RSS

வழித்தடம் உரைக்கும் எமது மொழிபெயர் உலகினுள் !

21 Apr

2242தமிழ், ஒரு வாசனையைப் போல உலகம் முழுவதும் பரந்துள்ள மொழியாகவிருக்கிறது. உலகிலுள்ள எல்லா தேசங்களிலும் ஏதோவொரு மூலையிலாவது எவராவது ஒருவர் தமிழ் மொழியைப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். வரட்சி மிகுந்த மண்ணில் வாழ்ந்து பழகிய ஆபிரிக்க மக்கள், ஏதேனுமொரு செழுமை மிக்க பிற தேசத்துக்கு புலம் பெயர நேருமிடத்து அங்கும் தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பாவிப்பதைப் போல, தமிழ் மொழியைப் பேசுபவர்களும் தாம் வாழ நேரும் நிலங்களில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிக்கனமாகவேனும் தமிழைப் பேசியும், எழுதியும் அம் மொழியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதுமான தமிழ் மொழியின் பரவலுக்கு, தமிழ் பேசும் மக்களின் புலம்பெயர்தலே காரணமாக இருக்கிறது. தொழிலின் நிமித்தமோ, யுத்தத்தின் பலிகடாக்களாகவோ, வேறு தேவைகளுக்காகவோ தம் பூர்வீக இடங்களை விட்டும் புலம் பெயரும் தமிழ் பேசும் மக்கள் தம் உயிரோடு இரண்டறக் கலந்த மொழியையும் எடுத்துச் செல்கிறார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எந்த நாட்டுக்குச் சென்று எம் மொழியைக் கற்றாலும் தமிழ்தான் அவர்களது சிந்தனை மொழியாக இருக்கிறது.

பண்டைய காலம் தொட்டு, நம் மூத்த குடிகளின் மொழியான தமிழைப் பேணிப் பாதுகாப்பதில் அவர்களது காப்பியங்களும், இலக்கியங்களும் பெரும்பங்காற்றியிருப்பதை மறுப்பதற்கில்லை. அச் செல்வங்கள் இல்லையெனில், புராண தமிழின் பெருமையைக் கூறும் சான்றுகள் ஏது? எனில், அவற்றைப் பாதுகாத்து இந் நவீன காலத்துக்குக் கொண்டு தந்த அப் பெருந் தகைகளை எவ்வாறு மறத்தலோ, மறுத்தலோ தகும்?

அனைத்தும் நாகரிக மயமாகி விட்ட இக் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறும், இலக்கியங்களும், தமிழ் மொழி மூலமான படைப்புக்களும் உலகம் முழுவதும் பரவி விட்டபோதிலும், வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடத்தில் தமிழ் மொழி இலக்கியங்களைக் கொண்டு செல்ல வேண்டியது அம் மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலேயாகும். இந்த இடத்தில்தான் எழுத்தாளர்களுக்கு ஈடாக, அவர்களது படைப்புக்களை ஏனைய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்பவர்களும், அம் மொழிபெயர்ப்புக்களைத் தொகுத்து உலகம் முழுவதும் வாழும் வேற்று மொழி மானிடருக்குக் கொண்டு சேர்ப்பவர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். உலகம் போற்றும் அவர்களது செயல் பெரும் மதிப்புக்குரியதாகிறது.

சர்வதேசமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்க்கும் நோக்கோடு 2001 ஆம் ஆண்டு பலரது ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாகத் தோற்றம் பெற்றதுதான் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம். இத் தோட்டத்தில் மொழிபெயர்ப்புப் படைப்புக்கள், அரிய தமிழ் நூல்களின் மீள்பதிப்பு, திறமையானவர்களுக்கு விருது வழங்கி ஊக்குவித்தலும், கௌரவித்தலும், இலவச தமிழ் நூல் வினியோகம் எனப் பல விளைச்சல்கள் வெற்றிகரமாக நடந்துகொண்டேயிருக்கின்றன.

Professor-Chelva-Kanaganayakamஅவற்றுள் மற்றுமொரு பெறுமதிமிக்க விளைச்சலாக, அண்மையில் காலமான பேராசிரியர் திரு.செல்வா கனகநாயகம் அவர்களது முயற்சியின் பேரில், கடந்த மூன்று தசாப்தங்களாக உலகம் முழுவதும் வெளிவந்துள்ள தமிழ்க் கவிதைகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எம்.எல்.தங்கப்பா, அனுஷியா ராமஸ்வாமி, மைதிலி தயாநிதி ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘In Our Translated World’ என ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ ஒரு முழுத் தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளமையானது, இங்கு பெரிதும் பாராட்டத்தக்கது. ‘தமிழ் இலக்கியத் தோட்ட’ வெளியீடாக வெளிவந்த இத் தொகுப்பினை வெளியிடும் அனுமதியைப் பின்னர் பெற்ற இந்திய ‘விகடன்’ பதிப்பகம், இன்னும் பல பிரதிகள் அச்சிட்டு, மலிவு விலையில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த முப்பது வருடங்களில் தமிழில் பல ஆயிரக்கணக்கான கவிதைகள் அச்சு ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலிருந்து சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதென்பது மிகவும் சிரமமான விடயம் என்பதோடு பரந்த அர்ப்பணிப்பும், உன்னிப்பான கவனமும், கவிதைகள் மீதான வெகுவான ஈடுபாடும் தேவைப்படும் பணியாகவிருக்கிறது. அதை மிகுந்த ஈடுபாட்டோடும் அக்கறையோடும் எழுத்தாளர் திரு.அ.முத்துலிங்கமும் அவரது நண்பர்களும் செய்திருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘தமிழ் இலக்கியத் தோட்டத்துக்காக’ தொகுத்த, அதன் நிறுவுனர்களில் ஒருவரான அமரர் திரு. செல்வா கனகநாயகம் கனடா, டொரன்டோ பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். அத்தோடு மொழிபெயர்ப்பாளர். எனவே, வேறு சில மொழிபெயர்ப்புப் படைப்புக்களை வாசிக்கும்போது எழும் ஐயப்பாடுகளும், குழப்பங்களும், வார்த்தை மயக்கங்களும், பிசகுகளும் இத் தொகுப்பை வாசிக்கும்போது எழவேயில்லை. ஆங்கில மொழிபெயர்ப்போடு, அதன் மூலத் தமிழ்க் கவிதையும் அருகருகே அச்சிடப்பட்டிருப்பதால் தமிழ் வாசகர்களுக்கு கவிதைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

In_Our_Translated_World_Tamil_poems_English_Collectionஎழுத்தாளர்களும், கவிஞர்களும் ஆக்கங்களைப் படைப்பவர்கள் எனில், அப் படைப்புக்களை அவற்றின் மூலத்தோடு எவ்வித மாற்றமும் செய்யாது, இன்னுமொரு மொழிக்கு மொழிபெயர்ப்பவர்கள் அதனை ஒரு தவம் போலவே செய்கிறார்கள். எனவே யதார்த்த வாழ்வியல், யுத்தம், நேசம், துரோகம், இயலாமை, இயற்கை, வன்மம், இழப்பு என மனித வாழ்வில் சந்திக்க நேரும் எல்லாமும் கொண்ட காத்திரமான எழுபத்தெட்டு தமிழ்க் கவிதைகளை, அவற்றின் செறிவும், உள்ளடக்கமும், சாரமும், அழகும் மாறாது இன்னுமொரு மொழிக்கு மாற்றுவதென்பது இலகுவான விடயமாக ஒருபோதும் இருப்பதில்லை.

கடந்து சென்ற அண்மைய மூன்று தசாப்தங்கள் தமிழ் பேசும் மக்களிடத்தில் இலகுவாக மறக்கப்படக் கூடிய காலகட்டமல்ல. அக் காலகட்டத்துக்குள் வலிகளும், இழப்புக்களும், வேதனைகளும் புதையுண்டு கிடக்கின்றன. எனவே இத் தொகுப்பிலுள்ள இலங்கை மற்றும் புலம்பெயர்ந்தோரின் கவிதைகளில் பல யுத்தத்தின் துயரங்களையும், கண்ணீரையும் எடுத்துரைப்பவை. விடையற்ற வினாக்களாக நம் முன் வைக்கப்படுபவை. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் கவிதைகள் வாழ்வியல் பிரச்சினைகளின் வெவ்வேறான பரிமாணங்களை சித்தரிப்பவை. எல்லாக் கவிதைகளுமே ஒன்றுக்கொன்று வேறானவை. வெவ்வேறு கோணங்களில் நம் கவனத்தை ஈர்ப்பவை. இவ்வாறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கவிதைகளுமே சர்வதேசமும் அறிய வேண்டியவை.

உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. தமிழைப் பூர்வீகமாகக் கொண்ட புதிய தலைமுறைகள் கூட இக் காலத்தில் தம் வேரைப் பிடுங்கி வேற்று மொழிகளிலேயே நட்டு வளர்க்கப்படுகிறார்கள். இதனால் சமூக ரீதியிலும், கலாசார ரீதியிலும் தமிழின் செழுமை அரிதாகும் வாய்ப்பே மிகும். எனவே வரவேற்கத்தக்க இவ்வாறான தொகுப்புக்கள் தொடர்ந்து வெளிவருவதானது காலத்தின் தேவையாக இருக்கிறது. வரவேற்போம் !

M.RISHAN SHAREEF-HEARTS எம்.ரிஷான் ஷெரீப்– எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி

http://mrishans.blogspot.in/2015/04/blog-post.html
# ஆக்காட்டி கலை இலக்கிய இதழ் – ஜனவரி 2015, மலைகள் இதழ், வல்லமை இதழ், பதிவுகள், தமிழ் எழுத்தாளர்கள், நவீன விருட்சம் இதழ், இனியொரு இதழ்

Advertisements
 
Leave a comment

Posted by on April 21, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: