RSS

மலிரினும் மெல்லிய காதல்…. (நிலைமண்டில அகவற்பா) – இராஜ. தியாகராஜன்

14 Feb

தனக்குத்தானே ஒருதலையாக அன்பினை வளர்த்துக் கொண்டு இருபாலரும், தான் காதலிப்பவரை உள்ளத்தால் காயப்படுத்துவது போதாதென்று, உடலாலும் துன்பப்படுத்தவும் தலைப்பட்டுவிட்ட இந்த காலத்தில், உள்ளத்தில் உணர்வூறி, மெய்மையான எண்ணங்கள் மட்டுமே துணையாக, ஒருவரையொருவர் அவரவரிடத்தே இருக்கின்ற குற்றங்குறைகளுடனே ஏற்று, ஒருவர்க்காக மற்றவர் விட்டுக் கொடுத்து, செம்புலப்பெயல் நீரார் சொன்னது போல, அன்புடை நெஞ்சங்கள் ஒன்றெனக் கலக்க, ஆண்/பெண் இருபாலரையும் ஆட்கொள்ளும் காதலென்ற மிக மேன்மையான அன்பினை வாழ்த்தி, அப்படிப்பட்ட அன்பர்களையும் வாழ்த்தி, என்னுடைய வரிகள் இந்நாளுக்காக; இல்லையில்லை இன்னாளுக்காக:

மலிரினும் மெல்லிய காதல்….
(நிலைமண்டில அகவற்பா)
============================
வழக்கென உரோமர் ஏற்ற திந்நாள்,
பழந்தமிழ் மக்களின் பருவத் திருநாள்;
சங்கத் தமிழின காமன் பெருநாள்;
இங்கிவர் ஏத்திடும் காதலர் நாளோ?

எட்டுத் திக்கும் மொழியும் கடக்க,
பட்டுக் கோட்டை புனைந்த வரிகள்;
மலரினும் மெல்லிய மனமெனும் விந்தை;
உலகம் எங்குமே விழையும் காதல்!

கயலாம் விழிகள் கவிதை பேசும்;
குயிலாம் மொழிகள் கரைந்து போகும்!
தினமும் விழிகள் கனவே காணும்;
மனமே கரைய மயங்கி ஆடும்!

இளமை துள்ளும் இன்பப் பதிவு;
தளையு மறியா புதுமைக் பாட்டு!
எண்ணம் இனிக்கும் இன்ப உறவு;
கண்கள் பேசும் காதற் கனவு!

முல்லை மொட்டாய் முகிழும் வயதில்,
உள்ள மறியும் வசந்த காலம்!
மெல்ல மாறி மலரும் எண்ணம்;
துள்ளி யாடும் வயதில் தோன்றும்!

கள்ளத் தனமாய் காணுங் கலையை
சொல்லித் தருவ துண்டோ யாரும்?
மலையில் பிறந்த மலரின் குவையாய்
அலையில் அரும்பு மமுதக் கலையாய்

முகிலில் மறைந்த முழுமை மதியாய்
துகிலும் மறைத்த சொர்ணச் சிலையாய்
வானம் வரைந்தக் வண்ணக் கலையாய்
தோன்று கின்ற உள்ளத் துணையும்;

கொஞ்சுங் கிளியாய் நெஞ்சி லுலவி;
பஞ்சின் மென்மைப் பார்வை வீசி,
சில்லறை சிந்து மெழிலாம் சிரிப்பில்
கிள்ளை யொத்த மொழியின் பேச்சில்

கள்ள மில்லா கண்கள் சொல்லும்
உள்ளம் பற்றும் உரிமைத் தொடலில்
வளரா இளமைக் கொடியும் வளரும்;
மலராக் கூர்மை முகையும் மலரும்!

அன்று முதலாய் இன்று வரையில்
நின்றே உலகில் கலந்தே உயிரில்,
ஒன்றிய உணர்வில் ஓர்ந்தே மணக்கும்
என்றும் இனிக்கும் அன்பின் அழகே!

206123_593989413950338_1047490967_n

இராஜ. தியாகராஜன்
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: