RSS

அவர் அப்படித்தான்

13 Nov

fotorcreatedயோசிக்காத மனிதனே இல்லை. எல்லோரும் யோசிக்கத்தான் செய்கிறார்கள். சிலர் குப்புறப் படுத்து யோசிக்கிறார்கள்; சிலர் மல்லாக்கப் படுத்து யோசிக்கிறார்கள்; சிலர் அண்ணாந்து யோசிக்கிறார்கள்; மற்றும் சிலர் ‘ரூம்’ போட்டு யோசிக்கிறார்கள்.

ஒரு சிலரே மாற்றி யோசிக்கிறார்கள். அப்படி வித்தியாசமாக யோசிப்பதற்கு LATERAL THINKING என்று ஆங்கிலத்தில் பெயர். இதைத்தான் தமிழில் “பக்கவாட்டு சிந்தனை” என்று அழைக்கின்றோம்.

கட்டிலில் ஒருக்களித்து பக்கவாட்டில் படுத்துக்கொண்டு சிந்திப்பதற்குப் பெயர் “பக்கவாட்டு சிந்தனை” என்று நானும் ரொம்ப காலம் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு, பாரம்பரியமல்லாத வழிமுறைகளை பயன்படுத்தி, புதிய கருத்துக்களையும் எண்ணங்களையும் அடையாளம் கண்டு அவற்றை உருவாக்குதலுக்குப் பெயர்தான் “பக்கவாட்டு சிந்தனை” என்பதை Wisdom Tooth (அறிவுப்பல்) முளைத்த பிறகுதான் முழுசாக புரிந்துக் கொண்டேன்.

கவிஞர் ஜபருல்லாவுடன் பழக ஆரம்பித்த பிறகுதான் “ஓஹோ! இது மாதிரியும் இதற்கு சிந்திக்கலாமோ?” என்ற By-Pass ரூட்டைநான் கண்டுக் கொண்டேன். “மாத்தி யோசி” “மாத்தி யோசி” என்று இப்போது எல்லோருமே கூவுகிறார்கள். இந்த பார்முலாவை ‘விக்ஸ் பார்முலா’ காலத்திலிருந்தே நம் கவிஞர் கடைபிடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட சிந்தனை உடையவர்களைத்தான் சமுதாயம் “குதர்க்கவாதி” (?) என்று அறியாமையால் முத்திரை குத்துகிறது. அப்படி முத்திரை குத்தப்பட்டவர்களில் ஒருவர்தான் நாகூர் கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்.

எனது சின்னவாப்பா அப்துல் ரஹீம் அவர்கள் நம் கவிஞரை விடிய விடிய பேச வைத்து, கேட்டு ரசித்துக் கொண்டிருப்பார். “ரஹீம்பா தாதா” என்று அவர்களை நம் கவிஞர் அன்புடன் அழைப்பார். வீட்டுத் திண்ணை ஒன்றில் அந்த “அரட்டைக் கச்சேரி” தொடங்கும். படத்தயாரிப்பளராக வர விரும்பிய டீக்கடை உரிமையாளர் காதர் ஹுசைன், திரை இசையமைப்பாளராக கால்பதிக்க கனவுகண்ட காரை சுப்பையா; நமது நகைச்சுவைக் கவிஞர்; இவர்களுக்கு மத்தியில் என் சின்ன வாப்பா.

இரவு 10.00 மணிக்கு தொடங்கும் இந்த அரட்டைக் கச்சேரி விடியற்காலை 4.00 மணிவரையிலும் நீடிக்கும். இரவில் முழித்து பகலில் தூங்கும் இந்த அன்றாட வாழ்க்கை நமது கவிஞருக்கு பழகிப் போனது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தேநீர் சப்ளை நடந்துக் கொண்டே இருக்கும்.

ஆன்மீகம், இலக்கியம், அரசியல், வரலாறு, உலக நடப்பு – இப்படி எதைப்பற்றி வேண்டுமானாலும் மனுஷர் மணிக்கணக்கில் தங்குதடையின்றி பேசுவார். எந்த தலைப்பில் பேச ஆரம்பித்தாலும் அதனூடே நகைச்சுவை ஜரிகை இழையோடிக்கொண்டே இருக்கும். எப்படி இவரால் மட்டும் இத்தனை குட்டிக்கதைகளை நினைவிலிறுத்தி பேச முடிகின்றது? எப்படி இவரால் இத்தனை நகைச்சுவைத் தோரணங்களை “டைமிங் சென்ஸ்” பார்த்து ‘நச்’சென்று உதிர்க்க முடிகின்றது? என்று நான் வியந்து போனதுண்டு.

அருமையான குரல்வளம் இவருக்குண்டு. சங்கீத ஞானம்; ஆலாபனம்; ஏற்ற இறக்கத்துடன் பாடக்கூடிய இசை நுட்பம்; அனைத்தும் இவருக்கு அத்துப்படி. பாடல்களை கேட்ட மாத்திரத்திலேயே ராகங்களின் பெயரை சரியாகச் சொல்லுவார்.

உருது மொழியை தாய் மொழியாக கொள்ளாத இவரால் எப்படி நாள் முழுவதும் குலாம் அலி கஜலை கேட்டு அதில் லயித்துப் போக முடிகின்றது என்று எனக்கு ஒரே ஆச்சரியம். ஒரு பழைய டேப் ரிகார்டரில் கேஸட்டை ஓடவிட்டு இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று என்னிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வார். ஆமாம் இசைக்கு ஏது மொழி? கவிஞரின் கலாரசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

யாரைப் போலவும் இவரால் எளிதில் ‘இமிடேட்’ செய்ய முடியும். இவரை ஒரு ‘மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்’ என்றே சொல்லலாம் கேரளாவில் பிறந்திருந்தால் “கொச்சின் கலாபவனில்” சங்கமமாகி இருப்பார்.

1975-ஆம் வருடம் அது….. இந்த அரட்டைக் குழுவில் முக்கிய அங்கத்தினராக இடம் பெற்றிருந்த என் சின்னவாப்பாவிற்கு பஹ்ரைன் செல்வதற்கு விசா வந்து விட்டது.

வழியனுப்புவதற்கு சென்னை விமான நிலையத்திற்கு ‘நானும் வருவேன்’ என்று அடம்பிடிக்க, கவிஞர் ஜபருல்லாஹ்வை அழைத்துக் கொண்டு நாங்களும் அவர் நண்பர் குழாமுடன் மார்ச் மாதம் 18-ஆம் தேதி, இரவு நேர புகைவண்டியில் நாகூரிலிருந்து சென்னைக்கு பயணமானோம்.

நாகூரிலிருந்து வண்டி புறப்பட்டதுமே ஜபருல்லாஹ்வின் பாட்டுக் கச்சேரி ஆரம்பம் ஆகிவிட்டது. “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே”, “காவியமா நெஞ்சின் ஓவியமா?” ஆகிய பாடல்களை அவர் பாடியபோது சிதம்பரம் ஜெயராமனே சென்னைக்கு போகும் ரயிலில் பயணமாவது போல் ஓர் உணர்வு..

இவர் குரலைக் கேட்டுவிட்டு எங்கோ இருந்த டிக்கட் பரிசோதகர் உட்பட, இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்து, எங்களுடன் மூழ்கி ஐக்கியமாகி விட்டார். அன்று எத்தனை பேர்கள் “வித்-அவுட்” டிக்கட்டில் பயணமானார்கள் என்று சரியாகத் தெரியவில்லை.

திருவாரூர் நெருங்க ஆரம்பித்ததும் கச்சேரி சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் விஜயகாந்த் பாடும்போது தூக்கத்தை தொலைத்த கிராமத்து மக்களைப் போல, அந்த கம்பார்ட்மெண்டிலும் அத்தனை பிரயாணிகளும் ‘பேந்த பேந்த’ இசை பிரியாணியை விதியோ என்று சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.

கச்சேரி களைகட்ட, திடீரென்று, நாகூர் ஹனிபாவின் குரலில், அவரைப்போன்ற பாவத்துடன், எட்டுக்கட்டையில் பாட ஆரம்பித்து விட்டார். “திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து, தீன் கூறி நிற்பர் கோடி” என்று பாட ஆரம்பித்து அதிக நேரம் “தம்” கட்டி சாகஸம் வேறு புரிந்தார். எங்கே இவருக்கு “மூச்சு கீச்சு” நின்று, என் சின்னவாப்பாவின் பயணம் தடைபட்டுவிடுமோ என்ற ‘கிலி’ எனக்கு.

திருவாரூர் ஜங்ஷன் வந்ததும் ஒரு எதிர்பாராத ஒரு ஷாக். அடுத்த கம்பார்ட்மெண்டில் பயணம் செய்துக் கொண்டிருந்தவர் இசைமுரசு நாகூர் ஹனிபா. நம்முடைய குரலைப்போலவே பாடுவது யார் என்று துப்புத் துலக்க அவரே கிளம்பி வந்து எங்கள் கம்பார்ட்மென்டில் ஜன்னலில் தலையை நுழைக்க, நாங்கள் திடுக்குற்று போனோம்.

“மருமவனே நீதானா அது?அதுதானே.. யாருடா நம்ம பெயரை இப்படி கெடுக்கிறது என்று பார்த்தேன்” என்று வஞ்சப்புகழ்ச்சியாய் பாராட்டினார். கவிஞரின் முகத்திலிருந்து வழிந்த அசடை பிடிப்பதற்கு ஒரு மரக்கால் தேவைப்பட்டது.

சென்னைக்கு நாங்கள் வந்து காலையில் சேர்ந்தோம். எக்மோரில் லாட்ஜ் ஒன்றில் எல்லோருக்கும் ரூம் போட்டாகிவிட்டது. மாலை நேரம் விமான நிலையத்திற்கு கிளம்ப வேண்டும். சின்னவாப்பாவிற்கு “பிரியாவிடை” கொடுக்க எல்லோரும் விமான நிலையத்திற்கு போக அவரது நண்பர் குழாம் முன்கூட்டியே ஆயத்தமானார்கள்.

கவிஞர் ஜபருல்லாஹ்வை நாங்கள் தேடியபோது பக்கத்து ரூமில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். எந்த காரியத்திற்காக இவர் வந்தாரோ அதற்கு ஆயத்தமாகாமல் இப்படி குறட்டை விட்டு தூங்குகிறாரே என்றெண்ணி அவர் அருகே சென்று மெதுவாக எழுப்பினேன் .

“நானா…! எழுத்திருங்க. பிளைட்டுக்கு டைமாயிடுச்சு. ஏர்போர்ட் புறப்படணும்”.

“போங்கனி. உம்பர் வேலையை பார்த்துகிட்டு. நான் ராத்திரியிலே முழிச்சிக்கிட்டு இருப்பேன். பகலிலே தூங்குவேன்னு தெரியும்லே. உங்க சின்ன வாப்பாவை வேணும்னா ப்ளைட் டைமை மாத்தச் சொல்லும்”

என்று சொல்லிவிட்டு மறுபடியும் தூங்கிவிட்டார்.

ஆமாம்…..

அவர் அப்படித்தான்

https://nagoori.wordpress.com/

Advertisements
 
Leave a comment

Posted by on November 13, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: