RSS

தமிழ்காப்புத் தொல்காப்பியம்

08 Jun

தொல்காப்பியா தொல்காப்பியா
உன் தொடர்பு எல்லைக்குள்தான்
இன்னமும் நாங்கள்
தொங்கிக்கொண்டிருக்கிறோம்
தொல்காப்பியா

தொலைந்தேபோய்
தமிழை இன்னும்
இழந்தே விடவில்லை
தொல்காப்பியா

தொல்காப்பியா
தொல்காப்பியா என்கிறாயே
அது நல்காப்பியா
புரூக்பாண்ட் புரூகாப்பியா
அல்லது
போட்டோக்காப்பியா
என்றே வினவும்
நொள்ளைத் தமிழரும்
இன்று இல்லாமலில்லை
தொல்காப்பியா

ஆயினும்
இந்த அயல்மண்ணிலும்
இப்படியோர் மேடையிட்டு
தமிழ்நெஞ்ச ஊரைக்கூட்டி
ஒருதினமல்ல
இருதின விழா எடுத்து
வாஞ்சையாய் உன் புகழ் பாடி
புளகாங்கிதங் கொள்கிறோமே
கண்டாயா

கண்ட உன் பாராட்டு
என் காதில் கிசுகிசுப்பாய்
ரீங்கரிக்கிறது
நான் சிலிர்க்கிறேன்
தொல்காப்பியா

*
உன் சொல்லை வாசிப்பதென்பது
உன்னையே வாசிப்பதல்லவா
உன்னை வாசிப்பதென்பது
உன்னோடே வாழ்வதல்லவா

*
தொல்காப்பியா
நீ புதுமைக் காரனடா

ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கும் முன்பே
புதுமை செய்த கவிஞனடா

இலக்கணம்தானே எழுத வந்தாய்
ஆனால் அதையும் நீ ஏன்
இலக்கியம் சொட்டச் சொட்ட எழுதினாய்

நீ
புதுமைக் காரனடா

அள்ளித்தரும் இலக்கியம்
தாய்க்கு நிகர்
சொல்லித்தரும் இலக்கணம்
தந்தைக்கு நிகர்

ஞானத் தந்தையே
தொல்காப்பியா
நீ தாயுமானவன்தான்
தொல்காப்பியா

*
அற்றைத் தமிழன்
தேர் கொடுப்பான் முல்லைக்கு
போர்வை கொடுப்பான் மயிலுக்கு
ஆனால் தமிழையும்
அதன் உச்சப்புகழ் உயரத்தையும்
ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டான்

ஆகையினாலேயே
இலக்கணத்தையே
இலக்கியமாய்ச் சமைத்த
உலகின் ஒன்றை நூல்
உன் நூலே என்று
பெருமைகொள்ளச் செய்தாய்
தொல்காப்பியா

*
தொல்காப்பியா
உன்னை நினைத்தால் எனக்குள்
சுனாமித்தனமானதொரு
பொறாமையே பொங்குகிறதடா

எத்தனை நூற்றாண்டுகள்
கடந்துவந்திருக்கிறாய்
இன்னும்
எத்தனை எத்தனை நூற்றாண்டுகள்
கடந்து நீ
வாழப் போகிறாய்

தமிழோடு தமிழாக
தழுவிக் கிடக்கும்போது
உன் தொன்மைக்கு
ஏதடா முதுமை
உன் சொல்லுக்கோ
தீராத மகிமை

தொன்மையையே இளமையாக்கி
நீ நிற்கும் முரண்
அடடா அதுதான் எத்தனைச் சவரன்

*
பஞ்சமே இல்லாமல்
உண்டிங்கே நூல்கள் பல

நேற்றுகூட
ஆயிரம் பக்கங்களில்
ஐநூறு சொற்கள் தெளித்து
ஹைக்கூ நூலிட்டான்
ஒரு பின்நவீனப் பிரியன்

இப்படியாய்
செத்தே பிறக்கும்
தத்துப்பித்துச் சொத்தைகள்
நம்மைக்
கண்டமாத்திரம் கொன்றழிக்க
உண்டிங்கே பலப்பல

அட்டையைத் தொட்டாலே
விரால்மீனாய்த் துள்ளும்
உயிர்நூல் படைத்தவனே

அதோ வருகிறான் பார்
நக்கீரன்
உன் நூலுக்குப் பெயரிட்டதில்
பொருட் பிழை என்கிறான்

என்றென்றும்
இளமையே கொண்ட காப்பியம்
எப்படித் தொல்காப்பியமாகும்
என்று தகிக்கிறான்
கேள்

*
ஈராயிரத்தைநூறு ஆண்டுகட்குமுன்பே
தொல் என்கிறாய்
தொல் காப்பியம் என்கிறாய்

என்றால்
தமிழின் வயதுதான் என்னடா

சிந்தித்தால்
சில்லிட்டு உறைகிறது
என் முதுகுத் தண்டு

ஓர் இலக்கண நூலே
இத்தனைத் தொன்மையெனில்
தமிழனின் இலக்கியம்தான்
எத்தனை எத்தனைத் தொன்மையானது

கண் தோன்றிச்
செவி தோன்று முன்னரே
முன் தோன்றி வளர்ந்த
மூத்த மொழியோ

*
தொல்காப்பியா
சங்கமென்றச் சொல்லே
தோன்றாக் காலத்தில்
பெயரும் அறியவியலாத
மூத்தத் தமிழ்ச்சங்கத்தின்
முத்துக் குவியலே

பெருவெடிப்பில் பிறந்து
சூரியனோடு சுற்றி விளையாடி
பூமியையே பெற்றெடுத்தவன் நீயென்று
பொய்யழகு கூட்டிப்
பாடத்தோன்றுதடா தொல்காப்பியா

*
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறும்
நல் உலகத்து…

இரு இரு
அன்று உனக்கே அணிந்துரை தர
ஒருவன் இருந்தானா

தொல் – தொன்மை
காப்பு – காத்தல்
இயம் – இயம்புதல்

ஓ…
தமிழின்
தொன்மையைக் காத்திட
இயம்பிய வேதங்களா
தொல்காப்பியம்

பசுமரத்தாணியைப்
பழுதின்றி அறைந்தாய்

இலக்கியப் பயிர்களுக்கு
வரப்புகள் வகுத்தாய்

வடமொழி நூல்களுக்கும்
தடம்போட்டுத் தந்தாய்

சுற்றுப்புறச் சூழல் பேசும்
சித்தாந்தம் கொண்டாய்

கம்பனை வள்ளுவனை
இளங்கோவை பாரதியை
உயிர்த்தமிழ் அமுதூட்டிய
இன்னும்பல
இலக்கியக் கொடை வள்ளல்களை
உன்பட்டறையில் வைத்துப்
பட்டைதீட்டிவிட்டாய்

மொழிதொட்டு இலக்கியம்
இலக்கியம்தொட்டு வாழ்க்கை
என்று
எல்லாம் சொன்னவனே

உனக்கு என்
பல்லாயிரம் பல்லாயிரம்
பலகோடி முத்தங்கள்

மூப்பிலா தொன்மைச் சிறப்பு
சிதைவிலா செம்மைக் காப்பு

குறைவிலா அறிவுச் செழிப்பு
புலவர்கள் அலையும் தோப்பு

வரையறுத்த அமுதாய் வடிப்பு
களையெடுத்த தமிழின் வளர்ப்பு

வாழ்க நீ எம்மான்
நூறு நூறு நூற்றாண்டுகள் கண்டும்
பாருள்
முற்றாது முடியாது என்று
வாழ்க நீ எம்மான்

*
ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே

இது
தொல்காப்பியத்தின்
ஒரு சிறு துளித்தேன்

அன்றெழுதிய இத்தேனில்
ஒரு சொல்லேனும்
இன்று வாழும் நமக்கு
அந்நியமாய் நிற்கிறதா
அவையோரே

என்றால்
தொல்காப்பியன்
எங்கே நிற்கிறான்

கடைநிலைத் தமிழனோடும்
கைகுலுக்கும் தாகத்தோடு
நெருக்கமாய் நிற்கிறானல்லவா

இதுதான் தமிழின் தொடர்ச்சி
செம்மொழித் தேர்வில்
இதுவுமொரு சுந்தரத் தகுதி

*
மொழி வெறியோடு
வடமொழிப் படைகள் சூழ
முன்னின்று முறியடிக்கவே
முற்றுப்புள்ளியாய் செய்தனையோ
தமிழ்காப்புத் தொல்காப்பியம்

மங்கித் தூங்கிப்போன தமிழினம்
உன்போல்
தமிழைத் தன் தோள்களில்
தூக்கிப் பிடித்திருந்தால்
உன்
தொண்டினைத் தொடர்ந்திருந்தால்
இந்தியாவில் மட்டுமா
சுற்றுநாடுகள் யாவிலும்
தமிழ்தானே
ஆட்சிமொழியாக இருந்திருக்கும்
தொல்காப்பியா

தவறவிட்ட பாவத்தை
எப்போதுதான் நாங்கள் துடைப்போம்
தொல்காப்பியா தொல்காப்பியா

-ஜூன் 5, 2016 – உலகத் தொல்காப்பிய மன்றம் – கனடாக்கிளை – முத்தமிழ்விழா கவியரங்கம்
#கவியரங்கம்

http://anbudanbuhari.blogspot.in

Advertisements
 
Leave a comment

Posted by on June 8, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: