RSS

அப்பா அம்மா விளையாட்டு – 2015 ‘தினகரன்‘ தீபாவளி மலர் சிறுகதை

12 Nov
கே. என். சிவராமன்

For Netநியாயமாகப் பார்த்தால் ஆனந்த அதிர்ச்சியில் வார்த்தைகள் வராமல் தவித்திருக்க வேண்டும்.
பின்னே, நாற்பது வயதுள்ளவனிடம், அதுவும் விவாகரத்து ஆனவனிடம், ‘‘சரி… எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்…’’ என்று கேட்டால்..?
மாறாக, ரிலாக்ஸாக எந்த பதிலையும் அளிக்காமல் ‘‘நைட் சந்திக்கலாம்… டேக் கேர்…’’ என அறிவித்துவிட்டு செல்லை அணைக்க முடிந்தது. புன்னகைக்கவும்.
ஏனெனில் மறுமுனையில் இருந்தவள் தாரா. தாரகேஸ்வரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானவள்.
அப்போது அவள் ஐந்து வயது சிறுமி. கொடியிடை எல்லாம் பின்னால் வந்தது. அன்று கொழு கொழு அமுல் பேபி. கதறலுடன் வாசலுக்கு வந்தவள் நுழைந்துக் கொண்டிருந்த என் மீது முட்டினாள். எதிர்பார்க்கவில்லை போலும். கையறு நிலையில் தரையில் அமர்ந்து கை கால்களை உதறினாள்.
பெண்கள் அழுது அன்றுவரை பார்த்ததில்லை. எனவே அந்த சிறுமி அழுதது அதிகம் பாதித்தது.
‘‘என் செல்லம்ல… பட்டுல… அழலாமா?’’ என பெரிய மனுஷ தோரணையில் தலையை கோதினேன்.
சட்டென்று கழுத்தை கட்டிக் கொண்டு மார்பில் முகம் புதைத்தாள். விசும்பலுடன் ‘‘எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?’’ என்றாள்.
அதிர்ச்சியை அனுபவித்தது அன்றுதான்.
‘‘அட… ஒரு நிமிஷம் கூட முடியலை… அதுக்குள்ள மாப்பிள்ளையை தேடிட்டா பாரேன்…’’ முந்தானையில் கைகளை துடைத்தபடி வந்த அம்மாதான் பிறகு ஆதியோடு அந்தமாக மொத்தத்தையும் சொன்னாள்.
‘‘கஷ்கு முஷ்குன்னு இருக்கால… பேரு தாரா. சொந்த ஊர் திருவண்ணாமலை பக்கம் ஏதோ கிராமம். பக்கத்து போர்ஷனுக்கு புதுசா குடி வந்திருக்காங்க. அப்பா இல்ல. காலமாகிட்டாராம். அவரோட வேலை தாராவோட அம்மாவுக்கு கிடைச்சிருக்கு. இரண்டு வருஷம் உள்ளூர்லயே போஸ்டிங். இப்ப நம்மூருக்கு டிரான்ஸ்ஃபர். விட்டுட்டு போக சொந்தக்காரங்க வந்திருக்காங்க. பெரியவங்க பேசிட்டு இருந்தோம். பக்கத்துலயே சின்னதுங்க விளையாட ஆரம்பிச்சாங்க. வேறென்ன… அப்பா அம்மா விளையாட்டுதான். என்ன காரணமோ ஆட்டத்துல தாராவை சேர்த்துக்கலை. எப்பவும் இப்படித்தான் அவளை தள்ளி வைப்பாங்களாம். பெரியவங்க சொன்னாலும் கேட்க மாட்டாங்களாம். புது இடத்துக்கு வந்தும் பழைய மாதிரியே ஓரம் கட்டினதும் அவளால தாங்கிக்க முடியலை. அதான் அழுதுகிட்டே வெளில ஓடினா. உன்னைப் பார்த்ததும் ஜோடி கிடைச்சுடுச்சுன்னு தெம்பா கட்டிக்கிறியான்னு கேட்டுட்டா… அதுசரி… அதுக்கு நீ என்ன சொன்ன?’’
எதுவும் சொல்லவில்லை. முதல் முறை மட்டுமல்ல. அதற்கடுத்து பலமுறை அதே கேள்வியை வெவ்வேறு விதமாக தாரா எழுப்பியபோதும்.
அசடு. பெனாத்தாத. வாயை மூடு. எல்லாரும் கேலி செய்யறாங்க பாரு.
தருணங்களுக்கு ஏற்றவாறு நேரடியாக பதில் சொல்லாமல் வேறு வேறு வடிவங்களில் கெஞ்சியிருக்கிறேன். அன்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ம்ஹும். கேட்கவேயில்லை. கேள்வியையும் மாற்றவில்லை. விளைவு… டவுன்ஷிப் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் வேலைப் பார்த்த டீச்சர்களுக்கும் ஸ்டூடண்ட்ஸுகளுக்கும் நாங்களே கேலிப் பொருளானோம்.
அம்மாவின் பலத்த சிபாரிசு காரணமாகத்தான் அவளும் அந்தப் பள்ளியில் சேர்ந்தாள். ‘‘தனி மனுஷியா மிஸஸ் வில்லியம்ஸ் அந்த ஸ்கூலை நடத்தறாங்க. என் வயசுதான் அவங்களுக்கும். கம்பீரமா இருப்பாங்க…’’
இதில் ‘தனி மனுஷி’ என்ற பதம், தாராவின் அம்மாவை வெகுவாக கவர்ந்தது. மறுபேச்சு பேசாமல் அந்த வருடம் வந்த விஜயதசமி அன்று ஃபர்ஸ்ட் ஸ்டாண்டடில் அவளை சேர்த்தார்.
‘‘திருவண்ணாமலை மாதிரி ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு இங்க அடம் பிடிக்கக் கூடாது. மீறி செஞ்ச… காலை உடைச்சுடுவேன்…’’
அதற்கெல்லாம் அவசியமே ஏற்படவில்லை. சமத்துப் பெண்ணாக பள்ளிக்கு வர ஆரம்பித்தாள். அதே பள்ளியில் நான் படித்ததும், காலையும் மாலையும் என் கையை பிடித்தபடி அவள் நடந்து வந்ததுமே இதற்கு காரணம் என்பதை உணர அதிக நாட்கள் தேவைப்படவில்லை.
வேலூர் காந்திநகர் பதினேழாவது கிழக்கு நெடுஞ்சாலையில் இருந்த ஏழாம் நம்பர் வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். நடுவாக நீள சுவர். ரயில் பெட்டி போல் இந்தப் பக்கம் நான்கு அறைகள். அந்தப் பக்கம் நான்கு அறைகள். ஆக ஒரே வீட்டையே இரு போர்ஷனாக ஹவுஸ் ஓனர் பிரித்திருந்தார். மூன்றாவது அறையிருந்த சுவரில் கதவு உண்டு. அதைத் திறந்தால் இரு போர்ஷனும் இணைந்து விடும்.
பகல் முழுக்க இந்தக் கதவு திறந்துதான் இருக்கும். தாராவின் அம்மா, வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருப்பார். எனவே காலை உணவை என்னுடன் அமர்ந்தே தன் கையால் எடுத்து சாப்பிடுவாள். அதுவும் சிந்தாமல் சிதறாமல்.
‘‘இந்த சின்ன வயசுலயே எவ்வளவு பதவிசா நடந்துக்கறா…’’
அம்மாவின் வியப்பு மதியமே தவிடு பொடியாகும். சிக்ஸ்த் ஸ்டேண்டர்ட் பி செக்‌ஷனை தேடி வந்து ‘‘ஊட்டி விடு…’’ என நிற்பாள்.
இதற்காகவே காத்திருக்கும் ஹேமா மிஸ், முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு அந்தக் கேள்வியை கேட்பாள். ‘‘யாரை கட்டிக்கப் போற?’’
ஆட்காட்டி விரலை என்னை நோக்கி நீட்டுவாள்.
முறைக்க முடியாது. உடனே உதடு துடிக்க குண்டு குண்டு கண்கள் கலங்கிவிடும். முணுமுணுப்பை போல் கேவல் எழும். அந்தக் கோலத்தில் தாராவை பார்க்க எனக்கு விருப்பமில்லை. எனவே கேலியை பொருட்படுத்தாது ஸ்பூனால் ஊட்டி விட ஆரம்பித்துவிடுவேன்.
எதனால் என்று தெரியாது. ஆனால், அவள் செகண்ட் ஸ்டாண்டடுக்கு சென்றதுமே இதெல்லாம் மாறி விட்டது. தன் தோழிகளுடன் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள். என்றாலும் காலையும் மாலையும் என் ஆள்காட்டி விரலை பிடித்தபடி நடப்பதை மட்டும் நிறுத்தவில்லை.
ஐந்தாண்டுகளுக்குப் பின் இதற்கும் முடிவு வந்தது. வேலூர் ராஜா தியேட்டர் பக்கத்திலிருந்த வெங்கடேஸ்வரா ஹையர் செகண்டரி ஸ்கூலில் நான் ப்ளஸ் ஒன் சேர்ந்தேன். எங்கள் தெருவிலேயே இருந்த ஆக்சிலீயம் வுமன் ஹை ஸ்கூலில் அவள் ஆறாம் வகுப்பு சேர்த்தாள்.
பள்ளிக்கு தனித்தனியாக சென்றோம். வீட்டில் ஒன்றாக இருந்தோம். என் மேற்பார்வையில் ஹோம் ஓர்க் செய்வாள். பாடங்களில் ஏற்படும் சந்தேகத்தை ஆசிரியனாக தீர்த்து வைப்பேன்.
‘‘உன் ரூபத்துல அப்பாவை பார்க்கிறான்னு நினைக்கறேன்…’’
‘‘உளறாதமா. அவளை விட நான் அஞ்சு வயசுதான் பெரியவன்…’’
‘‘அதனால என்ன?’’
‘‘என்னவா..?’’
‘‘ம். செக்யூர்டா யார் கிட்ட எல்லாம் ஃபீல் பண்ணறோமோ… யார் கூட இருந்தா எல்லா பிரச்னைகளையும் நம்மால எதிர்கொள்ள முடியும்னு நம்பிக்கை ஏற்படுதோ… அவங்க எல்லாரும் பெண்களுக்கு அப்பாதான். ஆண்களுக்கு அம்மாதான். இது டிபன்டன்ஸி இல்ல. இன்னர் டிபன்டன்ஸி. புலப்படாத இழைகளால பிணைந்திருப்பது. அது பயலாஜிக்கலா இருக்கணும்னு அவசியம் இல்ல. அதனாலதான் கடவுளையும் ‘ஃபாதர்’, ‘மதர்’னு அழைக்கிறோம். ஏன் என் புருஷனை கூட நான் அப்பாவாதான் நினைக்கறேன். அதனாலதான் அவரை என்னால இப்பவும் காதலிக்க முடியுது…’’
அம்மா நகர்ந்ததும் என்னை ‘அப்பா’ என்றழைப்பாள்… பதிலுக்கு ‘அம்மா’ என்றழைத்து கேலி செய்ய வேண்டும் என்று காத்திருந்தேன்.
ஆனால், அதுநாள் வரை அவள் மறந்துவிட்டதாக நான் நினைத்ததை வாயைத் திறந்து கேட்டாள்.
‘‘எப்ப கல்யாணம் செய்துக்கலாம்?’’
அன்றிரவு தாரா மலர்ந்தாள்.
அம்மாதான் இழுத்துப் போட்டு எல்லா சடங்கையும் செய்தாள். ‘‘ஒரு சந்தோஷம். அதை கொண்டாடறோம். அதுக்கு மேல இதுல வேற எந்த அர்த்தமும் இல்ல…’’
அவளது முகத்திலும் உடலிலும் பூரிப்பு கூடியது. என்றாலும் தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை. மாற்றும்படி இரு அம்மாக்களும் கண்டிக்கவும் இல்லை. எப்போதும்போல் என்னருகில் அமர்ந்தாள். வரம்பு மீறாத அளவுக்கு தனிமையில் ஈஷினாள். கொஞ்சினாள். சண்டையிட்டாள். அறைந்தாள். பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். நாட்களுக்கு பிறகு வலிய வந்து பேசினாள்.
கூடவே ‘‘எப்ப கல்யாணம் செய்துக்கலாம்?’’
வேலை கிடைத்து சென்னைக்கு வந்து மொட்டை மாடியில் நட்சத்திரங்களை பார்த்தபடி அசைபோட்ட போதுதான் எப்பொழுதெல்லாம் இந்த கேள்வியை கேட்டாள் என்று கணக்கிட முடிந்தது.
நள்ளிரவில் யாருமற்ற சாலையில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தபோது; ஹிஸ்ட்ரியில் அவளுக்கு விருப்பம் இருப்பதை அறிந்து ‘பிஎச்.டி முடிச்சா நல்ல எதிர்காலம் இருக்கு…’ என எடுத்துச் சொல்லி ஆர்ட்ஸ் காலேஜில் அவள் சேர வழிவகை செய்தபோது; ‘பார்த்துப் பார்த்து…’ என்று பதறாமல் அமைதியாக அவள் பின்னால் அமர்ந்தபடி ஸ்கூட்டியில் பயணம் செய்தபோது; அவளது தோழனுக்கு மலர்ச்சியுடன் கை கொடுத்தபோது; செல்போனில் யாரிடம் பேசுகிறாள் என்று ஒட்டுக் கேட்காமல் தள்ளி நின்று அவள் பேசி முடிக்கும்வரை காத்திருந்தபோது; எங்கும் கிடைக்காத புத்தகத்தை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் இருந்த மூர்மார்கெட்டில் தேடிப் பிடித்து வாங்கி கொடுத்தபோது…
மின்னல் வெட்டியது. உலகமும் பளிச்சென்று மாறியது.
அதனால்தான் அவளது திருமணத்துக்கு முதல் நாள் இதே வினாவை குறும்புடன் அவள் தொடுத்தபோது செல்லமாக தலையில் குட்ட முடிந்தது. அதனாலேதான் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக அவள் அறிவித்தபோதும் அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க முடிந்தது.
‘‘அளவுக்கு மீறினா அமிர்தமும் நஞ்சு. இன்னர் டிபன்டன்ஸியும் அப்படித்தான். இப்படியே இருந்தா இன்வென்டரா வேணும்னா நான் ஆகலாம். ஆனா, ஐ வாண்ட் டூ டிஸ்கவர் மை செல்ஃப். சின்ன வயசுலேந்து இதை நோக்கித்தான் என்னை நீ நகர்த்திட்டு வர்ற. இதை நான் ஃபுல்ஃபில் பண்ண விரும்பறேன். ஐ மீன்… என்னை உணர்ந்த பிறகே கரைய விரும்பறேன். ஸோ, டிவோஸுக்கு அப்ளை பண்ணிட்டேன். இடைப்பட்ட வருடங்கள் எனக்கு கணவரா இருந்தவர் இதை ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலைனாலும் என் முடிவு இதுதான். வெல்… குழந்தை ஸ்ருதி இருக்கா. நோ ப்ராப்ளம். அம்மாவுக்கான கடமைகளை கண்டிப்பா செய்வேன். தயவுசெய்து அட்வைஸ் பண்ணாத. தடுக்காத. எப்பவும் போல என் போக்குல விடு. தள்ளி நின்னு துணையா இரு…’’
இருந்தேன். என்ன… தாராவின் அம்மாவால்தான் ஜீரணிக்க முடியவில்லை. உள்ளுக்குள் புழுங்கிப் புழுங்கி ஒருநாள் விடைபெற்றார்.
வெளியில் காட்டிக் கொள்ளாமல் எப்படியோ இந்த இழப்பை சமாளித்தவள் அடுத்த ஆறாவது மாதம் தன்னை மறந்தாள். காரணம் என் அம்மா.
‘‘எங்கம்மா இறந்தப்பக் கூட நான் இவ்வளவு வருத்தப்படல. ஆனா, ஆன்ட்டியோட மறைவு ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுது. உன்னைப் பத்தி, உன் குடும்பத்தைப் பத்தி ரொம்ப கனவோட இருந்தாங்க. ஆரம்பத்துலயே சொன்னேன். ரொம்ப தப்பான பெண்ணை தேர்ந்தெடுத்திருக்கன்னு. நீதான் பிடிவாதமா கட்டிக்கிட்ட. அப்படி என்ன அவகிட்ட இருந்ததுன்னு இப்ப வரைக்கும் எனக்கு தெரியல… சரி, சந்தோஷமா வாழுவேன்னு பார்த்தா…’’
எந்தக் கோலத்தில் தாராவை பார்க்க விரும்பாமல் இருந்தேனோ… அதே கோலத்தில்… உதடு துடிக்க… குண்டு குண்டு கண்கள் நீரில் மிதக்க… வெடித்து எழும் கேவலுடன் அம்மாவின் சடலத்தை கட்டிப் பிடித்தபடி கதறினாள். காரியம் முடியும் வரை உடன் இருந்தாள். கூடவே ‘‘எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?’’ என்ற கேள்வியும்.
நூற்றாண்டுகள் கடந்தும் மாறாமல் எப்படி சூரியன் கிழக்கு திசையிலேயே உதிக்கிறதோ அப்படி தாராவின் இந்த வினாவும். இந்தியாவில் இருந்தபோதும், ஹார்வர்டில் படிக்கச் சென்றபோதும், இதோ இப்போதும்.
படர்ந்த புன்னகையுடன் வேலையை முடித்துவிட்டு மயிலாப்பூரிலிருந்து குரோம்பேட்டை வந்து சேர்தேன்.
கதவை லேசாக திறந்து வைத்தபடி தாரா சமைத்துக் கொண்டிருந்தாள்.
‘‘ஹாய்… பத்தே நிமிஷம். எல்லாம் ரெடியாகிடும். அதுக்குள்ள ஃப்ரெஷ்ஷாகிடு…’’
‘‘எதுக்கு இப்படி இழுத்துப் போட்டு செய்யற? வெளில போய் சாப்பிடலாம்ல?’’
‘‘இதோடா. உனக்காக எல்லாம் செய்தேன்னு நினைக்கறியா? நான் ஒண்ணும் உன் பொண்டாட்டி இல்ல. எல்லாம் எனக்காக செஞ்சது. என்ன… உனக்கு பிடிச்சதாவும் அதுவே இருக்கு. வாட் டூ டூ?’’
சிரித்தபடி குளியலறை நோக்கி நகர்ந்தேன். மார்கழி பனிக்கு இதமாக ஹீட்டர் போடப்பட்டிருந்தது. கொடியில் துண்டு. இரவு உடை.
தலையை துவட்டியபடி ஹாலுக்குள் நுழைந்ததும் தரதரவென டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றாள்.
‘‘என்ன?’’
‘‘ஷ்…’’ வாயைப் பொத்தியவள் ‘‘டொட்டோ டொய்ங்…’’ என சர்டிஃபிகேட் ஒன்றை நீட்டினாள். ‘‘டாக்டரேட் வாங்கிட்டேன்…’’
‘‘வாரே வாவ்… கங்கிராட்ஸ்…’’
அள்ளி அணைத்தேன். ஒடுங்கினாள்.
செல்போன் அதிர்ந்தது.
எடுத்தேன்.
‘‘யாரு?’’
‘‘ஸ்ருதி…’’
‘‘கொடு. நான் பேசறேன்…’’
வாங்கிக் கொண்டு பெட்ரூம் சென்றாள்.
சந்தோஷத்துடன் ‘தாரா பிஎச்டி’ என்ற எழுத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை நிமிடங்கள் என்று தெரியாது. தாராதான் தட்டி நடப்புக்கு கொண்டு வந்தாள்.
‘‘உன்கிட்ட பேசணுமாம்…’’
ஸ்பீக்கரை ஆன் செய்தேன்.
‘‘பப்ளிமாஸ்… எப்படியிருக்க? ஹாஸ்டல் ஃப்ரெண்ட்ஸ் என்ன சொல்றாங்க?’’
‘‘ஆல் இஸ் வெல் டாடி…’’ ஸ்ருதியின் குரலில் உற்சாகம் வழிந்தது.
‘‘குட்… அப்புறம்…’’
‘‘நீ எதிர்பார்த்தா மாதிரி யாரையும் சார்ந்திருக்காம என்னை நானே பார்த்துக்கறேன். போதுமா? இதைத்தானே கேட்க வந்த?’’
சிரித்துவிட்டேன்.
‘‘ம்க்கும். பொண்டாட்டி… சாரி சாரி மாஜி பொண்டாட்டி வந்திருக்கான்னு துள்ளறியா? படவா ராஸ்கல். பிச்சுப் பிச்சு. சரி சரி வாடர்ன் முறைக்கிறாங்க. நாளைக்கு கூப்பிடறேன். அம்மாகிட்டயும் சொல்லிடு. பை. குட் நைட்…’’
தாராவும் நானும் ஒரே குரலில் சொன்னோம்.
‘‘ஸ்வீட் ட்ரீம்ஸ்…’’
(நன்றி: ‘தினகரன் தீபாவளி மலர்‘ 2015.
ஓவியம்: ராஜா)

Face book 02

கே. என். சிவராமன்
Advertisements
 
1 Comment

Posted by on November 12, 2015 in 1

 

One response to “அப்பா அம்மா விளையாட்டு – 2015 ‘தினகரன்‘ தீபாவளி மலர் சிறுகதை

 1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

  November 12, 2015 at 3:58 pm

  விறுவிறுப்பாக,
  சுறுசுறுப்பாக
  இருந்தது.
  – அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: