RSS

பத்திரிகைகள் வாசிப்பு பழக்கம் எப்போது வந்தது-ரஹீம் கஸாலி மக்கள் பதிவர்

10 Dec

எனக்கு பத்திரிகைகள் வாசிப்பு பழக்கம் எப்போது வந்தது என்று வந்தது என்று யோசித்துப் பார்க்கிறேன். நினைவிற்கு வரவே இல்லை. இதிலிருந்து ஒன்று மட்டும் எனக்கு விளங்குகிறது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதற்கு காரணம் என் ஜீனாகக் கூட இருக்கலாம்.

மிக சிறு வயதில் இருந்தே எங்கள் வீட்டில் ஆனந்த விகடனும், குமுதமும் படிக்க கிடைக்கும். என் தந்தை அவர்களும் சிறிய தந்தை அவர்களும் தான் இதற்கு காரணம்.

அவர்கள் தவறாமல் இந்த புத்தகங்களை வாங்குவார்கள். அப்போதெல்லாம் அதன் விலை ஒரு ரூபாய்தான் இருக்கும். எப்படி சொல்கிறேன் என்றால் அதன் விலை இந்தியாவில் 100 காசுகள் என்றும் இலங்கையில் அதைவிட சற்று அதிகமாகவும் விலை அச்சிடப்பட்டிருக்கும்.அது என் நினைவில் இன்னும் இருக்கிறது. அவர்களிடமிருந்து எனக்கும் இந்தப்பழக்கம் வந்தது.

ஆரம்பத்தில் சினிமா நடிகர்களின் புகைப்படம் பார்ப்பதற்காக மட்டுமே இந்த சஞ்சிகைகளை கையில் எடுப்பேன். போகப்போக செய்திகள் ஒவ்வொன்றையும் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன். முத்தாரம் என்ற சஞ்சிகையை மூத்தரம் என்று படித்து என் தந்தையால் மண்டையில் குட்டப்பட்டிருக்கிறேன்.அப்போதெல்லாம் இப்போது போல எந்த தொடர்கதையும் தொகுத்து புத்தகமாக வராது. ஆகவே என் சிறிய தந்தை அவர்கள் ஆனந்த விகடன், குமுதம் போன்றவற்றில் வரும் சாவி, இந்துமதி, ராண்டர்கை, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களின் தொடர்களை ஒவ்வொரு வாரமும் கவனமாக வெட்டி எடுத்து வைத்துக்கொண்டு, தொடர் முடிந்ததும் பைண்டிங் செய்து பத்திரப்படுத்துவார். அப்படி பத்திரப்படுத்தப்பட்ட புத்தகங்களில் சில இன்னும் எங்கள் வீட்டில் இருக்கிறது.

விகடன் குழுமத்திலிருந்து வந்த ஜூனியர் விகடனின் முதல் இதழைக்கூட அப்போது நான் படித்திருக்கிறேன். எனக்கான வாசிப்புலக வாசலை இன்னும் விசாலமாக திறந்துவிட்டது எங்கள் ஊர் நூலகம்தான் என்றால் அது மிகையில்லை.

நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் பள்ளிக்கு எதிரில்தான் நூலகம் அமைந்திருக்கும். பள்ளி விட்டு எல்லோரும் வீட்டிற்கு போவார்கள். நான் மட்டும் நூலகத்தில் நுழைந்து ஏதாவது படித்துக்கொண்டிருப்பேன். அப்போது நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன். 1986- ஆம் ஆண்டு.

என்னடா இந்த சின்னப்பையன் நூலகத்திற்கு வந்து படம் பார்க்கிறானே என்று நினைக்காமல் என் படிப்பு ஆர்வத்திற்கு ஊக்கம் கொடுத்தார் அப்போது நூலகராக இருந்த திருப்பதி அய்யா அவர்கள். பின் அவரே நூலகத்தில் என்னை உறுப்பினராகவும் சேர்த்துவிட்டார். அப்போது நூலகத்தில் உறுப்பினராக ரூபாய் இரண்டுதான். ஆனால், அவர் அதைக்கூட என்னிடம் வாங்கவில்லை.

நான் நூலகத்தில் சேர்ந்த பின் நான் வீட்டிற்கு எடுத்துக்கு போய் படித்த முதல் புத்தகம் அம்புலிமாமா தான். அதன்பின் கோகுலம், பூந்தளிர் போன்ற புத்தகங்கள். அதில் வரும் பல கதைகள் அர்த்தம் பொதிந்தவைகளாக இருக்கும். குறிப்பாக அம்புலிமாமாவில் வரும் வேதாளம் விக்ரமாத்தித்தன் கதைகள். அம்புலிமாமாவை பதினைந்து நாள் அவகாசத்தில் எடுத்துக்கு போய் முன்றே நாளில் திருப்பி கொடுத்துவிட்டு வேறு புது அம்புலிமாமா கேட்டேன்.

டே இது மாசத்துக்கு ஒரு தடவை வரும் புத்தகம். உனக்காக வாராவாரமா வரும் என்றார் சிரித்துக்கொண்டே. படிக்கும் பழக்கம் அதிகரித்ததற்கு நூலகமும் பெரும் பங்கு வகித்தது. அதன் பின் அங்கு இருக்கும் நிறைய தெனாலிராமன் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், பீர்பால் கதைகள் என்று எல்லாவற்றையும் படித்தேன். அதன் பின் ராஜேஷ்குமார், தமிழ்வாணன், சுபா. பிகேபி, இந்திரா சவுந்தர்ராஜன், என்டமூரி வீரேந்திரநாத்(தமிழில் அழகாக மொழிபெயர்த்திருப்பார் சுசிலா கனகதுர்கா) என்று எல்லோரும் எனக்கு அறிமுகமானது இந்த நூலகத்தில்தான்.

அடுத்ததாக….எங்கள் ஊரில் ஒரு சலூன் இருந்தது அப்போது. கணேசன் என்பவர் நடத்தினார். 1980- களின் இறுதியில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நானும் என் நண்பன் புகாரி((Buhari Little Heart))யும் தவறாமல் அந்த சலூனுக்கு போய் விடுவோம், அந்த சலூன் திறப்பதற்கு முன்பே.
காரணம், தினமலருடன் வரும் சிறுவர் மலர்தான்.

சலூனுக்கான பேப்பரை நேராக பேப்பர் கடைக்கே போய் வாங்கி வருவோம். யார் முதலில் படிப்பது என்று எங்களுக்குள் கடும் போட்டி வரும். இந்த வாரம் நான் படித்தால் அடுத்தவாரம் அவன்(புகாரி) படிப்பான். இப்படித்தான் முறை வைத்து படித்தோம் இருவரும். நாங்கள் படித்து முடிப்பதற்கும் சலூன் திறப்பதற்கும் சரியாக இருக்கும். எங்களை பார்க்கும் சலூன் கணேசண்ணன் உங்களை பார்த்தாத்தான்டா எனக்கு வெள்ளிக்கிழமைனே ஞாபகம் வருது என்பார். சிறுவர் மலரில் அப்போது வந்த பலமுக மன்னன் ஜோ, எக்ஸ்ரே கண் போன்ற படக்கதைகள் படிக்க சுவாரஸ்யமாய் இருக்கும்.

அதைப்போல மாயாவி கதை வரும் ராணி காமிக்ஸ். மாதத்திற்கு இரு முறை வரும் இந்த புத்தகத்தின் விலை இரண்டு ரூபாய்தான். நான் ஒரு ரூபாயும், புகாரி ஒரு ரூபாயும் போட்டு அதை வாங்குவோம். ஒரு முறை நான் முதலில் படித்து விட்டு அவனுக்கு கொடுப்பேன். மறுமுறை அவன் படித்துவிட்டு என்னிடம் கொடுப்பான். இருவர் படித்ததும் இன்னொருவனிடம் ஒரு ரூபாய்க்கு விற்றுவிடுவோம். நான் மலேசியாவில் இருந்த போதும் நான் ஒரு புத்தகம் வாங்குவதும், அவன் ஒரு புத்தகம் வாங்குவதும் தொடர்ந்தது.

இப்படியாக இருந்த வாசிப்பு பழக்கம் சற்று முன்னேறி 1993- ஆம் ஆண்டில் முதன் முதலில் ராணி இதழில் அன்புள்ள அல்லி பகுதியில் என் கேள்வியும் வருமளவிற்கு வந்தது. அதை பார்த்ததும் அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அதன் பின் அடிக்கடி ராணியில் என் பெயர் வந்தது. அதன் பின் 1996-ஆம் ஆண்டில் குமுதம், ஆனந்த விகடன், ஜூ.வி., கல்கி, இந்தியா டுடே, நக்கீரன், பாக்யா, 2000-ஆம் ஆண்டில் வின்நாயகன்(சுஜாதா, மதன் போன்ற பிரபலங்களின் பங்களிப்பில் சில மாதங்கள் மட்டுமே வந்தது) போன்ற பத்திரிகைகளில் ஏதாவது ஒரு வகையில் என் பெயர் வந்து விடும் தவறாமல். இப்படியாக என் வாசிப்பு பழக்கம் விரிவடைந்தது. அதுவே இப்போது சொந்தமாக ஒரு வலைத்தளம் வைத்து எழுதும் அளவிற்கு வந்துள்ளது.

#மீள்த்துவம்.

kazaliரஹீம் கஸாலி மக்கள் பதிவர்
Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: