல சோதனைகளுக்கு உட்படுத்துகின்றனர். ஆனால் எல்டி ஆளுக்கு ஆள் மாறுபடும் நிலையில், டாக்டர்கள் பயன்படுத்தும் பொதுவான ஆய்வு முறை சரியான பலனை எப்போதும் அளிப்பதில்லை. இதனால் பலரது வாழ்க்கை வீணாகிறது.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக சில பிரத்யேக பள்ளிகள் இருக்கின்றன. பெரும்பாலும் இவை நகரங்களில் உள்ளன. சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியைகள் பணி புரிகிறார்கள். மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓப்பன் ஸ்கூலிங் (என்ஐஓஎஸ்) சிலபஸ்படி இவற்றில் எளிமையாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அநேகமாக வசதியுள்ள குடும்பங்களே இவற்றை பயன்படுத்தி பலன் அடைகின்றன.

எந்த குறைபாடும் இல்லாத குழந்தைகளே இன்றுள்ள சூழலில் படிப்பது, எழுதுவதை எல்லாம் கைவிட்டு எல்டி குழந்தைகளுக்கு இணையாக மாறி வருகின்றன. எனவே, அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, எல்டியை கண்டறிவதற்கான வழிமுறைகளை பரவலாக்கி, ஒவ்வொரு பள்ளியிலும் இத்தகைய மாணவர்களுக்கு தனி வகுப்புகள் உருவாக்கினால் பெரிய மாற்றம் உண்டாகும்.

(இழு தள்ளு 50/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 21.08.2014)
kathirkathirvaelKathir Vel

Advertisements
 

Tags: , , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: