RSS

சொல்லத்தான் நினைக்கிறேன் !

09 Jun

by.Raheemullah Mohamed Vavar

இரண்டு நாட்களாக கடுமையான புளூ ஜுரம், தொண்டையின் இரு பக்கமும் தெறிக்கும் நோவும், தொடர்ச்சியான மூக்கடைப்பும், அடித்துச் சாய்க்கும் உடம்பு வலியும், இடைவிடாத வறட்டு இருமலும். எப்படி இருந்தாலும் வேலைக்கு விடுப்பு எடுக்கவே முடியாது, பெரும்பாலான ஞாயிறுகளிலும் வேலை பார்க்கும் தலையெழுத்து எனக்கு. மொத்த சாவிக் கொத்தும் கையில் இருப்பதினால், நிஷா மன்சூர் அவர் புரஃபைலில் குறிப்பிட்டிருப்பது போல் எனக்கும் வாட்ச்மேன் உத்தியோகம்தான், கொச்சையாக சொல்வதென்றால் காவல் நாய். இங்கே. இன்றைக்கு 9/6/15- வீர வணக்க நாள், (Heroes Day) அரசு பொது விடுமுறை, என்றாலும் வழக்கம் போல் நான் பணியில்தான்.

அவனுக்கென்ன வெளிநாட்டு சம்பாத்தியம், அவர்களுக்கென்ன குடும்பத்தோடு உல்லாசம் என்போரும் வேறு யாரைப்பற்றியோ அது எனக்குத் தெரியாது, ஆனால், ஒரே ஒரு நாள் என்னோடு இருந்து பார்த்தால் போதும், இந்த நாயி பொழப்புக்கு, ஊரில் ஒரு ஹோட்டலில் டீ கிளாஸ் கழுவி வாழ்க்கையை ஒப்பேற்றிக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து விடுவார்கள்.

வாழ்க்கை அனுபவங்கள் அப்படி ஒன்றும் பெய்யும் பெருமழையில் ஓடைகள் நிறைந்து அடித்து வரும் வெள்ளம் போல் நம் முற்றத்தை தேடி வந்து விடுவதில்லைதான், அதற்கென்று கரடு மொரடான ஒரு காட்டு வழி இருந்து கொண்டுதான் இருக்கிறது. 1973-ல் ஒரு மார்ச்சில், மாலை 6 மணிக்கு சென்னை துறைமுகத்தில் ஷாவாலஸ் கம்பெனிக்காக டேலி கிளார்க் உத்தியோகம் பார்க்கும் போது, அடுத்த நாள் நடுப்பகல் 12 வரை ஒன்றரை ஷிப்ட் பார்த்து விட்டுத்தான் வெளியேற முடியும், இரவு முழுவதும் கடினமான வேலை, கப்பலில் இருந்து சரக்குகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, வரிசையாக வந்து கொண்டே இருக்கும், 18 மணி நேர வேலையில் குறைந்தது 50 லாரிகளுக்கு குறையாமல் சரிபார்த்து ரசீது கொடுத்து அனுப்பி வைக்கணும், பசிக்கு உணவு கேட்டு அலறிய பின்னரும் கூட, கடவுள் கோபம் கொண்டிருந்தாரே என்னவோ, இரக்கம் காட்டவில்லை, வெளியே வந்த பிறகுதான், கண்ணில் காணும் கடைகளில் காஞ்சு போய் கிடக்கும் ஏதோ ஒன்றை வாங்கி சாப்பிட வேண்டும். வீடு போய் தூங்க வேண்டும், பின்னர், 4 மணிக்கெல்லாம் மீண்டும் எழுந்து அமிஞ்சிக் கரையில் 7-C பஸ் பிடித்து பாரீஸ் கார்னர் வந்திறங்கி, மெயின் கேட்டில் நுழைந்து, தினமும் ஒன்றரை மைல் தூரம் உள்ளே நடந்து என் கேபினை அடைய வேண்டும். ஒரு ஷிப்டுக்கு 9 1/2 ரூபாயும், அடுத்த அரை ஷிப்டுக்கு 6 ரூபாயும் என்று ஒரு நாளைக்கு 15 1/2 ரூபாய் வைத்து, மாதம் 465 ரூபாய்தான் சம்பளம்.

பின்னர் அதை விட்டு விட்டு, நந்தனம் ஹௌஸிங் போர்டில் ஸ்டோர் கீப்பர் வேலை, காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை. அங்கே ஹார்பரில் நாய் பொழப்பு என்றால், இங்கே பன்னிப் பொழப்பு. மேஸ்திரிமார்களோடும், கூலிப் பணியாளர்களோடும் வம்படி, சைதாபேட்டையில் கூட்ஸில் வரிசையாக வந்திறங்கும் சிமெண்ட் வேகன்களோடு வேக வைக்கும் வெயிலில் வெந்து, கோட்டூர்புரம் கோடவுனில் கொண்டு போய் இறக்கி வைக்கணும். இங்கே சம்பளம் எல்லாம் அடக்கமாக 500 ரூபாய்.
(தொடரும் )

10858410_509656449177069_5663572308532446822_n
Raheemullah Mohamed Vavar
 
Leave a comment

Posted by on June 9, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: