RSS

எதுவும் நம்முடையதில்லை!

19 Apr

burning-houseவெளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார்.
ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை அந்த மனிதர் மிகவும் விரும்பினார். ஊரில் பலரும் அந்த வீட்டுக்கு இரட்டை விலை கொடுத்துப் பெறத் தயாராக இருந்தனர்.
ஆயினும் அந்த மனிதர் அந்த வீட்டை விற்க விரும்பவில்லை. அந்த வீடு இன்று தன் கண்முன்னால் நெருப்புக்கு இரையாவதைக் கண்டு அவருக்கு சொல்லொணாத் துயரம். துக்கம். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த ஒரு பெரும் கூட்டம் வீடு எரிந்து அடங்குவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.
தீயின் உக்கிரம் மிகப் பெரியதாக இருந்தது. அணைத்துவிட முயற்சி செய்வதிலும் எந்தப் பலனும் இல்லை என்பது புரிந்தது. கரிக்கட்டைகளே மிஞ்சும் என்று தெளிவாகத் தெரிந்தது. பார்த்துப் பார்த்து கட்டிய வீடு நெருப்பில் எரிவதைக் காணச் சகிக்கவில்லை. அந்த மனிதருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
அச்சமயம் அந்த மனிதரை நோக்கி அவருடைய மகன் ஒருவர் வேகமாக ஓடிவந்து காதில் சொன்னார் : “அப்பா, கவலைப்படாதீர்கள். இந்த வீட்டை நாம் விற்றுவிட்டோம், அதுவும் மூன்றுமடங்கு விலைக்கு. நல்ல விலை கிடைத்ததால் நீங்கள் வரும்வரை காத்திருக்காமல் விற்றுவிட்டோம்”
“அப்படியானால் இது, இந்த வீடு நம்முடையது அல்ல அல்லவா” – அந்தத் தந்தைக்கு மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அழிந்துகொண்டிருக்கும் பொருள் தம்முடையதாக இல்லாதிருப்பதில் மனிதனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. “இறைவா நன்றி, இது எம்முடையதில்லை” என்று மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். வேடிக்கைப் பார்க்கும் ஆயிரக்கணக்கானோரில் தானும் ஒருவராக அந்தத் தந்தை மாறிப் போனார்.
ஒரு கண நேரத்தில் உணர்வுகளின் மாற்றம் தான் எத்தனை வேகமானது. தன்னுடையதாக எண்ணும் போது அதன் அழிவில் பெருவருத்தமும், பிறருடையது என்னும் போது வேடிக்கை மனநிலையும்.
facesவேடிக்கை மனநிலையில் தந்தை இருந்த அந்த நேரம் பார்த்து இரண்டாவது மகன் ஓடிவந்தான் “அப்பா, என்ன இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நமது வீடு எரிந்து கொண்டிருக்கிறதே?!” என்றான்.
இரண்டாவது மகனுக்குச் செய்தி தெரியாது என்று நினைத்த தந்தை சொன்னார் : ” உன் அண்ணன் நேற்றே வீட்டை விற்றுவிட்டான் மகனே, அதனால் நமக்கு இதில் இழப்பு ஏதுமில்லை”
அதற்கு அந்த மகன் சொன்னான்: “அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?, நாம் முன்பணம் மட்டும் தான் வாங்கியிருக்கிறோம். இனியும் வீடு வாங்கியவர் வந்து மீதப் பணத்தைத் தருவாரா? என்ன?”
அவ்வளவு தான், இரண்டாவது மகன் சொன்னதைக் கேட்டதும் அந்தத் தந்தைக்கு மீண்டும் கண்களும் மனமும் கலங்கலானது. புன்னகை மறந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது. “என்ன சொல்கிறாய் மகனே, அப்படியானால் பணம் கிடைக்காதா?” என்று கவலையுடன் கேட்கலானார்.
அதே வீடு, அதே நெருப்பு, அதே சூழல், ஆனால் ஒரு கணப்பொழுதிற்கு முன்பு இருந்த மனநிலை மாறிவிட்டது.
அவரிடம் இருந்த வேடிக்கைப் பார்க்கும் மனநிலை கணப்பொழுதில் மாறிப் போனது. மீண்டும் கவலை ஆட்கொண்டது.
என்னுடையது, என்னுடையதில்லை என்கிற எண்ணம் மட்டுமே கவலைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாகிறது.
அப்போது அவரிடம் மூன்றாவது மகன் ஓடிவந்தான் “அப்பா, நான் வீட்டை யாருக்கு விற்றோமோ அந்த மனிதர் மிகவும் நாணயமானவர். வாக்குத் தவறாதவர். அவரிடமிருந்து தான் இப்போது வருகிறேன். ‘வீட்டை வாங்கியது வாங்கியது தான். தீப்பிடிக்கும் என்று நானோ நீங்களோ அறியமாட்டோம், ஆகவே வாக்களித்த படி மீதப் பணத்தைத் தந்துவிடுகிறேன்’ என்று சொன்னார்.”
இதைக் கேட்ட தந்தைக்கு மீண்டும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ‘வேடிக்கைப் பார்க்கும் மனநிலை’ திரும்ப வந்து தொற்றிக்கொண்டது.
உண்மையில் எதுவும் மாறவில்லை. அதே வீடு. அதே நெருப்பு. சூழலில் இல்லை சோகமும் சந்தோஷமும். மாறாக, தன்னைப் பிணைத்துக் கொள்ளும் தன்மையில், அந்த எண்ணத்தில் இருக்கிறது.
என்னுடையது, என்னுடையதில்லை என்கிற எண்ணம் மட்டுமே கவலைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாகிறது.
நினைத்துப் பாருங்கள், உங்களுடைய எண்ணங்கள் உண்மையில் உங்களுடையனவா?
உண்மையில் அவை உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், நீங்கள் படித்த நூல்கள், பார்த்த காட்சிகள், ஊடகங்கள் ஆகியவற்றின் தாக்கங்களால் விளைவன அல்லவா!
உங்கள் மீது திணிக்கப்படும் எண்ணங்கள். நீங்களே திணித்துக்கொள்ளும் எண்ணங்கள் என்று இருவகையாக பிற(ர்) எண்ணங்களால் நீங்கள் ஆளப்படுகிறீர்கள்.
எண்ணம் விதையுங்கள். செயல் விளையும்.
செயல் விதையுங்கள்.பழக்கம் விளையும்.
பழக்கம் விதையுங்கள். குணநலன் உருவாகும்.
பிறகு உங்கள் குணநலனே எழுதிவிடும் உங்கள் தலைவிதியை.
யாவும் இறைவனுடையதே என்று உணர்ந்தார்க்கு இழப்புகளில்லை ஒருபோதும்.

தமிழாக்கம்: இப்னு ஹம்துன்
(ஆங்கில மடல் ஒன்றின் தழுவல்)

http://www.satyamargam.com/life/2614-nothing-is-mine.html#comment-9791

Advertisements
 
Leave a comment

Posted by on April 19, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: