RSS

இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை !

13 Apr

இந்த உலகு வேடிக்கையானதுதான், அவசரமில்லாத ஒன்றிற்கு, உடனடி (Instant) நன்மை செய்கிறோம் என்கிற எண்ணத்தில், எஞ்ஜின் கழற்றி விடப்பட்டிருக்கிற அதே ஆம்புலன்ஸில் உயிர் போராளியை ஏற்றி அனுப்ப முயற்ச்சிப்பதும், ரொம்பவே நிதானிக்கிறோம் என்கிற நினைப்பில்; தொண்டைக் குழியில் உயிர் அடைத்துக் கொண்டிருக்கும் கடைசி கட்டம் வரை காத்திருந்து; அவசர சிகிட்சைப் பிரிவில் சேர்ப்பதுமாக இப்படியேதான் காலம் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கிறது, விதிவிலக்காக விரல் விட்டு எண்ணி விடும் சிலவற்றை தவிர்த்து.

தங்களைச் சார்ந்த அறச்செயல்கள் அம்பலப்படும் நிலையில் அத்தனை இனிமை நிறைந்ததாக காட்சி தரும் இவ்வுலகு, எப்படியோ விஞ்ஞானத்தின் விவேகத்தால் ஒரு எந்திரம் கண்டு பிடிக்கப்பட்டு, அதன் கட்டாய பரிசோதனைக்கு மனிதர்கள் ஒவ்வொருவரும் ஆளாக்கப்படும் என்றொரு நிலையும் ஏற்பட்டு, சோதனைக்கு உட்படுபவரின் கடந்த கால செயல்பாடுகள் எல்லாம்; உள்ளது உள்ளபடியே பொருத்தப்பட்டிருக்கும் அதன் திரையில் காட்சிகளாக விரியும் என்றிருக்குமானால், நாமென்ன, நல்லோர் என்ன, புடம் போட்ட தங்கங்களும், பளபளப்பு காட்டும் வைர வைடூரியங்களும்தான் என்ன, கற்பனையிலும் நினைக்காத நெடும் பேர்களெல்லாம் அக்கணத்திலேயே நெடுமாமலைகளாய் சாய்ந்து விழும் பூகம்ப நிலையையே ஏற்படுத்தித்தான் விடாதா?

போகட்டும், என் கற்பனை மிகுதிதான் என்பதை நான் ஒப்புக் கொள்ளும் நேரம், இப்படித்தான் நாளை மறுமையில் எல்லாமும் வெட்ட வெளிச்சமாகும் என்று வேதங்கள் பலவும் சொல்லி வைத்திருக்கின்றன என்பது நேர்மையாளர்களின் ஆழ்ந்த சிந்தனைக்குரியதல்லவா? ஆக, எல்லோருக்கும் அப்பட்டமாக புரிந்திருக்கிற ஒரு உண்மையும், அதனால் ஏற்பட்ட நிம்மதியும் என்னவென்றால், இறையை, அவன் மறையை முழுமையாக நம்பினாலும், இவ்வுலகில் அவரவர்களால் அவர்களுக்கேயான காரணங்களால் மறைக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் அவ்வளவு எளிதில் வெளிப்பட்டு, நினைக்கும் அப்படியான கூடுதல் தாக்கங்களை எந்த விதத்திலும் ஏற்படுத்தி விடாது என்கிற இன்னொரு புறத்திலான 100% Warranty கொண்ட பாதுகாப்பும்தானே.

இப்படியான ஒரு முழு நம்பிக்கையிலேயே வானத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் யாவரின் வாழ்வும் கடந்து கொண்டிருக்கும் நிலையில், எந்திரத்தில் மாட்டிக் கொண்டவன் மட்டுமே குற்றவாளி என்று பெருங்குரலெடுத்து, ஆதிகால வழக்கப்படி உயிருடன் கொளுத்த முற்படும் நீதிவான்களின் அநாகரீகத்தை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூற வருகிறேன், கையில் தீ பந்தங்கள் ஏந்தி, நாலா திக்குகளிலிருந்தும் எதிரொலிக்கும் பறைகளின் சப்தம் கேட்டு, மலையடிவாரங்களை நோக்கி கொலை பலிக்கு கொலை வெறியுடன் ஒடி வர வேண்டிய தேவை இல்லை என்றும் தடுக்க வருகிறேன்.

காலத்தின் வேகத்தால், காட்சிகளின் மாற்றத்தால் பல அடிப்படை நெறிகள் கூட, அஸ்திவார சேதமில்லாமல் புனரமைப்பு பெற்றிருப்பது புரிந்து கொண்டோர்க்கெல்லாம் புரிதலான ஒன்றே. நடந்த செயல் தலைவெட்டும் குற்றமே என்றிருப்பினும், கத்தி எடுக்கும் நேர்மை கொண்ட கைகள் இன்றைக்கு இங்கில்லை என்கிற கட்டாய உண்மையை உணற வேண்டும். பதிலாக, மறுமலர்ச்சி சிந்தனையின் மீட்சி பெற்று, நீள நினைக்கும் அந்த கைகளே உறுதியோடு வானுயர வேண்டும், அந்த உயர்த்தலில், சந்தர்ப்பங்களின் சாட்சியக் கேடுகளால்; முகங்களில் கரும் புள்ளிகள் குத்தப்பட்டு தாழ்ந்திருக்கும் பரிதாப தலைகள் எல்லாம் தன்னம்பிக்கையோடு மீண்டும் கழுத்து நரம்புகள் புடைக்க தன்மானத்தோடு நிமிர வேண்டும்.

சமூக நீதி காப்போம் என்போர், பழிகளினால் ஏற்றப்பட்ட பாவச் சுமைகளை வேதனையோடு தாங்கி வளைந்து கிடக்கும் முதுகுகளை நிமிரச் செய்து, சமுதாயத்தின் நாலா திசைகளிலிருந்தும் துன்பம் நீங்கி எழுந்து வரும் விடுதலையின் சந்தோஷ ஆலாபனைகளை முதலில் கேட்கச் செய்ய வேண்டும், கரகரப்பில்லாத சந்தோஷக் குரல்களே, சமூகத்தின் கழுத்து நெறிபடாத விடியலுக்கான பூபாளம் !!

10858410_509656449177069_5663572308532446822_nRaheemullah Mohamed Vavar
 
Leave a comment

Posted by on April 13, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: