RSS

மிரர் பாக்கு ..

10 Nov

by-ஜே .பானு ஹாரூன்

மிரர் பாக்கு ..
———————–

என்னுடைய தந்தை பயணம் வந்தாலே விருந்தாளிகள் வரத்து வீட்டில் அதிகரித்துவிடும் .அவர் சிங்கப்பூர் சிடிசன் .சில வருடங்களுக்கு ஒருமுறைதான் வருவார் .வீட்டில் சப்தமும் ,அதிக வெளிச்சமும் இல்லாத இறுக்கமான சூழ்நிலை நிலவும் .கிசு கிசுப்பாக பேசிக்கொள்வோம் .பயம் கலந்த பாசம் .எல்லோருடைய வாய்களிலும் மரியாதை குறையாத வார்த்தைகள் வந்து விழும் ! கண்டிப்பு..கொடிகட்டிப் பறக்கும் .

படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் .வந்த மறுநாளே பள்ளிக்கு வந்து எங்கள் கல்வித்தரம் குறித்து எச் .எம் -உடன் அலசி ஆராய்வார் .எங்கள் ஒவ்வொருத்தருடைய கிளாஸ் ரூமுக்கும் ஆள் வரும் .உதறலுடந்தான் போவோம் .நாங்கள் என்றால் , அண்ணா, சித்தப்பா பிள்ளைகள் ,அத்தைபிள்ளைகள் என்கிற குடும்பப் பட்டாளம் ..அத்தனை பேரின் கல்வி குறித்தும் அந்தந்த கிளாஸ் டீச்சர்களுடன் ..கலந்தாலோசனை செய்வார் .

படிப்பில் பின்தங்கியிருப்பவர்களை நல்லவிதமாக வெளுத்து வாங்க சொல்லி பரிந்துரை செய்வார் . தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு இரண்டு கண்களை மட்டும் விட்டுவிட்டு தோலை உரிக்கச் சொல்லி விட்டு வருவார் ….நாங்கள் பயந்து நடுங்கிப்போவோம் !…

வீட்டில் ‘தி ஹிந்து ‘பேப்பர் தினமும் வந்து குதிக்கும் .இரவு 9
மணிக்கு மேல் தலைப்புகளை பேப்பரில் குறித்துக் கொண்டு டிக்ஷ்னெரி பார்த்து அர்த்தப் படுத்த வேண்டும் .தினமும் 5
புது ஆங்கில வார்த்தைகள் தமிழுடன் மனப்பாடம் செய்ய வேண்டும் ..எப்போதும் படிப்பு என்கிற சொல்லே வீட்டில் உரத்துக் கேட்கும் .அவர் ஆறுமாதம் கழித்து பயணம் போனபின் புத்தகப் பைகள் கொஞ்சம் ஓய்வெடுக்கும் பரீட்சைக்கு முன்வரை …..

நான் சிறுமியாக இருந்தபோது கூச்சத்துடனான சந்தோஷ உணர்வுகள் எனக்குள் அதிகரிக்கும் .எந்த நேரமும் படிக்க வேண்டும் …அவரிடம் நிறைய தெரிந்து கொள்ளலாம் .அவரும் தடித்த ஆங்கில நூல்களை வைத்து படித்தவண்ணமே இருப்பார் …மற்றவர்க்கும் பாடம் சொல்லித்தருவார் .விளையாட வெளியில் செல்ல ..கொஞ்ச நேரம்தான் அனுமதிப்பார் .ரொம்ப டிசிப்ளின் கடைபிடிக்க வேண்டும் நாங்கள் அனைவரும் !…

இரவு ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை கட்டாயப் படிப்பு …அல்லது ஹோம் ஒர்க் செய்தல் …படிக்கிற பாவனைகளில் பலபேர் முகத்தை புத்தகத்தால் மறைத்து ….காலையிலிருந்து பள்ளிக்கூடம் …சாயந்திரம் ட்யுஷன் ….மறுபடியும் இரவு படிப்பா ?…சித்தப்பா பையன் அலுத்துக்கொள்வான் …

படிக்கும் புத்தகத்தால் முகத்தை மறைத்துக்கொண்டு ,’ஸ் ..ஸ் ..’என்பான் .

‘என்னடா ?’…நான் சைகையில் கேட்பேன் .

‘உங்க அத்தா ஓயாமப் படிக்கவே சொல்றாரே …சிங்கபூர்ல என்ன வாத்தியார் வேலையா பாக்குறாரு ?..’என்பான் .

நான் உதடு பிதுக்குவேன் .’தெரியாதே !…

அத்தா கண்டுபிடித்து விடுவார் .’படிக்காம என்ன பேச்சு அங்கே ?..’

‘நா பேசலை பெரியத்தா !…பானுதான் !..’சமர்த்தாக என்னை மாட்டிவிட்டுவிடுவான் .’இங்கே வா !…படிச்சிட்டிருக்கிறவன்கிட்டே என்ன சைகையெல்லாம் காட்டறே ?..’

‘இல்லை ..நீங்க சிங்கபூர்ல வாத்தியார் வேலை பாக்கறீங்களான்னு அவன் தான் முதல்ல பேசினான் .தெரியலன்னு சொன்னேன் !’…

‘நா வாத்தியார் இல்லப்பா ..அக்கவுண்டன்ட் ..!’..என்று அவனை அருகில் கூப்பிட்டு பாசமாக தட்டிக்கொடுத்து சொல்வார் .அவன் அதுதான் சாக்கென்று ,’தூக்கம் வருது பெரியத்தா ‘…என்று கொட்டாவி விடுவான் .’சரி ..போய் சாப்ட்டு படுப்பா !’…அவன் அவருக்குத்தெரியாமல் என்னிடம் பழிப்பு காட்டிவிட்டு மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பி விடுவான் !….நான் இன்னும் ஒருமணி நேரம் மாட்டிக்கொள்வேன் .

அப்படித்தான் ஒருநாள் ,
சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த டாக்டர் .பஷீர் என்பவர் விடுமுறையில் வந்திருப்பதாகவும் …அவர் குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு விருந்திற்கு வருவதாகவும் சொல்லி எங்களை தயாராக நின்று வரவேற்க சொன்னார் …..எனக்கோ தெரியாதவர்களைக் கண்டால் படு வெட்கம் படுத்தியெடுத்தி விடும் .

சித்தப்பா பையன் சொன்னான் .’இதுக்கெல்லாம் என்னடி பயம் உனக்கு !…வர்ற பொடியனை துண்டைக்காணும் ,துணியக்காணும்னு ஓட வைக்கிறேன் பாரு !…’

அவன் என்ன தைரியப்படுத்தினாலும் என் தந்தை சொன்ன வார்த்தைகள் என்னுள் கணக்கவே செய்தன .வருகிறவர்களின் என் வயதையொத்த இரண்டு பையன்களுக்கும் தமிழே தெரியாதாம் …இங்க்லீஷ் மட்டும்தான் தெரியுமாம் .பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிடாமல் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டுமாம் !…

வந்தார்கள் …’என்னடி ,இவன்கள் சரியான அறுந்தவால் பசங்களாயிருக்காங்க ?..’என்று அந்தப் பசங்களின் இங்க்லீஷை பார்த்தவுடனேயே எனக்கு உதவி செய்வதாகச் சொன்னவன் கழன்று கொண்டான் .எனக்கோ தமிழ் மட்டும்தான் தெரியும் …அழுகை வந்தது …

அவர்களிருவரும் ஓடி ஓடிப்போய் அவர்கள் அம்மாவிடமே கேள்விமேல் கேள்வி கேட்க ….அவர் சளைக்காமல் பேசிக்கொண்டிருந்தார் …

தோட்டம் சுற்றி காட்டியாகிவிட்டது …சப்போட்டா மரத்தில் ஏற்றிவிட்டு காய்களைப் பறித்து …பையில் நிரப்பியாயிற்று …

மாடிக்கு அழைத்துப்போய் காட்டியாகிவிட்டது .
மற்ற பசங்கள் அவர்களிருவரையும் வேற்று கிரக வாசிகள் போல் பார்த்து பின்தொடருவதை பார்த்து ரசிக்கும்படியாகவும் இருந்தது …

மதிய விருந்திற்கு பின் அவர்களுடைய அம்மாவுடன் சேர்ந்து வெற்றிலைப்பாக்கு போட்டுக் கொள்கிற பையன்களை பார்த்து எனக்கு எரிச்சலாக வந்தது …என்னை மட்டும் யாரும் போட அனுமதிப்பதில்லை ….மாடு முட்டிவிடுமாம் 1..படிப்பு வராதாம் !…நாக்கு தடித்து விடுமாம் !….கோபத்துடன் அடுப்பங்கரைக்குள் நுழைந்து …

அம்மாவிடம் போய் முட்டினேன் …’போடி, வேலை நேரத்தில எசராதே !’…அம்மா விரட்டியடித்தார் .

முறைத்துக்கொண்டு போய் ஒரு மூலையில் நின்றேன் .’…இவங்க எப்போதான் போவாங்களோ !..’..என்றிருந்தது .

அந்தப் பெரியப் பையன் ஓடி வந்து என்னருகில் நின்று ,என் கையைப் பற்றி இழுத்தான் …’மிரர் பாக்கு …தா !..’..என்றான் .

நான் உடனே என் கோபப்பார்வையை மாற்றிக்கொண்டு ,’இதோ வரேன் …எங்க அம்மாகிட்டே வாங்கிட்டு வரேன் !’…என்று உள்ளே ஓடி ,’அம்மா ,அவன் மிர்ரர் பாக்கு கேக்கறான் !…வேற இருக்கா !..’என்றேன் .

‘அந்தப் பாக்கெல்லாம் இல்லை ..ரோஜாப்பாக்கு தான் இருக்கு எடுத்துக்கொண்டு கொடு ‘…என்று என் கையில் அம்மா பாக்கெட்டை திணிக்க …நான் ஓடிப்போய் அவனிடம் கொடுக்க …அவனோ என்னிடமிருந்து வாங்காமல் ஒரு அடி பின் தள்ளி போய் …தலையை வலமும் ,இடமுமாக அசைத்து …திரும்பவும் ,”மிரர் பாக்கு !’…என்றான் .

குறுக்கே வந்த வேலைக்காரம்மா காந்தியத்தை ,’என்னா கேக்குது புள்ள ?..’என்றது .
இடுப்பில் செருகியிருந்த அதனுடைய வெற்றிலைப்பாக்குப் பையை பிடுங்கி அதனுள்ளிருந்த ‘ஆரங்கப் பாக்கையும் ‘பாக்குவெட்டியையும் அவனிடம் காட்டி ,’இது வேணுமா ?’…என்றேன் .

அவனோ வேண்டாம் என்பதுபோலவே தலையை அசைத்து’ ,மிரர் பாக்கு !’…தான் மறுபடி மறுபடி கேட்டான் ..

‘ காசை கொண்டா .. நானாச்சும் கடையாண்டப் போயி கேட்டு வாங்கியாறேன் ‘…என்றது காந்தியத்தை .

அவன் அதற்குள் போய் என் தந்தையிடம் என்னைப்பற்றி போட்டுக் கொடுத்துவிட்டான் .’பானு !…’என்கிற குரல் அவரிடமிருந்து வர நான் நடுங்கிப்போய் அவரெதிரில் நின்றேன் …

‘மிரர் பாக்கு ..வீட்லே இல்லையாம் ….ரோஜாப்பாக்கு மட்டும்தான் இருக்காம் ..நீங்க அம்மாவை வேணாலும் கூப்ட்டு கேளுங்க !’…எனக்கு அழாத குறை …

‘ என்னதூ …!…அவன் வாய் சிவப்பை பாக்க கண்ணாடி கேக்கறான் ….மிரர் பாக்கா ?…அதுக்குதான் உன்னை ஒழுங்கா இங்க்லீஷ் படின்னு சொன்னேன் …’என் தந்தை என்னை இறுக அணைத்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தார் …எனக்கோ வெட்கத்தில் அழுகை அழுகையாக வந்தது …’மிரர் ‘னா கண்ணாடி …போய் எடுத்துட்டு வா !’…நான் கண்களை துடைத்துக்கொண்டு அறைக்குள் ஓடி முகம் பார்க்கும் வட்டக் கண்ணாடி கொண்டுவந்து அவனிடம் கொடுத்தேன் .

அவன் நாக்கை துருத்தி சிவப்பை பார்த்து மகிழ்ந்துப்போனது …நான் பொருமித் தீர்த்தது எல்லாம் தனிக்கதை ….

10406769_331120727042074_4328465882605504469_n-ஜே .பானு ஹாரூன்

Advertisements
 
Leave a comment

Posted by on November 10, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: