RSS

நான் நகைச்சுவையை எப்போதுமே தேடி அலைந்ததில்லை.

27 May

 

அப்துல் கையூம்

நான் நகைச்சுவையை எப்போதுமே தேடி அலைந்ததில்லை. என்னைச் சுற்றி நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் நகைச்சுவையாகவே எனக்கு தென்படுகிறது. மனதுக்குள் எப்போதுமே சிரித்துக் கொண்டிருப்பது ஒரு உற்சாகத்தை தரும் என்பதென்னவோ நிஜம்.

பஹ்ரைனில் நான் எதிர்கொண்ட நகைச்சுவைக்கு பஞ்சமேயில்லை.

இந்தியாவிலிருந்து வந்த ஒரு நண்பரை அழைத்துக் கொண்டு காரில் சென்றேன். பெட்ரோல் பங்கில் 5 தீனார் நோட்டை நீட்டி “மும்தாஜ்” என்றேன்.
“யாருங்க அந்த மும்தாஜ்? ” என்றார் நண்பர்.
“உயர் ரக பெட்ரோலுக்கு பேரு மும்தாஜ்; அதோ இன்னொன்று தெரிகிறதே அது குறைந்த ரகம்” என்றேன்.
“அப்ப அதுக்குப்பேரு ஷகிலாவா?” என்றார்.
எனக்குள் எழுந்த சிரிப்பை அடக்க வெகு நேரம் பிடித்தது.

ஒரு தொழிலாளர் சகோதரருக்கு, அவர் பிக்-அப் ஓட்டிக்கொண்டு போகும் சமயத்தில் அவருடைய மனைவி ஊரிலிருந்து போன் பண்ணியிருக்கிறார்.
“ஏங்க… நீங்க போனே பண்ணலே..?”
“நான் ரொம்ப பிஸி. இப்ப நான் சித்ராவுக்கு போயிக்கிட்டு இருக்கேன். அப்புறமா போன் பண்ணுறேன். போனை வை”

“சித்ரா” என்பது இங்குள்ள ஒரு இடத்தின் பெயர். அதற்குள் அவர் வீட்டில் ஒரு பெரிய பூகம்பமே ஏற்பட்டு விட்டது. அவருடைய மனைவி உடனே இங்கிருக்கும் அவருடைய தம்பிக்கு போன் செய்து
“எனக்கு இப்பவே ஒரு உண்மை தெரிஞ்சாகணும். அந்த சிறுக்கி மவ சித்ரா யாருன்னு உடனே கண்டுபிடி..!” என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்.

இங்கு “அவாள்” திரையரங்கு மிகவும் பிரபலம். நான்கூட இங்கு வந்த புதிதில் பிறாமணாள் யாரோ நடத்துகிறாரோ என்று நினைத்து விட்டேன்.

“NADER GAS” என்ற நிறுவனத்தின் பெயர்ப்பலகை இங்கு நெடுஞ்சாலையில் காணக்கிடைக்கும். புதிதாக வந்த நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி இது:
“இங்கு கூட நாடார்கள் எல்லாம் கம்பேனி வைத்திருக்கிறார்களா..?”
“ஆமாய்யா… நாடர்கள் மட்டுமல்ல .. ரெட்டியார், முதலியார், செட்டியார், கவுண்டர் எல்லாருமே வச்சிருக்காங்க. BATELCO கம்பேனிக்கு பில் கட்ட போனேன்னு வச்சுக்க அங்கே கூட கவுண்டர் இருக்கு” என்று கடுப்பாகி பதில் சொன்னேன்

என் நண்பர் வீட்டுக்கு பக்கத்தில் “KAVALANI” என்ற ஒரு நிறுவனம் இருந்தது. யாருக்காவது அவர் வீட்டின் அடையாளம் சொல்லவேண்டும் என்றால் “கலைவாணிக்கு பக்கத்தில் இருக்கிறது” என்பார். வாயில் வசம்பு வைத்து தேய்த்தாலும் கவலானி என்று அவருக்கு சரியாக உச்சரிக்க வராது.

கங்கை அமரன் இளையாராஜவுடன் சேர்ந்து இங்கு வந்தபோது கங்கை அமரனைஅழைத்துக் கொண்டு கடைவீதிக்குப் போனேன்.
“சார் மலையாளத்தில் சம்சாரிக்காமோ…” என்றார் ஒரு மலையாளி அன்பர்.
“எனக்கு மலையாளத்தில் சம்சாரம் இல்லா, அதனால் மலையாளத்தில் சம்சாரம் இல்லா” என்று ஒரு போடு போட்டார் அமரன்.

இன்னொருமுறை பஹ்ரைனில் எஸ்.வி.சேகரையும், சின்னி ஜெயந்தையும் ஷாப்பிங் அழைத்துக் கொண்டு போனேன். (சின்னி ஜெயந்த் எனக்கு காலேஜ்மெட்டும் கூட) ஆளுயர ஒரு பெரிய TEDDY BEAR கடையில் வைத்திருந்தார்கள். அப்போது சின்னி ஜெயந்தின் மனைவி கர்ப்பிணியாக வேறு இருந்தார். அதை வாங்கிக்கொண்டு போகவேண்டும் என்று சின்னிக்கு ஆசை. உடனே எஸ்.வி.சேகர் சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

“இந்தாப்பா.. இதை நாம பிளேனில் தூக்கிக் கொண்டு போக முடியாது. கூட கூட்டிக்கொண்டுதான் போகணும்” என்றார்.

என் வீட்டுக்கு போகும் வழியில் “KUDU” என்ற பிரபல உணவகம் உள்ளது. இதற்கு போட்டியாக பக்கத்தில் யாராவது உணவகம் திறந்தால் “கொடுக்காதே” என்றா பேர் வைப்பார்கள் என்று நானே என் மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொள்வதுண்டு.

ஒரு நண்பரிடம் உங்க ஸ்பான்சர் பேரு என்னவென்று கேட்டேன்.
“என் ஸ்பான்சர் KANOO” என்றார்.
“என்ன… உங்க ஸ்பான்சரைக் காணோமா..?” என்றேன்.
சற்று நேரத்தில் அவரைக் காணோம். இந்த மனுஷனிடம் பேச்சு கொடுக்க முடியாது என்று ஓடிவிட்டார் போலும்.

ஒரு மேடை நிகழ்ச்சியில் நான் தொகுப்பாளனாக இருந்தபோது ஒரு ரசிகர் இடையில் வந்து தான் நன்றாக பாடக்கூடியவர் என்றும், தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் மன்றாடினார். இசைக்குழுவுடன் அவர் பாட வாய்ப்பளித்தேன்,
“அத்தானும் நான்தானே..! சட்டை பொத்தானும் நீதானே..!” என்ற பாடலை அமர்க்களமாக பாடி அசத்தினார்.
மேடையிலேயே அவரை பேட்டி கண்டேன்.

“என்ன வேலை செய்றீங்க…?”
“டெய்லரா இருக்கேன்”
“உங்க பேரு என்ன..?
“என் பேரு காஜா”
“உங்ளுக்கு நல்லா காஜா எடுக்க வருமா..”

“நல்லா வரும் சார்…”
“அப்ப பொருத்தமான பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கீங்க” என்று சொன்னபோது ரசிகர்களிடையே பலத்த கரகோஷம்.

13256291_1196052593747442_6834644807220998195_n
அப்துல் கையூம்

 

Advertisements
 
Leave a comment

Posted by on May 27, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: