RSS

சொல்லத் தோணுது 26: பயிரைக் கொல்லும் வேலிகள் – தங்கர் பச்சான்

31 Mar

சொல்லத் தோணுது 26: பயிரைக் கொல்லும் வேலிகள்

unnamed2
எங்கும் கால் வைக்க முடியாதபடி நாற்றமெடுத்த ஊழல் சாக்கடையும், ஒழிக்கவே முடியாத லஞ்சமும், எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என வரம்பு மீறிய வன்முறைகளும், சட்டம், நீதி, காவல்துறை என எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையற்றுப்போன வரண்ட மனநிலையும், பணம், பணம் என ஓடிக்கொண்டே எதிர்வீட்டுக்காரனின் பெயர் தெரியாமலேயே நூறு ஆண்டுகள் வாழ்வதற்காக உடல் நலத்தைப் பேணுகின்ற மக்களும் நிறைத்துவிட்ட இந்த நாட்டிற்கு விடிவு எப்பொழுதுக் கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என யாராவது சொல்ல முடியுமா?

முன் ஏர் எப்படிப் போகிறதோ அதைப்பின் தொடர்ந்துதான் மற்ற ஏர்களும் போகும். அதுவே வளைந்து நெளிந்து கோணல் மாணலாகப் போகும்போது மண்ணுக்குள் கிடக்கின்ற விதைகளின் நிலைதான் இங்கு மக்களின் நிலையாகவும் இருக்கிறது.

உழைத்துப் பிழைக்க வேண்டிய மக்கள் ஏய்த்துப் பிழைக்கவும், அடித்துப் பிழைக்கவும், கொடுத்துப் பிழைக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். லஞ்சத்தைக் கொடுக்கவும் வாங்கவும் இங்குத் தயாராக இருக்கின்றபோது அதனை வாங்க மறுப்பவர்கள்தான் பெரும் குற்றவாளி எனும் நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். பணமில்லாமல் தேர்தலில் போட்டியிடுபவர்களை மக்கள் பரிதாபத்தோடுப் பார்க்கிறார்கள். மக்கள்தான் அப்படியென்றால் அவர்களை வழி நடத்துவதாகச் சொல்லிக் கொண்டு கருத்துரிமைக்காக வரிந்துகட்டுகின்ற பெரும்பான்மையான ஊடகங்களும் அவற்றின் கடமைகளைச் செய்யத் தவறிவிடுகின்றன..

அப்படிப்பட்ட ஊடகங்களெல்லாம் மக்களை ஏமாற்றி தவறான வழிகளில் பொருள் சேர்த்து பேராசையினால் மீண்டும் மீண்டும் கொள்ளையடித்துக் கொண்டிருப்பவர்களால் நடத்தப்படுபவைகள். அவைகளின் வேலையெல்லாம் மக்களின் மனதை மாற்றி மயக்கத்திலேயே வைத்திருக்க காரியமாற்றிக் கொண்டிருப்பது மட்டுமே.இவ்வாறான ஊடகங்களைப்பார்ப்பதாலும்,படிப்பதாலும் சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்கிறோம் என்பதை மக்கள் உணர்வதேயில்லை.

இப்படிப்பட்டவர்களை விரட்டியடிக்க சாதி, மதம், ஏழை, பணக்காரன் எனப் பலவாறாக பிரிந்துக் கிடக்கும் மக்களால் இனி உண்மையானப் போராட்டங்களோ, புரட்சியோ உருவாகப்போவதில்லை.

முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான ஈழத்து மக்களின் இனப்போராட்டம் சூழ்ச்சியால் முடித்துவைக்கப்பட்டபோது அதன் தலைவரானப் பிரபாகரன் இறந்துவிட்டதாக ஊடகங்களில் காண்பிக்கப்பட்டபோது எந்தவித சிறு சலனமோ, அதிர்வோ தமிழகத்தில் நிகழவில்லை. என்றைக்கும் போல் தொலைக்காட்சித் தொடர்களில், திரையரங்கில், கடைத் தெருக்களில், பயணங்களில் என எதனையும் விட்டுத் தராமல் தமிழக மக்கள் அனைவரும் அவரவர்களின் விருப்பப்படித்தான் நடந்து கொண்டார்கள். அதன்பின் உடனே சில மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் எதிர்ப்பைக் கூட காண்பிக்கத் தவறிவிட்டார்கள்.

இதுபோன்ற நிகழ்வுகளைக் கணக்கெடுத்துதான் இந்த மக்களை வைத்து எதையும் சாதித்துக்கொள்ளல்லாம் என மக்களை ஆளத்துடிப்பவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளாமல் அதன் பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நேர்மைத் தவறுபவர்களைத் தட்டிக்கேட்கவும் முடிவதில்லை. நேர்மையுடன் வாழ்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உறுதுணையாக நின்று அவர்களை முன் மாதிரியாக வைத்து சமூகத்தை வளர்த்தெடுப்பதும் இல்லை. தங்களின் கண்முன்னே நிகழும் அநியாயங்களை நிறுத்த இனி நாம் என்ன செய்யப்போகிறோம்? நம் கையில் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அந்த ஒரே ஒரு வாக்குரிமையையும் பணத்துக்கு விற்று விடுகிறோம்.

அரசியல் கட்சிகளிடமுள்ள குறைகளை அலசும் நாம் அவர்களிடமே நம் வாழ்க்கையைக் கொடுத்துவிட்டு விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். நேர்மைக்காக போராடுபவர்கள், அநியாயத்தை எதிர்த்துக் கேள்விகள் கேட்பவர்கள், மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்க தங்களின் வாழ்வை ஒப்படைப்பவர்கள் போன்றவர்களைக் கண்டாலே பதவிக்கும்,அதிகாரத்திற்கும் ஏங்கும் கட்சிகளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தங்களின் அரசியல் தொழில் பயணம் தடைப்பட்டுப் போகும் என்பதால் துடி துடித்துப்போகிறார்கள். மக்களும் நேர்மையானவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை. சமுதாயப்பற்றுடன் தான் இருக்கிறோம் என சொல்லிக்கொள்கிற இளைஞர் கூட்டமும் சமூக வலைதளங்களை நம்பியே தங்களின் உணர்வை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களிடமிருந்து விடுதலைப்பெற்றுத்தர, இவர்களின் முகத்திரையைக் கிழிக்க முன்வரும் நேர்மையானவர்களுக்கெதிரான செயல்களில் தெருவில் இறங்கி தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க மக்கள் தவறும்போது எக்காலத்துக்கும் விடுதலையில்லை.

வேளாண்மைத்துறையில் முனைவர் பட்டம் பெற்று பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியலாளரான எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் வேளாண்மைப் பொறியாளரான தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரசாமி போலவே தத்தளித்துக்கொண்டிருக்கிறார். நேர்மையாக இருப்பதினாலேயே, வேளாண்மைத்துறையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வர விரும்புவதனாலேயே நேர்மையற்ற வழியில் துணைவேந்தரான ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தலுக்குள்ளாகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் வேளாண்மை விஞ்ஞானி இன்று அந்த வளாகத்துக்கு இயந்திரங்கள் மூலம் தண்ணீர் நிரப்பும் கடைநிலை ஊழியரின் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். எந்தப்பழியும் சுமத்தப்படாமல் ஓய்வுபெற்று வீட்டுக்குத் திரும்பும் நாளை பதைபதைப்புடன் எதிர்பார்த்திருக்கிறார். இதனால் இழப்பு எனது நண்பருக்கு மட்டுமில்லை. மக்கள் பணத்தில் உருவான ஒரு அறிவியலாளனின் கண்டிபிடிப்புகள் இந்த நாட்டுக்கேக் கிடைக்காமல் போய்விடுகின்றன. இப்படி எத்தனை ஆயிரம் பேர்களோ பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வாக்குறுதித்தந்து நிறைவேற்றாமலிருக்கிற அரசியல்வாதிகள் மக்களை பழிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் உணவிடும் உழவனும் பழிவாங்கப்படுகிறான். என்றைக்குமே எடுபடாத குரல்களில் முதன்மையானது உழவனின் குரல்தான். ஏனென்றால் அவன் தன் தொழிலை ஒரு நாளும் நிறுத்தமாட்டான் என்பது எல்லோருக்குமேத் தெரியும்.

சொந்த குடும்பத்துக்காகவும்,தனக்காகவும்,தன்னைச்சாந்தவர்களுக்காகவும், தங்களின் கட்சியை சார்ந்தவர்களுக்காகவும் மட்டுமே போராட்டங்களையும், அறிக்கைகளையும் நடத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்காக என்றைக்குமே அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து போராட முன் வர மாட்டார்கள்.

பாவம் இது தெரியாமல் புது தில்லியில் உழவர்கள் கூடி போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக உழவர்களின் நிலைதான் பெரும் கவலைக்குரியது. தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கும் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் நாடாளுமன்றத்தில் கத்திப்பார்த்தார், கதறிப்பார்த்தார்,கெஞ்சியும் பார்த்தார்! நமது மற்ற உறுப்பினர்கள் அனைவரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். ஆனால், கர்நாடக உறுப்பினர்கள் கட்சி வேறுபாட்டை நினைக்காமல் காவேரி ஆற்று தண்ணீருக்காக எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பேசியவரையும் பாதியிலேயே அமர்த்திவிட்டார்கள். அதேபோல் நிலம் கையகப்படுத்தப்படும் சட்டத்தை கண்டும் காணாததுபோல் நம்மவர்கள் தனித்தனியாக அறிக்கை விட்டுக்கொண்டும் போராடிக்கொண்டும் இருக்கிறார்கள்.

ஏன், தமிழ்நாட்டில்தானே எல்லா அரசியல்கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள். தமிழ்நாடு முக்கியம், தமிழ்நாடு மக்கள் முக்கியம், உழவர்கள் முக்கியம் என நினைத்தால் ஒரே மேடையில், ஒரே இடத்தில் தங்கள் பகைகளையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு வரலாமல்லவா?

என்றைக்கும் வரவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தங்கள் கட்சி, தங்கள் குடும்பம், தங்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே முக்கியம். மேலும் தங்களின் வெறுப்புணர்ச்சியை காண்பிப்பதற்கும், பழிவாங்குதலை நடத்தி மக்கள் தலையில் சுமையை ஏற்றிப் பரதேசியாக்குவதற்கும்தான் அரசியல் கட்சிகள் நடத்துகிறார்கள். இதனைப்புரிந்து விழித்துக்கொள்ளும் வரை மக்கள் கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட எலிகள்தான்.

– சொல்லத் தோணுது…
IMG_2817தங்கர் பச்சான்

by mail from: Thankar Bachan  

thankartamil@gmail.com

சொல்லத் தோணுது 24_ கருகும் பிஞ்சுகள்! – தங்கர் பச்…

சொல்லத் தோணுது 25: கலையும் கள்வர்களும்! – தங்கர் …

Advertisements
 
Leave a comment

Posted by on March 31, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: