RSS

பரம்பரை வலி – /கே. என். சிவராமன்

05 May

பரம்பரை வலி – /கே. என். சிவராமன்

15.1.1999 தேதியிட்ட ‘குங்குமம்’ இதழில் எனது சிறுகதை வெளியானது. அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, இன்றுவரை வெகுஜன இதழ்களில் ஏராளமான சிறுகதைகளை வெவ்வேறு பெயர்களில் எழுதியிருக்கிறேன். எழுதியும் வருகிறேன். ஆனால், இந்த சிறுகதை கொஞ்சம் ஸ்பெஷலானது. அதற்கு காரணமும் இருக்கிறது.

மாலன் ‘குங்குமம்’ இதழின் சிறப்பாசிரியராகவும், பொறுப்பாசிரியராக சாரு ப்ரபா சுந்தரும் பொறுப்பேற்ற நேரம். உதவியாசிரியராக அதே இதழில் நான் பணியில் அமர்ந்து ஐந்து மாதங்கள் ஆகியிருந்தன. மாலனிடம் முந்தைய நாள் ஒரு சிறுகதையை தந்திருந்தேன். மறுநாள் காலை அலுவலகத்துக்குள் நுழைந்தவர், தனது அறைக்கு செல்லாமல் நேராக என்னைத் தேடி நான் இருந்த இருக்கைக்கே வந்தார். கையைப் பிடித்து குலுக்கியவர், ‘கதை நல்லா இருக்கு. இந்த இஷ்யூலயே போட்டுடலாம்’ என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றவர், அலுவலக புகைப்படக்காரரான நண்பர் சிநேகனை அழைத்து என்னை படமும் எடுக்க சொன்னார். எனது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் – இனிஷியலுடன் கூடிய எனது பெயருடன் – அந்தக் கதை வெளியானது. போட்டோவுடன் வந்த கதை இன்றைய தேதி வரை அதுமட்டும்தான். புகைப்படத்தின் கீழே, மாலன் எழுதிய குறிப்பு தனித்து பிரசுரமானது. ‘சிறுகதை என்பதை ஒரு இனிய அனுபவமாக மாற்றத் தேவையானவை நடையும், அது விரிக்கும் வாழ்வின் அனுபவமும். அவற்றை சரியான அளவில் இந்தக் கதையில் பயன்படுத்தி முத்திரை பதித்திருக்கும் கே.என்.சிவராமன், ஓர் இளம் பத்திரிகையாளர். வயது 27’.

இதுதவிர, தனது பர்சனல் லெட்டர் பேடில் தனது கைப்பட ஒரு கடிதம் எழுதி, ”இது வாசகர் கடிதம்!” என சிரித்தபடி தந்தார். நெகிழ்ந்துவிட்டேன்.

வீட்டுக்கு அடங்காமல் என் போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட என் மீது என் பெற்றோருக்கு நம்பிக்கை துளிர்விட்ட தருணம், அந்த இதழை அவர்கள் பார்த்தபோதுதான். பலநாட்கள் என் புகைப்படத்தை தடவித் தடவி அப்பா பார்த்ததாக இன்றும் அம்மா சொல்கிறார். அந்த சிறுகதையை பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒருவேளை இந்தக் கதை உங்களுக்கு பிடிக்காமலும் போகலாம்!

இந்த சிறுகதையின் தலைப்பை மட்டும் மாலன் மாற்றினார். நான் வைத்த தலைப்பு எதுவென்று நினைவிலில்லை. மற்றபடி ஒரு வார்த்தையைக் கூட அவர், எடிட் செய்யவில்லை. படித்துவிட்டு சொல்லுங்கள்….
———–
பரம்பரை வலி

தாத்தா அதைச் சொல்லாமலே இருந்திருக்கலாம்.

நாற்பது வயதில் பதினேழு வயதிற்குரிய பூரிப்பு இருக்குமென்று சத்தியமாய் நான் நினைத்ததில்லை. பத்து வயது ஆகாஷ் காமிக்ஸ் புத்தகத்தில் மாயாவியைத் தேடிக் கொண்டிருக்க, முப்பத்தைந்து வயது ரேவதி என்னையே முழுமையாய் நம்பி வாழ்ந்துக் கொண்டிருக்க… நானோ என்றோ சந்தித்த தாராவை தேடி மேற்கு மாம்பலம் வந்திருக்கிறேன்.

தாத்தா அதைச் சொல்லாமலே இருந்திருக்கலாம்.

சரியாகக் காலை எட்டே காலுக்கு தாத்தா என்னை அழைத்தார். ஆபீஸ் கிளம்பும்போது என்றுமே அவர் என்னுடன் பேசியதில்லை.

யோசனையுடன் அவரது அறைக்குச் சென்றேன். பூஜையறையை ஒட்டியபடி அவரது கட்டில். எப்போதுமே சுவாமியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று அவராக தேர்ந்தெடுத்த இடம்.

நான் போனபோது தலைக்கும் முதுகுக்குமாய்ச் சேர்த்து தலையணையை வைத்தபடி கட்டிலில் சாய்ந்திருந்தார். பூஜையறையில் அப்பா இருப்பதற்கு அடையாளமாய் ஊதுவத்தி வாசனை. கூடவே அம்மாவின் ‘ஐகிரி நந்தினி…’

ஒரு தலையசைப்புடன் வரவேற்றார். அருகில் சென்றதும் சுருக்கம் விழுந்த கைகளால் என்னைத் தொட்டார். ஜில்லென்றிருந்தது. ஒன்பது வயதில் இதே கைகளால் என்னை அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்றது நினைவுக்கு வந்தது. அப்போதிருந்த வலு இப்போதில்லை. ஆனால், அதே வாஞ்சை…

நீண்ட நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்தார். அவரையே பார்த்தபடி இருந்தேன். வெற்று மார்பும், கணுக்கால் வரை ஏறிய வேட்டியும், பட்டை பட்டையாய் விபூதியும், குழி விழுந்த கண்களும்…

”தாராவை ஞாபகம் இருக்கா? அதான் தாரகேஸ்வரி…” என்றார் திடீரென்று.

அடிவயிற்றில் சிலீரிட்டது. தடுமாறாமல் இருக்க அவரது கைகளையே இறுகப் பற்றினேன். அம்மாகூட ஸ்லோகம் சொல்வதை ஒரு விநாடி நிறுத்தினாள். அப்பாவின் ரியாக்ஷனை அறிய முடியவில்லை.

”ம்…”

”அவ இப்ப மேற்கு மாம்பலத்துலதான் குடி வந்திருக்கா… நமக்கு தூரத்து சொந்தம்தான். ஆனா, நாம அப்படிப் பழகலை…”

சிகப்பு தாவணி அணிந்த தாரா என்னுள் விஸ்வரூபமெடுத்தாள். கால் கட்டை விரலிலிருந்து தொடங்கிய பச்சை நரம்பு… அரி நெல்லிக்காய்… ரோஜாச்செடி… என ஏதேதோ பிம்பங்களால் அலைக்கழிக்கப்பட்டேன்.

”ராமு…” தாத்தா உலுக்கினார்.

”சொல்லுங்க, நான் என்ன செய்யணும்..?”

”இதுல அட்ரஸ் இருக்கு. நேத்து சேச்சு மாமா வந்திருந்தப்ப கொடுத்தார். போய்ப் பார்த்துட்டு வர்றியா? நேரம் கிடைக்கிறப்ப அவளையும் குடும்பத்தோட வரச் சொல்லு…”

மருதாணி அணிந்த விரல்கள் அப்பளம் பொறித்தன… என் தலைமுடியை வருடி விட்டன. மடியில் சாய்த்துக்கொண்டன. உதிர்ந்த மகிழம் பூவை நான் சேகரித்தேன். அரிசிப்பற்கள் பளீரிட்டன. தா…ரா…

”இன்னிக்கே போறியா?” மறுபடியும் தாத்தா.

தலையை பலமாக உலுக்கிக் கொண்டு அலுவலகம் புறப்பட்டேன்.
——–
தாத்தா அதைச் சொல்லாமலே இருந்திருக்கலாம்.

வேலூர் காட்பாடி காந்திநகரிலிருக்கும் பதினேழாவது கிழக்கு நெடுஞ்சாலையை மேற்கு மாம்பலத்திலுள்ள லேக் வியூ ரோட்டில் தேடுவது எவ்வளவு அபத்தம்?

ஆயினும் மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கியதும் அரி நெல்லிக்காய் மரத்துடன் கூடிய அந்த ஏழாம் நம்பர் வீடுதான் நினைவிற்கு வந்தது.

அன்று பாட்டிக்கு முதலாண்டு திவசம். வீட்டினுள்ளே ஹோமமும் சமையலும் நடந்துக் கொண்டிருந்தன. சூழ்ந்த புகை இருமலை ஏற்படுத்தவே வாசலுக்கு வந்தேன். அரி நெல்லிக்காய் மரத்தில் பிஞ்சுகள் பூத்திருந்தன.

கெளரி அத்தை கொல்லைப்புறத்திலிருந்து வந்தாள். பின்னாடியே ஒரு பெண். யாரென்று தெரியவில்லை. சிகப்புத் தாவணி. ரவிக்கையின் கையோரம் ஜரிகை. பாவாடையில் சமுக்கிப் பூக்கள் சின்னதும் பெரியதுமாய்…

”ராமு…”

”என்ன அத்த…”

”இவ தாரா… தாரகேஸ்வரி. என் நாத்தனார் பொண்ணு. எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறா. கவிதைனா ரொம்ப இஷடம். நீயும் ஏதோ கிறுக்குவியே… அதான் உன் கூட பேச வந்திருக்கா…”

அத்தையின் பின்புறம் அப்பெண் ஒளிந்து கொண்டாள். பாதி முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. எடுப்பான நாசி. முன்னுச்சி முடி நெற்றியில் புரண்டது. காதிலிருந்த ஜிமிக்கி காற்றில் அசைந்தது. கன்னத்தில் பொட்டு பொட்டாய் நான்கைந்து பருக்கள்.

”இதோ வந்துட்டேன்…” உள்நோக்கி குரல் கொடுத்த அத்தை, ”பேசிட்டிருங்க…” என்று பொதுவாக சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றிருந்தாள் தாரா. எனக்கும் ஒன்றும் புரியவில்லை. இதற்கு முன் எந்தப் பெண்ணிடமும் பேசியதில்லை. முக்கியமாய் கவிதை பற்றி.

என்ன ஸ்கூல், பிஞ்சு நெல்லிக்காய் துவர்க்கும்… அம்மாவுக்கு கவிதை பிடிக்காது… என்று ஆரம்பித்து கண்ணதாசன்கிட்ட கம்பனோட சாயல் இருக்கு என்பதில் முடித்தோம்.

அன்றைய பகலில் ஏற்பட்ட குறுகுறுப்பு பரவசமாய் வடிவம் கொண்டது அன்றிரவுதான்.

நீளவாக்கில் ரெயில்வே கம்பார்ட்மென்ட் போல அந்த போர்ஷன். அதில் நான்கு அறைகள். களிமண்ணால் பிடித்து வைத்தது மாதிரி ஒரே அளவு. கிழக்கு நோக்கியிருக்கும் முதல் அறை சமையலறை. அடுத்து பூஜை. மூன்றாவது வராண்டா. காரணம், மூன்றாவது அறையில்தான் வாசக்கதவு இருந்தது. நான்காவது படுக்கையறை.

உறவினர்கள் அதிகமாக இருந்ததால் ஆண்கள் வராண்டா, படுக்கையறையிலும், பெண்கள் மீதமிருந்த இரு அறைகளிலுமாக படுத்தோம். நடு இரவில் தாகமெடுத்தது. ஜன்னலின் மேலிருந்த தண்ணீர் சொம்பு காலி. எனவே சமையலறைக்கு சென்றேன்.

படுத்திருந்தவர்களின் மேல் படாமல் நகர்ந்தபோது தாரா தென்பட்டாள். ஒரு ஓரமாய் சுவரில் ஒன்றியபடி கால்களுக்கு இடையில் கைவைத்து படுத்திருந்தாள். தாவணியே போர்வையாக அமைந்திருந்தது.

கள்ளம் கபடமற்ற முகம். பாவாடை சற்றே விலகியிருக்க கால் கட்டை விரலிலிருந்து புறப்பட்ட பச்சை நரம்பு தெரிந்தது. அந்தக் கணம் முழுவதுமாய் என் மனதில் பதிந்தாள்.
———-
இன்றும் அந்த பிம்பம் மறையவில்லை. நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. மாம்பலம் லேக் வியூ ரோடு முழுக்க கான்கிரீட் தோட்டம். இதில் அரிநெல்லிக் காய் மரத்தையும், ரோஜாச் செடியையும் எங்கே தேடுவது?

அன்றைய தினத்துக்கு பிறகு தாராவை அடுத்து நான் சந்தித்தது என் அக்காவின் திருமணத்தன்றுதான். அவ்வப்போது கெளரி அத்தை அவளைப் பற்றி தகவல் சொல்வாள். நான் கேட்டுக் கொள்வேன்.

அந்த இரண்டாவது சந்திப்பில் தாரா வளர்ந்திருந்தாள். சற்று அதிகமாகவே. ஆனால், நான் இளைத்திருந்தேன். காரணம், படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக நான் முயற்சித்துக் கொண்டிருந்த நேரம்.

சுற்றிலுமிருந்த உறவினர்கள் துக்கம் போல் விசாரிக்க, தாராதான் என்னை தேற்றினாள். மண்டபத்தின் ஸ்டோர் ரூமில் அவளது மருதாணி விரல்கள் என் தலைமுடியை வருடிவிட்டன. முதுகை தடவின. அப்போதுதான் அவள் தான் வளர்க்கும் ரோஜாச் செடிகளைப் பற்றிச் சொன்னாள். ரோஜாவின் வாசனையை நானும் அவளது மடியில் உணர்ந்தேன். அப்பாவின் மடியிலிருந்து வரும் வியர்வையின் வாசமும் அதில் கலந்திருந்தது.
———
அரசாங்க உத்தியோகம் கிடைத்த இரண்டாவது வாரமே தாத்தா, தாராவின் வீட்டுக்கு கடிதம் எழுதினார். இத்தனைக்கும் நானாக எதுவும் சொல்லவில்லை. என் உணர்வை தாத்தா எப்படிப் புரிந்து கொண்டாரோ?

தாராவின் ஜாதகம் ஒரு வாரத்தில் வந்தது. என்னைவிட என் அப்பா அதிகம் சந்தோஷப்பட்டது போல உணர்வு. அதற்கேற்றாற் போல அப்பா உடனே கரூர் சீதாராமரை தொடர்பு கொண்டார். அவர்தான் ஜாதகம் பார்த்து முடிவு செய்ய வேண்டும். எங்கள் குடும்பத்து வழக்கம் அப்படி.

மூக்குக் கண்ணாடி வழியே நீண்ட நேரம் இரு ஜாதகங்களையும் பார்த்தவர் உதட்டைப் பிதுக்கினார்.

அப்பா அசரவில்லை. தாத்தா அவரை விடவுமில்லை. கலவை பாபு மாமா, ஈரோடு முருகன் மாமி, காங்கேயநல்லூர் தியாகராஜர்… ஒருத்தர் பாக்கியில்லாமல் அனைவரையும் ஜாதகத்துடன் அப்பா சந்தித்தார். அனைவரும் ஒரே பதிலை வெவ்வேறு காரணங்களோடு சொன்னார்கள். அத்துடன் தாத்தாவும், அப்பாவும் மெளனமாகிவிட்டார்கள்.

நாளாவட்டத்தில் கெளரி அத்தைகூட தாராவைப் பற்றி தகவல் சொல்வதைக் குறைத்துக் கொண்டாள். ஒரு கட்டத்திற்குப் பிறகு யாருமே என்னிடம் தாராவைப் பற்றிப் பேசியதில்லை.
———
தாத்தா இதைச் சொல்லாமலே இருந்திருக்கலாம்.

ரேவதியோடு சந்தோஷமாய் நான் வாழும் வாழ்க்கையை இப்படி வெய்யிலில் அலைய வைத்ததன் மூலம் கேலி செய்திருக்கவும் வேண்டாம்.

சட்டையின் மேல் பாக்கெட்டிலிருந்த முகவரிச் சீட்டு கனத்தது. தாத்தா காலையில் அச்சீட்டைக் கொடுத்தபோது தெரு மனப்பாடமாகிவிட்டது. வீட்டு எண் கூட நினைவிலிருக்கிறது. இருந்தாலும் சரி பார்ப்பதற்காக அதை எடுத்தேன். ஏழு.

பொங்கிய நினைவிற்குக் கடிவாளமிட்டு நிமிர்ந்தால்… வலப்பக்கம் இரண்டாவது வீட்டு வாசலில் அரி நெல்லிக்காய் மரம் தட்டுப்பட்டது. காம்பவுண்ட் சுவரிலிருந்த நம்பரை ஏறிட்டேன். சந்தேகமேயில்லை. தாராவின் வீடு அதுதான்.

கேட்டைத் திறந்ததும் சப்தம் கேட்டு தோட்டத்திலிருந்த சிறுமி ஏறிட்டாள். மிஞ்சிப் போனால் ஏழு வயதிருக்கும். ஷிம்மி அணிந்திருந்தாள். அந்தக் குறுகுறு பார்வையும், செதுக்கின நாசியும் அவள் ஜூனியர் தாரா என்பதைச் சொல்லாமல் சொன்னது.

”இங்க தாரான்னு…”

”உள்ள வாங்க. எங்கம்மாதான். வெளில போயிருக்காங்க. இருங்க பாட்டிய கூப்பிடறேன்… பாட்டி, யாரோ அம்மாவைத் தேடி வந்திருக்காங்க…” என்றபடியே உள்ளே ஓடினாள். கால்களில் அதே பச்சை நரம்பு.

நிலைகொள்ளாமல் தவித்தேன். இதென்ன இந்த வயதில் இப்படியொரு இம்சை. பேசாமல் இப்படியே திரும்பிவிடலாமா…

யோரோ மூதாட்டி வெளியே வந்தார். அவரது ஆள்காட்டி விரலைப் பிடித்தபடி ஜூனியர்.

”யார் வேணும்?”

”இங்க தாரான்னு…”

”என் மருமகதான். வெளில போயிருக்கா. நீங்க?”

அப்பாவின் பெயரைச் சொல்லி, கெளரி அத்தையை நினைவுப்படுத்தி என் பெயரைச் சொன்னேன். வீட்டிற்குள் அழைத்தார். காபி வந்தது. சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்டபின் விடைபெற்றேன்.
———–
”என்னடா தாராவைப் பார்த்தியா?” வாசலில் செருப்பைக் கழற்றியதுமே தாத்தா கேட்டார்.

”இல்ல…”

”ஏன்?” டிவி பார்த்துக் கொண்டிருந்த அப்பா.

”வெளில போயிருந்தா. வெயிட் பண்ணிப் பார்த்தேன். காணோம். அவ மாமியார்கிட்ட பேசிட்டு திரும்பிட்டேன்…” என்றபடி அப்பாவின் அருகில் வந்தேன்.

காபியோடு அம்மா வந்தாள்.

”ரேவதி இல்ல?”

”ஆகாஷை கூட்டிட்டு கோயிலுக்கு போயிருக்கா. சரி, தாராவுக்கு எத்தன குழந்தைங்க?” அம்மாவின் குரலில் ஆவல் தெரிந்தது.

”ஒரேயொரு பொண்ணுதான்…”

”எத்தனை வயசிருக்கும்?” அப்பா கேட்டார்.

ஷிம்மி பாக்கெட்டினுள் அரிநெல்லிக்காய் பிஞ்சுகளை சேகரித்த சிறுமி நிழலாடினாள்.

”ஆறேழு இருக்கும்…”

”என்ன நட்சத்திரமாம்?” சட்டென்று தாத்தா கேட்டார்.

”………….”
”எதுக்காக கேட்கறனா நம்ம ஆகாஷ் சித்திரை நட்சத்திரமாச்சே… அதான்…”

அடிவயிற்றில் ஏதோ பந்து உருண்டது. என்ன சொல்ல வருகிறார் தாத்தா?

”அந்த ஆண்டவன் என்ன நினைச்சிருக்கான்னு தெரியலை. தாராவோட பாட்டியை எனக்குப் பார்த்தா. நடக்கலை. அவ அம்மாவுக்கும் உங்க அப்பாவுக்கும் கூட சரிப்படலை. சரி, நீயும் தாராவும் சேருவீங்கன்னு பார்த்தா… ப்ச்சு… பார்ப்போம், ஆகாஷ் விஷயமாவது நல்லபடியா நடக்கட்டும்…”

ஓவென்று அழ வேண்டும் போல இருந்தது. மருதாணி விரல்களும், அரிநெல்லிக்காய் பிஞ்சும், பச்சை நரம்பும் காலம் காலமாய் தொடர்கிறதா? இந்த வலி பரம்பரை வலியா? எனக்காவது அவ்வப்போது இளைப்பாற… சற்றே ஆசுவாசப்பட… காவி ஏறிய அப்பாவின் வெள்ளை வேட்டி நினைவும், வியர்வை கலந்த மடியில் சாய்ந்தபடி அவர் சொன்ன கதைகளும் ஞாபகத்தில் இருக்கின்றன. ஆகாஷுக்கு அப்படி எதையும் நான் செய்ததில்லையே… ஒருமுறைக் கூட மார்பில் சாய்த்து கதைகள் சொன்னதில்லையே… வெறும் இயந்திரங்களுடனல்லவா அவன் பொழுதைக் கழிக்கிறான்? அவன் எப்படி இந்த இம்சையை எதிர்கொள்ளப் போகிறான்?

தாத்தா இதைச் சொல்லாமலே இருந்திருக்கலாம்.

10665874_10204722651775745_7059755186017600930_nகே. என். சிவராமன்

கே. என். சிவராமன்

Works at Chief Editor at Dinakaran M

 
Leave a comment

Posted by on May 5, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: