RSS

தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு பரிசளிப்பு விழாவில் தங்கர் பச்சான் ஏற்புரை {முழு வடிவம்}

28 Sep

unnamedதினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார்

இலக்கியப் பரிசு

பரிசளிப்பு விழாவில் தங்கர் பச்சான் ஏற்புரை

{முழு வடிவம்}

நாள் : 27.09.2015

இடம் : இராணி சீதை மன்றம், சென்னை

என்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கும் என் உயிரினும் மேலான என்

தாய்மொழிக்கு வணக்கம். நான் என்றைக்கும் மதிக்கின்ற, வணங்குகின்ற தமிழர்

தந்தை ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களுக்கும் வணக்கம். எனது இலக்கியப்

படைப்பினைப் பரிசீலித்து இந்த இலக்கியப் பரிசைப் பெறும் தகுதியைப் பெற்றுத்

தந்த பரிசுப் போட்டிக் குழுவின் நடுவர்களுக்கும், மேடையில் வீற்றிருக்கின்ற

நீதியரசர் வெ.இராமசுப்ரமணியன் மற்றும் தமிழறிஞர் வா.மு.சேதுராமன் ஐயா

அவர்களுக்கும், பார்வையாளர்களாக வந்திருக்கின்ற பெருமக்களுக்கும், தமிழ்

மக்களின் போராட்டக் கருவியாக இயங்கிக் கொண்டிருக்கின்ற மக்கள் பத்திரிக்கை

தினத்தந்திக்கும் எனது வணக்கங்கள்.

இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை

உயர்த்துவதற்காகத் தரப்படுகிறது என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன்

வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன்.

திரைப்படத் துறையை தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என்

எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான்.

திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு அளிக்கப்படும் விருதுகளையும்,

பரிசுகளையும் விட இலக்கியத்திற்காக அளிக்கப்படும் அங்கீகாரத்தில்தான் எனக்கு

மனநிறைவும், பெருமையும் இருக்கிறது. எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக

எழுத ஆரம்பித்தவன் இல்லை.என்னைச்சுற்றிலும் நிகழும் சம்பவங்களும்,அதனால்

எனக்குள் ஏற்பட்ட தாக்கங்களையும் பதிவு செய்வதற்காகவே எழுதினேன். 1984

ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினேன். 1990 இல் திரைப்படத்துறையில்

ஒளிப்பதிவாளனாக அறிமுகமானேன். அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு

துறைக்கும் சேர்த்து பல விருதுகளையும், பரிசுகளையும் அரசாங்கங்களும்,

தனியார் அமைப்புகளும் நிறைய கொடுத்திருக்கின்றன.

அவற்றை விடவும் மிகுதியான மகிழ்ச்சியும், மனநிறைவும் இந்த சி.பா.

ஆதித்தனார் இலக்கியப் பரிசின் மூலமாகக் கிடைத்திருக்கிறது. நான் யாருக்காக,

யாரைப்பற்றி, எனது குடும்பத்தைக் காட்டிலும் அதிகமாக சிந்திக்கிறேனோ, உலகம்

முழுமையும் உள்ள அந்தத் தமிழர்கள் அனைவருக்கும் இந்தப் பரிசின் மூலம்

தினத்தந்தி நாளிதழ் என் படைப்பினை அறியச் செய்திருக்கிறது.

நான் சந்திக்கும் மக்களெல்லாம் அடுத்ததாக என்ன படம் வெளிவருகிறது

என்று மட்டும்தான் கேட்டிருக்கிறார்கள். நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக

எழுத்துத் துறையில் இயங்கி வந்தாலும் அந்தப் படைப்புகள் பற்றி ஒருவர் கூட

கேட்பதில்லை. விபரமறிந்தவர்கள் இதுபோன்ற கேள்வியைக் கேட்கும்

பொழுதெல்லாம் எனது ஆதங்கத்தையும் நியாயமான கோபத்தையும்

வெளிப்படுத்தியிருக்கிறேன். இனிமேல், அடுத்து என்ன படம் என்பதோடு, என்ன

எழுதுகிறீர்கள் என்னும் கேள்வியையும் என்னைச் சந்திப்பவர்கள் கேட்பார்கள் என

நம்புகிறேன். அதற்குக் காரணம் தினத்தந்தி மட்டுமே.

தினத்தந்தியின் வெள்ளிவிழா ஆண்டில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை

காணக் கிடைத்தது. பெரியவர் ஆதித்தனார் அவர்களைக் கண்டு அவர் வியந்தது

போலவே நானும் வியக்கின்றேன்.

பத்திரிக்கை என்பதைப் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே என நினைத்துத்

தொடங்குபவர்களுக்கிடையில் அதைத் தனது வாழ்நாளின் கடமையாக ஏற்றுச்

செயல்பட்டவர்கள் மிக அரிதாகவே இருக்கிறார்கள். அவர்களில்

முதன்மையானவர் ஐயா ஆதித்தனார் அவர்கள்.

லண்டனில் சட்டக் கல்வியில் தேர்ச்சியும், புலமையும் பெற்று, சிங்கப்பூரில்

முதன்மையான வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்தவர், நீதிபதியாகவும்

உயர்வு பெற்று அங்கேயே சுகமான வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கலாம்.

அவ்வாறு செய்யாமல் தானாகவே மக்கள் பணிக்காகப் பத்திரிக்கைத் துறையின்

சிக்கலான வாழ்க்கைப் பாதை பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தும் தனது

மொழிக்கும், இனத்துக்கும், தமிழ் மக்களுக்கும் தன்னையும், தன்

அறிவாற்றலையும் பயன்படுத்தி ‘தினத்தந்தி’ என்னும் போர்வாளை 1942 ஆம்

ஆண்டில் உருவாக்கினார்.

தொடக்கத்தில் ‘தந்தி’ எனும் பெயரில் மூன்று ஆயிரம் செய்தித்தாள்கள்

மட்டுமே அச்சடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் விளைவாக அச்சடிக்கத்

தாள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த காலம் அது. சிங்கப்பூர் அரசின் பாரிஸ்டர்

பணியை உதறித் தள்ளிவிட்டு வைக்கோல்களை அரைத்துக் கூழாக்கி அந்த

நாற்றத்தைத் தாங்கிக் கொண்டு, அதில் தாளை உருவாக்கி மதுரையில்

தொடங்கப்பட்ட தந்தி இன்று தினத்தந்தியாக பரிணமித்துத் தமிழகம், இந்தியா என

உலக நாடுகளிலும் அச்சாகி சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அந்தக்காலத்தில் பெரும் படிப்புப் படித்தவர்கள் மட்டுமேதான்

செய்தித்தாளைப் படிக்க முடியும்; அவர்கள் படித்துக்காட்டுவதைத்தான்

மற்றவர்கள் தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆங்கிலத்தையும்,

சமஸ்கிருதத்தையும் கொண்டு பெயரளவிற்கு கொஞ்சம் தமிழ்ச் சொற்களைக்

கலந்துதான் தமிழ்ப் பத்திரிக்கை எனும் பெயரில் அன்றைக்குப் பத்திரிக்கைகள்

வெளிவந்தன. ஐயா அவர்கள் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான்

பரண் மீது போடப்பட்டிருந்த மக்கள் தமிழைத் தட்டியெடுத்துப் படிப்படியாக

அதுவரை பத்திரிக்கை என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்களின்

கைகளிலெல்லாம் கொடுத்தார். தாய் மொழியைக்கூடப் படிக்கத் தெரியாத நம்

தமிழர்களைப் பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் அச்சிட்டுத் தமிழைச்

சொல்லித் தந்தார். ஆதித்தனார் ஐயாவின் பணி என்பது ஓர் இயக்கம். அந்த

இயக்கம் இன்று விரிவடைந்து மூன்றாம் தலைமுறையால் வளர்த்தெடுத்துத்

தமிழர்களின் குரலாகவும், மனசாட்சியாகவும், போர்வாளாகவும் மாறியிருக்கிறது.

தமிழர்களைத் தமிழர்களாக மாற்ற மொழியுணர்வையும், இன

உணர்வையும் விதைத்து தங்களின் அரசியலை தாங்களே உருவாக்கிக் கொள்ளும்

மைய்யப் புள்ளியாகச் செயல்பட்டு ‘நாம் தமிழர்’ இயக்கத்தை உருவாக்கினார்.

திராவிட வலையில் சிக்குண்ட தமிழர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக அவர்

மேற்கொண்ட அரசியல் பணியின் மூலமாகத்தான் தமிழர்கள் அனைவரும் இன்று

தங்களைத் தமிழராக உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

தந்தையின் கடமையுணர்ச்சியை உள்வாங்கிக் கொண்ட தந்தைக்கேற்ற

மகனாக ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள், அவரது வழியிலேயே

பயணப்பட்டுத் தமிழகத்தின் ஒவ்வொரு பெருநகரங்கள் தோறும் பதிப்பை

விரிவுப்படுத்தியதோடல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் கொண்டு

சென்றார். மேல் நாட்டுப் படிப்பைப் படித்தவுடன் பிறந்த மண்ணையும், தன்

மக்களையும் மறந்தவர்களுக்கிடையில் தன் வாழ்வின் பெரும்பகுதியை தமிழ்

மக்களின் நலனுக்காகவே செலவழித்து உழைத்தார்.

ஐயா அவர்களுக்கு ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படத்தினைக் காண்பித்த

போது இந்நாட்டு விவசாயிகளின் நிலை குறித்த வேதனையை என்னுடன் பகிர்ந்து

கொண்டார். “ஒரு கலைஞனாக எந்த உதவி தேவைப்பட்டாலும், அல்லது வேறு

என்ன தேவைகள் ஏற்பட்டாலும் என்னை உடனே தொடர்பு கொள்ளுங்கள்” எனச்

சொல்லித் தனது கைப்பேசி எண்களைக் கொடுத்தார். எவ்வளவோ தொழில்

நெருக்கடிக்கிடையிலும் ஒரு முறை கூட நான் ஐயா அவர்களை நாடவில்லை.

தமிழ்ச் சமுதாயத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஐயா சிவந்தி

ஆதித்தனார் அவர்களின் கைகளினால் இந்தப் பரிசையும், பாராட்டுதலையும்

பெற்றிருந்தால் இன்னும் பெருமகிழ்ச்சியடைந்திருப்பேன்.

தானேப் புயல் முப்பத்தி ஐந்து லட்சம் மக்களின் வாழ்வைச் சூறையாடிப்

பல லட்சம் மரங்களை அழித்தது. நாள்தோறும் தவறாமல் தினத்தந்தியின்

‘தலையங்கத்தை’ வாசிக்கிறேன். ஒரு நாள், தானேப் புயல் அடித்து

இரண்டாண்டுகள் கடந்த நிலையில் பாதிப்படைந்த அந்த மக்களின் வாழ்வு சீர்

பெறாததையும், நிவாரணங்கள் முறையாகச் சென்றடையாததையும், அழிந்த

மரங்களுக்கு மாற்றாக மரங்கள் வளர்க்கும் பணி நடைபெறாததையும்

சுட்டிக்காட்டி என்றைக்கும் மறக்க முடியாத ஒரு தலையங்கத்தைப் படித்தேன்.

உடனே தலைமைச் செய்தியாளர் சுகுமார் அண்ணனிடம் தொடர்பு கொண்டு,

பாதிக்கப்பட்ட அந்த மக்களின் சார்பாக நன்றி தெரிவித்தேன். அப்பொழுது, ‘‘நான்

அதனை எழுதவில்லை, இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் ஐயாவின்

குரல்தான் அது. அவர் சொல்லச் சொல்ல நான் எழுதித் தருகிறேன்;

அவ்வளவுதான் என் வேலை’’ எனச் சொன்னார். என்னதான் பெரிய படிப்பு,

வெளிநாட்டுப் படிப்பு என்றிருந்தாலும் உங்களின் தாத்தா போன்றே, தந்தையார்

போன்றே நீங்களும் தாய்மொழிக்காகவும், இனத்துக்காகவும், குறிப்பாக வாழ்நாள்

முழுக்க ஏழையாக வறுமையிலேயே கடனாளியாக செத்து மடியும்

விவசாயிகளுக்காகவும் எழுப்பும் குரல் கண்டு சிலிர்த்துப் போனேன்.

நாள்தோறும் வெளியாகும் தலையங்கம் எளிய மொழியில் எந்த மேதமைத்

தனத்தையும் வெளிப்படுத்தாமல் தமிழ்ச் சமுதாயத்தின் அவலம், தேவை,

முன்னேற்றம், வளர்ச்சி குறித்த அக்கறையுடன் வெளிவருவது உங்களின் கூரிய

பார்வைதான் என்பது தெரிந்து உங்களின் மீதுள்ள மதிப்பு மேலும் உயர்கிறது.

தமிழை படிப்பதையும்,தமிழில் பேசுவதையும் கேவலமாகப் பார்க்கக்

கூடிய சமுதாயத்தை உருவாக்கிவிட்ட இந்தச் சூழலில் அதிகப்படியாக தமிழ்

மக்களால் கொண்டாடப்படும் உயிர் நாடியாக தினத்தந்தி விளங்கிக்

கொண்டிருக்கிறது. பொருளாதாரத்திற்காகவும், கல்விக்காகவும், உறவுகளையும்,

மண்ணையும், மொழியையும் பிரிந்து உலகம் முழுக்கப் பரந்து வாழும் தமிழர்கள்

அனைவருக்கும் பத்திரிக்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக முன்னோட்டமாக

துபாயில் தினத்தந்தி பதிப்பு தொடங்கப்பட்டிருப்பது தமிழன் என்ற முறையில்

எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வேறெந்த தமிழ்ப் பத்திரிக்கையும்

இதுபோன்று வெளிநாட்டில் பதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தச் சாதனையை

சாத்தியப்படுத்தியவர் இளையவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் ஐயா

அவர்கள்தான்.

இத்தகைய பெருமை வாய்ந்த தினத்தந்தி பெயரால் வழங்கப்படுகின்ற இந்த

இலக்கியப்பரிசு இதுவரை நான் பெற்ற அனைத்து விருதுகள், பரிசுகளைக்

காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றேன்.

எனது 23 ஆம் வயதில் எழுதத் தொடங்கினேன். சிந்திக்க

முடிந்ததையெல்லாம் படைப்புகளாக்குகிறேன். அவற்றுள் சில திரைப்படங்களாக

உருவாகின்றன; சில புனைகதைகளாக சிறுகதை, குறுநாவல், நாவல்களாக

வடிவம் பெறுகின்றன. சமூகத்தின் மீதான எனது கோபத்தையும்,

ஆற்றாமையையும் கட்டுரைகளாக்கி பத்திரிக்கைகளில் வெளியிடுகின்றேன்.

உலகம் முழுமையும் இருக்கின்ற தமிழர்களைக் கணக்கெடுத்தால் எட்டரை

கோடிக்கு மேல் வரும். ஆனால் எவ்வளவு பெரிய பேர் எடுத்த தமிழ்

எழுத்தாளனின் நூல்களும், அதன் விற்பனையில் ஐந்தாயிரத்தைத் தாண்ட

படாதபாடு பட வேண்டியிருக்கிறது.

என்மீது அன்பு கொண்டவர்களும், நண்பர்களும் உலகம்

முழுமையிலிருந்தும் இந்த “தங்கர் பச்சான்” கதைகள் நூலுக்கு இலக்கியப் பரிசு

பெற்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

அவர்களிடம் “வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சிதான்; இந்தப் புத்தகத்தை எப்போது

வாங்கிப் படிப்பீர்கள்” எனக் கேட்டேன். “அனுப்பி வைய்யுங்கள் படிக்கிறேன்” என

எந்தக் கூச்சமும் இல்லாமல் சொல்கின்றார்கள். இதுதான் தமிழனின் மனநிலை.

ஒரு காலணிக்கு ஐந்தாயிரம் ரூபாயையும், கைப்பேசிக்கு ஐம்பதாயிரம்

ரூபாயையும், ஒரு வேளை சாப்பாட்டிற்கு, உணவகத்தில் ஆயிரக்கணக்கிலும்

செலவழிக்கத் தயாராக இருக்கின்றான்; வரலாறாக மாறப்போகிற, சமுதாயத்தின்

மனக்குரலாக இருக்கின்ற எழுத்தாளனின் இலக்கியப் படைப்புக்களை நூறு,

இருநூறு ரூபாய்கூட கொடுத்து வாங்க அவனுக்கு மனம் வருவதில்லை.

எழுத்தாளனையும், விவசாயியையும் பாதுகாக்காத நாடு உருப்பட

வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை; உருபட்டதாக சரித்திரமும் இல்லை.

ஏற்கெனவே புத்தகங்கள் படிக்கின்ற பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது.

புத்தகங்கள் விற்றால்தான் அதில் ஒரு சிறு பகுதியின் மூலமாக எழுத்தாளனுக்கு

வருவாய் கிடைக்கும். வேறு தொழில் செய்து கொண்டும், மாதச் சம்பளத்துக்கு

வேலை பார்த்துக் கொண்டும் எழுதும் பகுதிநேர எழுத்தாளர்கள் உயிர்

வாழ்வார்கள். எழுத்தை மட்டுமே தொழிலாகக் கொண்ட எழுத்தாளர்களின் நிலை

என்ன என்பதை எவரும் இங்கே உணருவதில்லை. அறுபது ஆண்டுகளுக்கு

மேலாக எழுத்தையே கடமையாகவும், தொழிலாகவும் கொண்டு எழுதிவரும்

எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். மாதம் மூன்றாயிரம் ரூபாய்க்கு

வழியில்லாமல் அந்த வறுமை நிலையிலும் இந்த சமுதாயத்திற்காக தொடர்ந்து

எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

திரைப்படத் துறையில் இருந்து கொண்டுதான் இதனைச் சொல்லுகிறேன்.

தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகர் ஒரு நாளைக்கு வாங்கும் ஊதியத்தை

அறுபது ஆண்டுகள் இரவு பகலாக சிந்தித்து இலக்கியங்களைப் படைக்கும் ஒரு

எழுத்தாளன் பெற முடிவதில்லை.

எத்தனையோ செல்வந்தர்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள்,

தொண்டு நிறுவனங்கள் என இவர்கள் நடத்தும் விழாக்கள், கணக்கற்ற குடும்ப

விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்கள் என எங்கு பார்த்தாலும்

நாள்தோறும் ஆயிரக் கணக்கில் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. ஒன்றுக்கும்

உதவாத பொன்னாடை என்கிற பெயரில் அணிவிக்கும் சால்வைகளையும்,

பூக்கொத்துக்களையும், மாலைகளையும் நூற்றுக் கணக்கில் பணம் செலவழித்து

வாங்கித் தருவதற்குப் பதிலாகச் சமுதாயத்திற்குப் பயன்படும் நூல்களைத் தேர்வு

செய்து பரிசுப் பொருளாகத் தரும் பழக்கத்தை ஒவ்வொரு தமிழனும் ஏற்படுத்திக்

கொண்டால் எழுத்தாளன் உயிர் பெறுவான். மனித குலத்தின் எதிர்காலம் வளம்

பெறும்.

ஒரு என்ஜினியர் போல், ஒரு டாக்டர் போல், ஒரு அரசியல்வாதி போல்,

ஒரு தொழிலதிபர் போல் ஒரு தீவிரமான எழுத்தாளனை யார் நினைத்தாலும்

உருவாக்கிவிட முடியாது. எங்கிருந்தோ ஒருவன் பிறப்பான். அப்படிப்பட்டவர்களை

இந்த சமுதாயம்தான் பாதுகாக்க வேண்டும். அவனை கொண்டாடாமல்

போனாலும் பரவாயில்லை; அவனது படைப்புகளைப் படிக்காமல் தொடர்ந்து

மேலும் மேலும் எழுதுங்கள் எனச்சொல்லாதீர்கள். தனது படைப்புகளை

படிக்காமல் தன்னை கொண்டாடுவதை உண்மையான எந்த எழுத்தாளனும்

விரும்ப மாட்டான்.

எனது முப்பது ஆண்டுகளுக்கு மேலான இரவு பகல் பாராது

உருவாக்கப்பட்ட படைப்புக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பரிசினைத் தலை

வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். இந்தப் பரிசு சோர்ந்து போயிருந்த என்னை

மீண்டும் ஊக்கப்படுத்தி எழுப்பி உட்கார வைத்திருக்கிறது. தமிழர்களின் சொத்தாக

மாறிப்போன தினத்தந்தி பத்திரிக்கைக்கும், அதன் நிறுவனத்திற்கும், நடுவர்

குழுவிற்கும், இயக்குநர் ஐயா திரு.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்களுக்கும்

எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வளம் பெறுக என் தமிழ்மொழி!

வளர்க என் தமிழகம்!

நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தெழட்டும் என் தமிழினம்!!

தினத்தந்தி இலக்கியப் பரிசு – ஏற்புரை.

img_2817

வணக்கம்.
உங்களனைவரின் மனமுவந்த வாழ்த்துகளில் மனம் நெகிழ்ந்தேன். பரிசளிப்பு விழாவில் நான் ஆற்றிய ஏற்புரையின் முழு வடிவத்தினை அனுப்பியிருக்கிறேன். இவற்றின் சில பகுதிகள் மட்டுமே ஊடகங்களில் வெளியாயின.மிக்க நன்றி

  • தங்கர் பச்சான்

from: Thankar Bachan <thankarbachan5@gmail.com>

Advertisements
 
Leave a comment

Posted by on September 28, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: