RSS

கைகுலுக்கல்

27 Feb

வெளிநாட்டிலிருந்து வந்த பழக்கமாக இருக்கலாம். அதனால் என்ன… உணர்வுகளை வெளிப்படுத்தும் நல்ல பழக்கமாக இருந்தால் நமதாக்கிக் கொள்வதில் தவறேதும் இல்லை?
(வணக்கம்தான் தமிழ்ப் பண்பாடு….. வகையறாக்கள் இப்போதே ஒதுங்கிக் கொள்ளலாம்.)
கை குலுக்கல்களில் பல வகைகள் உண்டு. இதைப் பற்றி எப்போதோ ஏதோவொரு புத்தகத்தில் படித்த நினைவு. கை குலுக்கல்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அதில் படத்துடன் காட்டியிருப்பார்கள். கொடுக்கும் கையைப் பொறுத்தே ஆளை மதிப்பிடலாம் என்று விளக்குவார் நூலாசிரியர். டெட் ஃபிஷ் ஹேண்ட் ஷேக் என்று ஒரு வகை. அதாவது, உணர்ச்சியே இல்லாமல் இருக்குமாம். அந்த மாதிரி ஆட்களை நம்பக்கூடாதாம். அழுத்திக் குலுக்கினால் தன்னம்பிக்கை உடையவராம்.
சுஜாதா கூட ஏதோவொரு கட்டுரையில், இப்படி அரைகுறையாகப் படித்துவிட்டு, அழுத்திக் கை குலுக்கி கையை நெறிப்பவர்கள் குறித்து கிண்டல் செய்து எழுதியிருப்பார்.
நான் கை குலுக்குவதில் ஆண்-பெண் வித்தியாசம் பார்ப்பதில்லை. தில்லியில் பழகிப்போனதால் இருக்கலாம். அதே வழக்கம் ஊருக்கு வரும்போதும் தலையெடுக்கும். ஆண்கள் என்றால் பிரச்சினை இல்லை. பெண்கள் என்றால் இடத்தையும் சூழலையும் நபரையும் சுற்றியிருக்கும் நபர்களையும் பொறுத்து சட்டென கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.
தில்லிவாசிகளுக்கு கைகுலுக்கல் சாதாரணம். அலுவலகத்தில் காலையில் வந்ததும் க்யாலே… (க்யா ஹால் ஹை – என்ன விசேஷம், எப்படி இருக்கிறாய் – என்பது க்யாலே ஆகி விட்டது.) என்று ஒருவருக்கொருவர் கையைக் கொடுத்துக் கொள்வார்கள். அதில் ஆத்மார்த்தம் இருக்காது. இயந்திரத்தனம். சிலர் ஒற்றை விரலை மட்டும் நீட்டுவதும் உண்டு.
சில கைகளும் கைகுலுக்கல்களும் எப்போதும் நினைவில் இருக்கும்.
வெங்கட் சுவாமிநாதன் நம் கையைக் கொடுத்தால் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டுதான் பேசுவார். அதில் வாஞ்சை இருக்கும். ரொம்ப நேரத்துக்குப் பிறகு நமக்கே கூச்சமாக இருந்து கையை விடுவித்துக்கொள்ளலாம் என்று தோன்றவும் கூடும்.
மற்றொருவர் ரவீந்திரன். தில்லிப் பல்கலையில் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்தவர். நவீன நாடக இயக்கத்தில் இருப்பவர். இப்போது புதுச்சேரியில். அவரும் அப்படித்தான். கையை வாஞ்சையுடன் தன் உள்ளங்கைகளில் பொதிந்து கொள்வார்.
இன்னும் சில கைகுலுக்கல்கள் உண்டு. குலுக்க வந்தவரின் பிராபல்யத்தை தனக்கான விளம்பரமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகை அது. இன்னும் சில கைகுலுக்கள்கள் அரசியலில் பிரளயத்தையே உருவாக்கக்கூடும், அல்லது குறைந்தபட்சம் ஊடகங்களில்.
என் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள் – குறிப்பாக பிரான்சிஸ், மாணிக்கம். மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பிரிவதற்கு முன் கைகளைப் பிடித்திருப்போம். அப்போது நாம் ஏதும் பேசவே வேண்டாம். நாம் பேச வேண்டியதை எல்லாம் அந்தக் கைகள் பேசிக்கொண்டிருக்கும்.
கைககளைக் குலுக்கும்போது உள்ளங்கை வெப்பம் மட்டுமல்ல, உள்ளத்தில் உள்ளதும் பரிமாறப்படும்.
கை குலுக்குங்கள் கள்ளமில்லா உள்ளத்தோடு.
*
பி.கு. – இதை எழுதி முடித்தபோதுதான் நினைவு வந்தது. ஆலன் பீஸ் எழுதி, நண்பர் நாக. வேணுகோபாலன் மொழியாக்கம் செய்து, நான் டைப்செட்டிங் செய்த “கேள்விகளே பதிலாகும்” என்ற ஒரு புத்தகத்தில் கைகுலுக்கல் குறித்தே ஓர் அத்தியாயம் இருக்கிறது. அதில் இருந்த படம்தான் இது.

12794543_1040846992604740_1395910178372083723_n (இதுல இருக்கிற மாதிரி கையை இறுக்கமா புடிச்சீங்க… அடுத்த வாட்டி உங்களைப் பாத்தாலே மக்கள் அப்படிக்கா நழுவிடுவாங்க.)

12783653_1040407025982070_7822171375101732223_o
Shah Jahan(புதியவன்)
Advertisements
 
Leave a comment

Posted by on February 27, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: