RSS

டிஜிட்டல் நார்சிஸம்

16 Jul

image-11புராதன கிரேக்க கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் நார்சிசஸ். தண்ணீரில் தெரியும் தனது பிரதிபலிப்பையே காதலிப்பான் என்பது மாதிரி கேரக்டர் ஸ்கெட்ச். இவனை முன்வைத்துதான் சிக்மண்ட் ப்ராய்ட் ‘நார்சிஸம்’ என்கிற உளவியல் கோட்பாட்டினை முன்வைக்கிறார்.

வெட்கமே இல்லாமல் எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி பேசுவதும், சிந்திப்பதுமான நிலையை ‘நார்சிஸம்’ என்கிற மனரீதியான பிரச்சினையாக சொல்கிறார்கள் மனநிலை ஆய்வாளர்கள்.

சுற்றி வளைத்துச் சொல்வானேன். எப்போது பார்த்தாலும் உங்கள் ஸ்மார்ட்போனில் செல்ஃபீ எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்து, எத்தனை லைக்கு, என்னென்ன கமெண்டு என்று வெட்டியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறீர்களா?

நீங்கள் ஒரு நார்சிஸ்டாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கூகிளில் இமேஜஸ் தேடினால் சமீபமாக செல்ஃபீ படங்கள்தான் அதிகம் தட்டுப்படுகின்றன. செல்ஃபீ என்றால் தன்னைத்தானே படமெடுத்துக் கொள்வது என்றெல்லாம் ஏ, பி, சி, டி-யில் இருந்து உங்களுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லைதானே?

சாமானியர்கள் பிரபலங்கள் வித்தியாசமில்லாமல் எல்லோரும் தங்களை தாங்களே படம் எடுத்துக் கொண்டு, பெருமையாக அதை மற்றவர்களிடம் பகிரும் போக்கினை ‘டிஜிட்டல் நார்சிஸம்’ என்று புதுப்பெயர் சூட்டி அழைக்கிறார்கள். ‘ஸ்ட்’-டில் முடித்தால் ஏதோ கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட் மாதிரி கவுரவமாக இருந்துத் தொலைக்கிறது. இந்த டிஜிட்டல் நார்சிஸ்ட்டுகளை டிஜிட்டல் பைத்தியங்கள் என்று அழைப்பதே முறை.

தொண்ணூறுகள் வரை ஊடகங்கள் ஏதோ தேவலோகத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பதான தோற்றம் மக்களுக்கு இருந்தது. ஊடகங்களில் இடம்பெறும் பிரபலங்கள், சாமானியர்களால் அணுக முடியாத தேவதூதர்களாக இருந்தார்கள்.

தொலைக்காட்சித் துறையின் வளர்ச்சி காரணமாக புதிய சிந்தனைகளுக்கான, வடிவங்களுக்கான தேவை பெருகியது. தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாக ஆணியடித்து செட்டில் ஆகிவிட்டவர்களுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் நுகர்வுப் பசியெடுத்துக் கொண்டே இருந்தது. அவர்களை திருப்திபடுத்த ரியாலிட்டி ஷோக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.

தேவதூதர்கள் பூமிக்கு வந்து தரையில் கால்பதித்து சாமானியர்களோடு பேசினார்கள். சாமானியர்களுக்கும், பிரபலங்களுக்குமான இடைவெளி குறைந்தது. ஒரு பிரபலத்தை பற்றி, அந்த பிரபலத்துக்கே தெரியாத செய்திகளை எல்லாம் சாமானியன் தெரிந்து வைத்துக் கொண்டான். அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களின் நீட்சியாக இணையம், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மில்லெனியம் ஆண்டுகளில் மகத்தான ஊடகமாக உருவெடுக்கிறது.
image-07மரபு ஊடகங்களை முறையான பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள்தான் நடத்த முடியும். மாறாக நவீன ஊடகமான இணையம் பெரும்பாலும் சாமானியர்களை சார்ந்திருக்கிறது. ஈமெயிலில் தொடங்கி சமூகவலைத்தளங்கள் வரை அவர்களது ஆதிக்கம்தான். இணைய ஊடகத்தில் இயங்க விரும்பும் பிரபலங்கள், சாமானியர்களை தாஜா செய்துதான் தங்களை புரமோட் செய்துக்கொள்ள முடிகிறது. லைக்குகள் மற்றும் ரீட்விட்டுகளின் எண்ணிக்கைதான் அந்த பிரபலத்தின் பிரபல அளவை அளவிட உதவுகிறது.

இதற்கிடையே செல்போன் என்கிற தகவல் தொடர்பு சாதனம் வருகிறது. ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள என்கிற நிலை மாறி இது கேமிராவாகவும் செயல்படுகிறது. போட்டோ எடுப்பது மட்டுமின்றி இதில் வீடியோவும் எடுக்கலாம். செல்போனும், இணையமும் இணைந்த புள்ளிதான் முக்கியமானது.

தான் எடுத்த போட்டோவையோ, வீடியோவையே ஃபேஸ்புக்கில் பதிந்து அதை உலகின் அடுத்த மூலையில் இருப்பவனுக்கும் காட்ட முடிகிறது என்கிற ‘அதிகாரம்’ சாமானியனுக்கு கிடைக்கிறது. தானும் பிரபலம்தான் என்கிற எண்ணம் அவனுக்குள் இப்போது வேரூன்றுகிறது.

குஷ்பூவே ட்விட்டரில் தனக்கு நன்றி சொல்லிவிட்டார் என்று பக்கத்து வீட்டுக்காரனை கேவலமாக பார்க்க ஆரம்பிக்கிறான். “கலைஞரும், நானும் ஃபேஸ்புக்குலே ப்ரெண்ட்ஸ், தெரியுமா?” என்று பெருமை பேச ஆரம்பிக்கிறான்.

கருத்துக் களங்களும், வலைப்பூக்களும், சமூக வலைத்தளங்களுமாக இணையமெங்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஓராயிரம் வாசல்களில் கன்னாபின்னாவென்று நுழைந்து விளையாடுகிறான். நூறு லைக்கும், முப்பது கமெண்டும் பெற்றுவிட்ட பிறகு அவனாகவே ‘கெத்து’ என்று நினைத்துக் கொள்கிறான்.

‘நான்’, ‘என்’, ‘எனக்கு’, ‘என்னுடைய’, ‘என் வீடு’, ‘என் அறை’, ‘என் பைக்’ ‘என் கார்’ என்று பர்ஸ்ட் பர்சனிலேயே பேச ஆரம்பிக்கிறான். எந்நேரமும் தன்னை தானே படமெடுத்து ஃபேஸ்புக்கில் போடுகிறான். ‘நைஸ்’, ‘பியூட்டிஃபுல்’ ‘ஹேண்ட்ஸம்’ ‘அழகு’ கமெண்டுகளுக்காக ஒற்றைக்காலில் தவம் கிடக்கிறான்.

போதுமான வாசிப்போ, புரிதலோ இன்றி தத்துவங்கள் பேச ஆரம்பிக்கிறான். உலகின் சர்வ பிரச்சினைகளுக்கும் தன் சிந்தனைகளில் தீர்வு(!) காண்கிறான். ‘நான் என்ன சொல்கிறேன் என்றால்…’ ‘இந்தப் பிரச்சினையை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்…’ ‘குப்பையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நான் எடுத்திருந்தேன் என்றால்…’ ‘ என்று அவனது ஈகோ, நார்சிஸத்தின் உச்சத்தை எட்டுகிறது.
image-05வேண்டுதல் மாதிரி இவனை ஏற்றிவிடவே நூறு பைத்தியங்களாவது இணையத்தில் திரிகின்றன. ‘சாட்டையடி சகோதரி’ ‘பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் நண்பா’, ‘அருமையான சிந்தனை, ஆழ்ந்த கருத்து’ மாதிரி ஓராயிரம் ஒன்லைனர் புகழாரங்களை ஒரு வேர்ட் ஃபைலில் சேமித்து வைத்துக் கொண்டு, ஆங்காங்கே ஆணி மாதிரி காபி & பேஸ்ட் அடித்துவிட்டுச் செல்வார்கள்.

இவர்களுக்கு என்ன லாபம்?

மொய் மாதிரிதான். பதிலுக்கு இவனுடைய நார்சிஸ ஸ்டேட்டஸ்களுக்கு அவர்கள் வந்து லைக் போட்டு, ‘பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்’ கமெண்டு போட வேண்டாமா?

இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் லாகின் செய்து சந்தோஷமாக மேய முடிந்தால், சந்தேகமே இல்லை. சத்தியமாக நாம் மெண்டல்தான்.

நாம் வாழும் உலகமே மாபெரும் மூடர்கூடமோ என்கிற சந்தேகத்தை இணையம் ஏற்படுத்துகிறது.

(நன்றி : தினகரன் வசந்தம்)
indexஎழுதியவர் யுவகிருஷ்ணா

http://www.luckylookonline.com/2015/07/blog-post.html

 
Leave a comment

Posted by on July 16, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: