RSS

எந்த முகவரியில் தன் ஆறு சகாக்களையும் கண்டானோ -கே. என். சிவராமன்

19 Feb

10429846_10206100385818235_2665674475978084583_nப்ளஸ் 2 முடித்தபோது அவனுக்கு வயது பதினேழு. ஷார்ட் ஹேண்ட், டைப்ரைட்டிங்கில் கில்லாடி. காற்றுக்கு சமமாக கீ போர்டில் பயணிப்பதில் கெட்டிக்காரன். எனவே அமைந்தகரையில் இருந்த அந்த நிறுவனத்தில் ஸ்டெனோவாக வேலைக்கு சேர்ந்தான்.
அடுத்த மூன்றாண்டுகளில் நம்பர் 5, 2வது லைன் பீச் சாலையில் இயங்கி வந்த அந்த லாஜிஸ்டிக் நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தான். முன்பை விட கொஞ்சம் சம்பளம் அதிகம். ஆனால், பணி நேரம் அதிகம். ஆபீஸ் பாயில் ஆரம்பித்து, குப்பைகளை பெருக்குவதில் தொடங்கி சகலமும் அவனே. பெரும்பாலான நாட்கள் அலுவலகத்திலேயேதான் உறங்குவான். அலுவலக பூட்டு அவனால்தான் திறக்கப்படும். அவன் கரங்களால்தான் பூட்டப்படும். சாவியின் அளவு எப்படியிருக்கும் என்று கூட நிறுவன முதலாளிக்கு தெரியாது.
எந்த நேரத்தில் உறங்கினாலும் அதிகாலை 4.45க்கு எழுந்து விடுவான். 5 மணிக்கு பீச் ஸ்டேஷனில் இருப்பான். 6 மணிக்குள் அம்பத்தூரில் இருக்கும் தன் வீட்டுக்கு வந்து விடுவான்.
அவன் அம்மா அவனுக்காகவே காத்திருப்பார். சுடச்சுட டிபன், உணவு தயாராக இருக்கும். குளித்துவிட்டு சாப்பிடுவான். டிபன் பாக்ஸுடன் அலுவலகத்துக்கு கிளம்பி விடுவான். சரியாக கடிகார முள் பத்தை தொடும்போது அலுவலக மேஜை நாற்காலிகளை துடைத்து சுத்தமாக வைத்திருப்பான்.
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்கள் அனைத்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல் இப்படித்தான் கழிந்தன.
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தான், உருவத்தில் மட்டுமல்ல நிறுவனத்திலும். ஆங்கிலம் அவனிடம் மண்டியிட்டது. பொருளாதார நெளிவு சுளிவுகள் அவன் விரல் நுனிக்கு வந்து அமர்ந்தது.
பிறகு வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான்.
அங்குதான் அவனுக்கு 6 பேர் நண்பர்களானார்கள். ஆறு பேருக்கும் அவன்தான் மாதா, பிதா, குரு. தனக்குத் தெரிந்த தொழில் நுணுக்கங்களை அவர்களுக்கு கற்றுத் தந்தான். அவர்களிடம் இருந்த திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தான். அதனாலேயே அவர்கள் அனைவருக்கும் ‘சார்’ ஆனான்.
2004ம் ஆண்டு அந்த ஆறு பேரையும் அழைத்தான். நம்மிடம் திறமை இருக்கிறது. நாம் அனைவரும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை தொடங்கினால் என்ன?
கை கோர்த்தார்கள். கடன் வாங்கினார்கள். அடகு வைத்தார்கள். பணத்தை திரட்டினார்கள். ஆறு பேருக்குமே அவன் மீது நம்பிக்கை இருந்தது. தங்கள் எதிர்காலத்தை சந்தேகத்துக்கு இடமின்றி அவனிடம் ஒப்படைத்தார்கள்.
திட்டமிட்டபடி பிப்ரவரி இறுதியில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை சின்னதாக தொடங்கினார்கள். தனக்குப் பிடித்த கவிஞரின் பெயரையே தங்கள் நிறுவனத்துக்கு அவன் வைத்தான்.
நகுலன்.
உழைத்தான். உழைத்தார்கள். ஏழு விதைகளும் செடிகளாக முளைத்தன. அரும்பியவை மரங்களாகின, விதைகளை தூவின. அவை முளைக்க வழி விட்டன.
இன்று அந்த ஏழு விதைகளும் தோப்பாக விரிந்திருக்கின்றன.
பழைய இடம் போதவில்லை. புதிதாக இடம் தேடினார்கள். கிடைத்தது. லிப்ட் வசதியுடன் கூடிய மூன்றாவது மாடி.
இந்த புதிய இடத்தில்தான் இன்று (13.03.13) முதல் தன் ஆறு கூட்டாளிகளுடன் சேர்ந்து அவன் குடித்தனம் நடத்த ஆரம்பித்திருக்கிறான்.
சுற்றிலும் கண்ணாடி கதவுகள். வசீகரிக்கும் இண்டீரியர் டெக்கரேஷன். பணியாளர்கள் அனைவரும் அமர்வதற்கான நவீன மேஜை நாற்காலிகள். குறிப்பிட்ட இடைவெளியில் சுவற்றை அலங்கரிக்கும் குளிர்சாதன பெட்டிகள். மொத்தத்தில் எம்.என்.சி. நிறுவனம் ஒன்றின் மினியேச்சர்.
அவன் அமர்வதற்காக தனியாக ஒரு கண்ணாடி கேபினை அந்த ஆறு பேரும் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள். அது தங்கள் ‘சார்’-க்கு அவர்கள் செலுத்தும் மரியாதை.
கைத்தட்டல், உற்சாகம், மகிழ்ச்சி, பரவசம், நெகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளும் ஒரு சேர அவனை அழைத்து வந்து அந்த கேபினில் அமர வைத்தார்கள். நிரம்பி வழியும் ஆசையுடன் அழகு பார்த்தார்கள்; பார்க்கிறார்கள்.
அதற்கு காரணம் இருக்கிறது.
எந்த அலுவலகத்தில் குப்பைக் கூட்டுவது முதல், பென்ச் நாற்காலிகளை துடைப்பது வரை சகல வேலைகளையும் அவன் செய்தானோ –
எந்த இடத்தில் இரவு ஒரு மணிக்கு படுத்து அதிகாலை 4.45க்கு எழுந்தானோ –
எந்த முகவரியில் தன் ஆறு சகாக்களையும் கண்டானோ –
அதே இடம். அதே முகவரியில் இருந்தபடிதான் இனி அவன் ஆட்சி செய்யப் போகிறான்.
நம்பர் 5, 2வது லைன் பீச்.
வாழ்த்த வயதும் உரிமையும் இருந்தும் வணங்குகிறேன் ஜ்யோவ்ராம் சுந்தர்
– இது மார்ச் 13, 2013 அன்று எழுதப்பட்ட நிலைத்தகவல்.
வரும் திங்கள் (23.02.2015) அன்று 12வது ஆண்டில் சுந்தரும் அவரது நண்பர்களும் கைகோர்த்தபடி அடியெடுத்து வைக்கிறார்கள். அவர்களது நிறுவனம் உலகம் முழுக்க பரவி நூற்றாண்டு காண மனமார்ந்த வாழ்த்துகள்…

10665874_10204722651775745_7059755186017600930_nகே. என். சிவராமன்
Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: